கேள்விகள் ஆயிரம்

தேனி சுந்தர்

சிரிக்கும் வகுப்பறை நூலை வாசித்தேன். ஒரு குழந்தையின் பார்வையில் எழுகின்ற கேள்விகள் ஆயிரம்.. நாம் எதிர்பார்க்காத திசைகளில் இருந்து சிந்திப்பார்கள். அப்படியான பல கேள்விகளை இந்நூலில் காண முடிந்தது.

ராத்திரி விடியாமலேயே நீண்டு போய்க் கொண்டிருந்தால்..? ஏன் கைக்குக் கை என்று பெயர் வந்தது? பள்ளிக்கூடம் என்ற ஒன்றை யார் முதலில் உருவாக்கினார்கள்? பள்ளிக்கூடங்கள் எல்லாம் ஒரே நாளில் காணாமல் போனால் எப்படி இருக்கும்? பள்ளிக் கூடங்களில் எதற்காக இவ்வளவு பெரிய கதவுகள்? ஆசிரியர்கள் சொல்லச் சொல்ல இந்தப் பென்சில்கள் ஏன் தானே எழுதிக் கொள்வதில்லை? ஒரு வருடத்திற்கு ஒரு வகுப்பு படிக்க வேண்டும் என்று யார் முடிவு செய்தது? 1ஆம் வகுப்பு , அதற்கடுத்து 11 ஆம் வகுப்பு, அதற்கடுத்து 111ஆம் வகுப்பு, அதற்குப் பிறகு 1111 ஆம் வகுப்பு என்று ஏன் மாற்றக் கூடாது?? கரப்பான் பூச்சி இரவில் என்ன செய்து கொண்டிருக்கும்? அதற்குக் குளிருமா? குளிராதா? பள்ளிகள் ஏன் இரவில் நடப்பதில்லை?

– இப்படி ஒரு நூறு கேள்விகள் இருக்கும் என்று நினைக்கிறேன். எல்லாமே ரசிக்கவும் சிந்திக்கவுமானவை…

விதவிதமான தண்டனைகள் தருவதற்கென ஆய்வுகள் நடத்தி, அதைப் பலகட்டமாகப் பரிசோதித்துப் பள்ளி முதலாளிகளுக்கும் பெற்றோருக்கும் விற்பனை செய்கிற “அக்ரமா பள்ளி” என்கிற தண்டனைப் பள்ளி இறுதியில் “சுதந்திர பள்ளியாக” மாறுவது சிறப்பு.

சயனகிரி தண்டனைப் பள்ளியில் கொண்டு சேர்க்கப் படும் திவாகர் குறித்துத் தொடங்கும் கதையில் ரூபன், திப்பு உள்ளிட்ட நண்பர்கள் சேர்ந்ததும் சுவாரசியம் கூடுகிறது. அப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப் படும் தண்டனைகள் கடுமையானவை. கொடூரமானவை. அப்படியான சூழலில் அடிக்கும் போது வலி தெரியாமல் இருக்க உதவும் ஜெல்லி குறித்த தகவல் ஒரு திருப்பு முனையாக வந்து கதையில் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆனால் நிறைவில் ஒட்டு மொத்த கல்வியின் வலிகளையும் தீர்க்கிற வழியைச் சொல்லி நிறைவு பெறுகிறது கதை..! எது கல்வி? எப்படியான கல்வி வேண்டும் என்று நம்மைச் சிந்திக்க வைக்கிறது இந்த “சிரிக்கும் வகுப்பறை..!”

0Shares
0