கோமாலாவில் என்ன நடக்கிறது

மெக்சிகன் எழுத்தாளரான யுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ உலகின் சிறந்த நாவல்களில் ஒன்று. இந்நாவல் 1955ம் ஆண்டு வெளியானது. 122 பக்கங்கள் கொண்டது.

தேரியின் மணல்மேடுகளைப் போல நாவல் பல்வேறு மடிப்புகளைக் கொண்டிருக்கிறது. வாசிக்கையில் அந்த மடிப்புகளின் விசித்திர அழகு வியப்பூட்டுகிறது. இந்த நாவலின் பாதிப்பில் தான் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது நூற்றாண்டு காலத் தனிமை நாவலை எழுதினார் என்கிறார்கள். பெட்ரோ பரமோவின் ஒரு வாக்கியத்தைத்  தனது நாவலில் மார்க்வெஸ் அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்

முதல் மேஜிகல் ரியலிச நாவல் என்று கருதப்படும் இந்த நாவல் லத்தீன் அமெரிக்காவில் புதிய வகை எழுத்துமுறையை உருவாக்கியது. காலத்தின் முன்பின்னாகச் சென்று விநோதங்களை இயல்பாகவும், இயல்பை விநோதமாகவும் மாற்றிக் காட்டுகிறது

ருல்ஃபோவின் கதை சொல்லும் முறை ஆச்சரியமளிக்கிறது. கலைத்துப் போடப்பட்ட சீட்டுகள் போல நாவலில் நினைவுகள் சிதறிக்கிடக்கின்றன. கையில் கிடைத்த சீட்டுகளை நாமே அடுக்கி வரிசைப்படுத்திக் கொள்வது போலவே நினைவுகளை ஒன்று சேர்த்துக் கொள்கிறோம்

நாவல் எழுபது துண்டு துண்டான நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது, இந்த நாவலுக்குச் சூஸான் ஸான்டாக் எழுதிய முன்னுரை அபாரமானது. மிகக் கச்சிதமாக நாவலையும் ருல்ஃபோவின் ஆளுமையினையும் மதிப்பிடுகிறார்.

சிறந்த நாவல்கள் தனது துவக்க வரிகளால் நம்மை உள்ளே இழுத்துக் கொள்ளக்கூடியவை. அப்படியான ஒரு துவக்கம் தான் பெட்ரோ பராமோவிலும் காணப்படுகிறது.

நாவலின் நாயகன் யுவான் ப்ரீஷியாடோ, தனது தாயின் இறப்பிற்குப் பின்னால் தந்தையைத் தேடி கோமாலா என்ற ஊருக்குப் போகிறான். தந்தையின் பெயர் தான் பெட்ரோ பராமோ. தாயின் நினைவுகளிலிருந்து அவன் கொமாலோவைப் பற்றி அறிந்திருக்கிறான். அம்மாவின் இளமைக்காலம் அங்கே கழிந்தது. கொமாலோ இறந்தவர்கள் வாழும் ஊர் என்று அவன் அறிந்திருக்கவில்லை. அங்கே வீடுகள் காலியாக உள்ளன

உண்மையில் இரண்டு கோமாலா இருக்கிறது. கடந்தகாலத்தில் வாழும் கோமாலாவில் உயிருள்ளவர்கள் வசிக்கிறார்கள். நிகழ்காலத்தில் வாழும் கோமாலாவில் இறந்தவர்களே வசிக்கிறார்கள். இந்த விசித்திரம் தான் நாவலுக்குப் புதிய தோற்றத்தைத் தருகிறது.நாவல் பெட்ரோ பரமோவின் வாழ்க்கையைச் சுருக்கமாக மறுகட்டமைக்கிறது. அவர் வறுமையிலிருந்து விடுபட்டு கோமாலாவின் செல்வாக்கு மிக்க தலைவராக எவ்வாறு உருவானார் என்பதை படிப்படியாக அறிந்து கொள்ள முடிகிறது. கோமாலாவில் ஆவிகளின் முணுமுணுப்புகளும், உடலற்ற குரல்களும் காலியான இடத்தை நிரப்புகின்றன. நகரத்தின் வறண்ட மற்றும் வெற்று நிலப்பரப்பு மெக்ஸிகோவின் உண்மையான, தனிமைப்படுத்தப்பட்ட நிலவியலைப் பிரதிபலிக்கிறது..

