கேள்வியின் நிழல்

புதிய சிறுகதை. ஜுலை 2022

கேமிரா ஓடிக்கொண்டிருந்தது.

ராம்பிரசாத் கேமிராவைப் பார்க்கவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்டவரைப் போலிருந்தார்.

கேமிராவின் பின்புறமிருந்து திவ்யா சைகையால் அவரைப் பேசுமாறு சொன்னாள். அவர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை

பேராசிரியர் ராம்பிரசாத்திற்குக் கணிதத்திற்கான உயரிய விருது ஒன்றை ஜப்பானிய அரசு அறிவித்திருந்தது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற அந்த விருதைப் பெற்ற முதல் தமிழர் என்பதால் அவரை நேர்காணல் செய்து  தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்று நியூவிஷன் சேனல் முடிவு செய்திருந்தார்கள்.

விருது செய்தி கேள்விப்படும் வரை சரவணனுக்கு இப்படி ஒரு பேராசிரியர் இருக்கும் தகவல் கூடத் தெரியாது. எழுபத்தியெட்டு வயதான ராம்பிரசாத் தனது மகளின் வீட்டில் வசித்து வருகிறார் என்றும் ஆலந்தூர் சப்வேயிலிருந்து பிரியும் கிளை சாலையிலுள்ள சாய்பிளாசாவில் வசிக்கிறார் என்றும் விசாரித்து அறிந்து கொண்டு அவருக்குத் தொலைபேசி செய்தான்.

ராம் பிரசாத்தின் மகள் லாவண்யா தான் பேசினாள்

“அப்பாவிற்கு உடம்பு முடியலை. நேத்து அவார்ட் அறிவித்ததில் இருந்து நிறையப் போன்.. பேசிப்பேசி பிரஷர் ஜாஸ்தி ஆகிருச்சி..“

“பத்து நிமிஷம் இண்டர்வியூ மேடம்.. உங்கள் வீட்லயே வந்து எடுத்துக்கிடுறோம்“

“அப்பா கிட்ட கேட்டு சொல்றேன்.“

“எங்களாலே ஒரு தொல்லையும் இருக்காது. அவர் விரும்புகிறதைப் பேசினா போதும்.“

“இது தானே உங்க நம்பர் நானே கூப்பிடுறேன்“ எனப் போனை துண்டித்தாள் லாவண்யா

இரவு ஏழுமணி வரை லாவண்யாவிடமிருந்து பதில் வரவில்லை. ஆகவே சரவணன் நேரில் போயிருந்தான். வாசலில் நாலைந்து ஜோடி செருப்புகள் கிடந்தன. யாரோ வந்திருக்கிறார் போலும் என நினைத்தபடியே தயக்கத்துடன் காலிங்பெல் அடித்தான். கதவு திறந்து வெளியே வந்த லாவண்யாவிடம் நியூவிஷன் சேனல் என்று சொல்லிச் சிரித்தான் சரவணன்

“உள்ளே வாங்க“ என்றாள் லாவண்யா

பேராசிரியர் களைத்துப் போன முகத்துடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஓரம் கிழிந்து போன வெள்ளை பனியன், பழைய வேஷ்டி, மீசையில்லாத முகத்தில் பெரிய கண்ணாடி, ஏறு நெற்றி. நரைத்த கற்றை மயிர்கள். ஒடிசலான உருவம், சற்றே பெரிய காதுகள். மெல்லிய குரலில் கேட்டார்

“நீங்க டிவியா“

“ஆமாம் சார். நாளைக்கு உங்களை ஒரு பேட்டி எடுக்கலாமானு நினைக்கிறேன்“

“லாவண்யா சொன்னாள். நான் சொல்றதுக்கு என்ன இருக்கு“

“என்ன சார் இப்படிச் சொல்லீட்டீங்க. எவ்வளவு பெரிய அவார்ட் வாங்கியிருக்கீங்க. பிரைம் மினிஸ்டர்ல இருந்து சிஎம் வரைக்குப் பாராட்டி இருக்கிறார்கள். உங்க லைப் பற்றி நாங்க தெரிஞ்சிகிட வேணாமா“

