கேள்வியரங்கம்
























எனது இணையதளத்தினை தொடர்ந்து பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள். எனக்கு அனுப்பப்பட்ட தனி மின்னஞ்சலில் இருந்த சில கேள்விகளும் சந்தேகங்களும் பொதுவில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவை என்ற காரணத்தால் அவற்றை மட்டும் தனித்து பதில் சொல்ல விரும்புகிறேன்

பிறமொழி இலக்கியம்
ஹைதராபாத்திலிருந்து சிவா இக்கேள்வியை அனுப்பியுள்ளார்:

தமிழில் உள்ள மொழிபெயர்ப்பு புத்தகங்களில் எவை முக்கியமானவை. புதிய வாசகர்களுக்கு நீங்கள் எதைச் சிபாரிசு செய்வீர்கள். அவை எங்கே கிடைக்கின்றன ?

எஸ்ரா : நூற்றுக்கும் மேற்பட்ட சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் வெளியாகி உள்ளன.   இதில் குறிப்பாக நேஷனல் புக் டிரஸ்ட் மொழிபெயர்த்துள்ள இந்திய மொழிகளில் உள்ள சிறந்த புத்தகங்களில் பெரும்பான்மையானவை சிறந்தவையே. அது போல சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு புத்தகங்களும்  வாசிக்கப்பட வேண்டியவை.


































க.நா.சு.,கிருஷ்ணய்யா.தர்மராஜன், சோமசுந்தரம், சௌரி, கிருஷ்ணமூர்த்தி, பிரம்மராஜன். வெ.ஸ்ரீராம். எம்.எஸ். சுகுமாரன், பாவண்ணன் , சா.தேவதாஸ். சதாசிவம், ரவி இளங்கோவன், ஜி.குப்புசாமி,. சி.மோகன், குறிஞ்சிவேலன்,  போன்றவர்கள் சிறப்பான மொழிபெயர்ப்பாளர்கள்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழில் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் அதிகம் வெளியாகி வருகின்றன. அதில் எண்பது சதவீதமானவை குப்பை. மொழிபெயர்ப்பை மூலப்பிரதியோடு ஒப்பிட்டால் மிகக் கேவலமாக இருக்கின்றன. மொழியாக்கப்பட்ட புத்தங்களுக்கு உள்ள வரவேற்பைப் புரிந்து கொண்டு அதை வணிகமாக்கி விட்டார்கள்.

ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்ற 50 மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இவை.
1)    அக்னிநதி – குர் அதுல்துன் ஹைதர்  நேஷனல் புக் டிரஸ்ட்
2)    ஆரோக்ய நிகேதனம்  தாராசங்கர் பானர்ஜி – நேஷனல் புக் டிரஸ்ட்
3)    நீலகண்ட பறவையைத் தேடி – அதின்பந்தோபாத்யாயா  நேஷனல் புக் டிரஸ்ட்
4)    அழிந்த பிறகு – சிவராம காரந்த்.  நேஷனல் புக் டிரஸ்ட்
5)    பன்கர்வாடி – மால்தி கூட்கல்கர்   நேஷனல் புக் டிரஸ்ட்
6)    பொலிவு இழந்த போர்வை  ராஜேந்தர் சிங் பேதி – சாகித்ய அகாதமி
7)    பதேர்பாஞ்சாலி – விபூதி பூஷண் பந்தோபாத்யாயா  சாகித்ய அகாதமி
8)    பர்வம்  எஸ்.எல்.பைரப்பா – நேஷனல் புக் டிரஸ்ட்
9)    நில வளம்  நட் ஹாம்சன்  மருதா பதிப்பகம்
10)    புத்துயிர்ப்பு – டால்ஸ்டாய்  என்சிபிஹெச்
11)    மண் கட்டியை காற்று அடித்துப் போகாது  பாசி அசியோவா. ராதுகா பதிப்பகம்
12)    அன்னாகரீனனா  டால்ஸ்டாய்  பாரதி புத்தக நிறுவனம்
13)    விசாரணை  காப்கா  க்ரியா பதிப்பகம்
14)    குட்டி இளவரசன்  அந்துவாந்த் செந்த் எக்ஸ்பரி – க்ரியா பதிப்பகம்
15)    அந்நியன்  அல்பெர்ட் காம்யூ  க்ரியா பதிப்பகம்
16)    வெண்ணிற இரவுகள்  தஸ்தாயெவ்ஸ்கி – ராதுகா பதிப்பகம்
17)    மதகுரு  செல்மா லாகர்லெவ்  மருதா பதிப்பகம்
18)    இரண்டாம் இடம்  எம்.டி. வாசுதேவன் நாயர். சாகித்ய அகாதமி வெளியிடு
19)    பொம்மலாட்டம்  மாணிக் பத்தோபாத்யாயா  நேஷனல் புக் டிரஸ்ட்
20)    சதத் ஹசன் மண்டோ  படைப்புகள் – நிழல் வெளியிடு
21)    கடலும் கிழவனும்  ஹெமிங்வே. காலச்சுவடு
22)    மௌப்பனி ரகசியப்பனி – சிவக்குமார்  காலச்சுவடு
23)    லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் – சிவக்குமார்  மீட்சி வெளியிடு
24)    யுகாந்தா  ஐராவதி கார்வே  ஒரியண்ட் லாங்மேன் வெளியிடு
25)    பீட்டர்ஸ்பெர்க் நாயகன்  ஜே.எம். கூட்ஸி – வ.உ.சி. நூலகம்
26)    புலப்படாத நகரங்கள்  இதாலோ கால்வினோ – வ.உ.சி. நூலகம்
27)    செம்மீன்  தகழி சிவசங்கரன் பிள்ளை – சாகித்ய அகாதமி
28)    குறுகிய வழி – ஆந்த்ரே ழீடு  சமுதாயா பதிப்பகம்
29)    பாத்துமாவுடைய ஆடும் இளம்பருவத் தோழியும்  நேஷனல் புக் டிரஸ்ட்
30)    உருதுக் சிறுகதைகள்  நேஷனல் புக் டிரஸ்ட்
31)    கரையான் – சீர்சேந்து முங்கோபாத்யாய  நேஷனல் புக் டிரஸ்ட்
32)    செம்மணி வளையல்  கோகல்  ராதுகா பதிப்பகம்
33)    கார்க்கி கதைகள்  ராதுகா பதிப்பகம்
34)    கண் தெரியாத இசைஞன்  கொரலன்கோ  ராதுகா பதிப்பகம்
35)    செகாவ் சிறுகதைகள்  ராதுகா பதிப்பகம்
36)    தாத்தாவும் பேரனும்  ராபர்ட் டி ரூவாக் – பியர்ல் பதிப்பகம்
37)    திறந்த படகு  ஸ்டீபன் கிரேன் – பியர்ல் பதிப்பகம்
38)    துங்கும் அழகிகளின் இல்லம்  யாசுனரி கவாபதா  ஸ்நேகா பதிப்பகம்
39)    போர்ஹே கதைகள்  ஸ்நேகா பதிப்பகம்
40)    சிதம்பர நினைவுகள்  பாலச்சந்திரன் சுள்ளிக்காடு  வம்சி புக்ஸ்
41)    பாப்லோ நெருதா கவிதைகள்  உயிர்மை பதிப்பகம்
42)    இதயக்குரல்  எட்கர் ஆலன் போ  தமிழ்ஒளி பதிப்பகம்
43)    டோட்டோசான்  நேஷனல் புக் டிரஸ்ட்
44)    ஆலீஸின் அற்புத உலகம்  கனவுப்பட்டறை
45)    பாண்டவபுரம்  சேது  மருதா பதிப்பகம்
46)    ஜென் கவிதைகள்  உயிர்மை பதிப்பகம்
47)    ஆர்மீனியச் சிறுகதைகள்  நேஷனல் புக் டிரஸ்ட்
48)    இரவு  எலீ வீஸல்  யுனைடெட் ரைட்டர்ஸ்
49)    தலைமுறைகள்  அலெக்ஸ்கெய்லி  சென்னை புக்ஸ்
50)    கானகத்தின் குரல் – ஜாக் லண்டன்  வ.உ.சி.பதிப்பகம்.

