கோனேரி ராஜபுர ஓவியங்கள்

கோனேரி ராஜபுரம் சென்றிருந்தேன். திருநல்லம் என்பது அதன் பழைய பெயர். அங்குள்ள பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் மிகப்பெரியது. பேரழகு மிக்கது. செம்பியன் மாதேவி இக்கோவிலைக் கற்றளியாகக் கட்டினார் என்கிறார்கள். கோவிலிலுள்ள இறைவியின் பெயர் அங்கவள நாயகி. எவ்வளவு அழகான பெயர்.

கும்பகோணம் – காரைக்கால் பாதையில் எஸ்.புதூர் என்னும் ஊரைக் கடந்து தெற்கே வடமட்டம் செல்லும் சாலையில் பயணம் செய்தால் கோனேரி ராஜபுரம் அடையலாம். சாலைவழியெங்கும் நாணல் பூத்திருந்தன. இளவெயிலின் முணுமுணுப்பு. மண்சாலைகளுக்கு உள்ள நினைவு தார்ச் சாலைகளுக்குக் கிடையாது.

கோவிலின் முகப்பு மண்டப விதானத்தில் அழகான வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை முறையான பராமரிப்பின்றி உதிர்ந்த நிலையில் உள்ளன. கோவில் சார்ந்த தொன்மம் மற்றும் புராணக் கதைகள், கோவிலின் விழாக்களைச் சித்தரிக்கும் காட்சிகள்  ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்களில் ஒன்றாக ஆங்கிலேய அதிகாரிகளை வரவேற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இப்படி ஒரு ஓவியத்தை வேறு கோவில் எதிலும் நான் கண்டதில்லை.

நான்கு ஆங்கிலேயர்கள் தலைதொப்பி அணிந்து நீண்டவாளுடன் நிற்கிறார்கள். அவர்களின் உடை மற்றும் கழுத்துப்பட்டி நேர்த்தியாக வரையப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எதிரே தட்டில் சந்தனம், பன்னீர் சொம்பு, வெற்றிலை பாக்கு காணப்படுகின்றன. அவர்களை வரவேற்கும் விதமாகச் சதிராடும் பெண் ஒருத்தி நடனமாடுகிறார். தலைப்பாகை அணிந்தவர் முகவீணை வாசிக்க, இன்னொருவர் சின்னமேளம் அடிக்க, மற்றொருவர் கைத்தாளம் போடுகிறார்.

கோனேரிராஜபுரம் ஓவியங்களை 1916-ஆம் ஆண்டுத் திருவாரூர் வண்ணக்காரன் நடேசன் பிள்ளை தீட்டியதாகவும், பின்னர் 1935-ஆம் ஆண்டுத் திருவாவடுதுறை வர்ணக்காரர் மாசிலாமணி தீட்டியதாகவும் வரலாற்று ஆய்வாளர் இரா.நாகசாமி குறிப்பிடுகிறார்.

இக்கோவிலின் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் குறித்து ஆய்வாளர் எழில்ஆதிரை செம்பியன் மாதேவி மலைக்கோயில்கள் என விரிவான ஆய்வு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

வண்ணக்காரன் என்று ஓவியரை அழைப்பது பொருத்தமானது. டெம்பரா ஓவிய முறையில் வரையப்பட்ட இந்த ஓவியங்களில் தனித்துவமாக வண்ணங்களை உபயோகித்துள்ள விதமும் முகபாவங்களும் அபாரமான அழகுடன் காணப்படுகின்றன.

நடனமாடும் பெண் திருவிடைமருதூர் ருக்மணி என்றும், நாதஸ்வர வித்துவான்களாக அம்மாபேட்டை பக்கிரி மற்றும் மன்னார்குடி சின்ன பக்கிரி என்றும் இணையத்தில் செய்தி காணப்படுகிறது. உறுதியான தகவல் தானா என்று தெரியவில்லை.

நாயக்க மன்னர்களின் காலத்தில் தான் தமிழ்நாட்டில் டெம்பரா ஓவிய முறை அறிமுகம் ஆனது. சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடிக்கப்பட்ட சுவரில் இயற்கை வண்ண நீர் கலவையை முட்டையின் வெள்ளைக் கரு போன்ற ஏதாவது ஊடகத்தில் குழைத்து அதனைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்திருக்கிறார்கள்.. சிவப்பு, மஞ்சள், கறுப்பு, , நீலம் போன்ற அடிப்படை வண்ணங்களே இதில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன..