“அப்படிச் சிறப்பா சொல்றதுக்கு ஒண்ணுமில்லே“

“பத்து நிமிஷம் பேசினா போதும்.. உங்களோட பழைய போட்டோஸ். வீடு, நீங்க புக் படிக்கிறது, இப்படி ஷாட்ஸ் கட் பண்ணி போட்டுகிடுவேன்“

“என்னாலே முடியுமானு தெரியலை. இப்பவே தலை கிர்னு இருக்கு“..

“எங்க சேனலோட மார்னிங் ஷோ ரொம்பப் பாப்புலர் சார். பெரிய ரீச் இருக்கும்“

“இனிமே நான் யாருக்கு ரீச் ஆகணும்.. எதுக்கு ரீச் ஆகணும்“ எனக்கேட்டார் ராம்பிரசாத்

“உங்க சாதனைகளை இளையதலைமுறை தெரிஞ்சிகிடணும்ல சார்“ என்று அவன் சொன்னது ஒரு நாடகவசனம் போலவே அவருக்குக் கேட்டது

“எத்தனை மணிக்கு இண்டர்வியூ“ எனக்கேட்டார்

“மார்னிங் எட்டு மணிக்கு வந்துடுறோம்.. செட் பண்ண இருபது நிமிஷம். இண்டர்வியூ பத்து நிமிஷம்.. எட்டரைக்கு முடிஞ்சிரும்“

“காலையில உடம்பு எப்படி இருக்கும்னு தெரியலை..பாக்குறேன்“

“நல்லா தூங்கி எந்திரிச்சா.. பிரஷ்ஷா இருப்பீங்க சார். இதெல்லாம் ஒரு அன்பு தொல்லை“ என்று சிரித்தான் சரவணன்

ஏன் அவன் இப்படி நாடகம் போலவே பேசுகிறான் என எரிச்சலாக உணர்ந்தபடியே அவர் கழிப்பறையை நோக்கி நடந்தார். சரவணன் லாவண்யாவிடம் பேசி சம்மதிக்க வைத்துவிட்டான்.

•••

காலை எட்டு மணிக்கு அவர்கள் ராம்பிரசாத் வீட்டிற்கு வந்தபோது அவர் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். இருபது தொட்டிச் செடிகள் இருந்தன. அதில் இரண்டு கள்ளிச்செடிகள்.

ஹாலில் இருந்த இளஞ்சிவப்பு நிற சோபாவை திருப்பிப் போட்டு கேமிராவை எங்க வைப்பது எனச் சரவணன் பரபரப்பாக இருந்த போது லாவண்யா அவர்களுக்குக் காபி கொடுத்தாள்.

“சார் டிபன் சாப்பிட்டாரா“ எனக்கேட்டான் சரவணன்

“இன்னும் குளிக்கக்கூட இல்லை“ என்றாள் லாவண்யா

“ரெடியாகச் சொல்லுங்கள். பத்து நிமிஷத்தில் நான் ரெடியாகிடுவேன்“

அவள் அப்பாவின் அருகில் போய்ச் சொன்னபோது அவர் வெளிறிப்போன செடியின் இலையைக் காட்டி எதையோ சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்பாவை அவசரப்படுத்த முடியாது என அவளுக்கு நன்றாகத் தெரியும். அவர் ஹாலைக் கடந்து போகும்போது அங்கிருந்த எவரையும் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. நிழல் கடந்து போவது போல நடந்து சென்றார்.

