கைதட்டுகள் போதும்

சிறுகதை

அந்த ஊரில் ரங்கசாமியின் வீட்டிற்கு மட்டும் கதவில்லை. தனக்குக் கதவு தேவையில்லை என்று பிடுங்கி எறிந்துவிட்டார்.

கதவற்ற அவரது வீட்டிற்கு யார் வரப்போகிறார்கள். காற்றையும் சூரிய வெளிச்சத்தையும் அபூர்வமாக வரும் மழையையும் தவிர வேறு மனிதர்கள் அந்த வீட்டிற்கு வருவதேயில்லை.

ரங்கசாமி சர்க்கஸில் வேலை செய்ததன் அடையாளமாக அவரிடம் மிஞ்சமிருந்தது ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிள் மட்டுமே. அந்தச் சைக்கிளில் தான் இப்போதும் அவர் வெளியே போய் வருகிறார்.

விளாம்பட்டி என்ற அந்தச் சிறிய கிராமத்தில் ஒற்றைச் சக்கரச் சைக்கிளில் வெளியே போய் வரும் ஊரே அவரை வியந்து பார்த்துக் கொண்டிருப்பது வழக்கம். இப்போது அதுவும் மாறிவிட்டது. யாரும் அவரைக் கவனிப்பதில்லை.

உயரமான அந்த ஒற்றைச் சக்கரச் சைக்கிளில் செல்லும் போது கீரிடம் தாங்கிய அரசன் பவனி வருவது போலிருப்பதாக அவராக நினைத்துக் கொள்வார்.

ஒற்றைச் சக்கரச் சைக்கிள் தான் அவரது அடையாளம். அவரது வீட்டின் வெளியே உயரமான அந்தச் சைக்கிள் நிற்பதை சிறுவர்கள் ஆசையோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள். எவரையும் அச் சைக்கிளை ஒட்ட ரங்க சாமி அனுமதிக்கவில்லை.

அது வெறும் சைக்கிள் இல்லையே பதினெட்டு ஆண்டுக் காலச் சர்க்கஸ் வாழ்க்கையின் அடையாள சின்னமல்லவா.

ஊரில் பிழைக்க வழியின்றி வேலை தேடி வட இந்தியாவிற்குப் போன ரங்கசாமி சர்க்கஸில் சேருவேன் என்று கனவில் கூட நினைத்திருக்கவில்லை. ஆனால் தற்செயலாகச் சந்தித்துப் பழகிய உத்தம்சிங்கின் நட்பு தான் அவரைச் சர்க்கஸில் சேர வைத்தது. உத்தம்சிங் சர்க்கஸின் மிருக வைத்தியராக இருந்தார்.

ராயல் சர்க்கஸில் பார் விளையாடுகிறவராக, கண்ணைக் கட்டிக் கொண்டு கயிற்றில் நடப்பவராக, ஒற்றைச் சக்கரச் சைக்கிளில் வித்தை காட்டுகிறவராக எத்தனையோ சாகசங்களைச் செய்து காட்டி கைதட்டல்கள் பெற்றவர் ரங்கசாமி. சர்க்கஸில் அவரது பெயர் ரங்கா. சர்க்கஸ் விளம்பர தட்டிகளில் அவரது படத்தைப் பெரிதாக வரைந்திருப்பார்கள். குதிரைவண்டியில் அறிவிப்பு செய்யும் போது கூட ரங்கசாமியின் பெயரை தவறாமல் அறிவிப்பார்கள். அவருக்கென்றே ரசிகர் கூட்டமிருந்தது.

