சதுரங்கக் காய்கள் போல

வைரவன் லெ.ரா.வின் பட்டர் பி சிறுகதைத் தொகுப்பினைப் படித்தேன்.

பதினைந்து சிறுகதைகள் கொண்ட முதற்தொகுப்பு. யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சொந்த ஊர் திரும்புதலின் போது வெளிப்படும் நினைவுகளையும், கடந்தகால வாழ்வின் அரிய தருணங்களையும், மறக்கப்பட்ட மனிதர்களையும் சித்தரிக்கும் கதைகள்.

நாஞ்சில் வட்டார வாழ்க்கையைக் கிருஷ்ணன் நம்பி, நாஞ்சில் நாடன் துவங்கி சுசில்குமார் வரை பலரும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். இவர்களிலிருந்து மாறுபட்டு தனக்கென கதைமொழியும், கதைக்களன்களும் கொண்ட சிறுகதைகளை வைரவன் எழுதியிருக்கிறார். அதுவே இவரது வருகையைக் கொண்டாடச் செய்கிறது.

இந்தக் கதைகளின் சிறப்புக் கதை வழியாக வைரவன் லெ.ரா. காட்டும் நாஞ்சில் நாட்டுச் சித்திரங்கள். அதில் வெளிப்படும் நேற்றைய நினைவுகள். இன்றைய வீழ்ச்சிகள். காலமாற்றம் மனிதர்களின் இயல்பையும் மாற்றிவிடுவதைக் கதைகள் தோறும் காணமுடிகிறது

ஊரிலிருந்து நாம் துண்டிக்கப்பட்டிருந்தாலும் அந்த நினைவுகளிலிருந்து துண்டிக்கப்படவில்லை. இன்றைய தலைமுறையினர் ஏக்கமும் இயலாமையும் கனவுகளும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஊரும் உறவும் வேண்டியிருக்கிறது ஆனால் ஊரில் வசிக்க விருப்பமில்லை. உறவுகளைப் பேணுவதற்கு இயலவில்லை. இந்தத் தவிப்பை, சிக்கலை, ஊசலாட்டத்தைப் பேசுகின்றன வைரவனின் சிறுகதைகள்.

நாலைந்து கதைகளில் கைவிடப்பட்ட பெண்களைப் பற்றியும் குடியால் வீழ்ந்த மனிதர்களைப் பற்றியும் சித்திரத்தன்மையோடு எழுதியிருக்கிறார். வறுமையான நிலையிலும் தன்னைக் காண வீடு தேடி வந்தவரை சாப்பிட்டுத்தான் போக வேண்டும் என்று ஆச்சி உபசரிப்பதும், அந்தக் குரலில் வெளிப்படும் வாஞ்சையும் உயிரோட்டமாகக் கதையில் வெளிப்படுகிறது

வைரவன் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் ஆல்பிரட் டூரரின் செதுக்கோவியங்களில் உள்ள உருவங்களைப் போல மிகவும் நுணுக்கமாக, தனித்துவத்துடன் உருவாக்கபட்டிருக்கிறார்கள். கதை தோறும் திருவிழாக் காட்சி போல விதவிதமான மனிதர்கள். ஒன்றிரண்டு வரிகளிலே அவர்களின் முழுத்தோற்றமும் கடந்தகாலமும் வெளிப்பட்டுவிடுகிறது.

கோம்பை கதையில் வரும் நாடாரும், சூரிய பிரகாஷ் என்ற கோம்பையும் கூன்கிழவியும் அசலான மனிதர்களாகக் கண்முன்னே நடமாடுகிறார்கள். எல்லா ஊரிலும் இது போன்று ஒன்றோ இரண்டோ கோம்பையைக் காண முடியும்..

பெட்டிக்கடை நாடாருக்கும் கோம்பைக்குமான உறவும் விலகலும் காலமாற்றமும் கதையில் நேர்த்தியாக வெளிப்படுகிறது. கதையின் முடிவில் காயம்பட்ட கோம்பைக்கு உதவி செய்ய நாடார் அவனது வீட்டிற்கே சென்று தூக்கி வந்து சிகிச்சை அளித்துத் தனது கடையிலே படுக்க வைத்துக் கொள்வது சிறப்பானது.