அவர்கள் கேமிராவை தயார் செய்துவிட்டுக் காத்திருந்தார்கள். முக்கால் மணி நேரம் கழித்து ராம் பிரசாத் காதோரம் ஈரம் வழிய, நீலநிற கோடு போட்ட சட்டையும் கறுப்புப் பேண்ட் அணிந்து வந்தார்,

“நீங்க டிபன் சாப்பிட்டிருங்கப்பா“ என்றாள் லாவண்யா

“இப்போ வேணாம். பிறகு சாப்பிடுறேன்“

“அப்போ இன்னொரு கப் காபி தரவா“

“வேணாம். இண்டர்வியூ முடியட்டும்“ என்றார்.

அவருக்கு இது போன்ற தொலைக்காட்சி நேர்காணலில் விருப்பமில்லை என்பது முகத்திலே தெரிந்தது. நேற்றிலிருந்து தமிழ் ஆங்கிலம் இந்தி என வேறுவேறு ஊடகங்கள். செய்தியாளர்கள் அவரிடம் போனிலே கேள்வி கேட்டார்கள். வாழ்த்துச் சொன்னார்கள்.. ரேடியோ நிலையத்திலிருந்து கூட ஒருவர் தொடர்பு கொண்டார்,

எதற்காக இப்படி ஒரு விருதை அளித்துத் தன்னைத் தொந்தரவு செய்கிறார்கள் என்று ராம்பிரசாத்திற்கு எரிச்சலாக இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் நாற்காலியில் அமர்ந்தார். அவரது சட்டையில் மைக்கை மாட்டி டெஸ்ட் செய்தபோது குரல் மிகவும் மெலிதாக இருந்தது.

“ சார்..கொஞ்சம் சப்தமா பேசுங்க“ என்றாள் திவ்யா

“இவ்வளவு தான் என்னால முடியும்“

“அப்போ கொஞ்சம் வெந்நீர் குடிச்சிச்கோங்க. வாய்ஸ் கிளியரா வரும்“ என்றபடி அவளாக லாவண்யாவிடம் வெந்நீர் கொண்டுவரச் சொன்னாள். கேமிரா, ஒளிரும் விளக்குகள். சுற்றிலும் நிற்கும் ஆட்கள் அவருக்குள் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள். திடீரென அது தன்னுடைய வீடில்லை என்பதைப் போல உணர்ந்தார். ஷோ கேஸில் இருந்த புத்தர் பொம்மை ஒன்றை ஒரு ஆள் வெளியே எடுத்து அவரது பின்பக்கமிருந்த ஸ்டாண்டின் மீது கொண்டு போய் வைத்தான்

புத்தரும் ஒரு செட் பிராபர்ட்டி தானா. எதற்காகத் தன் பின்னால் புத்தர் இருக்க வேண்டும் என அவருக்குப் புரியவில்லை.

“சார் நீங்க ரெடினா.. நாம போயிடலாம்“ என்றான் சரவணன்.

“நான் என்ன சொல்றது“

“உங்க லைப் பற்றிப் பேசுங்க. “

“அதுல மத்தவங்க தெரிஞ்சிகிட ஒண்ணுமில்லே“

“உங்க ஊரைப்பற்றி. ஸ்கூல் டேஸ், பிரண்ட்ஸ் பற்றிச் சொல்லுங்கள். எப்படி மேத்ஸ்ல ஆர்வம் வந்துச்சி.. எந்த டீச்சரை உங்களுக்குப் பிடிக்கும்.. இப்படிப் பேசுறதுக்கு நிறைய இருக்கும்லே“ என்று பொய்யாகச் சிரித்தான்.

“பாக்குறேன்“ என்றபடியே அவர் கண்களை மூடிக் கொண்டார். மனதில் என்றோ நடந்து முடிந்த அவமதிப்புகள். புறக்கணிப்பு. வருத்தங்கள் தான் தோன்றின. அவருக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒரு நபர் நினைவில் வந்து போனார். மனம் நாம் விரும்புவதை நினைவு கொள்வதில்லையே.

சரவணன் கேமிராவின் மானிடர் வழியாக அவரது முகத்தைப் பார்த்தான். சரிவரத் தூக்கமில்லாது போன கண்கள். உலர்ந்து வெடித்த உதடுகள். பிடிவாதமான கிழவர் என்று உணர்ந்தவன் போல அவரை ஏறிட்டு பார்த்துச் சொன்னான்.