இப்போது அவரது உடற்கட்டுத் தளர்ந்துவிட்டது தலை நரைத்து புருவ மயிர்கள் கூட வெண்மையாகிவிட்டது ஆனால் இளமையில் அவரைக் கண்டவர்கள் இரும்பு போல உறுதியாக உடலை வைத்திருக்கிறாரே என்று பிரமித்துப் போனார்கள். அதிலும் இளம்பெண்கள் அவரது சட்டையணியாத உடலைக் கண்டு வியப்பதை அவர் வெகுவாக ரசித்தார். எத்தனையோ பெண்கள் அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

ஏன் சர்க்கஸில் பார் விளையாடும் ப்ரீதா அவரைக் காதலிப்பதாகவும் அவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ ஆசைப்படுவதாகவும் மன்றாடினாள். ஆனால் ரங்கசாமி ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர் ப்ரீதாவிடம் உண்மையைச் சொல்லவில்லை. அவருக்குப் பதினெட்டு வயதிலே திருமணம் முடிந்துவிட்டது. மீனாவோடு சில மாதங்களே வாழ்ந்தார். அவர்களுக்குள் சண்டை வந்து மீனா கோவித்துக் கொண்டு போய் விட்டாள்.

சர்க்கஸில் வேலைக்குச் சேர்ந்த பிறகு கை நிறையப் பணத்துடன் அவளைத் தேடி சமாதானம் செய்து மீண்டும் சில மாதங்கள் கூடி வாழ்ந்தார். மீனா கர்ப்பிணியானாள். பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குத் தன் தாயின் பெயரான பார்வதி என்பதையே வைத்தார். பாரூ பாரூ எனக் குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்தார். ஆனால் கையில் பணமில்லாமல் செய்வதற்கு வேலையில்லாமல் ஊரில் எத்தனை நாட்கள் கைக்குழந்தையைப் பார்த்தபடியே காலம் கடத்தமுடியும். அவரால் ஊரில் முடங்கியிருக்க முடியவில்லை.

மீனாவிற்குத் தெரியாமல் ஒரு இரவு ஊரைவிட்டு கிளம்பி மதுரைக்குப் போய் அங்கிருந்து ரயிலில் குவாலியருக்கு சென்றார். சர்க்கஸ் கம்பெனி குவாலியரில் முகாமிட்டிருந்தது. அதன்பிறகு மூன்று ஆண்டுகள் அவர் ஊர் பக்கமே செல்லவில்லை. தேவைக்கு அதிகமான பணம். விதவிதமான மதுவகைகள். குடி. எளிதாகக் கிடைக்கும் பெண்துணை. இவ்வளவு போதும் என்று அவர் சர்க்கஸ் கம்பெனியோடு இந்தியா முழுவதும் சுற்றி வந்தபடியே இருந்தார். அந்த நாட்களில் அவர் மகிழ்ச்சியில் திளைத்தார்.

குடியை விடவும் அவருக்கு அதிகப் போதை தந்தது மக்களின் கைதட்டல். தன் சாகசங்களைக் கண்டு மக்கள் கைதட்டுவதை அவர் ரசித்தார். நிறையக் கைதட்டுகள் வரும் நேரத்தில் தாங்க முடியாத மகிழ்ச்சி கொண்டார். உறக்கத்திலும் கூட அவரது காதில் கைதட்டல் சப்தம் கேட்டபடியே இருந்தது. கைதட்டல்கள் மட்டுமின்றிப் பொது இடத்தில் அவரைக் காணும் போது மக்கள் வியந்து பாராட்டுவதும் அவரோடு கைகுலுக்கிக் கொள்வதும் அவரைத் தான் சாதாரண ஆள் இல்லை என்று உறுதியாக நம்ப வைத்திருந்தது.

கைதட்டுகளைக் கேட்பது ஒரு மயக்கம். கேட்க கேட்க தீராத மயக்கம். பனிக்கட்டியை தலையில் வைத்தது போன்ற குளிர்ச்சி தரும் விஷயம். மனிதர்கள் பாராட்டிற்கு ஏங்க கூடியவர்கள். சிறிய காரியங்களுக்குக் கூடப் பாராட்டு தேவை என நினைப்பவர்கள். பாராட்டும் கைதட்டும் மாலை மரியாதைகளும் தரும் சந்தோஷத்தை பணம் ஒரு போதும் தந்துவிடாது. பாக்கெட்டில் பை இல்லாமல் கூட இருந்துவிடலாம் ஆனால் பாராட்டு இல்லாமல் ஒரு நாளை கடந்துவிட முடியாது என்று ரங்கசாமி நினைத்துக் கொண்டிருந்த காலமது.