இந்த புத்தகங்கள் யாவும் தற்போது கடைகளில் கிடைக்கின்றனவா என்று தெரியாது. ஆனால் புத்தகச் சந்தையில் தொடர்ந்து தேடினால் கிடைக்கக்கூடும்.
 
எழுத்தின் ரகசியம்.
மும்பையில் இருந்து கிருஷ்ணவேணி அனுப்பிய மின்னஞ்சலில் இருந்த கேள்வி.
 
நான் கடந்த சில மாதங்களாக கதைகள் எழுத முயன்று வருகிறேன். ஐந்து வருடமாக நிறையப் படித்திருக்கிறேன்.ஆனால் இதுவரை என்னால் ஒரு கதையைக் கூட முழுமையாக எழுத முடியவில்லை. எப்படியாவது எழுத வேண்டும் என்ற ஆசையுள்ளது. எதனால் என்னால் எழுத முடியவில்லை என்று தெரியவில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?
இந்த கேள்வி கிருஷ்ணவேணியுடையது மட்டுமில்லை. எனது இணையதளத்தை பார்வையிடுபவர்களில் வாரம் ஐந்து பேராவது இதைக் கேட்கிறார்கள். இது தனிநபரின் பிரச்சனையல்ல. மாறாக எழுத வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களுக்கு ஏற்படும் இயல்பான சந்தேகமும் குழப்பமும் ஆகும். நானும் இதைக்கடந்து வந்திருக்கிறேன்.

எழுத வேண்டும் என்ற ஆசை மிக இயல்பானது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது எளிமையானதில்லை. எழுத்து எல்லாக் கலைகளையும் போல தொடர்ந்த விருப்பமும் உழைப்பும் தனித்துவமான அகப்பார்வையும் நிறைந்த கற்பனையும் மொழிவளமும் தேவைப்படக்கூடியது.

எழுதுவதற்கு முதல் தடையாக உள்ளது மொழியே. நாம் தினசரி பயன்படுத்தும் மொழி பயன்பாட்டிற்கு மட்டுமே உரியது. ஒரு வகையில் தட்டையானது. காட்சி மற்றும் சைகையோடு இணைந்தது. ஆனால் எழுத்து மௌனமான வாசிப்பிற்கு உரியது. ஒன்றை மனதில் உருவாக்க முனைவது. ஆகவே அதற்கு தனியான மொழியமைப்பு தேவை. அதை உருவாக்குவது தான் எழுத்தாளனின் முதல் வேலை.

மனதில் உள்ளதை அப்படியே எழுத்தில் கொண்டுவருவது எளிதானதில்லை. உங்கள் கையில் ஒரு ஆப்பிளைக் கொடுத்துவிட்டு அதை அப்படியே பேப்பரில் வரைந்து காட்டுங்கள் என்று  சொன்னால் உடனே வரைய முடியுமா? ஒரு வேளை ஆர்வத்துடன் நீங்கள் முனைந்தால்?

வரைவதற்காக  கவனிக்கும் போது தான் ஆப்பிளின் வடிவம் மற்றும் நிறம் அதன் காம்புகளின் வெளிறிய பச்சை என்று ஒவ்வொன்றும் துல்லியமாகத் தெரியத் துவங்கும். அதன்பிறகு ஆப்பிளின் எந்தப் பகுதியில் வெளிச்சம் படுகிறது. எந்தப் பகுதியில் படவில்லை என்று கவனிக்கத் தோன்றும். ஆப்பிளின் ஒரு பக்கத் தோற்றத்தை கொண்டு அதன் முழுவடிவத்தை எப்படி வரைவது என்ற குழப்பம் உருவாகும்.