“சார்.. நான் ஸ்டார்ட்சொன்னதும் நீங்க பேச ஆரம்பிச்சிடுங்க.. நான் இடையில எதுவும் கேட்க மாட்டேன். நீங்க பேசிகிட்டே இருக்கலாம். “

ராம்பிரசாத் லேசாகத் தலையாட்டிக் கொண்டார்.

சமையலறை ஒரமாக நின்றபடியே லாவண்யா அப்பாவை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பாவிடமிருந்து வார்த்தைகளை வெளியே கொண்டுவருவது எளிதான என்ன. இத்தனை வருஷத்தில் அவளுக்கே அவரது கல்லூரியில் என்ன நடந்த்து. எதற்காக அவர் திடீரென வேலையிலிருந்து நிறுத்தப்பட்டார் என்பது தெரியாதே. அப்பா எதையும் அளந்து பேசக்கூடியவர் என்பதை அவள் அறிவாள்.

ராம்பிரசாத்தின் உதடுகள் லேசாக அசைந்தன.. நெற்றியைச் சுருக்கிக் கொண்டார். எதையோ சொல்ல முற்படுகிறவர் போல முகபாவனைத் தோன்றியது. கேமிரா ஒடிக்கொண்டிருந்தது. ராம்பிரசாத் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. கேமிராவை வெறித்துப் பார்த்தபடியே இருந்தார்

கட் சொல்லிவிடலாமா என நினைத்தபடியே குழப்பத்துடன் ராம்பிரசாத்தை பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன்

எதிரே கேமிரா ஒடிக்கொண்டிருக்கிறது என்ற உணர்வே அவரிடமில்லை

“புரொபசர்.. பேசுங்க“ எனச் சப்தமாகவே சொன்னான்.

அவரிடம் எந்தச் சலனமும் இல்லை. ஏதோ பழைய நினைவில் உறைந்து விட்டவரைப் போலிருந்தார். கேமிராவிற்குக் கட் சொல்லிவிட்டு சரவணன் தனது எரிச்சலை மறைத்தபடியே அவரது அருகில் சென்று கேட்டான்

“என்ன சார் எதுவும் பேசலை. டயர்டா இருக்கா“

“பழைய விஷயங்களை நினைச்சா. வருத்தமா இருக்கு. பேச முடியலை“

“ரொம்ப சீரியஸா யோசிக்காதீங்க சார். ஜாலியா ஏதாவது பேசுங்க உங்க பிரண்ட்ஸ்.. சின்னவயசில கிரிக்கெட் ஆடுனது இப்படி.. சந்தோஷமா பேச ஆரம்பிங்க.. முன்னே பின்னே எடிட் பண்ணிகிடலாம். “

“லைப்ல நான் அதிகம் சந்தோஷப்பட்டதில்லை. அது தேவையாவும் இல்லை. நான் கற்பனையிலே வாழ்ந்துகிட்டு இருக்கிறவன். இந்த ரியாலிட்டியோட என்னாலே ஒத்து போக முடியலை. “

“நான் வேணும்னா கேள்வி கேட்கவா. அதுக்குப் பதில் சொல்லுறீங்களா“

“என்ன கேட்கப்போறீங்க“

“உங்க அப்பா அம்மாவை பற்றி முதல்ல சொல்லுங்க. அதை ரிக்கார்ட் பண்ணிகிடுறேன்“.

