நாடோடியாக, கோமாளியாக, சர்வாதிகாரியாக, வேலைக்காரனாக, தங்கம் தேடிச்செல்பவனாக, குத்துசண்டை வீரனாக என எவ்வளவோ கோமாளித்தனமான வேஷங்கள் புனைந்த சார்லி சாப்ளின் ஒரேயொரு படத்தில் கொலைகாரனாக நடித்திருக்கிறார்.
அப்படம் Monsieur Verdoux
பணக்கார விதவைகள் ஒவ்வொருவராகத் தேடிச் சென்று காதலித்து திருமணம் செய்து பிறகு சொத்துக்களை அபகரிப்பதற்காக அவர்களைக் கொலை செய்துவிட்டு பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பி வாழும் ஹென்றி வெர்டாக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சாப்ளின் நடித்திருக்கிறார்
நம்ப முடியாமல் இருக்கிறதா? சாப்ளின் தோற்றம் நமக்குள் உருவாக்கியிருந்த பிம்பம் தான் இதை நம்பாமல் செய்தவற்கான பெரிய தடை. சாப்ளின் எப்படி சீரியல் கில்லராக நடிக்க முடியும் என்று யோசனை உருவாகிறதில்லையா?
1947 ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் அதுவரை சாப்ளின் உருவாக்கி வைத்திருந்த நாடோடி பிம்பத்தை முற்றிலும் அழித்து திரையில் புதிய உருவம் கொடுக்க முனைந்தது.
இரண்டாம் உலக யுத்ததிற்குப் பிறகு அமெரிக்கத் திரையுலகில் ஏற்பட்ட மாற்றங்களும், தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தி ஹாலிவுட் திரையுலகம் படம் எடுக்க விடாமல் அவமானப்படுத்திய சம்பவங்களும் சாப்ளின் மனதில் ஆழமாகப் பதிந்து போயிருந்தன. அதனால் சாப்ளின் தனது வழக்கமான காமெடிப் படங்களை விட்டுவிலகி ஆழமான உளவியல் பின்புலம் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்கி நடித்தார்.
அமெரிக்காவில் இப்படம் வெளியான போது பெரிய வரவேற்பில்லை. ஐரோப்பிய நாடுகள் இதைப் புகழ்ந்து கொண்டாடின. ஆனால் சமீபமாக அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்று நடத்திய வாக்கெடுப்பில் இப்படம் உலகின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக பலராலும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
சாப்ளின் என்றதும் கோமாளித்தனமான வேடிக்கை செய்யும் மனிதனின் தோற்றம் மட்டுமே நமக்குள் உருவாகிறது. சாப்ளின் வெறும் கோமாளியல்ல. ஒரு கலகக்காரன். தன்னையே பகடி செய்து கொள்ளும் ஒரு ஞானி. உலகின் விசித்திரங்களைப் புரிந்து கொண்ட கவிஞன். அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்த போராளி. வறுமையைக் கண்டு பயந்துவிடாமல் அதை தன் சிரிப்பால் விரட்டிய அடித்த உயர்ந்த மனிதன். சினிமாஉலகில் சாப்ளினின் பாதிப்பு இல்லாத நடிகர்களே இல்லை.
சாப்ளின் நகைச்சுவை வலியிலிருந்து உருவாவது. சாப்ளினை எப்போதுமே உலகம் துரத்திக் கொண்டேயிருக்கிறது. டாம் அண்ட் ஜெர்ரியில் வரும் எலியைப் போல அவன் நிம்மதியற்று அலைந்து கொண்டேயிருக்கிறான். ஆனால் எலியைப் போல திரும்பத் திரும்ப தன்னை அடிப்பவனைத் தேடிப் போகிறான். அவனோடு நட்பு கொண்டு கொஞ்சுகிறான். திரும்பவும் அடி வாங்குகிறான். புத்திசாலிதனமாக பதிலடி கொடுக்கிறான். பகையைத் தேடிச்சென்று விளையாடும் விசித்திரன் சாப்ளின்.