கைதட்டல்களின் சப்தத்தில் அவர் தன் மனைவியை மறந்து போயிருந்தார். எப்போதாது பின்னிரவில் விழித்துக் கொள்ளும் போது மீனாவின் ஞாபகமும் மகளின் நினைவும் வந்து போகும். மகள் இப்போது நடைபழகியிருப்பாள். நன்றாகப் பேச்சு வந்திருக்கும். அவள் மழலை பேசிக் கேட்க முடியாமல் போய்விட்டது. இந்த மீனா ஏன் ஊரிலே இருக்க விரும்புகிறாள். சர்க்கஸ் பெண்களைப் போல அவளும் ஏதாவது வித்தையைக் கற்றுக் கொண்டு தன்னோடு ஊர் ஊராகச் சுற்றிவரலாம் தானே. அந்தக் கிராமத்தில் என்ன இருக்கிறது எதற்காக ஊரைக்கட்டிக் கொண்டு அழுகிறாள் என்று எரிச்சலாக வரும்.

பெண்கள் பிடிவாதமானவர்கள். எதற்காகப் பிடிவாதம் பிடிக்கிறோம் என்று கூடக் காட்டிக் கொள்ளமாட்டார்கள். அவள் பிடிவாதத்திற்காகத் தன்னை மாற்றிக் கொள்ள ரங்கசாமிக்கு விருப்பமில்லை. வீட்டிற்குள் உலகம் இருப்பதாகப் பெண்கள் நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் உலகம் தான் வீடு என்பது ரங்கசாமியின் நம்பிக்கை.

சர்க்கஸ் என்பது தனியொரு உலகம். ஒட்டுமொத்த இந்தியாவின் மாதிரி வடிவமது. அங்கே எல்லா மாநிலத்து ஆட்களும் இருந்தார்கள்.. தமிழ் ஆட்கள் குறைவு. அவரும் இன்னும் இரண்டு பேரும் தான் தமிழர்கள். அந்த இருவரும் கூடச் சமையல் வேலைகளில் உதவியாளர்களாகவே இருந்தார்கள். கேரளாவில் இருந்தும் ஆந்திராவில் இருந்துமே அதிகமான கலைஞர்கள் சர்க்கஸில் கலந்து கொண்டிருந்தார்கள். கோமாளியாக இருந்தவன் அஸ்ஸாமைச் சேர்ந்தவன். சிங்கத்தை வைத்து வித்தை காட்டுகிற ஆள் மும்பைக்காரன். குஸ்தி பயில்வான் ஒரு பஞ்சாபி. சர்க்கஸில் வேலை செய்கிறவர்களுக்கு ஏழெட்டுப் பாஷைகள் எளிதாகப் பேசத் தெரிந்திருந்தன. ரங்கசாமியும் ஆறு பாஷைகள் நன்றாகப் பேசுவார். எத்தனை பாஷை இருந்தாலும் கைதட்டு தரும் இனிமைக்கு நிகரேது.

மகளைப் பற்றி நினைத்துக் கொள்ளும் போது ஊருக்குப் போய்வரலாம் என்று மனதில் தோன்றும். ஆனால் ஊரில் தன்னைப் பாராட்டுகிறவர்கள் ஒருவருமில்லை. மீனாவும் கூடத் தன் திறமைகளை ஒரு போதும் வியந்து பாராட்டியதில்லையே. ஊருக்குப் போய்விட்டால் தான் வெறும் ஆள். அதை அவரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

இதற்காகவே ஊருக்குப் போகாமல் இருந்தார். சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு வரும் கூட்டத்தில் தன் மகள் வயது குழந்தைகளைக் கண்டால் மனது நெகிழ்ந்து போய்விடும். தனது சாகசங்களைத் தனது மகள் பார்க்க வேண்டும். கைதட்டி ரசிக்க வேண்டும். அது தான் அவரது ஏக்கமாக இருந்தது.

