சிரிக்கும் பந்து

மதார் எழுதிய ஆறு கவிதைகள் மே மாத சொல்வனம் இணைய இதழில் வெளியாகியுள்ளன. இளங்கவிகளில் மதார் முக்கியமானவர். திருநெல்வேலியில் வசிக்கிறார். இவரது வெயில் பறந்தது நல்லதொரு கவிதைத் தொகுப்பு.

சமீபமாக இவரது கவிதைகள் இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மதார் எழுதும் கவிதைகளின் மையப்பொருள் சிறார்களின் உலகம். அவரது கவிதைகளில் விளையாட்டு தொடர்ந்து இடம்பெறுகிறது.

சொல்வனத்தில் வெளியாகியுள்ள கவிதைகளிலும் முதல் கவிதை பலூனைப் பற்றியதே. இந்த ஆறு கவிதைகளும் தனித்துவமானவை. புதிய அனுபவத்தையும் பரவசத்தையும் தருகின்றன.

ஒவ்வொரு கவிஞனும் தனக்கென ஒரு உலகைக் கொண்டிருக்கிறான். அது அவனாக உருவாக்கிக் கொண்டது. அதில் எது அகம் எது புறம் எனப் பிரிக்க முடியாது. அவனது கவிதை இயக்கம் உலகின் இயக்கத்தோடு சேர்ந்து இயங்காதது.

மதார் தனது கவிதை ஒன்றில் அழுகையை விழுங்கும் குழந்தையின் உலகை எழுதியிருக்கிறார். அம்மா சிரி என்கிறாள். தொண்டைக்குள் இனித்தது என்று அடுத்தவரி நீள்கிறது.

அழுகையின் ருசியை அறிய முற்படுகிறவன். சிரிப்பின் ருசியை அறிந்து கொள்கிறான். அழுகையும் சிரிப்பும் ஒன்றுக்கொன்று எதிரானவையில்லை போலும்.

அம்மா அழுகையை விழுங்கச் சொல்லும் போது அது ஒரு உணவுப் பொருளாகி விடுகிறது. அழுகையைச் சிரிப்பை குழந்தைகள் விளையாட்டு பொம்மைகளைப் போலவே பயன்படுத்துகிறார்கள். இரண்டும் நினைவுகள் அற்றது. எளிதில் மறைந்து போகக்கூடியது. ஆனால் பெரியவர்கள் உலகில் அழுகை கனமானது. சிரிப்பு எடையற்றது. தன்னை ஏமாற்றிக் கொள்வதுடன் உலகையும் ஏமாற்ற சிரிப்பு உதவுகிறது. அழுகை என்பது வேண்டுதல். மொழியால் பகிர முடியாத போது அழுகை வெளிப்படுகிறது.

 மதாரின் கவிதையில் வரும் குழந்தையை விடவும் அம்மாவே என்னை அதிகம் யோசிக்க வைக்கிறாள். அவள் ஏன் அழுகையை விழுங்கச் சொல்கிறாள். அழுகையை குடித்து வளர்ந்தவள் என்பதாலா.

••

மதாரின் *முழுதாகக் கரைந்த ரப்பர்* கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இக்கவிதை கடந்து செல்லும் காட்சிகள் மறைவதை ஒரு ரப்பர் அழிப்பதாகக் கற்பனை செய்கிறது. எழுத்துக்களை மட்டுமே அழிக்கும் ரப்பரை அறிந்த நாம் காட்சிகளை அழிக்கும் ரப்பரைக் காணுகிறோம். ஆனால் அந்த ரப்பரால் காட்சிகளை முழுமையாக அழிக்க முடியவில்லை. அழிப்பதும் மீள்வதும் ஒரு விளையாட்டாகி விடுகிறது.

சிறுவயதில் நாங்கள் பள்ளிக்கு வெளியே உள்ள  மரங்களை, கட்டிடங்களை இப்படி அழிரப்பர் மூலம் அழிக்கப் பார்த்திருக்கிறோம். கவிதை பள்ளிவயதின் நினைவுகளுக்குள் நம்மைக் கொண்டு செல்கிறது. கவிதை வெறும் நினைவேக்கமாக இல்லாமல் இன்றைய வாழ்வின் புதிராக மாறிவிடுகிறது. கவிதையின் முடிவில் லாரி முட்டி மோதிப் பார்த்து உதிர்ந்தன சில இலைகள் என்பதில் மெல்லிய கேலி வெளிப்படுகிறது. இந்தக் கேலியே கவிதையை உயர்வதானதாக்குகிறது. .

மதார் கவிதைகள் பூக்களைப் போல எடையற்றுக் காணப்படுகின்றன. சிறிய சந்தோஷங்களைத் தேடிக் காணவும் களிக்கவும் கூடிய கவிஞராக இருக்கிறார். அவர் தினசரி வாழ்வின் இயக்கத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொள்கிறார். ஆனால் அதில் முழுமையாகக் கரைந்துவிடுவதில்லை. அழிக்கமுடியாத மரம் போல மீண்டுவிடுகிறார்.

