புதிய சிறுகதை. 2023 ஜனவரி 28.
நீண்டநேரம் பேருந்தில் அமர்ந்து வந்தது பிரேமாவிற்குக் கால் சூகை பிடித்துக் கொண்டது. பேருந்து கோவில்பட்டி வந்து சேர்ந்த போது இரவு மணி பதினோறு இருபதைத் தாண்டியிருந்தது

பஸ்ஸை விட்டு இறங்கி காலை உதறிக் கொண்டாள். தலையில் போடப்பட்ட முக்காட்டினை விலக்கி சேலையைச் சரிசெய்து கொண்டாள். மூக்குக்கண்ணாடியில் படித்த தூசியைச் சேலை நுனியால் துடைத்துக் கொண்டாள். மனதில் கோபம் நிரம்பிவிட்டால் ஏனோ கால் வீங்கிவிடுகிறது. வீட்டிலிருந்த போதும் இதை உணர்ந்திருக்கிறாள்.
பேருந்து நிலையத்தில் பாதி இருண்டிருந்தது. காலியாக நின்றிருந்த பேருந்து ஒன்றின் டயரை ஒட்டிக்கொண்டு சாக்கடையை நோக்கி வேகமாக ஓடியது பெருச்சாளி. யாருக்குப் பயந்து இப்படி ஓடுகிறது. அது தான் மொத்த பேருந்து நிலையமே காலியாகத் தானேயிருக்கிறது. அதன் பயம் அதற்கு.
அழுக்கடைந்து போன பேருந்து நிலையக் கடைகள். பால் பாத்திரத்தைக் கழுவிக் கொண்டிருக்கும் டீக்கடைக்காரன். திறந்த உடம்போடு காலை மட்டும் நாலைந்து துணி சுற்றிவைத்திருக்கும் பிச்சைக்காரன். பேருந்து நிலையத்திற்குள்ளாகவே வாழும் கிழட்டுக் கறுப்பு நாய். என அந்த விசித்திர உலகம் குமட்டும் வாசனையைக் கொண்டிருந்தது. பேருந்து நிலையக்கடைகளுக்கு வந்தவுடன் பழங்கள் தன் ருசியை, வாசனையைத் தானே இழந்துவிடுகின்றன போலும்.
ஊர் வந்து சேர்ந்தபோதும் பிரேமாவின் மனதில் கோபம் வடியவேயில்லை.
பேருந்து நிலைய மணிக்கூண்டில் கடிகாரம் ஓடாமல் நின்றிருந்தது. இதைப்பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள். கையில் கட்டிய வாட்ச் நின்று போயிருப்பதையே எத்தனையோ தடவை கவனிக்காமல் பிரேமாபோயிருக்கிறாள்.
அரக்கோணத்திலிருந்து பஸ் மாறி மாறி கோவில்பட்டி வந்து சேருவதற்குள் இரவு பதினோறு மணியைக் கடந்துவிட்டிருந்தது. அன்றைக்குக் காலையில் இப்படித் திடீரெனக் கோவித்துக் கொண்டு பயணிப்போம் என அவள் நினைக்கவில்லை.
சிறிய கோபமாகத் தான் அன்றைய சண்டை துவங்கியது. ஆனால் திரவியம் அவளை மிக மோசமாகத் திட்டியதோடு ஆத்திரத்தில் எச்சிற்கையோடு அடித்துவிட்டான். அத்தோடு சாப்பாட்டுத் தட்டை சமையலறையை நோக்கி வீசி எறிந்தான். சுவரில்பட்டுத் தட்டு ஓசையோடு உருண்டு போனது. சாம்பார் வழியும் சுவரும் பிய்ந்து சிதறிய தோசையும் அவளது ஆத்திரத்தை அதிகப்படுத்தின. தானும் எதையாவது எடுத்து உடைக்கலாமா என்று நினைத்தாள்.
எதுவும் நடக்காதவன் போலத் திரவியம் தனது எச்சிற்கையை நிதானமாகக் கழுவிக் கொண்டிருந்தான். ஆத்திரத்தில் பிரேமா கத்தினாள்.