ஒரு நாள் சர்க்கஸ் முடிந்த இரவில் அந்த ஊரின் புகழ்பெற்ற மருத்துவர் டாக்டர் முகர்ஜி அவரைத் தேடி வந்து மறுநாள் தன் வீட்டிற்கு விருந்திற்கு வரவேண்டும் என்று அழைத்தார். அப்படிப் பல இடங்களிலும் அவரை அழைத்து விருந்து கொடுத்திருக்கிறார்கள். சில நேரம் பணமுடிப்புகளும் தருவது வழக்கம். ரங்கசாமி வருவதாக ஒத்துக் கொண்டார்.

டாக்டரே வந்து காரில் அழைத்துப் போவதாகச் சொன்னார். மறுநாள் காலை ரங்கசாமி குளித்துப் புதிய ஆடைகள் அணிந்து கொண்டு தயாராகியிருந்தார். முகர்ஜியின் கார் வந்தது. காரில் டாக்டரின் வீட்டிற்குப் போனபோது அலங்கார வளைவு கொண்ட பெரிய மாளிகை போலிருந்தது வீடு. வராந்தாவில் தொங்கிய கூண்டில் இருந்து கிளி சப்தமிட்டது. வீட்டின் ஹாலில் தேக்கில் செய்த சோபா போட்டிருந்தார்கள். சுவரில் டாக்டரின் ஆள் உயர ஒவியம். வீட்டிலிருந்தவர்களை டாக்டர் அறிமுகம் செய்து வைத்தார். பிறகு மெல்லிய குரலில் முகர்ஜி அவரிடம் கேட்டார்

“என் மகள் உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டதால் தான் விருந்திற்கு அழைத்தேன். அவளுடன் நீங்கள் நிற்பது போல ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா“

“தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்“ என்றார் ரங்கசாமி

தன் அம்மாவின் பின்னால் வெட்கத்துடன் ஒளிந்து நின்று கொண்டிருந்த டாக்டரின் நான்கு வயது மகள் அபர்ணாவை நோக்கி தன் கைகளை நீட்டினார் ரங்கசாமி

அவள் தயங்கி தயங்கி அருகில் வந்தார். அவளை ஆசையாகத் தூக்கி வைத்துக் கொண்டு புகைப்படம் எடுப்பதற்குத் தயராக நின்றார். அந்தச் சிறுமியின் கண்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியை அவரால் உணர முடிந்தது.

டாக்டர் தனது பாக்ஸ் கேமிராவால் நாலைந்து புகைப்படங்கள் எடுத்தார். அபர்ணாவை கிழே இறக்கிவிட்டபோது அவர் அறியாமல் மனது பாரூ பாரூ என்று அரற்றியது. தன் சொந்தமகளை இப்படித் தூக்கி வைத்துக் கொள்ளவில்லையே. அவளை ஒரு போதும் மகிழ்ச்சிபடுத்தியதே இல்லையே. என்ன வாழ்க்கையிது. எதற்காக இப்படி ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிறேன் என்று தோன்றியது.

டாக்டரின் குடும்பம் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது.

டாக்டரின் மகள் ஒரு பொம்மையை அவருக்குப் பரிசாக அளித்தாள். அது இங்கிலாந்தில் இருந்து வாங்கி வரப்பட்ட அதிசயபொம்மை. சாவி கொடுத்தால் கைதட்டக் கூடியது. அந்தப் பொம்மையின் கைதட்டல் ஒசை அவ்வளவு இனிமையாக இருந்தது. தனக்குப் பொருத்தமான ஒரு பொம்மையைத் தந்திருக்கிறாளே என அந்தச் சிறுமியின் சின்னஞ்சிறு கையைப் பற்றிக் குலுக்கி மகிழ்ந்தார்.