ருல்ஃபோவின் கதை சொல்லும் முறை நாவலுக்கு பன்முகத்தன்மையை உருவாக்குகிறது அவர் இறந்தவர்களின் கதைகளை விவரிக்கிறார். அவை இப்போது நடப்பவை போலவே சொல்லப்படுகின்றன.  ஏனெனில் கோமாலாவில் நிலத்திற்கு மேல், கீழ் என்ற பாகுபாடு கிடையாது. அங்கே நடப்பது நினைவின் நாடகம்.

நாவலில் வரும் கோமாலா பற்றிய விவரிப்புகள். வெயிலைப் பற்றி எழுதியுள்ள வரிகள். நினைவின் ஊசலாட்டத்தைத் துல்லியமாக வெளிப்படுத்தும் முறை  ருல்ஃபோவின் சாதனை என்றே சொல்வேன்.

யுவான் தேடுவது தனது தந்தையான பெட்ரோ பரோமாவை ஆனால் அவன் அறிந்து கொள்வது அவனது அம்மாவின் இளமைக்காலத்தை. அவளது தோழிகளை. ஒடுக்குமுறைக்கு உள்ளான கோமாலாவின் மனிதர்களை.

பெட்ரோ பரோமாவை ஊரே வெறுக்கிறார்கள். அவன் நரகத்திற்குத் தான் போவான் என்று சபிக்கிறார்கள். உண்மையில் அவன் இறந்தபிறகு கோமாலா மொத்தமும் நரகமாக மாறிவிடுகிறது.

நாவலில் இறந்தவர்கள் பேசுகிறார்கள். நிறைவேறாத ஆசைகளுக்காக ஏங்குகிறார்கள். சண்டையிட்டுக் கொள்கிறார்கள். கல்லறைக்குள் இருந்தபடியே நட்பு கொள்கிறார்கள். பிடிக்காதவரை வெறுக்கிறார்கள். மரணத்திற்குப் பின்னும் அவர்கள் அடங்குவதில்லை. நிம்மதி கொள்வதுமில்லை இறந்தவர்களின் இத்தகைய வாழ்வினை மெக்சிகோவில் இன்றும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

ஸ்பானிய மொழியில் பரோமா என்றால் தரிசு அல்லது பாழ்நிலம் என்று பொருள்.  பெட்ரோ என்றால் பாறை என்று அர்த்தம். அந்தப் பெயருடைய தந்தை தனது அதிகாரத்தால் தனது ஊரையே ஆளுகிறான். அவனுக்குப் பின்பு ஊர் பாழ்நிலமாகிவிடுகிறது. நாவலின் இறுதி வரியில் அவன் பாறையைப் போலச் சரிந்து விழுகிறான்.

கோமாலாவில் என்ன நடக்கிறது என்பது புதிரானது. அந்த ஊருக்கு வரும் யுவான் தனது பயண வழியில் லாஸ் என்குவென்ட்ரோஸ் என்ற சந்திப்பில் கழுதையில் வரும் அபன்டியோ என்பவனைச் சந்திக்கிறான்.

அவனிடம் கோமாலாவிற்கு வழி கேட்கிறான். அபன்டியோ தான் அந்த வழியே செல்வதாக உடன் அழைத்துக் கொண்டு நடக்கிறான். எதற்காக யுவான் கோமாலாவிற்கு வந்திருக்கிறான் என்று அபன்டியோ கேட்கிறான்.

