கூண்டில் ஒருவர்.

ஃபெர்னான்டோ ஸோரன்டினோ, அர்ஜென்டினா எழுத்தாளர்களில் முக்கியமானவர். சிறுகதைகள் மட்டுமே எழுதுபவர். முப்பது ஆண்டுகளில் ஆறு சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் உடன் நீண்ட நேர்காணல் செய்து தனித்தொகுதியாக வெளியிட்டிருக்கிறார்.

re-entry into society என்றொரு சிறுகதையை ஸோரன்டினோ எழுதியிருக்கிறார்.

அதில் புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தேனிலவிற்குச் சென்றுவிட்டு தங்களின் வீட்டிற்குத் திரும்புகிறார்கள்.

வீட்டில் அவர்களின் படுக்கை அறையில் பெரியதொரு கூண்டு காணப்படுகிறது. அதற்குள் ஒரு மனிதர் அமர்ந்திருக்கிறார்.

இந்தக் கூண்டினை வைப்பதற்காகப் படுக்கை அறையில் இருந்த பொருட்களை அகற்றியிருக்கிறார்கள். பக்கத்து அறையில் இந்தப் பொருட்களைத் திணித்து வைத்திருக்கிறார்கள்.

யார் இந்த ஆள். எதற்காகக் கூண்டில் இருக்கிறார். அதுவும் நமது வீட்டில் என அந்தக் கணவன் கோபமடைகிறான்.

அதற்குக் கூண்டில் இருந்த ஆள் நீங்கள் இன்றைக்கு வருவீர்கள் என்று சொல்லவில்லையே. நாளை வருவதாகத் தானே சொன்னார்கள் என்று கேட்கிறார்

ஆமாம் ஒரு நாளைக்கு முன்பாகவே வந்துவிட்டோம். நீங்கள் யார். எதற்காகக் கூண்டில் இருக்கிறீர்கள் என்று கோபமாகக் கேட்கிறாள் மனைவி சூசனா.

என்னை நீங்கள் கோவித்துக் கொள்ள முடியாது. அது சரியான முறையில்லை. தேனிலவிற்குச் செல்லும் அவசரத்தில் நீங்கள் குடியிருப்பு விதிகளைச் சரியாகப் படிக்கவில்லை. புதிய விதிகள் உருவாகியுள்ளன என்கிறார் கூண்டில் இருப்பவர்.

என்ன விதி என ஆத்திரத்துடன் கேட்கிறான் கணவன்.

சிறைச்சாலையில் உள்ள கைதிகளை இப்படிக் குடியிருப்பில் ஒரு உறுப்பினராகச் சேர்க்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய குடியிருப்புகளுக்குக் கைதிகளை விநியோகிக்கின்றன, இதன் காரணமாக நல்ல இடமும் சரியான சூழலும் எங்களுக்குக் கிடைக்கும். இது புதிய வாழ்க்கைக்கான மறுபிரவேசமாக அமையும் என்கிறார் கூண்டில் இருப்பவர்

உங்களைக் கவனித்துக் கொள்வது எங்கள் வேலையில்லை என அவர்கள் திட்டுகிறார்கள்.

இது அரசாங்கத்தின் முடிவு. பழைய சிறைகளை இடித்துவிட்டார்கள். இனி எங்களைக் கைதி என்று கூட யாரும் அழைக்க முடியாது. நீங்கள் வழிகாட்டிகள். நாங்கள் புதிய வாழ்க்கையை விரும்புகிறவர்கள் என்கிறார். அத்தோடு இந்த வீட்டில் எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. உணவு, உடை, மருத்துவம் மற்றும் உளவியல் உதவி என யாவும் நீங்கள் செய்து தர வேண்டும். நீங்கள் தரும் எந்த உணவையும் நான் சாப்பிடுவேன். எனக்குப் பெண் துணை தேவை. அதற்கும் சட்டம் வழி செய்திருக்கிறது.

மிஸ் குக்வி என்றொரு பெண் என்னைத் தேடி வருவாள் அவளுடன் இன்பம் அனுபவித்துக் கொள்வேன். அதற்கான கட்டணத்தை நீங்கள் தர வேண்டும். இது போல இசை, மது, நண்பர்கள் என அனைத்திற்கும் நீங்கள் தான் செலவு செய்ய வேண்டும் என்கிறார்.

அவர்களுக்கு இந்தத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசாங்க அதிகாரிகளின் மனிதாபிமான உணர்விற்கு நேர் எதிராக நீங்கள் நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறி அந்த ஆள் கூண்டின் கதவை திறக்க சொல்லி சாவகாசமாகக் குளிக்கச் செல்கிறார்

இன்னும் எவ்வளவு நாட்கள் நீங்கள் இங்கே இருப்பீர்கள் எனக் கணவன் கேட்கிறான்.

நான் ஆயுள்தண்டனை கைதி என்கிறார் கூண்டு மனிதன்.

••

ஃபெர்னான்டோ ஸோரன்டினோவின் கதைகள் வியப்பூட்டும் நிகழ்வுகளை, செய்தியைக் கொண்டிருப்பவை. அவற்றை இயல்பான, அன்றாட வாழ்க்கையின் நேரடியான களத்திற்குள் வைத்து எழுதுகிறார் என்பதே அவரது சிறப்பு.

