சிப்பியின் வயிற்றில் முத்து


 


 


 


 


 


வங்காளத்தில்  1980 ஆண்டு வெளியான jhinuker pete mukto  என்ற நாவல் சமகால இந்திய நாவல்களில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இதை எழுதியவர் போதி சத்வ மைத்ரேய. இந்த நாவல் தமிழில் சிப்பியின் வயிற்றில் முத்து என்ற பெயரில் எஸ். கிருஷ்ணமூர்த்தியால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.


இந்த வங்காள நாவலின் சிறப்பம்சம் இது முழுமையாக தமிழக மக்களின் வாழ்வை விவரிக்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள பெர்னாந்தோ பிரிவு மீனவர்களின் வாழ்க்கைபாடுகளையும் அவர்களுக்குள் உள்ளதொழில்போட்டியும் பற்றி நுட்பமாக விவரிக்கிறது. அத்தோடு ஐம்பது வருடங்களுக்கு முந்தைய தென்தமிழ் மாவட்டங்கள் எப்படி இருந்தன என்பதற்கான இலக்கிய சாட்சியாகவும் இந்த நாவலைச் சொல்லலாம்.கும்பகோணம் . மதுரை, ஸ்ரீரங்கம், சாத்தூர், திருநெல்வேலி தூத்துக்குடி என்று இந்த நாவல் விவரிக்கும் 1950 களை ஒட்டிய காலம் தமிழ் இலக்கியத்தில் கூட இவ்வளவு விரிவாக பதிவு செய்யப்படவில்லை.


குறிப்பாக தமிழகத்தில் நடைபெற்ற மிக முக்கிய அரசியல் சம்பவங்களான வஉசிதம்பரம்பிள்ளை கைதுசெய்யப்பட்டது, ஆஷ் கொலை , காங்கிரஸ் இயக்கத்தின் செல்வாக்கு, மற்றும் சுதந்திரத்திற்கு பிறகான சமூகமாற்றங்கள் யாவும் கதையின் ஊடாகவே விவரிக்கபடுகின்றன.


வங்களாத்தை சேர்ந்த போதி சத்வ மைத்ரேய   மீன்வளத்துறையில் பணியாற்றுவதற்காக 1959 ஆண்டு தமிழகம் வந்து சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடியில் பணியாற்றுகிறார்.. மன்னார்வளைகுடா பகுதியில் காணப்படும் ஆழ்கடல் மீன்களை பற்றிய ஆய்வுபணிகளை மேற்கொண்ட போதி சத்வா தூத்துகுடியில் தங்கி வாழ்ந்திருக்கிறார். அந்த நாட்களில் அவர் நேரில் கண்ட மீனவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு இருபது வருடங்களுக்கு பிறகு இந்த நாவலை எழுதியிருக்கிறார்


இவரை வங்கள மொழியில் எழுதிய தமிழ் எழுத்தாளர் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவு தமிழ்வாழ்க்கையை பற்றிய சிறுகதைகள், கட்டுரைகள் என்று வங்காள மொழியில் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்.


1960களில் கல்பபாரதி என்ற பத்திரிக்கையில் இவர் சுக்தி சைகத் என்ற பெயரில் தூத்துக்குடி பகுதியில் வாழும் கத்தோலிக்க மீனவ சமூகத்தின் வாழ்வை நாவலாக எழுத துவங்கினார். ஆனால் அது அவர் விரும்பியபடி எழுத முடியாமல் போகவே பத்திற்கும் மேற்பட்ட முறை இந்த நாவலை மாற்றி மாற்றி எழுதி முடிவில் இப்போதுள்ள வடிவத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்


இந்த நாவல் நவகல்லோல் என்ற  பத்திரிக்கையில் தொடராக வெளியாகி வரவேற்பை பெற்றது. வங்காள இலக்கியத்தில் மிக அதிகம் பாராட்டு பெற்ற நாவல்களில் இதுவும் ஒன்று. வங்காளிகள் மனதில் தமிழ்வாழ்வின் நுட்பங்களை  சிறப்பாக உணர செய்தவர் போதிசத்வா என்று பாராட்டுகிறார் வங்காள இலக்கிய விமர்சகர் சுகுமார் சென்


ஒரு வெளியாளின் பார்வையில் தமிழ் வாழ்வு எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்ற ஆர்வத்திலே இந்த மொழியாக்கத்தை வாசிக்க துவங்கினேன். ஆனால் வாசிக்க வாசிக்க பிரமிப்பு ஊட்டும்படியாக அமைந்திருந்தது இந்த நாவல்.