தனது தந்தையைத் தேடி வந்துள்ள விபரத்தைச் சொல்லும் யுவான் அவரது பெயர் பெட்ரோ பரோமா என்கிறான். இதைக் கேட்ட அபன்டியோ தானும் பெட்ரோ பரோமாவின் மகன் தான் என்று சொல்வதோடு இங்கிருப்பவர்களில் பலரும் அவரது பிள்ளைகள் தான் என்கிறான். இதை யுவானால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நாவல் முடியும் போது அந்த நிஜத்தை யுவான் புரிந்து கொள்கிறான்

கோமாலா என்பது கைவிடப்பட்ட ஊர். அங்கே யாரும் வருவதில்லை. அழுகிய ஸ்போனாரியாப் பூக்களின் நாற்றத்தால் விஷமான ஆகஸ்ட் மாத அனல்காற்று வீசும் வெயில் அடிக்கிறது. தொலைதூரத்தில் மலைத்தொடர் காணப்படுகிறது.

கோமாலா என்பது காலத்தின் கோலம் என அபன்டியோ சொல்கிறான். மொத்த நாவலையும் திறக்கும் சாவி அது தான்.

காலம் தான் கோமாலாவை இப்படியாக்கியிருக்கிறது. அது மறைவை ஏற்றுக் கொள்ளவில்லை. இருவேறு உலகில் மனிதர்களின் வாழ்க்கையை முன்னெடுக்கிறது.

நாவலின் துவக்கத்தில் வெயிலின் தாக்கத்தை உணர்ந்த யுவான் நல்ல வெயில் என்று சலித்துக் கொள்கிறான். ஆனால் அபன்டியோ நீங்கள் அப்படிச் சொல்லலாம். இதெல்லாம் ஒன்றுமேயில்லை என்கிறான். அதே நிலத்தில் வாழுகிறவர்களுக்கு வெயில் பொருட்டாகயில்லை. கோமாலா நரகத்தின் வாயில் போலிருக்கிறது என்கிறான்.

யுவான் கொமாலோவிற்குத் தங்குவதற்காக டோனா எடுவிஜஸ் என்ற பெண்ணின் வீட்டைத்தேடிப் போகிறான். அவள் அம்மாவின் தோழி. அவள் யுவானை வரவேற்கிறாள். தங்குவதற்கு அறை ஒதுக்கித் தருகிறாள். அத்தோடு அவன் வரப்போவதை டோலோரிடா சொன்னாள் என்றும் சொல்கிறாள்.

எனது அம்மா இறந்துவிட்டாரே என்று குழப்பத்துடன் யுவான் சொல்லும் போது இறந்தவர்களால் பேச முடியாது என்று நினைக்கிறாயா. டோலோரிடா எனது நீண்டகாலத்தோழி. உனது வருகையைப் பற்றி இப்போது தான் சொன்னாள் என்கிறாள்.

அவளது வீட்டினை அடையாளம் காட்டிய அபன்டியோ பற்றி யுவான் சொல்லும் போது அவன் இறந்து போய்ப பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் ஊருக்குப் புதியவர்கள் வந்தால் வழிகாட்டியாக இருக்கிறான் என்று டோனா சொல்கிறாள். விசித்திரத்தின் சுழல் பாதைக்குள் தான் நுழைந்துவிட்டதை யுவான் உணருகிறான். அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் செல்லும் போது டோனா அவன் தனது மகனாகப் பிறந்திருக்க வேண்டியவன். ஆனால் தனது ஒரு முடிவால் அவன் டோலோரிடாவின் மகனா பிறந்துவிட்டான் என்று பிறப்பின் புதிய ரகசியம் ஒன்றைப் பகிருகிறாள் .

அந்தப் பகுதியை வாசிக்கும் போது மகாபாரதத்தில் வரும் அம்பா அம்பாலிகா கதை நினைவிற்கு வந்தது. அதில் அம்பிகா வியாசருடன் உடலுறவு கொள்ள விரும்பாமல் தனது பணிப்பெண்ணான பராஷ்ரமியை அனுப்பி வைக்கிறாள். அந்த உறவில் பிறந்தவர் தான் விதுரன். கிட்டதட்ட அதே நிகழ்வு தான் பெட்ரோ பரோமாவிலும் நடக்கிறது. விதுரனைப் போன்றவன் தான் யுவான்.

