Experience is food for the brain – Bill Watterson
தினந்தந்தி பேப்பரில் வெளியாகி வரும் கன்னித்தீவை நம்மில் அத்தனை பேரும் சில நாட்களாவது படித்திருப்போம். எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து கன்னித்தீவு வெளிவந்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக கன்னித்தீவு வாசித்தவர்கள் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே.
ஒருவேளை இருந்தால் அவர்கள் கட்டாயம் நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள். காரணம் இத்தனை வருடங்களுக்குள் அதற்கு வரைந்த ஒவியர்கள் மாறியிருக்கிறார்கள். கதையின் போக்கு மாறியிருக்கிறது. அதை யார் தீர்மானித்தது. எப்படி கன்னித்தீவை வெளியிட தீர்மானம் செய்தார்கள். எது முதல்நாள் வெளியான கன்னித்தீவு என்று தெரிந்து கொள்ள ஆசை.
கன்னித்தீவில் வரும் சிந்துபாத் ஆயிரத்தோரு அராபிய இரவுகள் கதைகளில் வரும் நாயகன். அவனது ஏழு சாகசங்கள் தனி புத்தகமாக விவரிக்கபடுகிறது. அதில் ஒன்று தான் சிந்துபாத் கப்பல் உடைந்து யாருமில்லாத தீவு ஒன்றிற்கு செல்வது. அந்த கதையை தலைமுறை தலைமுறையாக ஒரு தமிழ் நாளிதழ் படக்கதையாக வெளியிட்டு வருகிறது என்பது வியப்பே.
இப்படி நாளிதழ்களில் வருசக்கணக்கில் வெளியான பல முக்கியமான காமிக்ஸ்கள் உள்ளன. அதில் எனக்கு மிகவும் பிடித்தது. கெவின் அண்ட் ஹாப்ஸ் எனப்படும் சித்திர கதைத்தொடர். (BillWatterson`s classic newspaper comic Calvin and Hobbes )அமெரிக்காவில் 1985 முதல் 95 வரை பத்து ஆண்டுகள் வெளியாகி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
இந்த காமிக்ஸ் தொடரை நான் தனிப்புத்தகமாக வாங்கி வாசித்தே அறிமுகம் செய்து கொண்டேன். அது பத்து வருசங்களுக்கு முன்பிருக்கும். இன்று வரை கெவின் அண்ட் ஹாப்ஸ் தொகுப்புகள் பத்திற்கும் மேலாக என்னிடம் உள்ளன. தற்போது இணையத்தில் பதினெட்டு தொகுப்புகளும் வாசிக்க கிடைக்கின்றன.
நான் வாசித்தவரை மிக முக்கியமான காமிக்ஸ் ஸ்ட்ரிப் கெவின் அண்ட் ஹாப்ஸ். உயர்கற்பனையும் சமகால பிரக்ஞையும், வாய்விட்டு சிரிக்க வைக்கும் கேலியும், தன்னை சுற்றிய உலகின் மீதான உரிய எதிர்வினையும் கொண்ட படக்கதையது.
இந்த காமிக்ஸ்களை உருவாக்கியவர் அமெரிக்காவை சேர்ந்த பில்வாட்டர்சன். படக்கதையின் நாயகன் கெவின் என்ற ஆறுவயது பையன். அவன் எதையும் மாற்றி யோசிக்கும் திறன் கொண்டவன். தன்னைச் சுற்றிய அன்றாட நிகழ்வுகளை கேலியோடு விமர்சிக்க கூடியவன். எதற்காக தன்னை பள்ளிக்கூடம் தன் மீது படிப்பு சுமையை ஏற்றுகின்றது என்று ஆதங்கபடுகின்றவன்.
ஏதாவது ஒரு காரணம் சொல்லி பள்ளிக்கு போகாமல் இருக்க முயற்சிக்கிறவன். மிகுந்த கற்பனைதிறன் கொண்டவன். சில நேரங்களில் அவன் தன்னை ஒரு சூப்பர்மேனாக நினைத்துக் கொள்வான். சில நேரங்களில் தன்னை ஒரு டினோசராக நினைத்து கொள்ள கூடியவன். சிற்பம் இசை ஒவியம் என்று கலைகளில் ஈடுபாடு கொண்டவன். அவனது மத்திய தர வர்க்கத்து பெற்றோர்களின் அடக்குமுறையை, பிள்ளைகளை புரிந்து கொள்ளாத அசட்டுதனத்தை விமர்சனம் செய்கின்றவன்.