இந்த நிகழ்விற்குப் பின்பு கதை மீண்டும் துவங்கிய இடத்திற்கே வருகிறது. இப்போது முதல்வரி வேறுவிதமாகக் காட்சியளிக்கிறது. தேர்ந்த எழுத்தாளர்களால் எழுதமுடிகிற இக்கதையை அநாயசமாக வைரவன் எழுதியிருக்கிறார்..

நாஞ்சில் வட்டார பேச்சுமொழியை வைரவன் மிகச்சிறப்பாகக் கையாளுகிறார். கேலியும் கோபமும் அன்பும் துடிப்புடன் பேச்சில் வெளிப்படுகின்றன.

இந்தச் சிறுகதைகளில் தேவாலயமும் ஆராதனைகளும் கிறிஸ்துவக் குடும்பங்களின் இயல்பும் உயிரோட்டமாகச் சித்தரிக்கப்படுகின்றன. கதை வழியே நாம் ஊர்திருவிழாவை, கும்பாட்டமாடும் பெண்களை, ஓட்டுவீடுகளை வயல்வெளியின் ஈரக்காற்றை, தனித்த மண்சாலைகளை, கல்பெஞ்சு கிடக்கும் தேநீர்க் கடைகளைக் காணுகிறோம். அந்த உலகில் ஒருவராக ஒன்று கலந்துவிடுகிறோம்

நாஞ்சில் நாட்டிற்கும் கம்பனுக்கும் உள்ள நெருக்கம் வேறு எங்கும் காணமுடியாதது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கம்பராமாயணத்தில் தோய்ந்து போனவர். அவர் கம்பனைப் பற்றிப் பேசினால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அபாரமான புலமை கொண்டவர்.

ஒருமுறை அவரது சகோதரரை மும்பையில் சந்தித்தேன். எங்கள் பேச்சு துவங்கிய ஐந்தாவது நிமிஷம் கம்பராமாயணத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். கவித்துவம் பீறிட்டது. அவர்கள் குடும்பமே கம்பனைக் கொண்டாடுகிறது. இவர்களைப் போலவே நாஞ்சில் வட்டார தமிழ் அறிஞர்கள். பேராசிரியர்கள். எழுத்தாளர்கள். கவிஞர்களுக்குக் கம்பனிடம் தீராத பற்றும் பெருமதிப்பும் இருப்பதை அறிந்திருக்கிறேன்.

ஏசுவடியான் கதையில் வைரவனும் கம்பனைக் கொண்டாடுகிறார். பறக்கை பள்ளிக்கூடத்தில் ஏசுவடியான் கம்பராமாயணம் நடத்துவதைக் காணும் போது நாமே அவரிடம் பாடம் கேட்க வேண்டும் என்ற ஆசை உருவாகிறது.

பள்ளி வயதில் கம்பராமாயணம் படிக்க ஆசிரியர் வீடு தேடிச் சென்ற ஜோசப் காலமாற்றத்தின் பின்பு தனது பிள்ளைகளையும் கம்பராமாயணம் படிக்க அனுப்ப விரும்புவதும், அந்த விருப்பத்தை ஏற்றுக் கொண்டு, அதுக்கென்ன அனுப்பு கம்பன பாடப் புண்ணியம் வேணும் என ஆசிரியர் சொல்வதும் சிறப்பு.

இந்தக் கதையில் பைபிளும் கம்பராமாயணம் ஒன்னு தான் என்றொரு வரி இடம் பெறுகிறது. இந்த இரண்டு உலகங்களும் இணைந்த கதைகளைத் தான் வைரவன் எழுதுகிறார். தேவாலயமும் குலசாமியும் ஒன்று சேரும் புள்ளியே அவரது புனைவுலகம்

ஒரு சிறுகதைக்குள் தலைமுறைகளின் வாழ்க்கையை, குடும்ப வீழ்ச்சியை வைரவன் கொண்டுவந்துவிடுகிறார். அதே நேரம் கதை தனது மையத்தை விட்டு விலகுவதுமில்லை. இது தான் தேர்ந்த படைப்பாளியின் தனித்திறன்..