கோமாலா விற்கு வந்த யுவான் தனது நினைவின் சுழலுக்குள் செல்கிறான். அம்மா எதற்காக அவனைக் கோமாலா அனுப்பி வைத்தாள் என்பதை நினைவு கொள்கிறான்“பெட்ரோ பரோமாவிடம் நமக்கு உரியதை மட்டுமே கேள். அவர் எனக்குக் கொடுத்திருக்க வேண்டிய ஆனால் ஒரு போதும் கொடுக்காததை மட்டுமே கேள். அவர் இத்தனை வருஷங்களாக நம்மை மறந்து இருந்ததிற்குப் பதில் சொல்ல வை“ என்கிறாள்

அவளுக்குப் பெட்ரோபரோமா இறந்து போனது தெரியாது. யுவானின் அம்மா வேண்டுவது அன்பே மட்டுமே. கோமாலாவின் அரசனைப் போல ஊரையே ஆண்டு கொண்டிருந்தவனிடம் தங்களை நிராகரித்த காரணத்தை மட்டுமே கேட்கச் சொல்கிறாள்.

பெட்ரோ பரோமா அவர்களை மட்டும் நிராகரிக்கவில்லை. அவன் காதலித்த. நெருங்கிப்பழகி குழந்தை கொடுத்த எல்லாப் பெண்களையும் அப்படித் தான் நடத்தியிருக்கிறான். அவனுக்குப் பெண்கள் ஆடையைப் போன்றவர்கள். உடுத்தி அழகு பார்த்தவுடன் வீசி எறிந்துவிடுவான். ஆனால் அவனுடன் வாழ்வதற்கு டோனாவும் ஆசைப்படுகிறாள். டோலோரிடாவும் ஆசைப்படுகிறாள். டோனாவால் தான் டோலோரிடா ஒரு இரவு பெட்ரோவுடன் கழிக்கிறாள்.

உன் அம்மா உன் பிறப்பின் ரகசியத்தை உன்னிடம் சொல்ல வெட்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறாள் டோனா. மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளிப்படுவதற்காகத் தான் யுவான் கோமாலா வருகிறானோ என்றும் தோன்றுகிறது

பெட்ரோ பரோமாவின் நினைவில் டோலோரிடா இல்லை.  அவன் எந்த காதலிக்கும் மதிப்பு கொடுக்கவில்லை. அவன் இச்சையால் வழிநடத்தப்படுகிறான். ஊரின் பார்வையில் அவன் மிக மோசமானவன். அவனைத் தேடி எதற்காக மகனை அனுப்பி வைக்கிறாள் டோலோரிடா. பெட்ரோ பரோமா பற்றி உலகம் அறியாத எதையோ யுவான் அறிந்து கொள்ள வேண்டும் என்றே ஆசைப்படுகிறாள்.

கோமாலாவில் வசித்தவர்களின் வாழ்க்கை விசித்திரமாகயிருக்கிறது. அந்த விசித்திரம் தான் ஊரையும் பற்றிக் கொள்கிறது. இந்த நாவலில் வரும் பாட்டி ரொகேலியா, டோனா மற்றும டோலோரிடாவின் மாற்றுவடிவங்கள் போலவே மார்க்வெஸ் நாவலில் பாட்டியும் உர்சுலாவும் இடம்பெறுகிறார்கள்.

மிகுவல் பரோமா ஒரு சிவப்பு குதிரை வைத்திருக்கிறான். அந்தக் குதிரை எப்போதும் அவனுடனிருக்கிறது. அந்தக் குதிரையும் குற்றவுணர்வில் அலைந்து கொண்டிருக்கிறது. மோசமான செயலைச் செய்துவிட்டால் விலங்குகளும் அதை நினைத்து வருந்துகின்றன என்கிறார் ருல்ஃபோ

கனவில் வரும் காட்சிகள் போலக் கோமாலாவின் நிஜம் விரிவு கொள்கிறது. யுவான் எது கனவு எது நிஜம் எனப் பிரித்து அறியமுடியாமல் குழம்பிப் போகிறான். பரோமா இறந்த போது பாதிரி அவன் நிச்சயம் நரகத்திற்குப் போவான் என்று சொல்கிறார். அவனால் மோட்சத்தை விலைக்கு வாங்க முடியாது என்றும் வாதிடுகிறார்

