Chushingura 1962ல் வெளியான ஜப்பானியப் படம். ஹிரோஷி இனாககி இயக்கியது
புகழ்பெற்ற 47 ரோனின் என்ற சாமுராய்வீர்ர்களின் கதையை விவரிக்கும் படம். 47 ரோனின் கதை ஜப்பானின் தேசிய காவியம் என்றே அழைக்கப்படுகிறது இக்கதை எண்ணற்ற முறை நாடகமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அத்தோடு ஆறு முறை படமாக்கப்பட்டிருக்கிறது

இதே கதையை மிஷோகுஷி 1949ல் எடுத்திருக்கிறார். அப்படம் தோல்வியுற்றது. வண்ணத்தில் அதே கதையைத் தொசிரே மிபுனே போன்ற முக்கிய நட்சத்திரங்களைப் பயன்படுத்திப் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள்.
இடைக்கால ஜப்பானில் நடைபெறும் கதை. இம்பீரியல் அரண்மனையில் தூதர்களை வரவேற்கும் பொறுப்பில் அசானோ பிரபு நியமிக்கப்படுகிறார் அவருக்கு வழிகாட்டுவதற்காக மூத்த அதிகாரியாகக் கிரா யோசினாகா நியமிக்கப்படுகிறார்.
உயரதிகாரிகளுக்கு மரியாதை நிமித்தம் பரிசுகள் மற்றும் தங்க நாணயங்களை அளித்து அவர்களின் அன்பைப் பெறுவது தவறான பழக்கம் என்கிறார் அசானோ. இது நிர்வாகத்தில் என்றுமுள்ள விஷயம் எனும் கிரா யோசினாகா அசானோவிற்கு எதிராகப் பொய்யான புகார்களை அளிக்கிறார்.

எக்காரணத்தை முன்னிட்டும் யாருக்கும் தான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் அசானோ. அவருக்குத் தகுந்த பாடம் கற்பிக்க முடிவு செய்யும் கிரா பேரரசரிடமிருந்து தூதுக்குழு வருவதை ஒட்டி நடைபெறும் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் போது வேண்டுமென்றே அசானோவை அவமதிக்கிறார். இழிவுபடுத்தும்படியாகப் பேசுகிறார்
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அசானோ தனது குறுவாளை உருவி அவரைத் தாக்குகிறார். படுகாயமடைந்த கிரா தன்னைக் கொல்ல முயன்றதாகப் புகார் அளிக்கவே அசானோ விசாரிக்கப்பட்டு செப்புகு ( தற்கொலை சடங்கு) எனப்படும் தற்கொலை செய்து கொள்ளும்படி தண்டனை விதிக்கப்படுகிறார்.
அசானோ துணிவுடன் செப்புகு செய்து கொள்கிறார். தண்டிக்கப்பட்ட அசானோவின் குலமே புறக்கணிக்கப்படுகிறது. அவரது கோட்டை மற்றும் உப்பளங்களைக் கைப்பற்றும்படி பேரரசரிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

அசானோவிற்குச் சேவை செய்த அனைத்து சாமுராய்களையும் பதவி நீக்கம் செய்து, அவர்களை ரோனின் ஆக்குகிறார்கள்.
தங்கள் எஜமானர் இழந்த மரியாதை மீட்கவும் பழிசுமத்திய கிராவை கொல்வதற்கும் நாற்பத்தேழு சாமுராய்கள் ஒன்று சேருகிறார்கள். இவர்கள் எப்படி இந்தப் பழிவாங்கினார்கள் என்பதையே படம் விவரிக்கிறது.