உணவு மேஜையில் வைத்து ரங்கசாமி சொன்னார்

“உங்கள் மகள் வயது தான் என் மகளுக்கும்“

“சந்தோஷம். உங்கள் மகள் பெயரென்ன“ என டாக்டரின் மனைவி கேட்டாள்

“பாரூ“ என்றார் ரங்கசாமி

“பிள்ளைகளைச் சந்தோஷப்படுத்துவதை விடப் பெரிய விஷயம் ஒன்றுமேயில்லை. என்னிடம் பெட்டி பெட்டியாகப் பணமிருக்கிறது. அதைக் கொண்டு என் மகளுக்கு எதையும் வாங்கித் தர முடியும். ஆனால் அவள் எதற்கும் ஆசைப்பட்டதேயில்லை. சர்க்கஸில் உங்களைப் பார்த்த போது தான் அவள் முதன்முறையாக உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டாள் ஒரு தந்தையாக அதை நிறைவேற்றியதை பெரிய சாதனையாக நினைக்கிறேன். ஒரு வேளை நீங்க வர மறுத்திருந்தால் நான் மிகுந்த வருத்தம் அடைந்திருப்பேன். மகளின் ஆசையை நிறைவேற்ற முடியாத தந்தையாக இருப்பது துர்பாக்கியம் “ என்றார் டாக்டர்‘

ரங்கசாமியில் உணவை விழுங்க முடியவில்லை. மகளின் நினைவு மனதில் கொந்தளிக்கத் துவங்கியது. ஏன் இப்படித் தான் மகளை நேசிக்கவில்லை. அவள் என் உதிரமல்லவா. தன்னை நினைத்து மகள் ஏங்கியிருப்பாளே. இன்றிரவே ஊருக்குப் போய் விட வேண்டும் என்று தோன்றியது.

டாக்டர் தன் காரில் சர்க்கஸில் கொண்டு போய் விடும் போது ஒரு கவரில் ஆயிரம் ரூபாய் பணம் வைத்துத் தந்தார். கையைப் பிடித்துக் குலுக்கியபடியே சொன்னார்

“ எத்தனை பேரையோ நீங்கள் மகிழ்ச்சிப்படுத்தியிருப்பீர்கள்.அது எல்லாவற்றையும் விட உயர்ந்த விஷயம் என் மகளைச் சந்தோஷப்படுத்தியது. இந்த உதவியை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். நன்றி“

டாக்டரிடம் விடைபெற்று தன் கூடாரத்திற்குப் போனதும் ஒரு மாத கால விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பவேண்டியது தான் என்று தோன்றியது. சர்க்கஸில் திடீரென எவரும் விடுப்பு எடுத்துக் கொள்ள முடியாது. ஆகவே சர்க்கஸ் உரிமையாளர் அடுத்த மாதம் கான்பூருக்குச் சர்க்கஸ் போகும்வரை அவர் நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஒரு மாத காலம் தானே என ரங்கசாமியும் ஒத்துக் கொண்டார். ஆனால் ஊருக்குப் போக வேண்டும் என்ற நினைப்பு வந்தபிறகு ஒவ்வொரு நாளும் மனது ஊரையே சுற்றிவரத்துவங்கியது. பகலும் இரவும் மிக நீண்டதாக மாறியது. தன் மகளுக்குப் பிடித்த விஷயங்களை வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று பஜாரில் சுற்றி பாசிகள். வளையல்கள்.விதவிதமான பொம்மைகள் என நிறைய வாங்கிச் சேகரித்தார்.

கான்பூருக்குச் சர்க்கஸ் கிளம்பும் நாளில் ஊருக்குப் பயணிக்கத் துவங்கினார். ஒரு நாள் முழுவதும் பயணித்து அடுத்த நாள் மதியம் சொந்த ஊரான விளாம்பட்டிக்கு வந்து சேர்ந்தபோது பெட்டிக்கடை ராமலிங்கம் அவரிடம் சொன்னார்

“ உன் பொண்டாட்டி ஊரைவிட்டு போயி இரண்டு மூணு வருஷம் ஆச்சுப்பா.. அவங்க ஆத்திகுளத்துக்குப் போயிட்டாங்க“