“எனது சிறுகதைகள் கற்பனையும் நகைச்சுவையும் கலந்த ஒரு வினோதமான கலவை“ என்கிறார் ஸோரன்டினோ

காலத்தின் பின்னால் போய் அறியாத நிலப்பரப்பில் கதையை எழுதும் போது விந்தையான நிகழ்வுகளை எளிதாக நிஜமாக்கிவிட முடியும் என்கிறார் போர்ஹெஸ். இது எழுத்தின் ரகசியங்களில் ஒன்று.

ஆனால் ஸோரன்டினோ, தனக்குப் பழக்கமான சூழலை கதையின் களமாக வைத்துக் கொள்கிறார். ஆனால் கதையில் நடைபெறும் நிகழ்வுகள் வியப்பூட்டுகின்றன.

இந்தக் கதையில் வரும் கூண்டு மனிதன் காஃப்காவின் பட்டினிக்கலைஞனை நினைவுபடுத்துகிறான். அவனும் இப்படிக் கூண்டில் அடைபட்ட மனிதனே.

ஃபெர்னான்டோ ஸோரன்டினோ கதையில் அவர்கள் தேனிலவு முடிந்து புதிய வாழ்க்கையைத் துவக்குவதற்காக வருகிறார்கள். அவர்களைப் போலவே கூண்டு மனிதனும் புதிய வாழ்க்கையைத் துவங்குவதற்காக வந்திருக்கிறான். ஒன்று இயல்பானது. மற்றொன்று விநோதமானது

சிறைச்சாலைக்கு மாற்றாகக் கைதிகளை இப்படி வீட்டில் ஒப்படைப்பது என்ற அரசின் முடிவை கைதி பாராட்டுகிறார். அறிவார்ந்த செயல் என்கிறார். ஆனால் அது அபத்தமான செயல் என்பதைத் தம்பதிகள் மட்டுமே உணருகிறார்கள்.

கூண்டில் இருக்கும் மனிதன் சட்டத்தின் பெயரால் அந்த வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். அவர்களின் வாழ்க்கையினுள் குறுக்கீடு செய்கிறான். புதிய பொறுப்புகளைச் சுமத்துகிறான். நமது வாழ்க்கையில் இனி இப்படி எல்லாம் நடக்கலாம் என்று எச்சரிக்கை செய்கிறார் சொரண்டினோ. இந்தக் கதை முழுவதும் வெளிப்படும் மெல்லிய கேலியை காஃப்காவிடம் காண முடியாது.

கூண்டில் இருந்த நபர் சிவப்பு நிற முடியுடன் காணப்படுகிறார். அழகான சூட் அணிந்திருக்கிறார். பொருத்தமான டை மற்றும் பளபளப்பான காலணிகள். தொப்பி. அவரது தோற்றம் கைதியைப் போல இல்லை. அவர் கோபம் கொள்வதில்லை. மாறாக உத்தரவிடுகிறார். அதுவும் அன்று சனிக்கிழமை என்பதால் தன்னைத் தேடி மிஸ் குக்வி வரக்கூடும். நீங்கள் எங்கள் அந்தரங்கத்தில் தலையிடாமல் வெளியே செல்லுங்கள் என்கிறார். உண்மையில் இளம்தம்பதிகள் தங்கள் வீடு எனும் கூண்டிற்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். அவர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார் கூண்டு மனிதர்.

உண்மையற்ற கதைக்கு உண்மையான சூழல் நுட்பமான விவரிப்பு தேவை என்கிறார் ஃபெர்னான்டோ ஸோரன்டினோ.

இந்தக் கதையில் வரும் புதுமணதம்பதிகள் யார். கணவன் என்ன வேலை செய்கிறான். இந்த வீட்டை எப்போது வாடகைக்குப் பிடித்தார்கள். அந்த வீட்டிற்குச் சூசனா முதன்முறையாக வருகிறாளா என்பது போன்ற எந்தத் தகவலும் கதையில் கிடையாது. அது தேவைப்படவும் இல்லை. கதையின் முதல் வரியில் அவர்கள் தேனிலவை தங்கள் வீட்டுப் படுக்கை அறையில் தொடர்வதற்காகப் பரிலோச்சியிலிருந்து புறப்பட்டுப் பியூனஸ் அயர்ஸுக்குத் திரும்புகிறார்கள். அதுவும் மாலை நேரத்தில். ஆனால் அவர்கள் எதிர்பாராத நிகழ்வு அவர்களின் இன்பத்தில் குறுக்கிடுகிறது. ஆனால் அதே இன்பத்தைக் கூண்டில் இருப்பவர் அனுபவிக்கப் போகிறார் என்று கதை முடிகிறது,

சிறை என்பதும் ஒரு கூண்டு தான். ஆனால் அது பறவை கூண்டு போல வட்டமானதில்லை. இப்போது அந்த மனிதர் பறவை கூண்டு போல உருவாக்கபட்ட வீட்டுச்சிறையில் இருக்கிறார். இந்த மாற்றமே அவருக்குப் போதுமானதாகயிருக்கிறது. அதிகாரத்துவத்தின் அபத்தத்தை மெல்லிய நகைச்சுவையாகச் சொல்கிறார் ஸோரன்டினோ. அதுவே கதையை மறக்க முடியாத ஒன்றாக்குகிறது.

••

0Shares
0