இவனுக்கு துணை ஹாப்ஸ் என்ற ஒரு புலி. இது ஒரு பொம்மை. ஆனால் இவன் கண்களில் மட்டும் நிஜமாக தோன்றக்கூடியது. இந்த புலி சிந்திக்ககூடியது. பிடிவாதமானது. பல நேரங்களில் கெவினை விடவும் புத்திசாலிதனம் கொண்டது. தான் ஒரு புலியாக இருப்பது குறித்து அதிகம் சிந்திக்ககூடியது.
இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் செயல்களே படக்கதையாக உருவாகின்றது. இந்த சித்திர தொடர்களில் அமெரிக்காவின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் துவங்கி அதிநவீன விஞ்ஞானம் வரை யாவும் விவாதிக்கபட்டிருக்கிறது
காமிக்ஸ் என்றாலே சிறுவர்களுக்கானது என்ற தவறான எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. உண்மையில் காமிக்ஸ் சகலருக்குமானது. இன்றைய சினிமாவின் அத்தனை நுட்பங்களும் காமிக்ஸில் இருந்து உருவாக்கபட்டதே. காமிக்ஸ் ஒவியர்களின் சித்திரம் தீட்டும் முறையும் கதை சொல்லும் முறையும் அசாத்தியமானது.
அரசியல் சார்ந்த காமிக்ஸ்,சுயவரலாற்று காமிக்ஸ், அதிபுனைவு காமிக்ஸ். பேண்டஸி காமிக்ஸ், விஞ்ஞான புனைகதை காமிக்ஸ், பாலியல் காமிக்ஸ் என்று பல்வேறு விதமான காமிக்ஸ்கள் இன்று வெளியாகின்றன.
தமிழில் கடந்த இருபதாண்டுகளில் புதிய காமிக்ஸ் என்று எதுவும் வெளியாகி நான் வாசித்ததில்லை. அபூர்வமான ஒன்றிரண்டு ஆங்கில காமிக்ஸின் தமிழாக்கங்கள் வெளியாகி உள்ளன. தமிழில் எழுதப்பட்ட காமிக்ஸ் இதுவரை உருவாக்கபடவில்லை.
இந்த வகையில் கெவின் அண்ட் ஹாப்ஸ் மிக முக்கியமான முயற்சியாகும். கெவின் என்ற பெயர் ஜான் கெவின் என்ற பதினாறாம் நூற்றாண்டு இறையியல்வாதியின் பெயரையும் , தாமஸ் ஹாப்ஸ் என்ற அரசியல் கருத்துகளை வெளிப்படுத்திய தத்துவாதியின் பெயரையும் நினைவுபடுத்தும்படியாக அமைக்கபட்டிருக்கிறது
கெவின் அண்ட் ஹாப்ஸில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு சிறு பகுதியிருக்கிறது. ஒரு நாள் கெவின் வீட்டுபாடம் செய்ய முயற்சிக்கிறான். ஹாப்ஸ் அந்த நேரத்தில் பயனுள்ளதாக ஒரு கதை எழுதலாமே என்கிறது. உடனே அவன் தான் ஒரு கதையை எழுதப்போவதாகவும். அந்த கதை எழுதி முடிக்க பட்ட போதும் எழுதப்படாததாக இருக்கும் என்கிறான்
அது எப்படி என்று ஹாப்ஸ் கேட்கிறது. உடனே அவன் தான் இப்போது மணி 6.30. தான் ஒரு ஒரு டைம் மெஷினில் ஏறி 7 மணிக்கு சென்று கதை எழுதிவிட்டு ஆறரை மணிக்கு திரும்பிவிட்டால் அந்த கதை எழுதப்படாமல் எழுதப்பட்டதாகிவிடாதா என்று கேட்கிறான். அதுவும் சரி என்று அவர்கள் ஒரு கால இயந்திரத்தில் ஏறி எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்கிறார்கள்.