இந்த நாவல்  பின்னிரவில் கடலின் உள்ளே சாளை மீன்களுக்கு வலை விரிப்பதில் துவங்குகிறது. மீன்பிடிப்பு தொழில் உள்ள போட்டி. அதன் சந்தையில் உள்ள ஏகபோக அதிகாரம். தரகர்கள் மற்றும் மீன் வியாபாரிகளின் உள் சச்சரவுகள் மற்றும் நம்பிக்கைகள். துறைமுக தொழில், கப்பல் ஏஜென்டுகள்   அவர்களுக்கு துணை போன ரௌடியிசம் என்று இன்றுள்ள தூத்துக்குடியின் முக்கிய பிரச்சனைகளின் ஆதார வேர்களை இந்த நாவலில் துல்லியமாக காணமுடிகிறது.


இன்னொரு பக்கம் இந்த நாவல் தேவதாசி பெண்களை பற்றி விரிவாக பேசுகிறது. குறிப்பாக கும்பகோணத்தின் கைகாட்டி மரத்தெருவில் வாழ்ந்த தேவதாசிகள் எப்படி தங்களை பொட்டுகட்டி கோவிலுக்கு அர்ப்பணம் செய்து கொண்டார்கள். அவர்களின் பரதகலை பற்றி அறிவு, இசையறிவு மற்றும் வசதியானவர்களின் வைப்பாட்டிகளாக அவர்கள் வாழ்ந்த நினைவுகள். அவர்களிடம் இயல்பாக இருந்த சேவை மனப்பாங்கு. ஆண்களின் ஆசைகளை பூர்த்தி செய்வதே தங்கள் வாழ்வின் நோக்கம் என்ற மனப்போக்கு யாவும் நாவலில் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன


ஒரு தேவதாசியின் வீட்டிற்கு செல்லும் ராமன் என்ற கதாபாத்திரம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவுடன் தேவதாசியின் மகள் தன் தாய்வீட்டில் இல்லை கோவிலுக்கு சென்றிருக்கிறார்கள் வரும்வரை நீங்கள் ஒய்வு எடுங்கள் என்று சொல்லி காபி கொட்டையை வறுத்து இடித்து சூடாக காபி தயாரித்து தருவதும் கையை மடித்து தலைக்கு வைத்து உறங்குகின்றவருக்கு அவர் உறக்கம் கெடாமல் தலையணை வைத்துவிடும் இயல்பும் என தேவதாசிகளை பற்றிய நுண்மையான சித்திரிப்புகள் நாவலில்  காணப்படுகின்றன


வாசித்து கொண்டிருந்த நாவலை பல இடங்களில் அப்படியே மூடிவிட்டு அதன் நினைவுகளில் முழ்கி போக வேண்டிய தருணங்கள் நிறைய ஏற்பட்டன. முக்கிய காரணம் நான் அறிந்த தென்மாவட்ட வாழ்வை அப்படியே இந்த நாவல் வங்காளத்தில் எப்படி பதிவு செய்திருக்கிறது என்ற வியப்பே.


குறிப்பாக  இந்த நாவலில் லண்டனில் இருந்து அந்தோனி என்ற கதாபாத்திரம்  தூத்துக்குடிக்கு போவதற்காக சென்னை ரயில் நிலையம் வருவதில் துவங்கி ஊர் வந்து சேரும்வரை விவரிக்கபடுகிறது. இதில் ரயில் விருதுநகருக்கு வந்து நிற்கிறது.