ஆப்பிள் நிறத்தினை காகிதத்தில் கொண்டு வர என்ன வண்ணத்தை தேர்வு செய்வது என்று புரியாது பொதுவாக ஆப்பிள் சிவப்பு என்ற எண்ணமே நமக்குள்ளது. அந்தச் சிவப்பும் ரத்த சிவப்பும் ஒன்றல்ல. சிவப்பு பொது வண்ணம். அதில் ஆப்பிளின் நிறம் தனித்துவமானது. இப்படி கவனிக்க கவனிக்க ஒவ்வொன்றாக தோன்றத் துவங்கும். பத்து முறை வரைந்து சோர்வாகி கிழித்துப் போட்டு திரும்ப வரைந்தாலும் ஆப்பிள் நிஜமான சித்திரமாக வரவே வராது.

கண்முன்னே உள்ள பொருளுக்கே இவ்வளவு சிரமம் என்றால் எழுத்து பெரிதும் கற்பனை சார்ந்தது. இருப்பதிலிருந்து இல்லாததையும், இல்லாததை இருப்பது போன்றும் சிருஷ்டிக்கும் கலை. அதில் நமது அவதானிப்பு, பார்வை. வாசிப்பு, தொடர்ந்த உழைப்பு, மொழிவளம் என்று நிறைய காரணிகள் உள்ளன. ஆனால் தொடர்ந்த விருப்பமும் உழைப்பும் அதைச் சாத்தியப்படுத்தலாம்

அதற்கு முதல்தேவை எழுதியதை வெளியிட வேண்டும் என்ற அவசரம் கூடாது. தொடர்ந்து வாசித்து வர வேண்டும். அத்தோடு உங்களைச் சுற்றிய உலகை கூர்மையாக அவதானிக்க வேண்டும். எது ஒருவரை எழுதத் தூண்டும் என்று தெரியாது.

சில வருஷங்களின் முன்பாக மதுரைப் பேருந்து நிறுத்ததில் ஒரு கல்லூரி மாணவியைப் பார்த்தேன். அவள் கையிலிருந்த பூப்போட்ட சிறிய கைக்குட்டையால் உதட்டை மறைத்துக் கொண்டிருந்தாள். தன்னை மீறி தோழிகளுடன் சிரிக்கும் போது கூட கவனமாக அவள் உதட்டை மறைத்துக் கொள்வது தெரிந்தது.

பேருந்தில் ஏறிய டிக்கெட் கேட்டபோது அவள் துருத்திக் கொண்டிருந்த முன்பற்களின் மீது கம்பி மாட்டியிருப்பது கண்ணில் பட்டது. பகிர்ந்து கொள்ள முடியாத அகப்பிரச்சனையல்லவா. அது அந்தப் பெண்ணை வாட்டி எடுக்கிறது. அதற்காக கைக்குட்டையால் மறைத்தபடியே  தலை கவிழ்ந்து நிற்கிறாள் என்பது வருத்தம் தரக்கூடியதாகயிருந்தது.

இரண்டு வருசத்தின் பிறகு ஒரு நண்பனைத் திருமண வீட்டில் பார்த்தேன். பேச்சு தற்செயலாக எத்துப்பல் பற்றி வந்தது. அவன் உடனே தனது தங்கைக்கு முன்பற்கள் நீண்டு கொண்டிருந்தன என்றும் அவள் கணவன் எத்துப்பல்லைப்  பற்றி தொடர்ந்து கேலி செய்து அவமானப்படுத்தவே அதைத் தாங்கமுடியாமல் அரைக்கிலோ படிக்கல்லால் பல்லை உடைத்துக் கொண்டுவிட்டாள். இப்போது முகமே விகாரமாக உள்ளது என்றான்.