அங்கே யார் இருக்கிறார்கள். மீனா எதற்காக ஆத்திகுளம் போனாள் என்று எரிச்சலாக வந்தது. ரங்கசாமி ஊரில் விசாரித்து மேற்கிலிருந்த ஆத்திகுளம் என்ற ஊருக்குப் போனபோது இரவாகயிருந்தது. சின்னஞ்சிறிய கிராமம். நூறு வீடுகளுக்கும் குறைவாக இருந்தது. மின்சார விளக்குகள் குறைவாக இருந்த ஊரது. மீனா அந்த ஊரில் அவளது பாட்டியோடு குடியிருந்தாள். சிறிய குடிசை வீடு. அவர் போனபோது வீடு ஒரே புகைமூட்டமாக இருந்தது. நாற்பது வாட்ஸ் பல்ப் ஒன்று உள்ளே எரிந்து கொண்டிருந்தது. வாசற்கதவை தள்ளி உள்ளே போனதும் மீனா அவரைக் கண்டு திடுக்கிட்டுப் போனாள். அவர் நினைத்தது போல மீனாவோ அவரது மகளோ அவரது வருகையால் சந்தோஷம் அடையவில்லை. பாரூ உயரமாக வளர்ந்திருந்தாள். அவர் ஆசையாக அணைத்துக் கொள்ள அவளை அழைத்தபோது முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அந்த வீட்டில் எவரும் அவருடன் ஒரு வார்த்தை பேசவில்லை.

மீனா மட்டும் கோபத்துடன் கத்தினாள்

“ இப்போ எதுக்கு வந்தீக. உங்க சகவாசமே வேண்டாம்னு தான் ஊரை விட்டு வந்து கூலி வேலை பாத்து பிழைச்சிட்டு இருக்கோம். மக நினைப்பு இப்போ தான் வந்துச்சாக்கும். “

“ ஏன் மீனா இப்படிப் பேசுறே. என் மகளைப் பாக்க நான் வந்தது தப்பா. “

“ மகளைப் பாத்தாச்சில்லே. கிளம்புங்க“

“ நான் சர்க்கஸ் வேலையை விட்டுட்டு வந்துட்டேன் மீனா. இனிமே உங்க கூடத் தான் இருக்கப் போறேன்“

“ போதும் சாமி உங்களைக் கட்டிக்கிட்டு நான் பட்ட கஷ்டம். ஒடுன காலு ஒரு நாளும் வீடு தங்காது. நாலு நாள் இருந்துட்டுச் சொல்லாமல் ஒடிப்போற ஆளு தானே நீங்க. இப்போ என்ன பாசம் பொத்துகிட்டு வருது“

“ அதான் தப்பை உணர்ந்துட்டேன்னு சொல்றேன்லே“

“ அந்தப் பேச்சு எல்லாம் வேண்டாம்.. உங்க கூடயிருந்து வாழ என்னாலே முடியாது“.

“ அப்போ நான் எங்க போறது“

“ உங்க வித்தையைப் பாத்து கைதட்டுனாங்கள்ளே அவங்க வீட்டுக்கு போங்க. எங்களுக்கு உங்க உறவே வேணாம். “

“ அப்படிச் சொன்னா எப்படி மீனா.. அதான் இனிமே வீட்டோட இருக்கேன்னு சொல்றேன்லே“ என்றார் ரங்கசாமி

அவர்கள் சண்டையை முறைத்து பார்த்தபடியே இருந்த மகள் பார்வதி சொன்னாள்

“ உங்களை யாரு வரச்சொன்னது. நீ கதவை மூடும்மா“

மீனா சொன்னதைவிடவும் பாரூ சொன்னதைத் தான் அவரால் தாங்க முடியவில்லை. தான் வாங்கி வந்த பொருட்களை அப்படியே வைத்துவிட்டு வீட்டினை விட்டு வெளியே இறங்கினார். அவர் கண்முன்னாலே பாரூ அவர் கொண்டுவந்திருந்த பரிசுகள் அத்தனையும் தூக்கி எறிந்தாள். வேலிப்புதரில் போய்ப் பொம்மைகள் விழுந்தன.