Around India with a Movie Camera என்றொரு ஆவணப்படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன். அதில் இது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் கோவில் முன்பாக ஆங்கிலேய அதிகாரிக்கு வரவேற்பு கொடுப்பதற்காகச் சதிர் நடனம் ஏற்பாடு செய்யப்படுகிறது. சதிராடும் பெண்களின் கம்பீரமும் அதைக் காணும் கிராமவாசிகளும் , உள்ளூர் பிரமுகரின் பருத்த தோற்றமும், இந்த வரவேற்பை விநோதமாகக் காணும் பிரிட்டிஷ் குடும்பத்தின் இயல்பையும் அந்த ஆவணப்படத்தில் காண முடிந்தது. அதே நிகழ்வின் மறுவடிவம் போலவே கோனேரி ராஜபுர ஓவியம் காணப்படுகிறது. ஆங்கிலேயர்கள் கோவிலில் அளிக்கபடும் மரியாதையை ஏற்றுக் கொள்ளும் தோற்றத்தைக் காணும் போது அன்றைய உள்ளூர் பிரமுகர்கள் எவ்வளவு அடிபணிந்து போயிருக்கிறார்கள், அதிகாரிகளைச் சந்தோஷப்படுத்த என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

ஓவியத்தில் இடம்பெற்றுள்ளவர்களின் உடல் அமைப்பும் முகபாவமும் அதில் வெளிப்படும் உணர்ச்சிகளும் துல்லியமாக வரையப்பட்டுள்ளன. குறிப்பாகச் சதிராடும் பெண்ணின் பின்னால் உள்ள பெண்களின் வெறித்த பார்வையைப் பாருங்கள். சற்றே தலை தாழ்த்தி நிற்கும் ஆங்கிலேயர்களின் பாவனையைப் பாருங்கள். அபாரம்

ஓவியத்திலுள்ள கடிகாரம் என்னை மிகவும் கவர்ந்தது. கோவில் சுவரில் காணப்படும் அந்தக் கடிகாரம் காலமாற்றத்தின் அடையாளம். கோவிலுக்குள் எப்போதுமே காலமயக்கம் ஏற்படுகிறது. அல்லது காலம் கோவிலுள் நழுவி விடுகிறது. நாம் காணும் சிற்பங்களும் ஓவியங்களும் உடனடியாக நம்மைப் பின்னோக்கி நகர்த்திக் கடந்தகாலத்தினுள் நீந்தச் செய்கின்றன. கோவிலின் கோபுரம் என்பது காலமற்றது. அதன் நிழல் என்னை எப்போதும் வசீகரிக்கக்கூடியது.

அந்தக் கால முகங்களுக்கு என்று விசேச அழகிருக்கிறது. இந்தக் கோவிலில் காணப்படும் வேறு சில ஓவியங்களில் அப்படியான விசித்திர முகங்களைக் கண்டேன். பணிந்து கைகூப்பி நிற்கும் துறவியின் சித்திரத்தை விட்டுக் கண் அகலமுடியவில்லை.

தொலைதூரத்திலிருந்து கேட்கும் ரேடியோ பாடல் தற்காலத்திற்குள் என்னை இழுத்துக் கொண்டிருந்தது. மனம் வேறுகாலத்தில் வேறு உணர்வில் மயங்கிச் சரிந்து கொண்டிருந்தது. கலை தரும் மகிழ்ச்சியை வேறு எதனாலும் ஈடு செய்துவிட முடியாது. கோவில் ஒரே நேரத்தில் மூன்று நான்கு கால அடுக்குகள் கொண்டிருக்கிறது. சங்கீதமும் சிற்பங்களும் ஓவியங்களும் பிரிக்கமுடியாத இழையால் இணைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். அந்த உணர்வை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. வெறும் பாத்திரத்தில் பாலை நிரப்பியது போல என்றொரு வரி மனதில் தோன்றியது.

ஆமாம். அப்படி தானிருந்தேன்.

.

0Shares
0