சபார்டி ஜோகோ தமோனோ

விருட்சன் என்ற புனைபெயரில் எழுதிவரும் கார்த்திகேயன் தமிழில் அதிகம் கவனிக்கப்படாத தென்கிழக்கு ஆசியக் கவிதைகளை ஆர்வத்துடன் மொழியாக்கம் செய்து வருகிறார். இவர் மொழியாக்கம் செய்து சிறுவெளியீடாக வெளியிட்டுள்ள சபார்டி ஜோகோ தமோனோ (Sapardi Djoko Damono ) இந்தோனோஷியாவின் முக்கியக் கவிஞர்.

அவரது கவிதைகளின் இரண்டு ஆங்கிலத் தொகுப்புகள் என்னிடமுள்ளன. அவற்றை விரும்பி வாசித்திருக்கிறேன். விருட்சன் சபார்டியின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நல்ல தேர்வு. மொழியாக்கத்தில் சில சொற்களைத் திருத்தம் செய்து மேம்படுத்தினால் மிக முக்கியமான தொகுப்பாக அமையும். விருட்சனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

கவிஞர் ராணிதிலக்கின் தூண்டுதலும் ஆதரவும் இந்தத் தொகுப்பைச் சாத்தியமாக்கியதாக விருட்சன் கூறுகிறார். ராணிதிலக் இது போலச் சமகால உலகக்கவிதைகள் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். இளம்படைப்பாளிகளுடன் தொடர்ந்து உரையாடி நல்லதொரு தோழனாக இருப்பவர். அவருக்கும் என் இதயப்பூர்வமான பாராட்டுகள்.

••

சபார்டி ஜோகோ தமோனோ கவிதைகள்

தமிழில்:  விருட்சன்

••

நாங்கள் மூவர்

( WE THREE OF US)

அந்த அறையில் நாங்கள் மூன்று பேரிருந்தோம்

நான், ஒரு கத்தி மற்றும் ஒரு மொழி

உங்களுக்குத் தெரியும் தானே?

தன் மீது ரத்தம் தோய்ந்த பிறகே

அது கத்தி என்ற தன் பெயருக்குரிய அடையாளத்தைப் பெறுகிறது

அதில் தோயும் ரத்தம் என்னுடையது அல்லது என் வார்த்தைகளுடையது.

••

••••

குழந்தைகள் கைகளில்

குழந்தைகள் கைகளில் காகிதம்

அலைகளால் வெற்றி கொள்ள இயலாத

சிந்துபாத்தின் படகா உருமாறுகிறது

தனது அழைப்பால்

கானகத்தின் மலர்களைத் திறக்கும் ஒரு பறவையாகிறது

குழந்தைகளுடைய வாய்களில்

வார்த்தைகள் புனிதமடைகின்றன

“கனவானே

தயவு செய்து

என் விளையாட்டைத் தொந்தரவு செய்யாமல்

தனியே விட்டுவிடுங்கள்.“

••

இலையைப் போன்றதொரு இதயம்

என் இதயம் என்பது ஒர் இலை

அது பறக்கிறது புற்களின் மீது விழுகிறது

அதை விட்டுவிடுங்கள்

கொஞ்சநேரம் நான் இங்கே சாய்ந்து கொள்ளலாமா

நான் எதையோ காண விரும்புகிறேன்

மிக நீண்ட காலத்திற்கு முன்பு தொலைந்தவற்றை

முடிவிலியான உங்கள் காலை நேரத்து விருந்தாளிக்கு

நீங்கள் பிரியாவிடை கொடுத்து வழியனுப்பும்

நிகழ்விற்கு முன்பாக

••

இந்த சிறு நூலை இலவச வெளியீடாக பகிர்ந்துள்ளார்கள். தேவையானவர்கள் விருட்சன் அல்லது ராணி திலக்கைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு

vikramsivakumar12@gmail.com

0Shares
0