“போதும்சாமி., நான் கிளம்புறேன். இனிமே இந்த வீட்டுப்படி ஏறமாட்டேன் பாத்துக்கோ “
“சொல்லாதே… செய்“ என்றபடி கையில் பவுடரைப் போட்டு முகத்தில் தடவிக் கொண்டான் திரவியம்.
படுக்கையறைக்குள் நுழைந்து ஆரஞ்சுகலர் பையில் தனது துணிகளை அள்ளித்திணித்தாள். பையின் ஜிப் சரியாக வேலை செய்யவில்லை. அதை வேகமாக இழுத்த போது கையோடு பிய்ந்து கொண்டுவந்தது. வேறு பையைத் தேட வேண்டும். பேசாமல் ஒரு கட்டைப்பையை எடுத்துக் கொள்ள வேண்டியது தான் என்றவளாகக் காய்கறி வாங்கக் கொண்டு செல்லும் செல்வி ஸ்டோர் பையை எடுத்து அதில் துணிகளைத் திணித்தாள்.
இதற்குள் திரவியம் தனது பைக்கில் கிளம்பிப் போயிருந்தான். மின்சாரமில்லாமல் போய்விட்ட வீட்டினைப் போலத் திடீரென அமைதி பீடித்துக் கொண்டது.
குளித்துவிட்டுக் கிளம்பலாமா என்று தோணியது. ஆனால் அதற்கெல்லாம் நேரமில்லை என்பது போலப் பட்டுப்புடவைகளுக்குள் ஒளித்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டைப்பூட்டி சாவியை எடுத்துக் கொண்டாள்.
இந்தச் சாவி எதற்கு என்று கூட அப்போது தோணியது.
அரக்கோணத்திலிருந்து கோவில்பட்டிக்கு நேரடியாகப் பஸ் கிடையாது. இரண்டு அல்லது மூன்று பஸ் மாறவேண்டும். திருமணமான புதிதில் அப்படிப் பஸ் மாறிமாறி பயணம் செய்வது சந்தோஷம் அளித்தது. ஆனால் இப்படித் திடீரெனக் கோவித்துக் கொண்டு கிளம்பும் போது எதற்காகத் தனது ஊர் அவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று ஆத்திரமாக வந்தது
இவ்வளவு தூரம் தள்ளி வந்து எதற்காக ஒரு மாப்பிள்ளையை அப்பா கண்டுபிடித்துத் திருமணம் செய்து வைத்தார்.
திரவியத்தை அப்பா மருமகன் என்று சொன்னதேயில்லை. ஆர்ஐசார் என்று தான் சொல்வார். அது அவனது வேலை. அப்பா அந்த வேலையைப் பெருமையாக நினைத்தார்..
பேருந்து பயணத்தின் போது வழிமுழுவதும் கடந்தகாலத்தில் நடந்து போன எதையோ நினைத்துக் குழம்பிக் கொண்டேவந்தாள் பிரேமா. வழியில் பசியெடுத்தபோதும் இறங்கிப் போய்ச் சாப்பிட விருப்பமில்லை. மூத்திரம் பெய்வதற்குக் கூட இறங்கவில்லை. டிசம்பர் மாதம் என்ற போதும் பகலில் வெக்கை அடங்கியிருக்கவில்லை. சூடான வெயில். வீட்டிலிருந்து கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலைத் தான் குடித்தபடியே வந்தாள். அதுவும் பாதியில் தீர்ந்து போயிருந்தது. மேரிகோல்ட் பிஸ்கட்டாவது வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம். கோபம் எதையும் செய்ய அவளை அனுமதிக்கவில்லை
இருளை கிழித்துக் கொண்டு விரைந்து வந்த பேருந்து கோவில்பட்டியை நெருங்கியதும் அவளுக்குத் தெம்பு வந்தது. தன் அகலமான கையை நீட்டி ஊர் அவளைக் கட்டிக் கொள்வது போலவே உணர்ந்தாள். எச்சிற்கையோடு அவளை அடித்தவன் வீட்டிற்கு இனி திரும்பிப் போகவே கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.