ஊரேயே சந்தோஷப்படுத்த முடிந்த தன்னால் வீட்டினை சந்தோஷப்படுத்த முடியவில்லை. யாரோ ஒரு டாக்டரின் மகள் தன்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறாள். ஆனால் சொந்த மகள் தன்னை வெறுக்கிறாள்.

விளாம்பட்டியிலிருந்து அன்றிரவே அவர் திரும்பவும் சர்க்கஸிற்குக் கிளம்பிப் போனார். மனதில் வேதனையும் கவலையும் படியத்துவங்கியதால் அவரது கவனம் திசைமாறியது. நிறையக் குடித்தார். தனிமையில் அழுதார். கவனம் கூடாத காரணத்தால் இரண்டு முறை விபத்துக்குள்ளாகி கால் முறிவு கொண்டார். சர்க்கஸில் அவரது புகழும் பேரும் குறைய ஆரம்பித்தது.

அவர் கண்ணைக் கட்டிக் கொண்டு கயிற்றில் நடக்கும் போது ஒருவரும் கைதட்டுவதேயில்லை. அந்த வெறுமை அவரால் தாங்க முடியாததாகியது. சர்க்கஸ் பார்க்க வந்திருப்பவர்களை அவர் வெறுத்தார். எவருக்கோ கிடைக்கும் கைதட்டுகளைக் கேட்டுக் கொதித்துப் போனார். தன் தட்டில் நாணயம் விழாத பிச்சைக்காரனின் நிலை போலிருந்தது அவரது வாழ்க்கை. பின்பு அவராகவே ஒரு நாள் சர்க்கஸை விட்டு விலகிக் கொண்டார்

அவருக்குச் சேர வேண்டிய பணத்தைத் தந்து விடையனுப்பும் போது தனக்குச் சர்க்கஸில் உள்ள ஒற்றைச் சக்கரச் சைக்கிள் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டு விளாம்பட்டி வந்து சேர்ந்தார்.

சர்க்கஸில் கத்து வைத்திருந்த எலக்ட்ரிக்ஷன் வேலையை ஊரில் செய்ய ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் அவர் தவறாமல் செய்த காரியம் ஒற்றைச் சக்கரச் சைக்கிளை ஒட்டிக் கொண்டு ஆத்திகுளம் வரை போய் வருவது.

தன் மகள் என்றாவது ஒரு நாள் தன்னை ஏற்றுக் கொள்வாள் என்பது போல அவர்கள் வீட்டு முன்பாக அவர் ஒற்றைச் சக்கரச் சைக்கிளை ஒட்டிக்காட்டுவார். தன் மகளுக்காகவே அதிசயமான பொருட்களைச் செய்து கொண்டு போவார். அப்படி ஒருமுறை பாட்டுபாடும் முயல்பொம்மை ஒன்றை செய்திருந்தார். அந்தப் பொம்மையைப் பாரூ கண்டுகொள்ளவேயில்லை. இன்னொரு நாள் காகிதகொக்குகளைச் செய்து அவள் வீட்டு மரத்தில் தொங்கவிட்டிருந்தார். பாரூ வளர்ந்து பள்ளிக்குப் போகும் வரை அவர் நாள் தவறாமல் அவர்களைத் தேடி போய் வந்தார்.

பின்பு அவர்கள் தன் மீது கொண்டுள்ள வெறுப்பும் விலகலும் சரியானது தான் என்று புரிந்து கொண்டவரைப் போல அவர்களைத் தனியே வாழ்வதற்கு அனுமதித்தவராக ஒதுங்கிக் கொண்டார்.

ரங்கசாமியின் வீட்டில் இப்போதும் அந்த ஒற்றைசக்கரச் சைக்கிள் இருக்கிறது. அவரது மனைவியோ மகளோ அவரை மன்னிக்கவேயில்லை. அந்தச் சைக்கிளில் அவர் ஒற்றை ஆளாக ஊரில் வலம் வரும்போதெல்லாம் யாரோ அவரது வாழ்க்கையைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள்.