“அம்மா பற்றிச் சொன்னா எமோஷனல் ஆகிடுவேன்.  அப்பா பற்றிச் சொல்றதுன்னா.. எதைச் சொல்றதுனு தெரியலை. “

“உங்க அப்பா ஸ்கூல் டீச்சரா“

“அவரும் மேத்ஸ் டீச்சர். ரொம்பக் கோபம் வரும்.. பசங்களைக் கண்ணு மண்ணு தெரியாமல் அடிப்பாரு.. ஸ்கூல்ல அவரைப் பாக்க எனக்கே பயமா இருக்கும். நான் ஸ்கூல்ல ஆவரேஜ் ஸ்டுடண்ட். நிறைய எக்ஸாம்ல பெயில் ஆகியிருக்கேன். அப்போ அவர் அடிச்ச அடி, இன்னும் மனசுல வலிக்குது. அதை எல்லாம் இப்போ சொல்லி என்ன ஆகப்போகுது. ஒரு ஆள் இறந்து போனாலும் அவர் செய்த தவறுகள் இறந்து போறதில்லை. இப்போவும் ஏதாவது ஒரு நாள் கனவுல அவர் கிட்ட அடிவாங்கிட்டு தான் இருக்கேன். “

“உங்களுக்கு டிவி பாக்குற பழக்கம் இருக்கா. எங்க மார்னிங் ஷோ பாத்து இருக்கீங்களா“

“நான் டிவில டென்னிஸ் மேட்ச் மட்டும் தான் பார்ப்பேன். எப்போவாது அனிமேஷன் பார்ப்பேன். உங்க சேனலை பார்த்தது கிடையாது. நிறையப் புக்ஸ் படிப்பேன். “

“நாலே நாலு கேள்விக்கு ஜாலியா பதில் சொல்லுங்க. அது போதும்“

“நாலுங்க நம்பர் ரொம்ப விசேசமானது தெரியுமா. “.

“கேமிராவை ஆன் பண்ணுறேன். அதைப்பற்றிச் சொல்லுங்க“

“சும்மா ஜோக்குக்குச் சொன்னேன். நான் மேத்ஸ் வச்சி வித்தை காட்டமாட்டேன்“.

“அப்போ உங்க சொந்த ஊரைப் பற்றிச் சொல்லுங்க“

“காலையில் இருந்து என் மனசில் நாங்க குடியிருந்த வீதி மட்டும் தோணிக்கிட்டே இருக்கு, ஊருக்கு போயி முப்பது வருஷமிருக்கும். “

“உங்க வீதியில அப்படி என்ன விசேசம்“

“எங்க வீதி ரொம்ப சின்னது. ஆனா அதுக்குள்ளே நிறைய சின்னசின்னதா வீடுகள்.. நாங்க குடியிருந்தது ஒரு வாடகை வீட்ல. அந்த வீட்டுவாசல்ல பெரிய வேப்பமரமிருக்கும். எங்க வீதியில பாம்பு சட்டை மாதிரி ஒரு மினுமினுப்புல வெயில் அடிக்கும். மழை பெய்றப்போ வீதி ரொம்ப அழகா இருக்கும். என் சைக்கிள் மழையில நனையுறதை பார்த்துகிட்டே இருப்பேன். எதிர்வீட்ல ஒரு பூனை இருக்கும். அதுவும் என்னை மாதிரியே மழையை வேடிக்கை பார்க்கும். அந்தப் பூனை ஒரு நாள் கிணத்துல செத்துகிடந்தது. யார் கொன்னாங்கன்னு தெரியலை. சின்னவயசில பூனை பின்னாடியே சுற்றிகிட்டு இருந்திருக்கேன். “

“உங்களுக்கு மேத்ஸ்ல எப்படி ஆர்வம் வந்துச்சி. அதைச் சொல்லுங்க“

“எனக்கே தெரியலை.. நம்பர்ஸ் எல்லாம் எனக்கு விளையாட்டு சாமான் மாதிரி தான், அதை வச்சி விளையாடிகிட்டே இருப்பேன். எனக்கு நிறையப் பிரண்ட்ஸ் கிடையாது. வீட்ல அப்பா ரொம்பக் கண்டிப்பு. சிஸ்டர்ஸ் ரெண்டு பேரும் நல்லா படிப்பாங்க. . பள்ளிக்கூடம் பரிட்சை ரிசல்ட்ங்கிற உலகத்துல இருந்து எஸ்கேப் ஆகுறதுக்குத் தான் மேத்ஸ் உள்ளே நுழைஞ்சேன். அது ரொம்ப ரகசியமான உலகம். அதைச் சொல்லிப் புரிய வைக்கமுடியாது“