பேருந்தை விட்டு இறங்கிய போது தான் கவனித்தாள். அந்தப் பேருந்தில் அவள் ஒருத்தி மட்டுமே பெண். அத்தனை பேரும் ஆண்கள். அர்த்த ராத்திரியில் எந்தப் பெண் இப்படிப் பயணம் போகப்போகிறாள்.
பேருந்து நிலையத்தினை விட்டு வெளியே வந்த போது இரவுக்கடைகளின் டியூப்லைட் வெளிச்சம் கண்ணைக் கூசியது. பசியாக இருந்தாலும் ஏதாவது பரோட்டா கடையில் போய்ச் சாப்பிட முடியுமா என்ன. கொத்து பரோட்டா போடும் சப்தம் நாக்கில் எச்சிலைச் சுரக்க வைத்தது. வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியது தான் என முடிவு செய்து கொண்டாள்

அவளது வீடு இருந்த கடலையூர் ரோட்டிற்கு .தனியே நடந்து போக முடியாது. அப்பாவை பைக் எடுத்துக் கொண்டு வரச்சொல்லலாமா.அல்லது ஆட்டோ பிடித்துப் போய்விடலாமா என்று நினைத்தபடியே கிழக்கு நோக்கி நடந்தாள்
பேருந்து நிலையத்தை ஒட்டிய உணவகங்கள் எல்லா ஊரிலும் ஒன்று போலவே இருக்கின்றன. வாயில் வைக்கமுடியாத மோசமான உணவு. அநியாயக் கொள்ளை. அதுவும் புளித்துப் போன மாவில் சுட்டு தரப்படும் தோசையை எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ. டீ காபி என்பது சூடாகத் தரப்படும் மாட்டு மோத்திரம் தான். எல்லா ஊர்களிலும் இதே அநியாயம் தான் நடக்கிறது. இதைப்பற்றிப் பலரும் புலம்பியதோடு சரி யாராலும் எதையும் செய்ய முடிந்ததில்லை. திரவியம் சில ஊர்களில் இந்தக் கடையாட்களுடன் சண்டைபோட்டிருக்கிறான். ஆனாலும் எதையும் மாற்ற முடியவில்லை.
ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோ கூட இல்லை. டிசம்பர் மாத இரவுகள் நோயாளி போன்றவை. பிளாஸ்டிக் காகிதம் ஒன்றினுள் தலையைக் கொடுத்துவிட்டு வெளியே எடுக்கத் தெரியாமல் நாய் தலையைச் சிலுப்பிக் கொண்டிருந்தது. மிட்டாய்கடைகளை ஒட்டிய உயரமான சோடியம் விளக்கிலிருந்து பரவும் வெளிச்சத்தில் புழுதியேறி நிற்கும் சர்க்யூட் ஹவுஸ் வேப்பமரங்கள் விநோத தோற்றம் தந்தன.
கிழக்கிலிருந்து ஒரு ஆட்டோ வருவதைப் பார்த்தாள். அதன் ஹெட்லைட் வெளிச்சம் அதிகப் பிரகாசம் கொண்டிருந்தது. அந்த ஆட்டோ ஜோதி மிட்டாய்க்கடையை ஒட்டி நின்றுவிட்டது. வேறு யாராவது ஏறுவதற்குள் அதைப் பிடித்துவிட வேண்டும் என்பது போலப் பையை இழுத்துக் கொண்டு வேகமாக நடந்தாள்.
ஆட்டோ மட்டும் நின்றிருந்தது. டிரைவரைக் காணவில்லை.
பக்கத்திலிருந்த மூத்திர சந்திலிருந்து ஐயப்பசாமிக்கு மாலை போட்டிருந்த ஒருவர் வெளியே வந்தார். நாற்பது வயதிருக்கும். மெலிந்த உருவம். லேசாக நரைத்த தாடி. கறுப்புச் சட்டை. கழுத்தில் காவித்துண்டு சாய வேஷ்டி. கழுத்தில் 108 மணிகள் கொண்ட துளசிமாலை. இரவிலும் குளித்துவிட்டு வண்டி ஒட்டுகிறார் போலும். நெற்றியில் சந்தனமிருந்தது.