சாவி கொடுத்தால் கைதட்டும் பொம்மை இப்போதும் அவரிடம் இருக்கிறது. ஆனால் அதைக் கண்டாலே அவருக்கு ஆத்திரமாக வந்தது. அதன் சாவியைப் பிடுங்கி வீசி எறிந்து விட்டார். இரண்டு கைகளும் தட்டுவதற்குத் தயாராக விரித்தபடியே நின்று கொண்டிருந்தது அப்பொம்மை

கைதட்டு சப்தத்தின் ஊடே தொலைவில் மனைவி வடித்த கண்ணீரின் சப்தம் கேட்காமல் போய்விட்டேன். மகளின் சிரிப்பு பார்வையாளர்களின் உற்சாகக் கைத்தட்டிலில் கேட்காமல் போய்விட்டது. அந்த டாக்டர் செய்தது போலத் தன்னால் மகளைச் சந்தோஷப்படுத்த முடியவேயில்லை. தன் வாழ்க்கை பெரும் தோல்வி. தனது திறமைகள் யாவும் உலகினை மட்டுமே சந்தோஷப்படுத்தக்கூடியது. சொந்த வாழ்க்கையில் அதற்கு ஒரு இடமும் கிடையாது.

நிச்சயம் என்றாவது ஒரு நாள் தன் மகள் தன்னைப் புரிந்து கொள்ளக்கூடும். நேசிக்கக்கூடும். அதுவரை காத்திருக்க வேண்டியது தான் என அவர் தன்னை வீட்டோடு ஒடுக்கிக் கொண்டார்.

பிரிவு இத்தனை ஆழமான மனக்கசப்பை, வெறுப்பை உண்டாக்கிவிடும் என்பதை அவர் பின்னாளில் தான் முழுமையாக உணர்ந்தார். தன் மகள் வளரும் நாட்களில் உடனில்லாமல் போன தவற்றை எதைக் கொண்டும் சரிசெய்ய முடியாது என்பது அவருக்குப் புரிந்தது.

உடைந்த பீங்கான் பாத்திரங்களைக் கூட ஒட்டவைக்கப் பசை உருவாக்கிவிட்டார்கள். ஆனால் பிரிந்த உறவினை ஒட்டவைக்க எந்தப் பசையும் உலகில் இல்லை. தன் ஆற்றாமையுடன் அவர் நீண்ட பகலிரவுகளைக் கடந்து சென்றார். மனக்கவலை முதுமையை வேகமாகக் கொண்டுவந்தது.

எப்போதாவது தொலைவில் தன் மகளையோ, மனைவியோ காணும் போது மனது சந்தோஷம் கொள்ளும். அவர்கள் அவரைப் பொருட்படுத்துவதேயில்லை. திரும்பிப் பார்ப்பது கூடயில்லை. சொந்தமகளின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டதை விடத் தனக்குத் தண்டனை வேறில்லை எனத் தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தார்.

இந்த உலகின் மனிதன் யாசிக்கும் எந்தப் பொருளும் காத்திருப்பில், விடாமுயற்சியில் எப்படியாவது கிடைத்துவிடும். ஆனால் விலகிப் போன உறவிடமிருந்து அன்பை பெறுவது எளிதேயில்லை.

தன் தவற்றை உணர்ந்த காரணத்தால் ரங்கசாமி என்றாவது தன்னைத் தேடி மகளும் மனைவியும் வரக்கூடும் என நம்பினார். அப்படி வரும் நாளில் வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தால் என்னவாகும் எனப் பயந்தே கதவை பிடுங்கி எறிந்துவிட்டிருந்தார்.

கதவற்ற வீடு ரங்கசாமியின் மனதைப் போலவே மகளுக்காகவும் மனைவிக்காவும் காத்திருந்தது.

காத்திருப்பதைத் தவிர உறவுகள் ஒன்று கூடுவதற்கு வேறு வழியில்லை தானே. காற்றும் மழையும் சூரியனும் அதைத்தான் ரங்கசாமிக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தன.

அவரும் அதை உணர்ந்தேயிருந்தார்

••

0Shares
0