சாராவின் பொய்கள்

ஃபர்னூஷ் சமாதி இயக்கிய 180 Degree Rule 2020ல் வெளியானது. இப்படம் அஸ்கர் ஃபர்ஹாதியின் A Separation பாதிப்பில் உருவானது என்று தெரிகிறது. இரண்டிற்கும் நிறைய ஒற்றுமைகள்.

தெஹ்ரானில் வசிக்கும் பள்ளி ஆசிரியையான சாரா பள்ளியில் நன்மதிப்பு பெற்றவர். படத்தின் துவக்கத்திலே வகுப்பறையில் தற்கொலைக்கு முயலும் மாணவியைக் காப்பாற்றி விசாரணை மேற்கொள்கிறாள். அவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அந்தப் பிரச்சனையை வேறு எவரும் அறியாதபடி மாணவியின் அம்மாவை வரவழைத்துப் பேசி சரிசெய்கிறாள்.

சாராவின் கணவர் ஹமேட் கண்டிப்பானவர். தனது விருப்பப்படி மட்டுமே சாரா நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறவர். அவர்களின் ஒரே மகள் ராஹா. வீட்டில் சாராவும் ஹமேட்டும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

வடக்கு ஈரானில் நடைபெறும் சாராவின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள அவர்கள் தயாராகி வருகின்றனர், .ஆனால் எதிர்பாராத வேலை காரணமாக ஹமேட் வெளியூர் செல்ல வேண்டியதாகிறது. ஆகவே திருமணத்திற்குச் செல்ல வேண்டாம் என்று முடிவெடுக்கிறான்.

சாராவிற்குத் தனது குடும்ப விசேசத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை. அத்தோடு திருமணக் கொண்டாட்டத்தில் மணமகளின் தோழியாக இருப்பதற்காகத் தனது ஐந்து வயது மகள் ராஹாவுக்கு ஒரு அழகான ஆடையை வாங்கியிருந்தாள். ஆகவே அம்மாவும் மகளும் திருமணத்திற்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

கணவனுக்குத் தெரியாமல் திருமணத்திற்குச் சென்று வருவது என முடிவு செய்து காரில் மகளுடன் புறப்படுகிறாள். அந்தப்பயணத்தின் வழியே வடக்கு ஈரானின் அழகு வெளிப்படுகிறது. அத்தோடு சாராவின் தைரியம் மற்றும் சுயமாக முடிவெடுக்கும் தன்மையும் உணர்த்தப்படுகிறது

திருமணம் ஒரு வனவிடுதியில் நடைபெறுகிறது. சாரா திருமணத்தில் கலந்து கொள்கிறாள். அவளது பெற்றோர் மற்றும் உறவினர்களைச் சந்திக்கிறாள். மகிழ்ச்சியாக ஆடல் பாடல் விருந்து நடைபெறுகிறது. விடுதி அறை ஒன்றில் தங்குகிறாள். அந்த அறையின் கண்ணாடி ஜன்னலில் ஒரு பறவை நேரடியாக மோதிக் கொண்டு விழுகிறது. அந்தக் காட்சி படத்தின் திசைமாற்றத்தை சொல்லும் முக்கியமான காட்சியாகும்.

அறையின் ஏசியிலிருந்து கசிந்த நச்சுக் காற்றால் மூச்சுத்திணறி மகள் ராஹா இறந்துவிடுகிறாள். இந்த அதிர்ச்சியைச் சாராவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழுது புலம்பியபடியே மகளின் உடலைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறாள். திருமண வீடே நிலைகுலைந்து போகிறது.

ஒரு பக்கம் மகளின் மரணம். இன்னொரு பக்கம் கணவனிடம் இதை எப்படிச் சொல்வது எனத் தெரியாத தடுமாற்றம். சாரா அதிர்ந்து போகிறாள். முடிவில் கணவனிடம் பொய் சொல்வது எனத் தீர்மானிக்கிறாள். இந்த முடிவு அவளது வாழ்க்கையினைப் புரட்டிப் போடுகிறது.

சாராவின் பொய் அம்பலமாகி அதன் வழியே குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் கதையை விட்டு கிளை பிரிந்து போகின்றன.

இந்தக் கதைகளின் முக்கியக் கதாபாத்திரங்கள் அனைவரும் எதையாவது மறைக்கிறார்கள். அது வெளிப்படும் போது பாதிப்பு மோசமாகி விடுகிறது..

சாரா திருமண வீட்டில் தனது பெற்றோர்களைச் சந்திப்பது. அங்கே நடைபெறும் திருமண நிகழ்வுகள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இழப்பு மற்றும் துயர உணர்வைச் சாரா சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

வீட்டுக்குள் நடக்கும் அதிகாரப் போராட்டம், மாணவிகளின் உலகம். எதிர்பாராத விபத்து. பொய் உருவாக்கும் பிரச்சனைகள் என நான்கு சரடுகளைப் பின்னிச் செல்லும் கதை பாதிக்குப்பின்பு தொய்வடைந்துவிடுகிறது. முடிவில் வழக்கமான ஈரானியப்படங்களின் வரிசையில் நீதிமன்ற நாடகம் போல மாறிவிடுகிறது.

உண்மைச்சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

0Shares
0