கோடுகளின் உயிரியக்கம்

அ.பெருமாள் சாந்தி நிகேதனில் பயின்ற ஓவியர். மதுரையில் வசித்து வந்த அவர் ஓவியக்கலை குறித்த சிறந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவரது மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள புத்தகம் ஓவியக்கலை- நந்தலால் போஸ். பெருமாள்  1930லிருந்து 1938வரை சாந்திநிகேதனில் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பயின்றார். பின்பு அதே சாந்திநிகேதனில் ஆசிரியராகவும், நூலகராகவும், அருங்காட்சியப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.

தனது ஆசிரியரும் இந்தியாவின் பெருமைக்குரிய ஓவியருமான நந்தலால் போஸ் ஆற்றிய உரை மற்றும் அவரது கட்டுரைகளை பெருமாள் மொழியாக்கம் செய்திருக்கிறார்

நந்தலால் போஸ் நவீன இந்தியக் கலையின் முன்னோடிகளில் ஒருவர்.  அவரது படைப்புகளில் இந்தியப் புராணங்கள், பெண்கள் மற்றும் கிராம வாழ்க்கையின் வெளிப்பாடுகள் நிறைந்துள்ளன..

நந்தலால் 1882 டிசம்பர் 3 ஆம் தேதி பீகார் காரக்பூரில் ஒரு நடுத்தர வர்க்க வங்காளக் குடும்பத்தில் பிறந்தார். தனது ஆரம்ப நாட்களிலிருந்து நந்தலால் ஒவியம் வரைவதிலும் பந்தல்களை அலங்கரிப்பதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அஜந்தா குகைகளின் சுவரோவியங்களால் மிகவும் கவரப்பட்டவர் நந்தலால். அவரது ஓவியங்களில் இந்த பாதிப்பை வெளிப்படையாகக் காணமுடிகிறது.

இந்தியக் கல்வி நிலையங்களிலே கலைக்குத் தனியிடம் கொடுத்துச் சிறப்பான வலைப்பயிற்சிக்கு வழிவகைச் செய்ததது சாந்தி நிகேதன் மட்டுமே. ஜப்பானிய, சீன ஓவியர்கள் அங்கே வந்து பாடம் நடத்தினார்கள். மேற்கத்திய ஒவிய பாணிக்கு மாற்றாகக் கீழைத்தேய கலைமரபை முன்னெடுக்க முயன்றது சாந்தி நிகேதன்.

எவர் மனதில் முதன்முதலாகப் புத்தர் உருவம் அல்லது நடராஜரின் உருவம் உதித்ததோ அவர் ஒரு யோகி. வடிவம், வர்ணம் இயக்கம், சந்தம் முதலியன நிறைந்த ஒரு சிற்பத்தை அவர் தன் மனதில் சிருஷ்டித்திருக்கிறார்.  கலைஞனின் மனதில் தான் கலை உருக்கொள்ளுகிறது. ஓவியம் மற்றும் சிற்பம் இரண்டினையும் ரசிப்பதற்குக் கண்ணால் பார்த்தால் மட்டும் போதாது. அதை மனதால் தோய்ந்து உணர வேண்டும். கற்பனையின் துணைகொண்டு  புரிந்து கொள்ள வேண்டும்.

கோடுகள் உயிரியக்கம் கொண்டவை. ஓவியத்திற்கும் சந்தம் உண்டு. இசையைப் போலவே ஓவியமும் அதற்கான லயமும் சந்தமும் கொண்டேயிருக்கிறது.

மனிதரையோ, மற்ற விலங்குகளையோ பார்த்து வரைவதற்கு அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும் போது அல்லது ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவதானிக்க வேண்டும். அப்போது தான் உடலின் இணைப்புகள் எப்படி வெளிப்படுகின்றன. தசைக்கட்டு மற்றும் தசைநார்களின் வெளிப்பாட்டினை புரிந்து கொள்ள முடியும், உடம்பின் எந்த உறுப்பு எந்த வகையில் பயன்படுகிறது என்பதை ஓவியன் ஆழ்ந்து அவதானிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஓவியத்திற்கும் உயிர்நாடியான கோடு ஒன்று உண்டு. அது மற்ற உறுப்புக் கோடுகளுடன் கூடியும் இணைந்தும் ஓவியத்துக்கு இன்றியமையாத உயிர்ப்பையும் அளவு வடிவம் வண்ணம் முதலிய பண்புகளையும் நல்கும். அது பிராணச் சந்தம் எனப்படுகிறது.

கீழைத் தேய மரபின் படி நிலம் என்பதன் சின்னம் கனசதுரம். ஆகவே கல்லினால் செய்யப்படும் வேலைகளுக்குக் கனசதுரம் தான் அடிப்படை. நீரின் சின்னம் கோளம். நீர் தாங்கப்படாத நிலையில் முத்து போன்ற உருண்டையான துளி வடிவத்தையடைகிறது. நெருப்பின் சின்னம் கூம்பு. சமதளத்தில் முக்கோணம். நீரைப் போல நெருப்பு கனமில்லாததால் இயக்கக் கோடுகள் மேல் நோக்கியதான தன்மை கொண்டிருக்கின்றன. காற்றின் சின்னம் பிறை வடிவம். வானின் ஒரு பாதியே நம் தலைக்கு மேலாகக் காணப்படுகிறது. மற்றொரு பகுதி காணப்படுவதில்லை. எல்லாவற்றையும் தன்னுள் கொண்டிருப்பதால் மாடகோபுரம் போன்ற வடிவத்தை இதற்கான சின்னமாகச் சொல்லலாம்.

ஓவியம் என்பது இயற்கையின் நகல் அன்று. ஓவியரின் தியானமே அல்லது சிந்தனையே ஓவியத்திற்கான அடிப்படை. பாவம், வடிவம். வர்ணம் இயக்கம் ஆகியவை சந்தத்துடன் இயையும் போது தான் ஓவியம் சிறந்த கலைப்படைப்பாகும்.

மனம் கொண்டு ஒரு பொருளைக் காணும் போது தொலைவில் உள்ள ஒரு பொருள் கூட அருகில் வந்துவிடும். சமீபம் அல்லது தூரம் என்பது மனதிற்குக் கிடையாது என்பதைக் கீழை நாட்டுக்கலைஞர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால் தான் சீன நிலக்காட்சி ஒவியங்களில் தொலைவை அவர்கள் அத்தனை அழகாக சித்தரிக்கமுடிந்த்து. சீனர்கள் நிலக்காட்சி ஓவியத்தைக் கையாண்டு ஆத்மீகப்பயன் அடைந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

புத்தர் சிலையின் பொருள் என்பது தியானமே உறைந்து இறுகிச் சிலையாகியுள்ளது என்பதாகும் கலையின் பரிபூர்ணவடிவமே புத்தர் சிலை. இது போலவே நடராஜ விக்கிரகம் என்பதும் அபூர்வமான கலை வெளிப்பாட்டின் வடிவமே. ஆடாமல் அசையாமல் நேராக நின்று எரிந்து கொண்டிருக்கும் சுடரைப் போன்றதே புத்தர் சிலை. இந்தியச் சிற்பத்திலே இந்திய நாகரிகம் அடங்கியிருக்கிறது என்கிறார் நந்தலால் போஸ்..

ஒவியம், சிற்பம், இயற்கை குறித்த அவரது அவதானிப்புகளும் எண்ணங்களும் மேற்கத்திய மரபிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இந்திய சிந்தனை மரபின் அடையாளமாகவே உள்ளன.

••

21.11.2019

0Shares
0