சிங்கப்பூரில் ஐந்து நாட்கள்


 


 


 


சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சிக்காக 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையான ஐந்து நாட்கள் சிங்கப்பூர் சென்றிருந்தேன். பள்ளி கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல்களும் சிங்கப்பூர் இலக்கிய அமைப்புகள்  மற்றும் பொது வாசகர்களுடன் நிகழ்த்தபட்ட உரையாடல்களும் சிறப்புரைகளும் நன்றாக அமைந்திருந்தன.


இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தை சார்ந்த திருமதி புஷ்பலதா, மணியம், மற்றும் நாராயண மூர்த்தி, இவர்கள் என்னிடம் காட்டிய நட்பும் அன்பும் என்றும் மறக்கமுடியாதது.


தமிழகத்திற்கு வெளியில் இன்னொரு நாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே வராத அளவு சிங்கப்பூரில் தமிழ் வளர்ந்திருக்கிறது. சீனர்கள், மலேயா மக்கள், பங்காள தேசத்தை சேர்ந்தவர்கள், வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள், குறிப்பாக தமிழ்மக்கள், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தானியர்கள், அரபிகள், தாய்லாந்து மக்கள், இந்தோனீஷியர்கள், என்று கலவையான முகங்களும், நான்கு மொழி வழிகாட்டுதல் பலகைகளும் ,வானை முட்டும் அடுக்குமாடி வளாகங்களும் சீரான சாலைகளும், விட்டுவிட்டு பெய்யும் மழையும் லேசான இளமஞ்சள் வெயிலும், அதிகம் மேகங்கள் அற்ற வெளிர்நீல ஆகாசமும் காணப்படுகின்றது.


பசுமை நிரம்பிய சாலையோரங்கள். அதிகம் அலைவீசாத கடற்கரை. சதா அவசரத்திற்கு பழகிப்போன மக்கள், தூய்மையான அதிநவீன மின்சார ரயில், ஹார்ன் அடிக்காத கார்கள், நள்ளிரவிலும் சாலைவிதிகளை முறையாக கடைபிடிக்கும் காரோட்டிகள், யாவற்றிற்கும் வரிசையில் நின்று முறையாக செல்லும் உள்ளுர்வாசிகள் கொண்ட சுற்றுலா நகரம் சிங்கப்பூர்.


ஞாயிற்றுகிழமை நகரம் தன் கட்டுபாடுகளை சற்றே தளர்த்திக் கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு ஆங்காங்கே ஒன்று கூடுகிறார்கள்.  சாலையோரம் நின்றபடியோ உட்கார்ந்தபடியே


ஒருவரையொருவர் சந்திப்பதும். உணவருந்துவதும் அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்குவது என தங்கள் விருப்பம் போல கொண்டாடுகிறார்கள். உணவகங்கள், மதுக்கடைகள், வணிக வளாகங்கள், வாகனங்கள் நிரம்பி வழிகின்றன.


என் பயணத்தில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் இதுவே. லிட்டில் இந்தியா பகுதியின் செராங்கூன் சாலையோரங்களில் எங்கு நோக்கினாலும் மனித தலைகள். வேறுபட்ட தேசங்களில் இருந்து வேலைக்காக வந்தவர்கள். நகரின் பிரம்மாண்டத்திற்கு பின்னாலிருந்து அதை இயக்கும் அடிப்படை சக்திகள்.


தேக்கா மையத்தையொட்டிய நடைபாதையோர கடைகள் வியப்பூட்டுபவை. குறிப்பாக ஜோசியக்காரர்கள், தயிர்விற்பவர்கள், ஆயுர்வேத மருந்து விற்பவர்கள், சர்பத் கடைகள், கடிகாரம் விற்பவர்கள் விதவிதமான பியர்  பாட்டில்கள், கூவி கூவி பியர் குடிக்க அழைப்பவர்கள் . மலிவு விலை துணிவிற்பவர்கள், தமிழ் வார இதழ் கடைகள், மசால் இடப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ள கோழிகள், இறைச்சிகள், மீன்தலையை மட்டும் தனித்து சமைக்கபட்டு பரிமாறப்படும் உணவு மற்றும் பெயர் தெரியாத பறவைகள். தவளையின் விரல்களை ருசித்து சாப்பிடும் சீனர்கள். பீடா விற்கும் பான்கடைகள்.