7 மணிக்கு சென்று இறங்கினால் அங்கே அவர்களை போலவே இன்னொரு கெவின் இன்னொரு ஹாப்ஸ் இருக்கிறார்கள். அவர்கள் மணி ஏழாகிறது. இன்னும் ஏன் 6.30 மணியில் உள்ள கெவில் வீட்டுபாடத்தை எழுத துவங்கவில்லை என்று ஆதங்கபடுகிறார்கள்.
அது ஏன் என்று 6.30 கெவின் கேட்கிறான். உடனே 7 மணி கெவின். ஒரு வேலை ஆறரை மணிக்கு துவங்கப்பட்டால் தான் 7 மணிக்கு அது பாதி முடிவடையும். இப்போது அவனால் தங்கள் வேலை பாதிக்கபடுகிறது என்று குறை சொல்கிறான் . உடனே அவர்கள் கால இயந்திரத்தில் ஏறி 7.30 க்கு போகிறார்கள். அங்கும் இதே போல ஒரு கெவின் அண்ட் ஹாப்ஸ். இதே பிரச்சனை. முடிவில் கதை எழுத முடியாமல் திரும்பிவிட ஹாப்ஸ் ஒரு கதை எழுதி முடிக்கிறது.
இந்த படக்கதை பேசும் விஷயம் மிக முக்கியமானது. நாம் ஒரே நேரத்தில் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ அல்லது வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு இருப்பு நமக்கு உள்ளதா என்பதை பற்றி அழகாக விளக்கி சொல்கிறது
இது போலவே இன்னொரு நாள் பனியில் ஒரு சிற்பம் செய்து வீட்டின் முன்னால் வைக்கும் கெவின் உலகிலே தன்னுடைய சிற்பம் ஒன்று தான் உயிருள்ளது. காரணம் அது உருகிக் கொண்டேயிருக்கிறது என்று வியாக்ஞானம் செய்கிறான். அத்தோடு சிலை அரூபத்தில் சென்று முடிந்துவிடும் என்றும் தத்துவார்த்தமாக பதில் சொல்கிறான்.
இப்படி நறுக்கு தெறிப்பது போன்ற கேலிகள், பார்வைகள் இந்த படக்கதையில் அதிகம் உண்டு.
இந்த படக்கதை வெவ்வேறு நாடுகளில் இதுவரை 2400 நாளிதழ்களில் வெளியாகி இருக்கிறது. 18 புத்தகங்களாக வெளியாகி கிட்டதட்ட முப்பது மில்லியன் விற்பனையாகியிருக்கிறது. எது இந்த படக்கதையை இவ்வளவு ரசிக்க செய்கின்றது என்றால் இதன் நேரடியான விமர்சனக்குரலே.
கெவின் பல நேரங்களில் தேர்ந்த விஞ்ஞானி போல யோசிக்கிறான். சில நேரங்களில் கவிஞன் போல தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். பல நேரங்களில் தன்னை சாகசமனிதன் போல வெளிக்காட்டுகிறான். யாவும் தாண்டி அவனும் ஹாப்ஸ்சும் இணைந்து புதிய விளையாட்டுகள், பாடல்கள், கேலி செய்யும் முறைகளை கண்டுபிடிக்கிறார்கள். அவர்களது பந்து விளையாட்டு ஒன்று மிக விசித்திரமானது
அது போலவே கிராஸ் என்ற பெயரில் ஒரு ரகசிய குழு ஒன்றை கெவின் அமைந்திருக்கிறான். அதன் சந்திப்பு மரத்தின் உச்சியில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள அவனோடு படிக்கும் சூசி முயற்சிக்கிறாள். அவனை அனுமதிக்க மறுக்கிறான் கெவின். அதற்கு அவன் சொல்லும் காரணங்கள் வியப்பூட்டுபவை.
விளம்பர நிறுவனம் ஒன்றில் ஒவியராக பணியாற்றிய பில்வாட்டர்சன் இந்த படக்கதையை வரைய துவங்கிய போது அதற்கு பெரிய ஆதரவு இல்லை. ஆனால் அதன் பிறகு இந்த தொடரை நிறுத்தவே கூடாது என்று பொதுமக்கள் கூக்குரலிடும் அளவு வாசக எண்ணிக்கை பல்கி பெருகியது.