இந்தத் தொகுப்பில் பகவதியம்மை என்ற கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதையில் ஒருவன் தனது சொந்த ஊருக்கு நீண்டகாலத்தின் பின்பு செல்கிறான். ஊரின் பெயரைச் சொல்லி பேருந்து எப்போது வரும் எனக்கேட்டால் எவருக்கும் தெரியவில்லை. தற்செயலாக ஊர்க்காரர் ஒருவர் அவனிடம் அறிமுகமாகி வழிகாட்டுகிறார். சந்தித்த சில நிமிஷங்களிலே அவனுடன் நட்பாகப் பழகுகிறார். பழப்பமும் காபியும் வாங்கித் தருகிறார்.

ஒன்றாக ஊருக்குப் பயணம் செய்கிறார்கள். அங்கே பகவதியம்மை என்றால் யாருக்கும் தெரியவில்லை. கூனிக்கிழவி என்று அவளை அழைக்கிறார்கள். அவளது வீட்டினைத் தேடிப் போகும் போது கொஞ்சம் கொஞ்சமாக அவன் தனது உறவு என்பதை உடன்எவந்தவர் கண்டுகொள்கிறார். அவர்கள் பகவதியம்மையைக் காணச் செல்கிறார்கள்.

பகவதியம்மையின் வழியே தாத்தாவின் கடந்தகாலமும் ஆகிருதியும், செயல்களும் நினைவு கொள்ளப்படுகின்றன. ஆச்சியின் வாஞ்சை மனதைத் தொடுகிறது.

கிழவியைச் சந்தித்தவுடனே கதை முடிந்துவிட்டதோ எனும் தருணத்தில் இல்லை என அடுத்த நகர்விற்குச் சென்று செவ்வியல் கதைகளைப் போலக் கச்சிதமான உணர்ச்சி வெளிப்பாட்டுடன் கதையை முடிக்கிறார்.

தலைப்புக் கதையான பட்டர் பியும் இது போல ஊர் திரும்பியவனின் கதையே. ஆனால் இதில் ஆச்சியும் பேரனும் வண்ணத்துப்பூச்சிகளை வேடிக்கை பார்ப்பதும் பேரன் சொல்லத் தெரியாமல் பட்டர்பிளையைப் பட்டர்பி என்பதும் ஆச்சி அதை ரசித்து விஜியிடம் அது பட்டர்பிளை என்பதும் அழகாக வெளிப்படுகிறது.

இந்தக் கதையில் விஜி இயல்பாக வீட்டின் சமையலறையை நோக்கி செல்வதும் அவன் தயங்கித் தயங்கி சுவரில் மாட்டப்பட்ட பழைய புகைப்படங்களை வேடிக்கை பார்ப்பதும் நுட்பமான அவதானிப்பு

ஒரு கதையில் சாத்தூரை அடுத்த இருக்கன்குடி கோவிலும் ஆற்றுப்பாதையும் பனைவிடலியும் வருகிறது. கதையில் வருவது போன்ற அனுபவம் அப்படியே எனக்கும் நடந்திருக்கிறது. ஆகவே படிக்கையில் பால்ய நாட்களுக்குத் திரும்பிப் போனதாகவே உணர்ந்தேன்.

.வைரவனின் கதைகளை வாசிக்கும் போது சில உறவுகளின் அருமையை, நெருக்கத்தை நாம் உணராமல் போய்விட்டோமே என்ற குற்றவுணர்வு ஏற்படுகிறது. சதுரங்கக் காய்கள் போல எவராலோ நாம் கையாளப்படுகிறோம், வெட்டுப்படுகிறோம் என்ற உணர்வு உருவாகிறது.

ஊரும் வாழ்க்கையும் எவ்வளவு மாறியிருந்தாலும் அசலான மனிதர்கள் உண்மையான அன்புடன் இருக்கிறார்கள். அக்கறையுடன் நடந்து கொள்கிறார்கள் என்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது

தொகுப்பின் அட்டைப்படம் பொருத்தமாகயில்லை. இது போலவே தொகுப்பிற்கு இன்னும் சிறப்பான தலைப்பு வைக்கப்பட்டிருக்கலாம்.

தனது முதல் சிறுகதைத் தொகுப்பிலே தனிக்கவனம் பெற்ற படைப்பாளியாகியுள்ள லெ.ரா. வைரவனுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

இந்தச் சிறுகதைகளைப் படிக்கும் போது இவரால் எளிதாக நாவல் எழுத முடியும் என்று தோன்றுகிறது. எழுதுவார் என்றே நினைக்கிறேன்.

••

0Shares
0