சலனமாகாத காதல்

ஆதித்ய ஸ்ரீநிவாஸ்

மண்டியிடுங்கள் தந்தையே வாசித்தேன். டால்ஸ்டாயின் கதையெனத் தோன்றியது, டால்ஸ்டாயின் காதல் கதை எனத் தோன்றியது, திமோஃபியின் கதை எனத் தோன்றியது, திமோஃபிக்கும் டால்ஸ்டாய்க்குமான உறவு பற்றிய கதை எனத் தோன்றியது. ஆனால் இது அக்ஸின்யாவின் கதை. அக்ஸின்யாவில்தான் எதற்கும் சலனமாகாத காதல் திகழ்கிறது. முகங்களை சொற்களை மீறி ஆழ்மனதின் அலைகளை உணர்வதால் மட்டும் உணரப்படும் அன்பு அக்ஸியாவினுடையது.

இந்த அன்பினைச் சுற்றித்தான் நாவல் ஒரு வாழ்வை நெய்துக்காட்டுகிறது. டால்ஸ்டாயின் வாழ்க்கை, பண்ணையடிமைகள், திமோஃபி, ஓல்கா, சோஃபியா, ருஷ்யப் பஞ்சம் என நாவல் விரிந்தாலும் அதன் மையமென என் வாசிப்பில் நான் உணர்வது அக்ஸின்யாவின் அன்பினையே.

நாவலின் அரசியல்,‌பஞ்சம், ஓல்காவின் குழந்தை இறந்துபோவது, ஓல்கா இறப்பது வாழ்க்கையை திசையற்றதாக உணரச் செய்கிறது. திமோஃபியின் வாழ்க்கை காற்றில் அலைக்கழியும் சுடர்போல் அசைந்து குலைந்து பின் மெல்ல ஒழுங்குகொள்வது போல் தோற்றம் கொண்டு பின் மீண்டும் அணையத்துடிக்கும் சுடராக சிறுத்துப்போகிறது. ஒரு ஒளி தோன்றி சட்டென மறைவது போல். இதென்ன அமைப்பு என குழம்பச் செய்கிறது. பஞ்சம் உயிர்களை‌ வாரிக்கொண்டு போவதும், ஒரு சிறுவன் தற்செயலாக இறப்பதும் அது ஒரு பெண்ணைக் குலைத்து அவள் இறப்பதும் வாழ்க்கை நம் சக்திக்கு மீறியதாக விரிவதன் நம் கட்டுக்குள் நிற்காமல் பெருகும் தன்மையுடன் இருப்பதை வலியுடன்‌ காட்டுகிறது. இவ்விடத்தில் நம்மால் இயன்ற ஒன்று அன்புதான் எனத் தோன்றுகிறது.

டால்ஸ்டாயின் மீது திமோஃபி தன் தீர்ப்புகளை வைக்கிறான். சோஃபியா அவரை கண்காணிப்பவளாக இருக்கிறாள். வாசிக்கையில் எழுத்தாளர் டால்ஸ்டாய்க்கும் கவுன்ட் டால்ஸ்டய்க்குமான முரணை உணர்ந்தபடி வாசிக்கிறேன். என்னைமீறி அவர் முடிவுகள் மீது என் தீர்ப்புகளை வைக்கிறேன். ஆனால் நன்மை தீமை சரி தவறு கடந்ததாக எழுவது அக்ஸின்யாவின் அன்பு.

அக்ஸின்யாவின் கண்களில் திமோஃபியும் டால்ஸ்டாயை பார்ப்பதுடன் நாவல் முடிகிறது. தன் சமாதிக்கு லிவோச்சா வந்ததல்ல.. திமோஃபி அக்ஸின்யாவின் மனம் டால்ஸ்டாய் பற்றி உணர்ந்த விதத்தை உணர்ந்துகொண்டதே அவளை மகிழ்வித்திருக்கும். மேல்மனதின் மேலிருக்கும் உதடுகளில்‌ பிறக்கும் சொற்களின் உலகில் எல்லோரும் வாழ்கிறார்கள். அக்ஸின்யா லிவோச்சாவின் ஆழ்மனதின் மணத்தை உணர்ந்தவளாய் அதன் பரிமளத்தில் நிறைவுற்று வாழ்ந்து மறைகிறாள். அந்த காதல் மனதின் முன் டால்ஸ்டாய் மண்டியிடுகிறார். அக்ஸின்யாவின் சமாதி முன் மண்டியிடும் தந்தையை காணும் திமோஃபி உணர்ந்துகொள்கிறான் எதை நோக்கி அக்ஸின்யா அன்பு செலுத்தினாள் என்பதை.

**

0Shares
0