யூ.ஆர். அனந்தமூர்த்தியின் சுயசரிதையான Suragiல் அனந்தமூர்த்தித் தான் பழகிய எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு இலக்கியச் சந்திப்புகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

அதில் அமெரிக்காவில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான சால் பெல்லோவை கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ஏ.கே.ராமானுஜன் வீட்டில் சந்தித்த நிகழ்வை எழுதியிருக்கிறார்.
அந்தச் சந்திப்பின் போது சால் பெல்லோ அணிந்திருந்த அழகான சட்டையைப் பாராட்டிய ராமானுஜத்தின் மனைவி மோலி இது உங்கள் பணக்கார அண்ணன் பரிசாக அளித்ததா என்று கேட்கிறார்.
தனது கோடீஸ்வர அண்ணன் ஒருமுறை அணிந்துவிட்டு தனக்கு அளிக்கும் சட்டைகளைப் பல காலமாகத் தான் அணிந்து வந்ததாகவும், தற்போது தானே தனக்கான ஆடைகளை வாங்கிக் கொள்வதாகவும் சொல்கிறார். சால்பெல்லோ ஐந்து முறை திருமணம் செய்து கொண்டவர். அதைப் பற்றியும் மோலி கேலியாகக் குறிப்பிடுகிறார்.

இந்தச் சந்திப்பின் போது வைக்கம் முகமது பஷீரின் பாத்துமாவின் ஆடு கதையைச் சால் பெல்லோவிடம் அனந்தமூர்த்திச் சொல்கிறார்.

கதையில் வரும் கதாபாத்திரங்கள் ஒருவரையொருவர் ஏமாற்றுகிறார்கள். அப்படி நடந்து கொள்வதற்கு அவரவர்களுக்கு என ஒரு காரணமும் இருக்கிறது. கதையில் வரும் ஆடு பஷீரின் கையெழுத்துப் பிரதிகளைத் தின்றுவிடுகிறது. இவ்வளவு குழப்பங்கள் இருந்தால் அவர்களுக்குள் வெறுப்பில்லை. இதே கதையைக் காஃப்கா எழுதியிருந்தால் அது கசப்பான துர்கனவை போலிருக்கும். ஆனால் பஷீர் மிகுந்த நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். அதில் பஷீரின் பேரன்பு முழுமையாக வெளிப்படுகிறது. அதனால் நிகரற்ற கலைப்படைப்பாக மாறிவிடுகிறது என்கிறார்.
அந்தக் கதை சால் பெல்லோவிற்குப் பிடித்திருக்கிறது. பஷீரைப் பாராட்டுவதுடன் இந்தியாவில் இது போன்ற கதைகள் எவ்வளவு அழகாக எழுதப்படுகின்றன என்றும் பாராட்டுகிறார்.
ஆங்கில இலக்கியத்தில் ஊறித் திளைத்த அனந்தமூர்த்திப் பஷீரை சால் பெல்லோவிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அவரது எழுத்தின் எளிமை மற்றும் பேரன்பை அடையாளம் காட்டுகிறார். சால் பெல்லோவின் பால்யகாலம் பஷீரின் கதைகளில் வருவது போன்றதே. ஆகவே அவருக்கு அந்தக் கதை உடனே பிடித்துவிடுகிறது.
இந்தியக் குடும்பம் என்பது ஒரு ஆக்டோபஸ். அதன் எட்டு கைகளும் வேறு வேறு பக்கம் அலைந்து கொண்டிருப்பதே வழக்கம். ஆக்டோபஸ் தனது கைகளால் நினைவு கொள்ளக்கூடியது என்கிறார்கள். இந்தியக் குடும்பங்கள் பிரச்சனைகளால் தான் உயிர்துடிப்புடன் விளங்குகின்றன. அதன் அடையாளமாகவே பஷீரின் பாத்துமாவின் ஆடுவை உணர்கிறேன்.
இந்தியக் குடும்பத்தினுள் ஒருவன் தன்னைக் காஃப்காவாக உணர்வது எளிது. ஆனால் அவன் காஃப்காவாக நடந்து கொள்ள முடியாது. பெரும்பாலும் இந்திய காஃப்கா துறவிற்குள் சென்றுவிடுவான். அல்லது வீட்டை விட்டு ஒடிவிடுவான்.
இந்தியாவிற்கு வரும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா எனச் சால்பெல்லோவிடம் அனந்தமூர்த்திக் கேட்கிறார். இந்தியாவின் வறுமையை என்னால் காண இயலாது என்று சால் பெல்லோ பதில் அளிக்கிறார். இந்த மனப்பதிவிற்குக் காரணம் பதேர் பாஞ்சாலி படத்தில் வரும் துர்காவின் மரணம். அது சால் பெல்லோவின் மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கிறது. அந்த நாவல் சித்தரிக்கும் காலம் வேறு என்ற உணர்வே அவருக்கு ஏற்படவில்லை. இந்தியா பற்றிய எதிர்மறையான பிம்பம் அமெரிக்கப் படைப்பாளிகள் பலருக்கும் இருந்திருக்கிறது. அதையே சால் பெல்லோவிடம் காணுகிறோம்.