ஆட்டோ அருகில் வந்து நின்றபடியே “எங்கம்மா போகணும்“ என்று கேட்டார்
வெளிச்சத்தில் அந்த முகத்தை வியப்போடு பார்த்தபடியே இருந்தாள் பிரேமா
“எங்க போகணும் தாயி“ என்று மறுபடியும் கேட்டார் ஆட்டோடிரைவர்
“நீ பரமு தானே“ என்று தயக்கத்துடன் கேட்டாள் பிரேமா
“ஏன் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்“.
“மேட்டு ஸ்கூல்ல என் கூடப் படிச்ச.. பரமசிவம் தானே“ என்று மறுபடியும் கேட்டாள் பிரேமா
`மேட்டு ஸ்கூல தான் படிச்சேன். ஆனா நீங்க யாருனு தெரியலை“
“பிரேமா, லாயல் மில் ரோட்டில வீடு இருந்துச்சி“
“சிவப்பு ரிப்பன் பிரேமாவா“ என்று கேட்டான் பரமசிவம்
அப்படி அவளை நினைவு வைத்திருப்பவர் அவன் ஒருவனாக மட்டுமே இருக்கக் கூடும். ஒரு சொல்லின் வழியே அவளது பள்ளிப்பருவம் மீண்டு வந்தது.
“அதே பிரேமா தான்“ என்றாள்.
“எந்த ஊர்ல இருக்கீங்க. கண்ணாடி வேற போட்டு இருக்கீங்களா ஆள் அடையாளமே தெரியலை. “
“அரக்கோணத்துல இருக்கேன். அம்மா வீடு கடலையூர் ரோட்ல இருக்கு, “
“வீட்டுக்காரர் வர்றலையா“ என்று கேட்டான் சதாசிவம்
அவள் பதில் சொல்லவில்லை
அவனாகத் துணிகள் வைத்திருந்த பையை எடுத்துப் பின்சீட்டில் வைத்தான்.

ஆட்டோ செல்லத்துவங்கியது. அடைத்துச்சாத்தப்பட்ட கடைகளை வீடுகளைக் கடந்து ஈரக்காற்றுடன் சென்று கொண்டிருந்தது. வானில் இரண்டு மூன்று எனக் கூட்டமாக நட்சத்திரங்கள் எதையோ துரத்தி விளையாடிக் கொண்டிருந்தன. வானின் இருளைப் பற்றி அதற்குப் பயமே கிடையாது.
“நீயும் ரொம்ப மாறிட்டே“ என்றாள் பிரேமா
“வருஷம் ஆகுதுல்ல. ஆறாம்வகுப்புல ஒண்ணா படிச்சோம். அப்புறம் நான் கழுகுமலைக்குப் போயிட்டேன். படிப்பு நின்னு போச்சு. வடக்கே போயி நானும் பார்க்காத வேலையில்லை. ஆனா கடனுக்கு மேல் கடன் ஆனது தான் மிச்சம். என் பொண்டாட்டி சாத்தூர்காரி. ரெண்டு பொம்பளை பிள்ளைக. இந்த ஆட்டோ கூடக் கடன்தான்.. மிச்சமிருக்கிற வாழ்க்கையை எப்படியாவது ஒட்டுனா போதும்னு இருக்கு “
“உன் குரல் அப்படியே இருக்கு.. மாறவேயில்லை“.
“அதை எல்லாம்மா ஞாபகம்வச்சிருக்கே“ என்று வியப்போடு கேட்டான் பரமசிவம்
“உன்னை இப்படி வழியில் பாப்பேனு நினைக்கவேயில்லை. “
“எனக்கு ஸ்கூல்ல படிச்சேன்கிறதே மறந்து போயிருச்சி. “
“எனக்கு அது மட்டும் தான் ஞாபகம் இருக்கு.. வீட்டில் தனியா இருக்கும் போது ஒவ்வொருத்தர் பேரா நினைத்துப் பார்ப்பேன். “
“உங்கப்பா சர்வேயரா வேலை பாத்தார்லே. “
“அது கூட ஞாபகம் வச்சிருக்கியா“
“சிப்பிக்குள் முத்துப் படம் பாக்கப்போறப்போ உங்கம்மா கூட நீயும் சினிமா பாக்க வந்திருந்தே. அன்னைக்கு ரெயின்போ ரிப்பன் கட்டியிருந்தே“
அப்படி ஒரு ரிப்பன் அந்தக்காலத்தில் வந்திருந்தது. அதை ஆசையாக வாங்கிக் கட்டியிருக்கிறாள்.