ஜப்பானின் மிகத் தொன்மையான கதை சாமுராய்களின் விசுவாசத்தையும் நேர்மைக்காக உயிர்விடும் இளம்தலைவனின் வீரத்தையும் பேசுகிறது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஓடும் இப்படம் நிறையத் துணைக்கதைகளைக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் பனியும் செர்ரி மலர்களும் குறியீடுகள் போலப் பயன்படுத்தப்படுகின்றன. எடோ கோட்டைக்கு முன்னால் உள்ள செர்ரி மரம் மற்றும் இம்பீரியல் அரண்மனை, மதுவிடுதிகள் என அரங்க அமைப்புகள் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அது போலவே சாமுராய்கள் மற்றும் பெண்களின் உடைகள். அலங்காரங்கள் கச்சிதமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.. அற்புதமான ஒளிப்பதிவு. வண்ணங்களின் தேர்வும் கேமிராவின் நகர்வும் காட்சிகளை அழகாக்குகின்றன. படத்தில் கதாபாத்திரங்களின் நோக்கமும் அதற்கான செயல்பாடுகளும் தெளிவாக காட்டப்படுகின்றன. குறிப்பாக சாமுராய்களின் தைரியம் மற்றும் காத்திருத்தல். எதிரியின் பலம் அறிவது. அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கான ஆசை, இழப்பின் உணர்வு ஆகியவை வலிமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
சாமுராய்களின் வாழ்க்கை என்பது செர்ரி மரத்தில் மலர்கள் பூப்பதும் வீழ்வதும் போன்றதே என்று படம் சுட்டிக்காட்டுகிறது
கிரா கட்டியுள்ள புதிய மாளிகையின் மீதான ரோனின்களின் தாக்குதல், அவர் மறைந்துள்ள இடத்தைக் கண்டறிவது. வரைபடத்தைப் பெறுவதற்காக இளம்பெண் ஒருத்தியைக் காதலித்து ஏமாற்றுவது. ரோனின்களின் கடைசி ஊர்வலம் ஆகியவை தனித்துவமிக்கக் காட்சிகள், அசானோவாக நடித்துள்ள ரைசோ இச்சிகாவா சிறப்பாக நடித்துள்ளார். அசானோவின் மனைவி மற்றும் அவரது தோழிகள். சாமுராய்களின் குடும்பப் பெண்கள் என அனைவரின் வாழ்க்கை துயரமும் உணர்ச்சிப்பூர்வமாக காட்டப்படுகின்றன.

தன் வாழ்வின் கடைசிநாள் வரை இன்பம் அனுபவிக்க விரும்பும் கிரா கதாபாத்திரம் வலிமையானது. கிராவின் தோற்றத்திலே நரித்தனம் வெளிப்படுகிறது. அவர் வாழ்வின் இன்பங்களைக் கைவிட்டுவிட்டால் முதுமை சுமையாகிவிடும் என்கிறார். அவரது மனைவி உங்களுக்கு வயதாகிவிட்டதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் எனக் கேட்கிறாள்.
நான் இளமையோடு வாழ்ந்து இளமையோடு இறக்க விரும்புகிறவன். முதுமையை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார் கிரா. இதனால் பணம். அதிகாரம் பெண் சுகம் எனக் கடைசிவரை கிரா இன்பங்களில் திளைக்கிறார். பனி பொழியும் ஒரு குளிர்கால இரவில் ரோனின்கள் அவரைச் சுற்றிவளைத்து அவராகச் செப்புகு செய்து கொள்ளும்படி ஆணையிடும் போது `தான்
சாகவிரும்பவில்லை` என்று கத்துகிறார். அவரது மரணம் வஞ்சகம் மற்றும் பேராசையின் முடிவாகச் சித்தரிக்கப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டு ஜப்பானை அகன்ற காட்சிகளின் மூலம் திரையில் சிறப்பாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள்
நீதிக்காக போராடும் உணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்பதற்காக ஜப்பானில் இப்படம் திரும்பத் திரும்ப எடுக்கபடுகிறது. ஜப்பானின் இன்றைய இளம் தலைமுறை இக்கதையை கிராபிக் நாவல் மற்றும் மாங்கா காமிக்ஸ் மூலம் வாசிக்கிறார்கள். இக்கதை நூற்றாண்டுகளைக் கடந்தும் புதிதாகவே இருக்கிறது.
••