ஒரு இடத்தில் பி.ஜீ. கோவிந்தசாமி பிள்ளை அண்ட் சன்ஸ் என்ற துணிக்கடையின் விளம்பர பலகை. கைவினைப்பொருட்கள், தொலைவில் தெரியும் மசூதி. பழமையானதொரு கிறிஸ்துவ தேவாலயம். சாலையை கடக்கையில் வாசனையால் இழுக்கும் சமோசா இஞ்சி டீக்கடைகள். சூடாக போடப்படும் பரோட்டா கடைகள், வீராச்சாமி சாலை என்ற பெயர்பலகை. அதையொட்டிய கோவில்கள். ஒளிரும் நகைகடைகள், செருப்பு வணிகர்கள். விதவிதமான காய்கறி கடைகள்.  தமிழ்திரைப்பாடல்களின் குறுந்தகடுகள் விற்குமிடங்கள், கூவிகூவி அழைக்கும் சீன தமிழ் குரல்கள்.


அந்த சூழல் மதுரையில் நான் பார்த்திருந்த சித்திரைத் திருவிழா போன்றிருந்தது. மக்கள் திரளாக ஒரு இடத்தில் கூடுகிறார்கள் என்றால் அந்த இடத்திற்கு ஏதோ உள்ளார்ந்த தன்மை இருக்கிறது என்று நம்புகின்றவன் நான். அது வழிபாட்டு இடமாகவும் இருக்கலாம் ஒய்விடமாகவும் இருக்கலாம். இந்த நகரில் அப்படியான சில இடங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் உட்கார்ந்து உரத்து பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டு அலைந்து திரிவதை காண்பது அற்புதமாகயிருந்தது.


என்னை எப்போதுமே வசீகரிப்பது மிகப்பெரிய கட்டிடங்கள், வெளிநாட்டுக் கார்கள், மின்னியல் தொழில் நுட்ப சாதனைகள் அல்ல. மாறாக எளிய மனிதர்களும் அவர்களின் இயல்பான வாழ்க்கை வெளிப்பாடுகளுமே.
மக்களோடு மக்களாக என் விருப்பபடியே நடந்து அலைந்தேன். இடித்துக் கொண்டு இளநீர் வாங்கி குடித்தேன். உரசி கொண்டு நடக்கும் முகங்களை அவர்களின் கண்களில் இருந்த பரவசத்தை பகிர்ந்து கொண்டேன். அந்த உற்சாகம் வடிந்து நள்ளிரவில் மக்கள் சாலைகளை விட்டு அவரவர் இருப்பிடம் திரும்பும் வரையும் சுற்றியலைந்தேன்.


பின்பு ஆள் இல்லாத சாலைகளை கடந்து செல்லும் போது இங்கே பல்லாயிரம் மக்கள் ஒன்று சேர்ந்து கலைந்தார்கள் என்பதற்கான அடையாளமேயில்லை.
வீசி எறிந்த காகிதங்கள், குளிர்பான குடுவைகள், குப்பைகள் மற்றும் சாலையெங்கும் உதிர்ந்து கிடக்கும் பன்மொழி சொற்கள். பேசித்தீராத அவர்களின் தனிமை. இப்போதைக்கு இவ்வளவு தான் முடிந்தது என்று ஆதங்கத்துடன் விடைபெற்று போனவர்களின் மொழியற்ற துக்கம் இவையே அங்கு சிதறிக் கிடந்தன 


பின்னிரவில் மழை பெய்தது. சாலை விளக்குகள் தனியே ஒளிர்கின்றன. மனிதர்கள் இல்லாத சாலைகளில் வெளிச்சம் ஊர்ந்து அலைகிறது. இயந்திரத்தின் பெருங்கரம் ஒன்று குப்பைகளை வாறி அள்ளுகிறது. மழையை வேடிக்கை பார்த்தபடியே இயந்திரத்தை இயக்குபவன் சிரிக்கிறான். சாலை மீண்டும் இயல்பிற்கு திரும்புகின்றது.


இரவிலும் வெளிநாட்டு பயணிகள் வந்திறங்கி வணிக மையங்களை நோக்கி செல்கிறார்கள். ஏதேதோ ஊர்களில் இருந்து வேலைக்காக வந்தவர்கள் தங்கள் குடும்பம், நாளைய பொருளாதார தேவை என்பதை மனதில் நிறுத்தியபடியே உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். யாவர் கனவிலும் ஊரும் மனைவி மக்களும் சொந்தமும் பீறிடுகின்றன. இன்னும் சில வருசங்களின் பின்னே தமிழகம் வந்துவிடலாம் என்ற யோசனையிருக்கிறது என்பது பலரின் முகத்திலே எழுதி ஒட்டப்பட்டிருக்கிறது.