அனந்தமூர்த்தியின் புத்தகம் முழுவதும் கன்னட இலக்கியவாதிகள் பற்றிய பெருமிதமும் அதன் மரபும் நவீனத்துவமும் பற்றிய பார்வைகளும் வெளிப்படுகின்றன. கவிஞர் அடிகாவை அவர் கொண்டாடுகிறார். கன்னட எழுத்தாளர்களுக்கும் அங்குள்ள மடங்களுக்குமான உறவு விசித்திரமானது. கன்னட இலக்கியத்தினை உலக அளவில் கொண்டு சென்றதன் பின்புலத்தை அனந்தமூர்த்தியின் வரிகளில் முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.
கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைகழகத் துணைவேந்தராகப் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது பற்றிய பகுதி சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. கேரள அரசு அவரை விரும்பி அழைத்துத் துணைவேந்தராக்கியிருக்கிறது. மலையாள படைப்புலகின் முக்கியப் படைப்பாளிகளுடன் அவருக்கு இருந்த நட்பு பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.
இந்தியப் பிரதமர்கள் வி.பி.சிங் மற்றும் ராஜீவ் காந்தியைச் சந்தித்து உரையாடியது பற்றிய பகுதி சிறப்பானது.
தனது நாவல்கள் திரைப்படமானதைப் பற்றிக் குறிப்பிடும் போது அவை தனக்கு முழுமையான திருப்தியை தரவில்லை என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார். தனது ரஷ்யப் பயணம் மற்றும் சீனப்பயணம் குறித்தும் விமர்சனப்பூர்வமாக எழுதியிருக்கிறார். இரண்டிலும் அவரது கோபம் முழுமையாக வெளிப்படுகிறது.
தனக்கு எதிராக நடந்து கொண்ட கன்னட எழுத்தாளர்களைப் பெயர் சொல்லி எழுதியிருப்பதோடு அவர்கள் மீது கடுமையான விமர்சனத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற இந்தியாவின் உயரிய இலக்கிய அமைப்புகள் யாவிலும் அவர் பெரிய பதவிகளை வகித்திருக்கிறார். அந்த நினைவுகள் பெரிதும் கசப்பானவையாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
தனது படைப்புகள் மற்றும் எழுத்தின் நுட்பங்கள் பற்றிய அனந்தமூர்த்தியின் வெளிப்படையான எண்ணங்கள் முக்கியமானவை. தனது சொந்த பிரச்சனைகள், வேதனைகளை உலகிற்குச் சொல்வது மட்டும் எழுத்தாளனின் வேலையில்லை. அவன் தனது காலத்தின் குரலை கேட்கிறான். சக மனிதர்களின் வேதனைகளை, துயரை புரிந்து கொள்கிறான். அதைத் தனதாக உணர்கிறான். அவர்களுக்காகக் குரல் கொடுக்கிறான். ஒன்றை உரத்து சொல்வதை விடவும் உணரச் செய்வதே இலக்கியத்தின் முதன்மையான பணி என்று சொல்லும் அனந்தமூர்த்திக் குவெம்புவை உதாரணமாகச் சொல்கிறார்
குவெம்புவின் கதை ஒன்றில் ஒரு வீட்டில் பாகம் பிரிக்கிறார்கள். வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் இரண்டாக்குகிறார்கள், விளையாட்டு சிறுவனாக இருந்த வாசுவை அழைத்து இரண்டில் ஒன்றை தொடச் சொல்கிறார்கள். அவன் எதைத் தொடுகிறானோ அது அவனது குடும்பத்திற்குரியது. அந்தச் சிறுவனின் விரல் நுனியில் குடும்பத்தின் எதிர்காலமிருக்கிறது. இந்த எதிர்பாராத சுமையைத் தாங்க முடியாமல் சிறுவன் மயங்கி விழுந்துவிடுகிறான்.
எழுத்தின் வல்லமை என்பது இது போன்ற பெரிய அனுபவங்களைச் சொற்களின் வழியே முழுமையாக உணர்த்திவிடுவதே என்கிறார். தராசின் சிறிய முள் தான் இரண்டு பக்க எடையினையும் சமமாக்குகிறது. அந்த முள்ளைப் போல வாசு சிறியதாக இருக்கிறான் என்றே அதை வாசிக்கும் போது உணர்ந்தேன்
உலகம் முழுவதும் பயணம் செய்த அனந்தமூர்த்தி தன்னை இந்தியாவின் இலக்கியப்பிரதிநிதியாகவே வெளிப்படுத்திக் கொள்கிறார். இவ்வளவு பெரிய புத்தகத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் எழுத்துலகோடு அவரது தொடர்பு சரியாக குறிப்பிடப்படவில்லை என்பது குறையே.
***