“நல்லபடம். நான் நிறைய இடத்துல அழுதுட்டேன்“ என்றாள் பிரேமா
“சினிமா பாக்குறதையே விட்டு பத்து பதினைந்து வருசமாச்சி “ என்றான் பரமசிவம்
பாவம் நிறையக் கஷ்டங்களை அனுபவித்துவிட்டிருக்கிறான் போலும்.
ரோட்டின் இடதுபுறம் டியூப் விளக்குள் ஒளிர்ந்து கொண்டிருந்த தேநீர்க்கடையில் தொலைக்காட்சி ஒடிக்கொண்டிருந்தது. கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவளைக் கேட்காமலே பரமு ஆட்டோவை அந்த தேநீர்க்கடையை நோக்கி ஒட்டினான்
டீக்கடை வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கேட்டான்
“உனக்கு டீயா. காபியா“
“டீ “என்றாள்.
டீ மாஸ்டரிடம் ஸ்பெஷல் டீ என்று அவன் சொன்னதைக் கேட்கும் போது மகிழ்ச்சி அதிகமானது.
டீ கிளாஸின் வெளியே வடிந்திருந்த பாலை தனது காவித்துண்டால் துடைத்துவிட்டு அவளிடம் நீட்டினான்.அந்த அக்கறையை ரசித்தாள்.
அவள் அந்தத் தேநீரை கொஞ்சம் கொஞ்சமாக ருசித்துக் குடித்தாள். மனதில் கோபம் வடிய ஆரம்பித்திருந்தது. அவள் டீக்குடிப்பதையே பரமசிவம் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் குடித்துமுடித்தபிறகு டீக்கிளாஸை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டு காலியான மேஜை மீது வைத்துவிட்டு அவனே பணம் கொடுத்து வந்தான்.
அதன்பிறகு வீடு வந்து சேரும்வரை அவளுடன் ஒரு வார்த்தை கூடப் பரமு பேசவில்லை
வாசலை ஒட்டி ஆட்டோவை நிறுத்திவிட்டு அவனே பையை வீட்டுகேட் முன்பாகக் கொண்டு போய் வைத்தான்
அவள் பர்ஸிலிருந்து எடுத்த பணத்தை வாங்க மறுத்துவிட்டுச் சிரித்த முகத்துடன் கிளம்பிப் போனான்
பிரேமா காலிங்பெல்லை அழுத்தினான். பாதித் தூக்கத்துடன் கண்விழித்த அப்பா கலைந்த தலையுடன் யாரு என்று கலக்கமான குரலில் கேட்டார்
“நான்தாப்பா“ என்றாள் பிரேமா
வாசல்லைட்டை போட்டு வெளியே வந்து நின்று பார்த்தார்
நள்ளிரவில் மகள் தனியே வந்து நிற்கிறாள் என்றதுமே நடந்த விஷயங்கள் அவள் சொல்லாமலே அவருக்குப் புரிந்துவிட்டிருந்தன.
அவர்து கைகள் கேட்டை திறக்கும்போது நடுங்குவதைக் கண்டாள்

அப்பா வீதியைச் சூழ்ந்திருந்த இருளை வெறித்துப் பார்த்தபடியே இருந்தார் பிரேமா பையை உள்ளே தூக்கிக் கொண்டு நடந்தாள். சோபாவில் பையைப் போட்டுவிட்டு சமையலறைக்குள் சென்று விளக்கைப் போட்டாள். ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் பிடித்துக் குடித்தாள் பிரேமா
ஆட்டோவில் வரும்போது அடங்கியிருந்த ஆத்திரம் மீண்டும் தலைதூக்கியது
அம்மா எழுந்து வந்திருந்தாள்.