இந்த நகரில் நான் பார்த்த மனிதர்களில் சராசரிக்கும் மேல் பகிர்ந்து கொள்ளப்படாத மன இறுக்கம் நிரம்பியவர்கள். பாதி உரையாடலுக்குள் அவர்கள் அறியாமல் மௌனம் அவர்கள் மீது கவிழ்ந்துவிடுகிறது. எல்லா பெரிய நகரங்களைப் போல குடியும் கேளிக்கைகளும் இந்த நகரிலும் பெருகி வழிகிறது. கேளிக்கைகள் மட்டுமே வந்தேறிய மக்களுக்கான ஒரே ஆறுதல்.


வங்கிகள், அரசு அலுவலகம், உயர்தொழில்நுட்ப வளாகம் என எங்கு சென்றாலும் தமிழில் பேசமுடிகிறது. நான் அறிந்தவரை சென்னையில் மட்டும் தான் மூத்திரம் பெய்வதற்குக் கூட ஆங்கிலத்தில் கேட்க வேண்டிய சூழல் உள்ளது.


**
இலக்கிய நிகழ்வுகளைப் பொறுத்தவரை இங்கே வாசிப்பிலும் எழுதுவதிலும் அதிக அக்கறைகாட்டுபவர்கள் தமிழகத்திலிருந்து வேலைக்காக சிங்கப்பூர் சென்ற தமிழ் மக்களே. சிங்கப்பூரில் பிறந்த வளர்ந்தவர்களில் அதிகம் எழுத்து, இலக்கியம் என ஆர்வம் காட்டுவதில்லை.


அத்தோடு பள்ளிகளில் தமிழ் பயின்ற போதும் வீட்டிலும் மற்ற வகுப்பறைகளிலும், வெளியிலும் ஆங்கிலம் பேசுவதால் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு ஆங்கிலமே தாய்மொழி போல உள்ளது.


இவர்களுக்கு இலக்கிய ஆர்வத்தை உண்டாக்கவும் புதிய படைப்பிலக்கிய முயற்சிகளை ஊக்கப்படுத்த அரசு நிறைய முயற்சிகள் எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதி தான் தேசிய நூலகத்தால் நடத்தபடும் வாசிப்போம் சிங்கப்பூர் இயக்கம்


இதற்கென தேர்வு செய்யப்படும் தமிழ் புத்தகம் அங்குள்ள நூலகங்களில் பார்வைக்கு வைக்கபடுகின்றன. அந்த நூல் குறித்து பல்வேறு தளங்களில் உரையாடல்கள் ஆய்வு கூட்டங்கள் நடைபெறுகின்றன.


அது போன்ற பத்திற்கும் மேற்பட்ட கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டங்களில் நவீன தமிழ் இலக்கியவாசிப்பில் அவர்கள் காட்டும் அக்கறை முதன்மையாக வெளிப்பட்டது. குறிப்பாக  அமோகியா நூலகத்தில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பும் அதன் தொடர்ந்த உரையாடல்களும் எந்த அளவு நவீன தமிழ் இலக்கியத்தை அங்குள்ளவர்கள் செம்மையாக வாசித்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இருந்தது.


இந்த சந்திப்பின் போது வலைப்பக்கங்களில் தொடர்ந்து எழுதி வரும் நிறைய நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக பாண்டித்துரை, குமார். ரெ.பாண்டியன். ரமேஷ் சுப்ரமணியம், லதா, மாதங்கி, ஜெயந்தி சங்கர். பாலுமணிமாறன். கணேஷ்பாபு, சரவணன், முத்து, மலேசியாவிலிருந்து வந்திருந்த  அநங்கம் சிற்றிதழின் ஆசிரியர் பாலமுருகன், வந்த நாளில் இருந்து என்னோடு உடனிருந்து உதவிய மல்லாங்கிணற்றை சேர்ந்த தம்பி ஆதிமூலம் போன்றவர்களோடு சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி தருவதாகயிருந்தது.


**


கன்னிமாரா நூலகம், கல்கத்தா தேசிய நூலகம். டெல்லியின் சாகித்ய அகாதமி நூலகம், ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்கன் சென்டர் நூலகம் என எவ்வளவோ வேறுபட்ட நூலகங்களை கண்டிருந்த போதும் சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தைப் போல இருபத்தியோறு தளங்களை கொண்ட  நூலகம் ஒன்றைக் காண்பது வியப்பாகவே இருந்தது.