“பிரண்ட்ஷிப். லவ் மாதிரி சுவாரஸ்மான விஷயம் ஏதாவது சொல்லுங்க. கேமிராவை ஆன் பண்ணிகிடுறேன்“ என்றான் சரவணன்

“உங்க கேமிராவை பார்த்தா எனக்குப் பேச்சு வரமாட்டேங்குது. அது கூச்சமில்லை. உலகத்துக்கு எதுக்கு என்னைப் பற்றித் தெரியணும்ங்கிற கோபம். யாராவது பாராட்டுவாங்கன்னு நினைச்சி வானத்துல நட்சத்திரம் ஒளிருதா என்ன. “

“என்கிட்ட பேசுறதா நினைச்சிட்டு நீங்க இப்படியே பேசிகிட்டே இருங்க. ரிக்கார்ட் பண்ணிகிடுறேன். “

“என்னை நானே ஏமாத்திகிட சொல்றீங்களா. அது ரொம்பக் கஷ்டம்“

சரவணனுக்கு அவரை எப்படிக் கையாளுவது எனத் தெரியவில்லை. அவரே ஒரு சிக்கலான கணிதப்புதிர் போலிருந்தார்.

“சார் நீங்க வேணும்னா.. டிபன் சாப்பிட்டு வாங்களேன். பசியா இருந்தாலும் கோர்வையா பேச முடியாது“

“எனக்கு நடந்த பல விஷயங்கள் யாருக்கோ நடந்தமாதிரி இருக்கு. படிப்பு, வேலை. வாழ்க்கை எல்லாத்துலயும் நிறையச் சிரமப்பட்டு இருக்கேன். ரெண்டு தடவை என் வேலை பறி போயிருக்கு. காலேஜ் மேல கேஸ் போட்டேன். பனிரெண்டு வருஷம் நடந்துச்சி. தோத்துட்டேன். இப்படி நிறைய சிரமங்கள். அதனாலே மனசுல எதையும் வச்சிகிடக்கூடாதுனு வைராக்கியமா இருந்துட்டேன்.. இப்போ எதுவும் நினைவில் இல்லை “

“இந்த விருதை வாங்க எப்போ ஜப்பானுக்குப் போறீங்க. “

“ நிஜமா நான் போக விரும்பலை“.

“நீங்க போகாமல் எப்படி சார். “

“டிராவல் பண்ணுறதை நினைச்சா.. பயமா இருக்கு.. எனக்குச் சின்னசின்னதா நிறையப் பயம் இருக்கும். அதை வயசாகியும் என்னாலே விட முடியலை. மேடை விருது வெளிச்சம் இதெல்லாம் எனக்குப் பழக்கமில்லை. விருப்பமும் இல்லை“

“அவார்ட் வாங்கிட்டு ஜாலியா ஜப்பானை சுற்றிபாத்துட்டு வரலாம்லே“

“  பெரிய பெரிய கட்டிடங்களை, மனுசங்களை வேடிக்கை பாக்குறதுல என்ன இருக்கு. ஜன்னல் அளவில் வானம் தெரிந்தால் எனக்குப் போதும்  “

“ரொம்ப சலிப்பா பேசுறீங்க“

“சலிப்பு இல்லை. உண்மை… எனக்கு இந்த வீடு. மகள். பேரன் பேத்திங்கிற சின்ன உலகம் போதும். இந்த அவார்ட் கொடுக்காட்டி நீங்க என்னைத் தேடி வந்தே இருக்கமாட்டீங்க. இந்தத் திடீர் புகழ். திடீர் வெளிச்சம்… நிர்வாணமான நிக்குற மாதிரி கூச்சமா இருக்கு. “  

“இதைச் சந்தோஷமா அனுபவிக்க வேண்டியது தானே“

“அப்படி இருக்க என்னால முடியலை. Momentary happiness is worse than permanent misery. “

“இப்போ என்ன செய்யலாம்“ எனக்கேட்டான் சரவணன்

“நீங்களும் என் கூட டிபன் சாப்பிடலாம்“ என்றபடியே எழுந்து சமையல் அறையை நோக்கிச் சென்றார் ராம்பிரசாத்.