நான் எப்போதோ சாலையில் பார்த்த பெண்ணும் எனது நண்பனின் தங்கைக்கும் ஒரே பிரச்சனை தான் உள்ளது. அன்றிலிருந்து அந்தப் பூப்போட்ட கைக்குட்டை என்னை எழுது எழுது என்று உந்திக் கொண்டேயிருந்தது. அந்தப்பெண்ணை பற்றி கழுவேற்றம் என்ற சிறுகதையை எழுதினேன்.
ஒரு சொல்லின் வழியாகவோ. ஒரு காட்சியின் வழியாகவோ, அல்லது நினைவிலிருந்த ஒரு நிகழ்ச்சியின் வழியாகவே கதையின் துவக்கம் பிறந்துவிடும். அதை தொடர்ந்து எழுதி முழுமையாக்குவதற்கு போராட வேண்டியிருக்கும்.

ஆகவே புதிதாக எழுதத் துவங்கும் போது வடிவம், மொழி, எதைப்பற்றியும் கவலைப்படாமல் மனதில் உள்ளதை தொடர்ந்து எழுதுங்கள். எழுதியதை நீங்களே சில நாட்களுக்குப் பிறகு வாசியுங்கள்.  நீங்கள் எழுதியது என்பதை மறந்து அதை  எடிட் செய்யுங்கள். சொற்களை  எவ்வளவு குறைவாக உபயோகபடுத்துகிறீர்களே அவ்வளவு துரம் கதை நன்றாக இருக்கும். அதன் பிறகு உங்களுக்கு விருப்பமான பத்திரிக்கைக்கு அனுப்புங்கள். எந்தப் பத்திரிக்கை, எதை வெளியிடும் என்று நீங்களாகவே முடிவு செய்து கொள்ளாதீர்கள். அதன் பிறகு காத்திருங்கள்.

எழுத்தாளனின் பிரதான  பணி காத்திருப்பது தான். அவன் எல்லாவற்றிற்கும் காத்திருக்க வேண்டும். காத்திருப்பது வலி என்றாலும் அது அவசியம். அப்புறம் உங்கள் கதைகளைப் பற்றி நீங்களே உயர்வாகவோ தாழ்வாகவோ முடிவு செய்யாதீர்கள். அது ஒரு கதை. உலகின் மிகச்சிறந்த கதையும் ஒரு கதையே. 

கதையைப் பற்றிய விவாதங்களைத் தவிர்த்துவிடுங்கள். அது சாதகமாக இருந்தாலும் சரி பாதகமாக இருந்தாலும் சரி. உங்கள் வேலை எழுதுவது மட்டுமே.

எழுத்தாளனின் ஒரே துணை தனிமை தான். தனிமையை ருசிக்கப் பழகுங்கள். தனிமை என்பது ஒரு அகவுணர்வு. ஒற்றை ஆளாக இருப்பதில்லை. தனிமை தீராதது. தனிமையின் கதவுகளின் வழியே தான் கற்பனை நுழையும்.

எழுத்தாளனின் வேலை படகு செய்வதைப் போன்றது. படகைச் செய்கின்றவன் சரியான மரத்தை தேர்வு செய்து, அறுத்து உழைத்து, நீர்கசிவின்றி சுத்தமாக படகைச் செய்கிறான்.  தான் செய்த படகு என்பதற்காக வீட்டிற்குள்ளாகவே வைத்துக் கொண்டிருந்தால் பயன் கிடையாது. அதை ஆற்றில் தான் விட வேண்டும்.

ஆற்றில் வெள்ளம் வருகிறதே என்று தச்சன் பயந்தால் படகை விட முடியாது. படகை ஆற்றில் விட்டபிறகு அதைப் பயன்படுத்த போகின்றவர்களில் துறவியும் இருப்பார், திருடனும் இருப்பான். வணிகனும் இருப்பான். ஆடுமாடுகளும் அதில் ஏறும். அப்படி யார் யாருக்கோ பயன்படக்கூடும். 
படகின் விதி ஆற்றிலிருந்து பிரிக்கப் பட முடியாதது. படகின் வலிமை தான் அதன் வாழ்நாளைத் தீர்மானிக்கிறது. யார் செய்த படகு என்பது அல்ல. படகைச் செய்தவன் ஆற்றில் விட்டபிறகு அதை தூரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பதோடு அவன் வேலை முடிந்து விட்டது . 