லட்சக்கணக்கான புத்தகங்கள், தியானகூடங்களில் காணப்படும் நிசப்தம் போன்ற பெரும்மௌனம் நிலவும் படிப்பறைகள், அழகான இருக்கைகள், இயற்கையோடு கூடிய செயற்கை ஒளியமைப்பு. குழந்தைகள் படிப்பதற்கு என்று தனிப்பிரிவு. அதில் எண்ணிக்கையற்ற புத்தகங்கள், பெற்றோர்களுடன் வந்து வாசிக்கும் சிறுவர் சிறுமிகள். புத்தகங்களை திரும்பச் செலுத்துவதற்கு எளிமையாக புத்தகம் திரும்பப் பெறும் இயந்திரங்கள். அதில் புத்தகங்களைப் போட்டுவிட்டால் அதுவே சேகரம் செய்து கொள்கிறது.


படித்து முடித்து வேண்டாம் என்று பொதுமக்கள் நினைக்கும் புத்தகங்களைக் கொண்டு வந்து போடும் புத்தகப் பெட்டகம். இதில் யார் வேண்டுமானாலும் புத்தகம் போடலாம். யார் வேண்டுமானாலும் அதில் உள்ள புத்தகத்தை எடுத்து கொள்ளலாம்.


எந்த தளத்திற்கு செல்வதற்கும் தானியங்கி படிக்கட்டுகள், மாணவர்கள் படிப்பதற்காக தனி அறைகள், ரெபரென்ஸ் புத்தகங்களுக்கான தனி தளங்கள், உலக மொழிகளில் வெளியாகும் நாளிதழ்களில் முப்பதிற்கும் மேற்பட்ட தினசரி நாளிதழ்கள்,  தென்கிழக்கு ஆசியபகுதியின் கலை இலக்கியங்களுக்கான தனிப்பிரிவுகள்.


சிங்கப்பூரின் பண்டைய காலத்தை ஆராயும் தளம், காப்பக பிரிவு, எழுத்தாளர்களின் கையெழுத்து பிரதிகள், காட்சிக்கு வைக்கபட்டுள்ள பல நூற்றாண்டு கலைப்பொருட்கள்,  குறுந்தட்டுகள், மைக்ரோ பிலிம்களுக்கான தனிப்பிரிவுகள். சுவர்களில் அலங்கரிக்கும் ஒவியங்கள், கண்ணாடி வேலைப்பாடுகள் என நூலகம் தனித்த உலகமாக இருக்கின்றது. அதை விட்டு வெளியே வர மனதேயில்லை.


சென்னையில் மின்சார ரயிலை விட்டு இறங்கி வெளியேறும் பயணிகளை போல திரளாக மக்கள் தேசிய நூலகத்திற்குள் புத்தகம் எடுக்க செல்கிறார்கள். சிறு நடைசப்தம் கூட இல்லை. காகிதம் புரட்டப்படும் ஒசை கூட கேட்பதில்லை.தமிழ் எழுத்திற்கு என்று தனிப்பிரிவுகள் இருக்கின்றன. தமிழகத்தில் கூட இவ்வளவு சேமிப்பு உள்ள நூலகம் இருக்கிறதா என்று சந்தேகம் கொள்ளுமளவு துறை சார்ந்த பகுப்பு  செய்யப்பட்ட பல்லாயிரம் நூல்கள். அத்தனையும் கணிணி மயமாக்கபட்டிருக்கின்றன.


நூலக சேவையில் தனித்து குறிப்பிடப்பட வேண்டியது.  


இங்குள்ள நூலகம் கர்ப்பிணி பெண்களுக்கு என தனியான வாசிப்பு இயக்கம் நடத்துகிறது. கர்ப்பத்தில் உள்ள குழந்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தாயின் மனதிற்கு சந்தோஷம் தரும் புத்தகங்களை தேர்வு செய்து வாசிக்க ஊக்கப்படுத்துகிறது.அது போலவே குழந்தைகள் பிறந்த சில மாதங்களில் இருந்து அதற்கென உள்ள புத்தகங்களை தாய் வாசித்து காட்ட சிபாரிசு செய்கிறார்கள். அந்த சப்தம் குழந்தையின் மனதில் சென்று படிந்துவிடும். பின்பு இயல்பாகவே புத்தகம் வாசிக்கும் பழக்கம் உருவாகும் என்கிறார்கள். அது போலவே குழந்தைகள் கையில் புத்தகங்களை கொடுத்து தொட்டு விளையாடும்படியாக மருத்துவமனைகளே உற்சாக படுத்துகின்றன.


நூலகம் ஒரு பிரபஞ்சம். சொர்க்கத்தை ஒரு நூலகமாகவே கற்பனை செய்கிறேன் என்றார் போர்ஹே. அது நிஜம் என்பது இந்த நூலகத்தை பார்த்த போது தோன்றியது.  