கெவின் கதாபாத்திரம் பலநேரங்களில் தன்னை பிரதிபலிக்ககூடியது என்கிறார் பில் வாட்டர்மேன்.
இந்தச் சித்திரக்கதையை படமாக்க விரும்பிய ஸ்டீவன் ஸ்பெல்பெர்க் அதற்கான அனுமதி கேட்டு வாட்டர்சனை சந்திக்க விரும்பிய போது தன் காமிக்ஸை வேறு எந்த விதத்திலும் மாற்றுவதற்கு தனக்கு விருப்பமில்லை என்று மறுத்துவிட்டதோடு ஸ்பீல்பெர்கை சந்திப்பதையும் தவிர்த்துவிட்டார்
காமிக்ஸை ஒரு வணிகப்பொருள் போல கையாளும் சூழல் உள்ள நிலையில் இனிமேல் தான் இந்த சித்திரக்கதை தொடரை தொடர போவதில்லை என்று முடிந்து கொண்டுவிட்டார். அத்தோடு தனது புகைப்படம் மற்றும் நேர்காணல்கள் கூட எதிலும் வெளியாக வேண்டியதில்லை என்று தன்னை சுற்றி ஒரு சிறிய வட்டம் அமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் வாட்டர்மேன்.
தனது காமிக்ஸ் சித்திரங்களுக்கு உந்துதலாக இருந்தவை புகழ்பெற்ற காமிக்ஸ் ஒவியர்களான Charles Schulz, George Herriman Winsor McCay Walt Kelly போன்றவர்களே என்று குறிப்பிடுகிறார்.
நாளிதழ்களில் வெளியான காமிக்ஸ் சித்திரங்களில் இன்றளவும் புகழ்பெற்றிருப்பது கெவினே. இந்த காமிக்ஸ் பற்றி விரிவான ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன. உலகம் முழுவதும் இதற்கான வாசர்கள் பெருகிக் கொண்டேயிருக்கிறார்கள்.
ஆனால் இன்றைய சூழலில் நாளிதழ்கள் காமிக்ஸ் வெளியிடுவதற்கான தனது பத்திரிக்கையின் பக்கங்களை ஒதுக்குவதில் மிகுந்த பாரபட்சம் காட்டுகிறது. ஏதோவொரு மூலையில் சிறிய துண்டுபடம் வெளியிடப்படும் அளவே இன்று காமிக்ஸ் நாளிதழ்களில் உள்ளது என்று தன் மனவருத்ததை தெரிவித்து கொள்கிறார் வாட்டர்சன்
ஒரு வகையில் இவரது காமிக்ஸ் லூயிகரோலின் ஆலீஸின் அற்புத உலகம் மற்றும் அந்துவாந்த் எக்ஸ்பரியின் குட்டி இளவரசன் இரண்டோடும் இணைந்து பார்க்க வேண்டிது. மிகவும் அசலான பார்வையும் சித்திர வெளிப்பாடும் கொண்ட காமிக்ஸ் இது.
நவீன கிராபிக் நாவல்கள், மாங்கா காமிக்ஸ் இவற்றின் அதிவேகத்தோடு ஒப்பிடும் போது இது செவ்வியல் தன்மை கொண்டது. அதனால் தானோ என்னவோ இதை மறுபடியும் வாசிக்க மனம் விரும்பிக் கொண்டேயிருக்கிறது.
**
வாசிக்கபட வேண்டிய முக்கிய காமிக்ஸ்.
- The Essential Calvin and Hobbes: A Calvin and Hobbes Treasury
- Something Under the Bed is Drooling
- The Calvin and Hobbes Lazy Sunday Book: A Collection of Sunday Calvin and Hobbes Cartoons
- Weirdos From Another Planet!
- The Indispensable Calvin and Hobbes: A Calvin and Hobbes Treasury
- Calvin and Hobbes: Sunday Pages 1985-1995
- The Days are Just Packed
- It`s A Magical World
- The Calvin and Hobbes Tenth Anniversary Book
- The Complete Calvin and Hobbes