“சாப்பிடுறயாடீ“ என்று கேட்டாள்
“தோசை மாவை எடு“ என்றாள் பிரேமா
அம்மா தோசை மாவை பிரிட்ஜிலிருந்து வெளியே எடுத்து வைத்தபோது அவசரமாக வெங்காயம் வெட்டி சட்னி போட்டாள் பிரேமா
அவளாகத் தோசை ஊற்றிச் சாப்பிடுவதை அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிரேமா சொல்லாமலே அவளது சண்டை அம்மாவிற்குப் புரிந்திருந்தது.
“எந்நேரம் புறப்பட்டே“ என்று கேட்டாள்
“பத்தரை மணிக்கு“ என்றாள் பிரேமா
சாப்பிட்ட தட்டை கழுவுவதற்காகப் போட்டுவிட்டு மறுபடியும் சொம்பில் தண்ணீர் பிடித்துக் குடித்தாள்.
பின்பு டைனிங்டேபிளில் அமர்ந்து அம்மாவும் மகளும் பேசத்துவங்கினார்கள். அம்மா சப்தமாக அழுதாள். திரவியத்தைக் கெட்டவார்த்தைகளில் திட்டினாள். அப்பா அவர்களாக வந்து தன்னிடம் நடந்த விஷயங்களைச் சொல்வார்கள் என்பது போல ஹாலில் காத்துக் கொண்டிருந்தார்
அவர்கள் அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. தண்ணீர் குடிக்க வருவது போல இரண்டு முறை உள்ளே வந்து போனார். அவர்கள் பேச்சை அருகில் அமர்ந்து கேட்கவில்லை.
விடிகாலை வரை அம்மாவும் மகளும் பேசிக் கொண்டிருந்தார்கள். இருவரும் ஒன்றாகச் சமையல் அறையிலே உறங்கினார்கள். காலையில் அப்பா எழுந்து வந்தபோது இருவரையும் காணவில்லை. ஏழு மணிக்கு அவர்கள் வீடு திரும்பிய போது தான் கோவிலுக்குப் போய் வந்திருப்பது தெரிந்தது
அம்மா கண்டிப்பான குரலில் சொன்னாள்
“அவன் மேல கேஸ் கொடுத்து உள்ளே தூக்கி வைக்கணும். “
“என்ன நடந்துச்சி அதைச் சொல்லு முதல்ல“
“அந்த குரங்குபயலை பயலைப்பற்றித் தெரியாதாக்கும். எச்சிக்கையாலே அடிச்சிருக்கான். “
“எதுக்கு அடிக்கிறான். இவ என்ன செய்தா“
அதைக்கேட்ட மாத்திரம் பிரேமாவிற்கு ரௌத்திரமானது
“ஆமாம்பா. தப்பு என்மேல தான். நான் தான் லூசு“
“அப்படியில்லைம்மா. எதுக்குச் சண்டைனு கேட்டேன்“
“என்னாலே முடியலைப்பா. இனிமே நான் அங்க போகவே மாட்டேன்“
“இப்படி பேசினா எப்படிம்மா.. எத்தனை நாள் இங்க இருக்க முடியும்“
“உங்களாலே முடியலைன்னா சொல்லிருங்க நான் செத்துப் போயிடுறேன் “என்று வெடித்து அழுதாள்
அவளது அழுகை அம்மாவையும் தொற்றிக் கொண்டது
“ஒத்தைப் பொம்பளை புள்ளய பெத்து இப்படி ஒரு குரங்கு கைல பிடிச்சி குடுத்துருக்கோம். அவனை உங்களாலே ஒண்ணும் செய்ய முடியலை. “
“என்ன செய்யணும்கிறே. “
“அவன் ஜெயிலுக்குப் போகணும். என் மகளை அடிச்ச அவன் கையை உடைக்கணும்“
“பிரேமா..நீ அழுறதை நிப்பாடு.. நான் மாப்பிள்ளையைக் கேட்குறேன்“
“நீங்க ஒண்ணும் கேட்க வேண்டாம். நான் இங்க தான் இருக்கப் போறேன். இது என் வீடு இல்லையா“
“சரிம்மா.. உன் இஷ்டம்“ என்றார்.
பிரேமா உள்ளே போய் மெத்தையில் படுத்துக் கொண்டாள். தனது செல்போனை எடுத்துக் கொண்டு மொட்டைமாடிக்குப் போனார் அப்பா
அவர் திரும்பி வந்தபோது பிரேமாவும் அம்மாவும் கீரை ஆய்ந்து கொண்டிருந்தார்கள்.