நாம் இறந்தவர்களால் வழிநடத்தப்படுகிறோம். அவர்கள் தங்களின் வெறுப்பை, தீராக்கோபத்தை. அநீதியை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். மரணம் ஒரு முற்றுப்புள்ளியில்லை. கோமாலாவின் இந்த நிஜம் மெக்சிகோவினைப் பற்றியது. அதன் கிறிஸ்டெரோக்களின் கலகம் பற்றியது.  யுவான் ருல்ஃபோ சட்டம் பயின்றவர். தனது நாற்பத்தைந்து வயதுக்குப் பின்பே எழுத துவங்கியவர். ஒரு சிறுகதைத் தொகுப்பும் இந்த நாவலும் மட்டுமே எழுதியிருக்கிறார். மிக்க் குறைவாக எழுதி இலக்கியத்தில் பெரிய இடம் பிடித்தவர் ருல்ஃபோ. 1986 இல் ருல்ஃபோ நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்

அதைத்தான் சூஸான் ஸான்டாக் தனது முன்னுரையில் வியக்கிறார். அத்தோடு பலமுறை வாசிக்கும் தகுதியற்ற எந்த ஒரு புத்தகமும் ஒரு முறை வாசிப்பதற்கும் தகுதியற்றதே என்றும் சொல்கிறார்.  நான் அப்படி நினைக்கவில்லை. மாறாக ஒரு முறை வாசிப்பதும் பலமுறை வாசிப்பதும் புத்தகம் சார்ந்த விஷயம் மட்டுமில்லை. நமது அத்தேடலை அதைத் தீர்மானிக்கிறது.

இந்த நாவலின் துவக்கம் எனக்கு எமிலி பிராண்டேயின் Wuthering Heights நாவலை நினைவுபடுத்துகிறது. அதில் வரும் மலையுச்சியில் இருந்த வீடு போன்றது தான் கோமாலா எனத் தோன்றுகிறது.

அம்மாவின் நினைவில் இருந்த கோமாலா வேறு, தான்  நேரில் காணும் கோமாலா வேறு என்பதை யுவான் உணர்ந்து கொள்கிறான். ஊர் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு விதமாக உருக்கொள்கிறது. ஊரை சில மனிதர்களே நினைவுபடுத்துகிறார்கள்.தவறு தான் நாவலின் முக்கியக் குறியீடு. பல்வேறு தவறுகள் நாவலில் நடக்கின்றன. அதிலிருந்து அவர்களால் விடுபட முடியவில்லை. தவறுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு தவறும் தனக்கான வாரிசுகளை விட்டுச் செல்வதைக் காண முடிகிறது.

காமமும் அதிகாரமும் தான் கோமாலாவை ஆட்சி செய்கிறது.  கோமாலாவில் யுவான் வழி தவறி வந்துவிட்டவனைப் போலவே நடத்தப்படுகிறான்.

நினைவு ஒற்றைக்குரல் கொண்டதில்லை. அது ஒரு சேர்ந்திசை என்பதை நாவலின் வழியாக நாம் புரிந்து கொள்கிறோம்

நாவல் முழுவதும் பல்வேறு குரல்களைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறோம். அவை பிரித்து அறியமுடியாத ரகசியக் குரல்கள். அவை மனிதர்களின் குரல் மட்டுமில்லை.

யுவான் ருல்ஃபோ மிகச்சிறந்த கவிஞர் என்பதால் நாவல் கவித்துவத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நாவலை தமிழில் எஸ் பாலச்சந்திரன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். விடியல் பதிப்பகம் 2001ல் வெளியிட்டுள்ளது.

கோமாலா என்பது அழிந்த ஊர் மட்டுமில்லை .அது ஒரு விசித்திரக் கனவு. அதிலிருந்து விழித்து எழுந்தவுடன் நமக்கு மிஞ்சுவது சில நினைவுகள் மட்டுமே.

••

7.9.23

0Shares
0