••

காலையிலே வேண்டாத வெட்டிவேலை என நினைத்தபடியே சரவணன் பேக்கப் என்றான். அவர்கள் கேமிராவை எடுத்து வைத்துவிட்டு சோபாவை பழைய இடத்திற்கு நகர்த்திக் கொண்டிருந்தார்கள். பிரகாச விளக்குகள் அணைக்கபட்டதும் ஹால் தன் இயல்பிற்குத் திரும்பியது.

லாவண்யா தனது அப்பாவை உள்ளே அழைத்து ஒரு தட்டில் இட்லி வைத்து சட்னி, எள்ளுபொடியுடன் சாப்பிடக் கொடுத்தாள். அவர் நின்றபடியே சாப்பிடும் காட்சி தெரிந்தது. கேமிரா உதவியாளர்கள் தங்கள் பொருட்களை வெளியே எடுத்துக் கொண்டு போனார்கள். வாசலில் நின்றபடியே ஷுவை காலில் மாட்டிக் கொண்டு சரவணன் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.

“சுத்த லூசு சார் இந்தக் கிழவன்.. மறை கழண்ட கேஸ்.. இவனுக்கு எல்லாம் அவார்ட் கொடுத்து நம்ம உசிரை எடுக்குறாங்க.   நான் அப்படியே ஏர்போர்ட் போயிடுறேன். மினிஸ்டர் ஷுட் இருக்கு.  “

சரவணன் பேசியது வீட்டிற்குள் இருந்தபடியே ராம் பிரசாத்திற்குக் கேட்டது அவர் மகளை பார்த்து மெல்லிய சிரிப்புடன் சொன்னார்

“மறை கழண்ட கேஸ்.. கேட்கவே நல்லா இருக்குல்லே“

லாவண்யா தானும்  சிரித்தபடி அப்பாவிடம் கேட்டாள்

“இந்த அவார்ட் கிடைச்சதுல உங்களுக்குச் சந்தோஷமே இல்லையாப்பா“

“ஒரு சந்தோஷமும் இல்லை. முப்பது வயசில கிடைச்சிருந்தா ஒருவேளை சந்தோஷப்பட்டிருப்பேன். இப்போ இந்த விருது எதுக்கு. நானும் இருக்கேனு காட்டிகிடவா. கரப்பான்பூச்சி மேல டார்ச் அடிச்ச மாதிரி தொந்தரவாக உணருறேன். வயசானவனுக்கு ரொம்பச் சந்தோஷம் எல்லாம் தேவையில்லைம்மா. கேமிரா முன்னாடி கடந்த காலத்தில நடந்ததை எல்லாம் சொல்ல சொல்றாங்க. அது என்ன கிணற்றுல வாளியை போட்டு தண்ணி இறைக்கிறது மாதிரியா. சந்தோஷம் எல்லாம் புகை மாதிரி கடந்து போயிருச்சி. கஷ்டங்கள் மட்டும் கறை மாதிரி மனசை விட்டு போகவேயில்லை.  இந்த அவார்டாலே உங்களுக்குத் தான் தொந்தரவு“

“ஒரு நாள் தானேப்பா“ என்று சிரித்தாள்

“ஒரு நாள் தான்“ என்று அவரும் சொல்லிக் கொண்டார். அப்படிச் சொல்லும் போது அவரது குரலில் ஆழமான வருத்தம் வெளிப்பட்டது.

•••

0Shares
0