“மாப்பிள்ளை போன் எடுக்கலை“
“அந்த நாய்பயகிட்ட உங்களை யாரு பேச சொன்னா..நமக்கு நம்ம பொண்ணு முக்கியம். அவனை லேசுல விடக்கூடாது“ என்றாள் அம்மா
“புரியாம பேசாத ரஞ்சிதம். அவங்க சண்டை என்ன இன்னைக்கு நேத்தா நடக்குது. கல்யாணமாகி பனிரெண்டு வருசமாச்சி, புள்ளை இல்லை. “
“அது இல்லை பிரச்சனை… அவன் பழக்கவழக்கம் சரியில்லை. தண்ணிவண்டியா ஆகிட்டான். “
“ஆனா பேச்சுப் பழக்கம் மரியாதையா தானே இருந்துச்சி. “
“அதெல்லாம் வெறும் நடிப்பு. இத்தனை வருசமும் உங்களாலே ஒண்ணும் பண்ண முடியலே“
அதற்கு அவரிடம் பதில் இல்லை. மகளுக்கு ஏற்படும் வேதனைகளைப் பார்த்துக் கொண்டும் எதுவும் செய்யமுடியாமல் போகும் வலியை அவரால் சொல்ல முடியவில்லை. திடீரென ஒரு இரவிற்குள் அவரது நரைத்த தாடி அதிகமாகியிருந்தது. கைகள் நடுங்குவதை மறைக்க முடியவில்லை
வீட்டிற்குள் நடப்பதற்கே மூச்சு வாங்கியது. சவரம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் போயிருந்தது.
தனது சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டபடி தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கத் துவங்கினார்
அரக்கோணம் என்று செய்தியில் எது வந்தாலும் அது மகளோடு தொடர்பு கொண்டதாகவே அவருக்குத் தோன்றுவது வழக்கம். இன்றைக்குச் செய்தி கண்ணில் படுகிறது. ஒரு சொல் கூட மனதிற்குள் செல்லவில்லை
மதியம் மாப்பிள்ளையே போனில் அழைத்திருந்தார். அவரிடம் எப்படிப் பேசுவது என்று கூடத் தெரியவில்லை. தானே அடுத்த ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி வந்து பிரேமாவை கூட்டிப் போவதாகச் சொன்னார்.
“நீங்க தான் மாப்பிள்ளை பாத்துகிடணும்“ எனும் போது அப்பா தன்னை அறியாமல் விம்மினார். நல்லவேளை வீட்டில் யாரும் பார்க்கவில்லை
இரவில் பிரேமாவிடம் சொன்னபோது அவள் உறுதியான குரலில் சொன்னார்
“நான் போக மாட்டேன். அந்த ஆளும் இங்க வரக்கூடக்கூடாது“
“இப்படி பேசினா எப்படிம்மா“
“அப்பா உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. நீங்க அந்த ஆள் கூட வாழ்ந்து பாருங்க தெரியும்“
அவளது பதிலை மீறிச் சொல்ல அவரிடம் ஒரு வார்த்தையில்லை.

அதன் பிந்திய நாளில் அம்மாவும் அவளும் ஒரு ஜோசியக்காரரைப் பார்த்து வந்தார்கள். அதைப்பற்றி அப்பாவிடம் எதையும் சொல்லிக் கொள்ளவில்லை. அம்மாவும் அவளும் ஜவுளிக்கடைக்குப் போய்வந்தார்கள். அடர் பச்சை வண்ண புடவை ஒன்றை பிரேமா வாங்கிக் கொண்டாள்.
தன் வீட்டில் என்ன நடக்கிறது என்றே அப்பாவிற்குப் புரியவில்லை
அந்தப் புதன்கிழமை சங்கரன்கோவிலிலிருந்து வள்ளி நாயகம் மாமா வந்திருந்தார். அது தற்செயல்தானா. இல்லை அப்பா தான் வரச்சொன்னாரா என்று தெரியவில்லை. அவர் பிரேமாவிற்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார்.