ஒரு பலூனுக்குள் இன்னொரு பலூன் இருப்பதைப் பற்றிய கவிதை அற்புதமானது. அது பலூனை உயிருள்ளதாக்குகிறது. இதயபலூன் என்பது ஒரு குறியீடாகிவிடுகிறது.

•••

பலூனுக்குள்

ஒரு பலூன்

இருப்பதைக் கண்டேன்

இதய வடிவ

குட்டி பலூன்

பெரிய பலூன்

குதித்தால்

குட்டி பலூனும்

குதிக்கிறது

பெரிய பலூன்

பறந்தால்

இதயப் பலூனும்

பறக்கிறது

பெரிய பலூனுக்குள்

துடிக்கும்

இதயப் பலூன்

யாருடைய காதல்

பெரிய பலூனுக்குள்

துடிக்கும்

குட்டி பலூன்

எத்தனை மாதம்

இதயப் பலூனை

பெரிய பலூன்

எப்படிப் பிரசவிக்கும்

பெரிய பலூனை

இதயப் பலூன்

எப்படி

அம்மா

என்றழைக்கும்

நான்

கவலையோடே

பெரிய பலூனுக்குள்

மிதக்கும்

இதயப் பலூனைப்

பார்க்கிறேன்

கவலையற்று

ஆனந்தமாய்க் குதிக்கிறது

அது

அதன்

உலகத்தில்தான்

ஏற்கெனவே

பிறந்துவிட்டதே

•••

*முழுதாகக் கரைந்த ரப்பர்*

ஒரு மரம் நிற்கிறது

அதைக் கடந்து

ஒரு பேருந்து செல்கிறது

அழிரப்பரைப் போல்

மரம் அழியவே இல்லை

டூவீலர்கள்

சென்று பார்க்கின்றன

மரம் நிற்கிறது

அதே இடத்தில்

சாலையின் இருமருங்கும்

வாகனங்கள்

மாறிமாறி

அழித்துப் பார்க்கின்றன

அழிவதாய் இல்லை மரம்

ஒரு லாரி

முட்டி மோதிப் பார்த்தது

உதிர்ந்தன

சில இலைகள்

••

வெயில் பறந்தது என்ற மதாரின் முதற்தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது. அந்தத் தொகுப்பில் வெயிலை பறவையாக்கியது பிடித்திருந்தது.

வெயில் பறந்தது தொகுப்பில் பந்து என்றொரு கவிதையிருக்கிறது. மிகச்சிறப்பான கவிதையது.

பந்து

எங்கிருந்தோ

ஒரு பந்து வந்து

கைகளில் விழுந்தது

விரிந்த மைதானத்தின்

நட்ட நடு வெளியில்

நிற்கும் எனக்கு

இப்பந்தின் உரிமையாளர்

குறித்து அறிவது

அரிதான காரியம்

யாருடைய பெயரும்

எந்தவொரு விதமான

மை கிறுக்கல்களும் கூட

இப்பந்தின் உடம்பில் இல்லை

தான் இன்னொருக்குச் சொந்தம்

என்று அறிவித்துக் கொள்ளாத

பந்து

பூமியைப் போலவே

இருந்தது

உள்ளங்கையில்

பொதிந்திருந்த பந்து

ஒருமுறை

ஒரேயொரு முறை

சிரித்தது.

இக்கவிதை சிறார்களின் விளையாட்டுக்காட்சியை விவரிக்கத் துவங்கி மெல்ல பூமியை சிறிய பந்தாக்கி நமது கைகளில் தந்துவிடுகிறது. பந்தின் சிரிப்பு தான் கவிதையின் உச்சம். பந்து ஒருமுறை மட்டுமே சிரிக்கிறது. இவ்வளவு அடி உதைக்குப் பிறகும் பந்து சிரிக்கவே செய்கிறது. தானே வந்து கையில் விழும் பந்து போன்றது தான் பூமியில் நமது பிறப்பும். பந்தை சிரிக்க வைப்பவன் கவிஞன் மட்டுமே.

இசைக்கருவி எதுவுமின்றி வெறுமனே விரலால் உதட்டினைத் தட்டித்தட்டி பிர்பிர் என இசை எழுப்பும் சிறுவன் அடையும் மகிழ்ச்சியைப் போன்றதே மதாரின் கவிதைகள். கனவிற்கும் கவலைக்கும் இடையில் ஊடாடுகிறது அவரது கவிதையுலகம். எளிமையும் நிதானமும் கொண்ட இக்கவிதைகள் வெயிலோடு சேர்ந்து நம்மையும் பறக்க வைக்கின்றன.

••

நன்றி

சொல்வனம் இணைய இதழ்

0Shares
0