படகு ஆற்றோடு கொள்ளும் உறவு மிகவும் அந்தரங்கமானது. தண்ணீர் படகை எப்போது அனுமதிக்கும், எப்போது கவிழ்க்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆகவே தச்சனுக்கு ஆற்றை பற்றிய நுண்ணறிவும் இருக்க வேண்டும்.

யாரோ பயன்படுத்தப் போகிறார்கள் என்பதற்காக அவன் ரசனையற்று வேலை செய்தால் ஆற்றில் இறங்கும் முன்பே படகு வீணாகிவிடும். அது போலவே படகிற்கு துடுப்புகள் அல்லது இயக்கும் சக்தி தேவைப்படுகிறது. ஏதோ சில கைகள் அதை இயக்கி கொண்டேயிருக்கின்றன.

எல்லா நல்ல படைப்புகளையும் யாரோ சிலர் வாசித்து சக்தி ஊட்டியபடியே இருக்கிறார்கள். வாழ்வின் பேராற்றில் அவை ஒடிக்கொண்டேயிருக்கின்றன.
உங்கள் கதையும் அது போல ஒன்று என்று ஒரு நிமிசம் யோசித்து பாருங்கள். பிறகு நீங்களே எழுத துவங்கிவிடுவீர்கள்.
 
அருண்குமார் – நியூயார்க்.
நான் அமெரிக்காவிலிருக்கிறேன். இங்கே உங்களது புத்தகங்கள் கிடைப்பதில்லை. நான் உங்களது புத்தங்களை வாங்க விரும்புகிறேன். அவை ஆன் லைனில் கிடைக்கின்றதா?
எஸ்ரா : எனி இண்டியன் பதிப்பகம் www.anyindian.com. ஆன்லைனில் எனது புத்தகங்களை அனுப்பித் தருகிறார்கள். நீங்கள் அவர்களைத் தொடர்பு கொண்டால் மேலதிகமான விபரங்களைத் தெரிவிப்பார்கள்.
 
முத்துராமன்  சென்னை
இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்கிறீர்களா? யாருடைய படைப்புகள் உங்களுக்கு பிடித்திருக்கின்றன.
தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்கிறவன் என்பதால் இளம் எழுத்தாளர்களில் பெரும்பான்மையினரின் படைப்புகளை வெளிவந்தவுடனே நான் வாசித்துவிடுகிறேன். குறிப்பாக  செழியன் நம்பிக்கையூட்டும் விதமாக சிறுகதைகள், கவிதைகள். உலகசினிமா கட்டுரைகள்  என்று எழுதி வருகிறார். அவரைப் போலவே கவிதையில் முகுந்த்நாகராஜன், எஸ்.செந்தில்குமார், தமிழ்நதி, ராணிதிலக்,  சிறுகதைகளில் மனோஜ், காலபைரவன். சந்திரா, என்.ஸ்ரீராம், பாஸ்கர் சக்தி, பவா.செல்லதுரை, மொழிபெயர்ப்பில் ராஜகோபால், ராமானுஜம், குவளைகண்ணன், நாடகத்துறையில் முருகபூபதி, கருணாபிரசாத், ஜெயராவ், கட்டுரைகளில் முத்துகிருஷ்ணன், ஷாஜி, அஜயன்பாலா , இலங்கை தமிழ் படைப்பிலக்கியத்தில் டாக்டர் நடேசன், கலாமோகன், இளங்கோ, றஞ்சனி, ஆழியாள், போன்றவர்கள் என் விருப்பத்திற்குரியவர்கள்.

0Shares
0