சாப்ளினிடம் காணப்படும் புத்திசாலிதனம் எளிமையானது. மிகக் கஷ்டமான வேலையை அவன் விரும்பித் தேர்வு செய்து அதில் மாட்டிக் கொண்டு அல்லாடக்கூடியவன். அவனால் தூக்க முடியாத பொருள்களே உலகில் இல்லை. ஒரு குறும்படத்தில் நாற்பது அடி உயரத் தூணை தன் கையால் தூக்க முயற்சிப்பான். இன்னொரு படத்தில் மாபெரும் இயந்திரனுள் மாட்டிக் கொண்டு தானும் ஒரு உதிரி பொருளாக மாறிவிடுவான். ஆனால் சாப்ளின் அதற்கெல்லாம் அழுவதில்லை. இயந்திரங்களின் ஆக்ரமிப்பையும் சகமனிதர்களின் மீது அன்பில்லாமல் நாம் செய்யும் குரூரங்களையும் அவனைப்போல பரிகாசம் செய்தவர்கள் எவருமில்லை.
சாப்ளினின் எல்லாத் திரைப்படங்களின் அடிநாதமாகவும் அவனது கடந்த காலமும் வறுமையும் உள்ளது. பசியால் அலைந்து திரிந்து குப்பையில் கிடந்த உணவை சாப்ளின் சாப்பிடும் காட்சி அவனது படங்களில் தவறாமல் இடம் பெறும். அதைக் கண்டு நாம் வாய்விட்டு சிரிப்போம். ஒரு படத்தில் நாயோடு போட்டியிட்டு இறைச்சியைப் பிடுங்கி தின்பான். பசி தாங்கமுடியாமல் காலணியை வேகவைத்து ருசித்து சாப்பிடுவான். சாக்கடையில் கிடந்த ஆரஞ்சு பழத்தை அனுபவித்து மெல்கிறான். இன்னொரு படத்தில் அவனையே ஒரு கோழி என நினைத்து குண்டன் விரட்டிக் கொல்ல முயற்சிப்பான். ஏன் சாப்ளின் பசியால் அவதிப்படுவது நமக்கு கோபம் ஏற்படுத்துவதில்லை. ஏன் சாப்ளின் போராட்டம் வெறும் பரிகாசமாகவே முடிந்து போகிறது. உண்மையில் சாப்ளின் தன்னை அல்ல, தன்னைச் சுற்றிய எளிய மனிதர்களையே அடையாளப்படுத்துகிறான்
சாப்ளின் போல ஆயிரக்கணக்கானவர்கள் வறுமையில் சாப்பாட்டுக்கு வழியின்றி, வேலையின்றி அவதிப்படுகிறார்கள். அவர்கள் வாழ்வதற்கான போராட்டத்தில் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள். அதைத் தான் சாப்ளினும் செய்கிறான். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் போராட்டம் சாப்ளின் படங்களில் தான் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. விஞ்ஞானம் மனிதனுக்குச் சாப்பாடு புகட்டிவிடும் இயந்திரத்தைக் கூட உருவாக்கிவிடும் என்ற எரிச்சல் மார்டன் டைம்ஸில் வெளிப்படுகிறது.
சாப்ளினுக்குள் ஆவேசமிக்க ஒரு கலைஞன் இருக்கிறான். அவன் தன் சமகாலத்தைய சமூக நிகழ்வுகளைக் கண்டு கொந்தளிப்பு அடைகிறான். பகடியாகவும் விமர்சனமாகவும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறான். அதற்கு நல்ல உதாரணம் கிரேட் டிக்டேடர், கோல்டு ரஷ், மார்டன் டைம்ஸ்.