விருதுநகரின் வெக்கை மற்றும் குடிதண்ணீர் கிடைக்காத சிரமம் யாவும் நாவலில் குறிப்பிடப்படுகிறது. ரயிலின் முதல்வகுப்பு பெட்டியில் விருதுநகர் சேர்மன் ரத்னசாமி நாடார் ஏறுகிறார். அவரும் அந்தோனியும் பேசிக் கொள்கிறார்கள். ரத்னசாமி நாடார் தான் காந்தியவாதி என்றும் நகரசபை சேர்மன் எனவும் அறிமுகம்செய்து கொள்வதோடு விருதுநகர் ஒரு வணிகசந்தை என்றும் அங்கு பிற்படுத்தபட்ட நாடார் சமுதாய மக்கள் இப்போது முன்னேறி நகரை அதிகாரம் செய்யும் அளவு வளர்ந்திருக்கிறோம் என்றும் கூறுகிறார்.இதை வாசித்த போது உள்ளுர்வாசிகள் மட்டுமே அறிந்திருந்த இந்த தகவல்கள் எப்படி போதிசத்வா அறிந்திருக்கிறார் என்ற வியப்பு அடங்கவேயில்லை.


அது போலவே நாவலில் ரத்னசாமி நாடாரிடம்.அந்தோனி உங்கள் ஊருக்கு முன்னால் ஒரு ஹரிஜன மக்களின் சேரி காணப்படுகிறதே அது ஏன் இவ்வளவு அவலமான நிலையில் உள்ளது. மக்கள் ஏன் இவ்வளவு வறுமையில் வாழ்கிறார்கள்  அதை மாற்ற முடியாதா என்று கேட்கிறார். அதை ரத்னசாமி நாடார் பூசி மெழுகி சமாளிக்கிறார்நாவலில் அந்தோனி குறிப்பிடும் இடம் கொக்கலாங்சேரி. இது விருதுநகரின் முன்னால் வரக்கூடிய சிற்றூர். தலித்துகள் அதிகம் வாழக்கூடிய சிற்றூர். போதிசத்வா குறிப்பிட்டது போன்று அது மிகவும் பின்தங்கியே இருந்தது.


அவ்வளவு சிறிய ஊரை போதிசத்வா மிக உன்னிப்பாக கவனித்ததோடு அதை தன் நாவலின் முக்கிய சம்பவமாக பதிவு செய்திருக்கிறார் என்பது வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. எப்படி இது சாத்தியமானது என்று ஒரு நாள் முழுவதும் யோசித்து கொண்டிருந்தேன்.


காரணம் நான் வங்களாத்தின் பாதியை சுற்றிவந்திருக்கிறேன். ஆனால் இதுவரை என் படைப்பில் ஒரு வரி கூட வங்காள வாழ்வு பதிவாகவில்லை ஆனால் இவரோ தமிழகத்தில் சில வருடங்கள் வாழ்ந்திருந்து  தென்தமிழகத்தின் அடிநாதமான அத்தனை பிரச்சனைகளை பற்றியும் ஒரே நாவலில் எழுதி சிறப்பாக்கி விட்டாரே என்று தோன்றியது.


நாவலில் வரும் விவரணைகளும் நுட்பமான பதிவுகளும் மிக முக்கியமானவை. குறிப்பாக இந்த நாவல் தூத்துக்குடி பகுதியில் உள்ள சாதிகள் மற்றும் அதன் அதிகாரப்பதிவு பற்றி நுட்பமாக பதிவு செய்திருக்கிறது. மீனவ சமுதாயத்தில் நடைபெற்ற மதமாற்றமும் அதன்விளைவுகளும் நாவலோடு விரிவாக பேசப்படுகின்றன.


தூத்துக்குடியில் உள்ள தேவாலயம் ஒன்றை விவரிக்கும் போது போதுசத்வா அதன் காவல்காரனாக இருந்தவர் மறவர் சாதியை சேர்ந்தவர் என்று குறிப்பிடுவதை கவனிக்க வேண்டும். அது போலவே கிறிஸ்துவ நாடார்களுக்கும் இந்து நாடார்களுக்குமான இடைவெளி, யாழ்பாணத்திலிருந்து தமிழகம் வந்தவர்களின் பிரிட்டீஷ் விசுவாசம். முத்து குளிப்பதில் ஏற்படும் போட்டிகள். கருவாடு வியாபாரம் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக சாதிய பிடியில் போய் மாட்டியது என்ற விபரங்கள், விருதுநகர் நாடார்கள் எப்படி கப்பல் ஏஜென்டுகளாக மாறினார்கள், அத்தோடு தூத்துக்குடியை யார் அதிகாரம் செய்வது என்பதில் மீனவசமுதாயத்தினுள் ஏற்பட்ட கருத்துமோதல்கள் வன்முறைகள் யாவும் உண்மையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன


ஒரு பக்கம் தமிழ் மக்களின் சமூகவாழ்வினை பதிவு செய்தது போலவே மறுபக்கம் அவர்களின் இசை ரசனை , பரதநாட்டியம் , கோவில் சார்ந்த வழிபாடுகள், பற்றியும் நாவல் விவாதிக்கிறது. மார்கழி மாதத்தில் ஒரு பெண் திருப்பாவை பாடுகிறாள். பாடலின் வரிகள் கூட நாவலில் குறிப்பிடப்படுகின்றன. அது போலவே ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் பெருமாள் தரிசனம். காவரி ஆற்றின் சிறப்பு என்று நாவல் நாம் அறிந்த வாழ்வை இன்னொரு மாநில மக்களுக்கு அருமையாக விளக்கி காட்டுகிறது.


கடல்பாடுகளை பற்றி எழுதும்போது போதிசத்வா ஒரு மீனவனை போலவே மாறிவிடுகிறார். விதவிதமான மீன்வகைள், பறவைகள், கடல்நண்டு, மீன்களை சமைக்கும் விதம். மீன்வலைகள், நாட்டுபடகின் வகைகள், மீன்பிடிப்பவர்களின் நம்பிக்கைகள் ,வானவியல் அறிவு, பின்னிரவில் நட்சத்திரங்களை வைத்து காலம் கணக்கிடும் முறை, மீன்வருவதை அறியும் திறன், மீனை பக்குவப்படுத்தும் தொழில்முறை என்று கவிச்சிவாசனை நாவல் முழுவதும் அடிக்கிறது.ஹெமிங்வேயின் நாவல்களை வாசிக்கையில் இத்தகைய அனுபவத்தை அடைந்திருக்கிறேன். அது போன்றதொரு தேர்ந்த விவரணை நாவலில் காணப்படுகிறது..


மகளை விற்றாவது மதனம் சாப்பிடு என்று ஒரு சொலவடையை போதி சத்வா நாவலில் குறிப்பிடுகிறார், அந்த அளவு ருசிமிக்க மதனம் என்ற மீனை பற்றிய தகவல் துவங்கி மாதாகோவில் உற்சவத்தில் யார் எங்கே நின்று வணங்குவார்கள். எந்த பூஜையில் யாருக்கு முதலிடம் என்பது வரை நாவல் உண்மையாக பதிவு செய்திருக்கிறது


நாவல் முழுவதும் அடித்தட்டு மக்களே நடமாடுகின்றார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் நாம் அறிந்தவர்கள். அவர்களின் குணவிசேசங்களும், மூர்க்கங்களும் அன்பும் பகையும் நிஜமானவை.


நாவல் தூத்துக்குடியின் புராதனத்தை பற்றியும் பேசுகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவத்தின் ஆளுமையை விவரிக்கிறது. நெல்லை மாவட்டத்தின் பழமையான நினைவுகள் நாவலில் ஊடாடுகின்றன.


வங்காள மக்கள் இது போன்று முற்றிலும் இன்னொரு மாநிலத்தில் நடைபெறும் வாழ்வை பற்றிய நாவலை வாசித்து கொண்டாடுகிறார்கள் என்பது மிகப்பெரிய விஷயம்


தமிழில் இதுபோன்ற ஒரு நாவல் இதுவரை எழுதப்படவேயில்லை என்பதே இதன் தனிச்சிறப்பு. தமிழ் இலக்கியத்தின் மீது விருப்பம் உள்ள ஒவ்வொருவரும் வாங்கி வாசிக்க வேண்டிய முக்கிய நாவலிது.


** : 
சிப்பியின் வயிற்றில் முத்து.- போதிசத்வ மைத்ரேயா.(BODHISATVA MAITRAY ) நேஷன்ல் புக் டிரஸ்ட் வெளியிடு.1994  விலை. 81.00


 


 


 


 


 


 

0Shares
0