சாந்தி சிவராமன்

சாந்தி சிவராமன் சாகர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர்.

எனது சஞ்சாரம் நாவலை வாசித்த சாந்தி சிவராமன் தனக்கு மிகவும் பிடித்துப்போகவே அதை முழுமையாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவிட்டார்.  எனது தொடர்பு கிடைக்காத காரணத்தால் தகவலைத் தெரிவிக்க இயலவில்லை.

இவரது மகன் சத்யா சிவராமன் இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர்.

சாந்தி சிவராமன் முன்னதாக அசோகமித்ரனின் இன்று, பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டிருக்கிறார்.

2016 ஏப்ரலில் உடல்நலக்குறைவின் காரணமாகச் சாந்தி சிவராமன் இறந்து போனார்.

நண்பர் தேவராஜன் மூலம் தகவல்  எனக்கு மிகவும் தாமதமாகக் கிடைத்தது.  சத்யா தனது தாயின் மொழிபெயர்ப்பை என்னிடம் தர விரும்பி மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். என் எழுத்தின் மீது சாந்தி சிவராமன் கொண்டிருந்த அன்பிற்கு சத்யாவிடம் நன்றி சொன்னேன்.

சாந்தி சிவராமனின் மொழியாக்கப்பணி என்னை நெகிழ வைத்தது. அவரை ஒருமுறை பார்த்து பேசியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

மொழிபெயர்ப்பாளர்களே எழுத்தாளர்களை உலகம் அறிய வைக்கிறார்கள். அவர்களுக்கு என்றும் நான் கடமைப்பட்டவன்.

நேற்று சாந்தி சிவராமனின் நினைவு நாள். அவர் தனது இறுதி நாட்களை எனது நாவலோடு கழித்திருக்கிறார். ஆசையாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.  இந்த அன்பிற்கு எப்படி நன்றி சொல்வது.

சஞ்சாரம் நாவலின் மொழிபெயர்ப்பினை வெளியிடுவதற்காக முக்கிய ஆங்கிலப் பதிப்பகம் ஒன்றைத் தொடர்பு கொண்டிருக்கிறேன்.

விரைவில் வெளியாகக் கூடும்.

0Shares
0