சாப்ளின் உலகில் குழந்தைகள் மிக முக்கியமானவர்கள். எப்போதும் தன்னை அவர்களில் ஒருவனாகவே சாப்ளின் அடையாளம் கண்டு கொள்கிறான். சிறுவர்களுக்கு சமமாக குறும்பு செய்யவும் வெளிப்படையாக செயல்படவுமே முயற்சிக்கிறான்
சாப்ளினுக்குள் நிறைவேறாத காதலின் வலி எப்போதுமிருக்கிறது. சாப்ளின் அழும் தருணங்கள் யாவும் காதல் பிரியும் நிமிசங்களே. தன்னைக் காதலித்த பெண் தான் யார் என்று அறியாமல் வேறு ஒருவரோடு நெருக்கமாகும் போது சாப்ளின் அழுகிறான். தன்னைப் புறக்கணிக்கும் பெண்களின் அன்பிற்காக ஏங்குகிறான். பலவேளைகளில் தன்னை மறைத்துக் கொண்டு தான் காதலிக்கும் பெண்களுக்காக எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொள்கிறான்;
இந்த கதைச்சரடு தான் இன்று வரை வெகுஜன சினிமாவின் அடிநாதமாக இருந்து வருகிறது. ஆனால் சாப்ளின் தரத்தில் காதல்படங்கள் எதுவும் உருவாக்கபடவில்லை.
சாப்ளின் சொந்தவாழ்வில் நான்கு திருமணங்கள் செய்து கொண்டார். தன்னோடு நடித்த நடிகைகளுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்துகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டவர். அத்தோடு ஒரு மனைவியை மாமியார் தொல்லை தாங்க முடியவில்லை என்று விவகாரத்து செய்தவர். தன்னுடைய பிள்ளைகள் எவரையும் அருகில் நெருங்கி வரவிடாமல் பாசமற்று நடந்து கொண்டவர். முன்கோபக்காரர். கருமி. சகநடிகர்களை விலங்குகளைப் போல நடத்தக் கூடியவர். இப்படி அவரைப்பற்றி பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் உள்ளன.
ஆனால் இவை எவையும் திரையில் தோன்றும் சாப்ளின் முன்னால் மறைந்துவிடுகின்றன. சாப்ளினிடம் ஒரு மாயமிருக்கிறது. அது திரையில் இருந்தபடியே பார்வையாளர்களின் மனதோடு பேசுகிறது. பொம்மலாட்டப் பொம்மையை போல நம்மை அவன் விருப்பபடியே அழவும் சிரிக்கவும் வைக்க தெரிந்த மாயம் கைகூடியிருக்கிறது.
சாப்ளின் நகைச்சுவையைப் பார்த்து சிரிக்காதவர்களே இல்லை. ஆனால் சாப்ளின் சிரிக்க வைப்பது மட்டும் தனது வேலையில்லை என்று நினைத்தார். தான் வாழும் சமூகம் குறித்து அவருக்குள் ஆழமான சிந்தனை இருந்தது. அவரது மௌனப்படங்களில் கூட இது அழுத்தமாக வெளிப்பட்டது. ஹிட்லரை சாப்ளின் போல நேரடியாக விமர்சித்த திரைக்கலைஞர் எவருமில்லை. அப்படத்தின் இறுதியில் இடம் பெற்றுள்ள நீண்ட உரை இன்றைக்கும் பேசப்படுகிறது.
தனித்து அச்சிடப்பட்டு ஒவ்வொருவருக்கும் இலவசமாக வாசிக்க வழங்கப்பட வேண்டியது தி கிரேட் டிக்டேடர் படத்தில் சாப்ளின் பேசும் இறுதியுரை. அதை தமிழில் நான் மொழிபெயர்த்து உலக சினிமா என்ற புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறேன்.