**


இவ்வளவு இருந்தும் சிங்கப்பூரில் இதெல்லாம் காணவில்லையே என்று தோன்றியவை.


தமிழகத்தை போல கட்அவுட்டுகள், சினிமா போஸ்டர்கள், சுவர்களில் கரியால் எழுதப்படும் விளம்பரங்கள் எதுவும் கிடையாது.


மிக முக்கியமாக சொல்ல வேண்டியது ஆட்டோக்கள் கிடையாது. அதுவும் சென்னையிலிருந்து போய் இறங்கிய உடன் விமான நிலைய வாசலில் ஆட்டோ தென்படுகிறதா என்று தான் கண்கள் தேடுகின்றன. வாடகைகார்கள் என்ற போதும் சூடுவைக்காத மீட்டர் உள்ளவை.


மின்சார ரயிலில் பாட்டுபாடி பிச்சை எடுப்பவர்கள், முறுக்கு விற்பவர்கள், ஊசிபாசி விற்பவர்கள் எவரும் கிடையாது. உரசிக்கொண்டு அடுத்தவர் மீது சாய்ந்து தூங்கி கொண்டு வருகின்றவர்கள் கிடையாது.


டீக்கடைகளில் சினிமா பாட்டுபோட்டு முழக்குபவர்கள் இல்லை. சாலையை நினைத்த இடத்தில் குறுக்கே நடப்பவர் ஒருவர் கூட கிடையாது


ரயில் பேருந்து என எங்கும் மக்கள் ஒழுங்காக டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்கள்.  ஒவ்வொரு ரயில் நிலையம் வரும் போதும் நான்குமொழிகளில் அறிவிப்புகள் தருகிறார்கள், நமது ரயில்வே கடைபிடிக்க வேண்டிய அவசியமான முறைகளில் இது முக்கியமானது.


சென்னையின் அன்றாட காட்சியான சாலையோரங்களில் போக்குவரத்து காவலர்கள் வாகனஒட்டிகளை நிறுத்தி வசூல் செய்வதை அங்கே காண முடியவில்லை.கண்காணிப்பு கேமிராக்கள் முக்கிய இடங்களில் நம்மை உற்று பார்க்கின்றன.


அறுபதாயிரம் டாலர்களுக்கு இந்த நகரத்தை மலேசிய அரசகுடும்பத்தினரிடமிருந்து பிரிட்டீஷ் அரசு விலைக்கு வாங்கியது என்கிறார்கள். இன்று அந்த பணத்தை தன் மாதசம்பளமாக வாங்க கூடிய அளவு பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் இருக்கிறார்கள்.


**
சின்னஞ்சிறு தீவு இன்று உலகின் முக்கிய நகரமாகியுள்ளது. இதை உருவாக்கிய மக்களின் உழைப்பும் அதற்கான வெற்றியும் கண்கூடாகக் காணமுடிகிறது. இந்த நகரம் உருவாகிய கதையை யாராவது நாவலாக எழுதியிருக்கிறார்கள் என்று தேடினேன். அப்படியோரு புத்தகத்தை இதுவரை யாரும் எழுதவில்லை என்றார்கள்.


சிங்கப்பூரை கிழக்கிந்திய கம்பெனி விலைக்கு வாங்கியது. நகரம் உருவாக்கபட்ட விதம். யுத்தகாலத்தில் நகரின் நிலைமை. வாசனை திரவியங்களை ஏற்றி சென்ற கப்பல் வணிகம். சொந்த ஊரை விட்டு பிழைக்க வந்தவர்களின் நிர்கதி, வெளிப்படுத்த முடியாத அக நெருக்கடி, இன்று பன்னாட்டு மனிதர்களோடு வாழும் சூழல் என்று எழுத எவ்வளவோ இருக்கிறது.


சிங்கப்பூரில் எழுத விருப்பம் உள்ளவர்களுக்கு நேரமில்லை.


நேரமிருப்பவர்களுக்கு எழுதுவதில் விருப்பமில்லை.


அந்த வகையில் சென்னையில் வசிப்பது பரவாயில்லை என்றே தோன்றுகிறது.


**


சிங்கப்பூரில்  நடைபெற்ற எனது இலக்கிய சந்திப்புகள் மற்றும் சென்ற இடங்கள், பார்த்த நண்பர்கள் அவர்களுடன் நடைபெற்ற உரையாடல்கள் பற்றி இன்னொரு தனியான பதிவு எழுத நினைத்திருக்கிறேன். அதற்கான புகைப்படங்களுக்காக காத்திருக்கிறேன்.


** 

0Shares
0