“மாப்பிள்ளைக்கு இந்தப் பக்கம் டிரான்ஸ்பர் வாங்கிட்டு வரச்சொல்லிடுவோம், நம்ம பக்கத்துல இருந்தா எல்லாம் சரியாகிடும்“ என்றார்.
பிரேமாவிற்கு அந்த வீட்டில் அதிக நாட்கள் இருக்க முடியாது என்ற உண்மை புரியத்துவங்கியது.
“நானும் உங்க அப்பாவும் உன்கூட வந்து அரக்கோணத்தில் நாலு ஐந்து நாள் இருக்கோம். மாப்பிள்ளையைக் கிட்ட நான் பேசுறேன். நீயும் கொஞ்சம் வாயை அடக்கிட்டு இருக்கணும்மா“ என்றார் வள்ளி நாயகம்
அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் எழுந்து கழிப்பறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டாள்.
வள்ளிநாயகம் மாமா போகும்வரை வெளியே வரவேயில்லை.
கோவித்துக் கொண்டு வீட்டை விட்டுத் திடீரெனக் கிளம்பியது போலவே அம்மா வீட்டிலிருந்தும் பின் மதியத்தில் தனது பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்
“நான் பஸ் ஸ்டாண்டில கொண்டுவந்து விடுறேன்மா“ என்றார் அப்பா
“நான் போய்கிடுவேன்“ என்று கோபமாகச் சொன்னாள் பிரேமா
அப்பா தெரிந்த ஆட்டோவிற்குப் போன் செய்து கொண்டிருந்தார். அதற்குள் அவள் வாசற்கதவைத் தாண்டி வெளியே வந்தாள்.
அந்த வீடும் மகிழ மரமும் சாலையும் அந்நியமாகத் தெரிந்தன
இரவில் வந்தது போலத் திடீரெனத் தன்முன்னே பரமு ஆட்டோவில் வந்துவிட மாட்டானா என்று ஆசையாக இருந்தது
அவள் பையோடு வெயிலில் நடக்க ஆரம்பித்திருந்தாள். அவளுக்கே தான் சிவப்பு ரிப்பன் சிறுமியாக இருந்தபோது எப்படியிருந்தோம் என்று ஞாபகமில்லை. ஆனால் அது பரமு நினைவில் பசுமையாக இருக்கிறதே என நினைத்தபடியே நடந்தாள்
பரமுவிற்குத் தான் வீட்டில் கோவித்துக் கொண்டு வந்தது பற்றித் தெரிந்திருக்குமா. அதை அவள் முகம் காட்டிக் கொடுத்திருக்குமா. தெரிந்தால் என்ன தப்பு. யார் வீட்டில் சண்டை நடக்கவில்லை.
நூருல் ஸ்டோரைத் தாண்டி அவள் நடந்தபோது திரும்பிப் பார்த்தாள்
கையில் ஒரு கறுப்பு குடையுடன் அப்பா மூச்சுவாங்க நடந்து வந்து கொண்டிருந்தார். அப்படி அவரைப் பார்க்க வருத்தமாகியது
அவர் நெருங்கி வரும்வரை பால்பூத்தை ஒட்டி நின்று கொண்டிருந்தாள். அருகில் வந்து பேசமுடியாமல் வாய் உலர்ந்த நிலையில் அப்பா சொன்னார்
“நான் என்னம்மா செய்யட்டும். “
அதைக்கேட்டபோது அவளுக்கு வருத்தம் அதிகமானது.
“நான் போய்கிடுறேன்பா“ என்றாள் பிரேமா
“பஸ் ஸ்டாண்ட் வரைக்குமாவது கூட வர்றேன்மா“ என்று சொல்லிவிட்டுத் தலைகவிழ்ந்து கொண்டார். அவரை இப்படிக் காணும் போது யாரோ ஒரு கிழவரைக் காணுவது போலிருந்தது.
அவரை ஏன் வருத்தப்படுத்த வேண்டும் என்பது போல நினைத்தவளாக அவரோடு இணைந்து நடக்க ஆரம்பித்தாள்.
வீதியில் படர்ந்திருந்த வெயில் ஒரு சாட்சியம் போல அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது..
*****