1940களுக்கு பிறகு சாப்ளின் இயக்கிய படங்களில் அவரது தோற்றத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு தீவிரமாக இருந்தது. அவர் விரும்பி தனது அடையாளத்தை அழித்துக் கொள்ள முயன்றார். வயதான போதும் தனது இளமை அடையாளத்தை மாற்றிக் கொள்ள விரும்பாத புகழ்பெற்ற நடிகர்கள் உள்ள நமது சூழலை நினைத்து பாருங்கள்.
உலகமே எந்த அடையாளத்திற்காக தன்னைக் கொண்டாடுகிறதோ அது தேவையில்லை என்று தனது வயோதிகத் தோற்றத்தை இயல்பாக திரையில் காட்ட முயன்றவர் சாப்ளினே. அவர் பார்வையாளர்கள் மேல் நம்பிக்கை வைத்திருந்தார். தான் சொல்ல விரும்பிய கருத்துக்களுக்குத் தனது பிம்பம் தடையாக இருந்தால் அதைத் தாண்டி செல்வதற்கு அவர் தயங்குவதேயில்லை.
அந்த வரிசைப் படங்களில் ஒன்று தான் மொன்சூர் வெர்டாக்ஸ். இப்படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தினை மையமாகக் கொண்டது. பாரீஸில் நடந்த தொடர்கொலைகளுக்குக் காரணமான ஒருவனைப் பற்றியது. இந்தச் சம்பவம் பத்திரிக்கைகளில் பரபரப்பாக எழுதப்பட்டது. அதை அறிந்த ஹாலிவுட் இயக்குனரான ஆர்சன் வெல்ஸ் அதை ஒரு திரைக்கதையாக உருமாற்றி சாப்ளினை முக்கிய கதாபாத்திரமாக்க நடிக்க வைத்து படத்தை இயக்க நினைத்தார்.
ஆனால் சாப்ளின் வேறு இயக்குனர்களிடம் நடிப்பதில் விருப்பம் காட்டுவதில்லை என்பதோடு கதையில் நிறைய மாற்றங்களும் சொன்னார். அது ஆர்சன் வெல்சிற்கு ஒத்துக் கொள்ளவில்லை. திட்டம் கைவிடப்பட்டது. பல வருசத்திற்குப் பிறகு சாப்ளினுக்கு அந்தக் கதையை ஆர்சன் வெல்சின் அனுமதி பெற்று தனக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அப்படி உருவாக்கபட்டது தான் மொன்சூர் வெர்டாக்ஸ்
வங்கி ஒன்றில் முப்பது வருடங்களுக்கும் மேலாக வேலை செய்த ஹென்றி வெர்டாக்ஸ் வங்கி திவால் ஆன காரணத்தால் வேலை இழந்து போகிறான். வங்கியில் நடைபெற்ற மோசடிக்குக் காரணம் அதன் நிர்வாகம் என்று உணர்கிறான். வங்கியில் பணம்போட்டு ஏமாந்து போன மக்கள் செய்வதறியாமல் திகைத்துப் போகிறார்கள். திடீரென வேலை போனதால் தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் தடுமாறுகிறான் ஹென்றி. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான்.
இதற்காக பாரீஸில் உள்ள பணக்கார விதவைகளை தேடிக் கண்டுபிடித்து அவர்களைக் காதலிப்பது போல நடித்து திருமணம் செய்து கொண்டு பணத்திற்காக ஒவ்வொருவராக கொலை செய்கிறான். கொலை செய்வதற்கு ஆயுதங்களை விடவும் விஷம் கலக்கப்பட்ட மதுபானங்களை பயன்படுத்துகிறான். முடிவில் போலீஸ் அவனைக் கைது செய்து மரணதண்டனை விதிக்கிறது. தலையைத் துண்டிக்கும் கில்லடின் தண்டனையை எதிர் கொள்ளப் போகும்போதும் கூட மது அருந்தியபடியே சலனமற்று சாவை நோக்கி நடந்து செல்கிறான்.
இப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு முக்கிய காரணம் முதலாளித்துவத்தின் கொடூரம் என்று சாப்ளின் குறிப்பிடுகிறார். கொலை என்பது ஒரு வணிகம். அது முதலாளித்துவத்தால் ஏற்படுத்தபட்டது. பணம் சம்பாதிப்பதற்காக எந்தவழியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டுபிடித்தவன் கிரிமினல் அல்ல. வணிகர்கள். ஆகவே இந்த வணிக யுத்தியை மேற்கொண்ட ஒருவனைப் பற்றிய படமாக அமைய வேண்டும் என்று விரும்பினேன் என்கிறார்.
படத்தின் இறுதிக் காட்சியில் சாப்ளின் போரின் பெயரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவது நியாயப்படுத்தபடுகிறது. ஆனால் குடும்பத்தின் நல்வாழ்விற்காக சில கொலைகள் செய்வது ஏன் மறுக்கபடுகிறது என்று கேட்பார். பிறகு அவரே அதற்கான காரணத்தையும் சொல்வார். எண்ணிக்கை தான் எதையும் நியாயப்படுத்துகிறது இல்லையா. ஒன்றிரண்டு கொலைகள் என்றால் அது குற்றம் நூற்றுக்கணக்கான கொலைகள் என்றால் அது யுத்ததர்மம்.
பிளாக் காமெடி எனப்படும் மனவியல் சார்ந்த நகைச்சுவைப்படமிது. கொலைகாரன் என்பதற்காக எப்போதும் கையில் கத்தியோடு சுற்றியலையும் நபராக சாப்ளின் தோற்றவில்லை. மாறாக கவிதையில் ஆர்வம் கொண்டவராக, கொலை செய்வதற்கு முன்பாக முழுநிலவை ரசிக்க கூடியவராகயிருப்பார். வீட்டுத் தோட்டத்தில் வளரும் செடிகளில் தூசி படிந்துவிடாமல் கவனமாக பராமரிப்பார். கொலை செய்ய முயற்சிக்கும் பெண் தன்னிடமிருந்து தப்பிவிட அவளை மடக்குவதற்காக வேடிக்கைகள் செய்வார். இப்படி படம் முழுவதும் ஆளுமைமிக்க ஒரு மனிதனாகவே சாப்ளின் தோன்றியிருக்கிறார்.
எதிர்பாராமல் தன்னிடம் அடைக்கலமான ஒரு பெண் தன் துயரக்கதையை நினைவுபடுத்தி அழுதவுடன் தன்னிடம் உள்ள பணத்தை எல்லாம் அவளை பாதுகாப்பாக அனுப்பிவிடுவதோடு அவளுக்காக வருத்தமும் படுவார். சாவின் முன்னால் தான் அதுவரை ருசித்திராத மதுவை விரும்பிவாங்கி குடித்துவிட்டு நடந்து போவார். இப்படி படம் தனிமனிதக் குற்றங்களின் பின்புலமாக உள்ள உளவியலை ஆராய்கிறது.
வங்கி ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றியது குற்றமில்லை ஆனால் தனிநபர் பணத்திற்காக கொலை செய்தது மட்டும் குற்றமா என்ற அடிப்படையான கேள்வியை படம் எழுப்புகிறது.
சாப்ளின் நம்காலத்தின் பெரிய ஆளுமை. அவரது படங்களில் சிரிப்பதற்கு மட்டுமல்ல கற்றுக் கொள்வதற்கும் எவ்வளவோ இருக்கின்றன. நம் எல்லோருக்குள்ளும் ஒரு சாப்ளின் இருக்கிறான். அவனைச் சிரிக்க விடாமல் நாம் தான் தடுத்துக் கொண்டிருக்கிறோம்
அன்றாட வாழ்வு ஏற்படுத்தும் வலியை மறக்கச் செய்ய ஒரே மருந்து தானிருக்கிறது
அது சிரிப்பு.