சிரிக்கும் வகுப்பறையின் மாணவன்

ஜி.கோபி

உலக இலக்கியத்தில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய டேவிட் காப்பர் பீல்டு, ஆலிசின் அற்புத உலகம், டோட்டோ சானின் ஜன்னலில் ஒரு சிறுமி, எக்சூபெரி எழுதிய குட்டி இளவரசன் போன்ற புத்தகங்கள் குழந்தைகளின் வாழ்வியலை பதிவு செய்ததில் முக்கியமானவை. அது போன்று தமிழில் எழுதப்பட்ட தேனி சீருடையானின் நிறங்களின் உலகம் புத்தகம் பள்ளி மாணவனின் வறுமையான வாழ்க்கை மற்றும் உளவியலை பேசக் கூடியது . அது போன்ற வரிசையில் வைத்து கொண்டாட வேண்டிய புத்தகம்தான் எழுத்தாளர். எஸ்.ரா எழுதிய ” சிரிக்கும் வகுப்பறை ” என்கிற சிறார்களுக்கான நாவல் .

தமிழ் இலக்கியத்தில் இது முக்கியமான பங்களிப்பாக இதைக் கருதுகிறேன். ரஷ்ய, பிரெஞ்சு மற்றும் அமெரிக்க இலக்கியத்தில் குழந்தைகளின் உலகைப் பற்றிப் புத்தகங்கள் எழுதப் பட்டிருப்பதை வாசித்த போது தமிழில் இது போன்ற சிறுவர்களது உளவியல் சிக்கல்களை பற்றிப் பேசுகிற படைப்புகள் வராதா என்றும் யோசித்துள்ளேன். ஆனால் சிரிக்கும் வகுப்பறை அந்தக் கேள்விக்குப் பதில் தருகிறது.

சிறுவர்கள் குளோப்ஜாமூன் சாப்பிடுவதைப் போல மிக எளிதாகச் சாப்பிட்டு விடலாம் என்கிற தொனியில் எழுதப் பட்டிருக்கிறது. முதலில் இது சிறுவர்களுக்கு மட்டுமேயான புத்தகமா? என்றால் நிச்சயம் இல்லை குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், ஏன் தீவிர இலக்கிய வாசகர்கள், பேராசிரியர்கள் எனப் பல துறையினர் வாசிக்கும் சுவாரஸ்யமான புத்தகம்.

இன்றைய கல்வி முறையும் குடும்பமும் புறச் சூழலும் சமூகமும் பள்ளிமாணவர்களை அதிலும் குறிப்பாகச் சிறுவர்களுக்கு அதிகமான சுமையாகவும் பாடப் புத்தகத்தின் மீது வெறுப்பையும் உண்டாக்கியிருக்கின்றன. சுதந்திரமாகச் செயல்படவும் விருப்பமான பாடங்களை அல்லது துறைகளைத் தேர்வு செய்து படிப்பதற்குக் குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

மதிப்பெண் என்கிற அசுரன் அனைத்துப் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையே சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் மீது கல்வி என்கிற பெயரில் ஏவப்படும் தண்டனைகளும் வன்முறைகளும் ஏராளம்.

லோம்போ மற்றும் லாம்லாக் போன்றோர்கள் ஒவ்வொருமுறை மாணவர்களைத் தண்டிக்கும் போது கதையின் வழியே எழுத்தாளர் இந்த அவலத்தைக் கோடிட்டுக் காட்டிக் கொண்டே இருக்கிறார். இன்னொரு முக்கியமான விஷயம் சிந்திக்கிற கற்பனை செய்கிற குழந்தைகளை ஏன் குடும்பமும் பள்ளியும் சமூகமும் புரிந்து கொள்ள மறுக்கிறது? வித்தியாசமாகச் சிந்திப்பது பல்வேறு கோணங்களில் வாழ்க்கையைப் பார்க்கும் சிந்தனையும் வாழ்க்கைக்குத் தேவைதான். அதையே குழந்தைகள் செய்யும் போது ஏன் பெரியவர்கள் தடை செய்கிறார்கள் அவர்களுக்கு ஏன் இந்த வன்மம்? கேள்வி கேட்கிற குழந்தைகளை ஏன் யாருக்கும் பிடிப்பதில்லை. போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது இந்தப் புத்தகம்.

மேலும் மற்றொரு சிறப்பம்சம் குழந்தைகளுக்கான மாயப் புனைவான இந்தப் புத்தகத்தில் இந்திய வரலாற்றையும் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ரா. பௌத்தம் கல்விக்கு ஆற்றிய பங்கும் மானுட வளர்ச்சிக்கு வித்திட்டதையும் கதையின் வழியாக விவரிக்கிறார். நிர்பயா என்பது புத்தரின் குறியீடு. இந்தியாவில் ஏற்பட்ட சமூக மற்றும் அரசியல் மாற்றங்களாலும் மத ஆக்கிரமிப்புகளாலும் பௌத்தம் எப்படி இந்தியாவை விட்டு புறக்கணிக்கப்பட்டதையும் தீவிரமாகக் குழந்தைகளின் மொழியில் பதிவு செய்திருப்பது நுட்பமான செயல்.

வேட்டைக்காரனைப் போல லோம்போவின் தாத்தா எப்படி அக்ரா பள்ளிக்குள் நுழைந்தார் எப்படி வணிகத் தந்திரங்களால் நிர்பயா போன்ற பொறுப்பான ஆசிரியர்களை விரட்டியடித்து ஆக்கிரமிப்புச் செய்தார். லாபம் மற்றும் வணிக நோக்கத்திற்காக அக்ரா போன்ற பள்ளிக்கூடத்தை மாபெரும் சிறைக்கூடமாக மாற்றினார் என்பது வரலாற்று பின்னணி கொண்டதுதான். இப்படியான வணிக நோக்கத்திற்காக இந்தியாவைக் கொள்ளையடிக்க வந்தவர்கள்தான் பிரிட்டிஷ் அதிகாரிகள். இந்தியாவை அடிமையாக்கி மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்தார்கள். நமது பண்பாட்டு மற்றும் கல்வி அமைப்புகளை எப்படி மாற்றியமைத்தார்கள் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு எழுத்தாளராக வாசகர்களுக்கும், குழந்தைகளுக்கும் உண்மையான வரலாற்றையும் கதையையும் வாழ்க்கையையும் சொல்லித் தர வேண்டும். அந்தப் பணியைப் பொறுப்பான முறையில் புத்தகமாக வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.

சிறுவர்களும், குழந்தைகளும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமென்றாலும் இளைஞர்களும் தங்களுக்கான வாழ்வியலை பொருத்திப் பார்க்கக் கூடியதாகவுமுள்ளது இப்புத்தகம். இதிலுள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், அக்ரா பள்ளி, நிர்பயா போன்ற கதாபாத்திரங்களுக்குப் பதிலாக நாம் எந்தவொரு கோட்பாட்டையோ அல்லது சிந்தனை வாதத்தையோ பொருத்தி பார்த்தால் நாம் அடையும் புரிதல் சுதந்திரம் தான். கல்விதான் சமூக வளர்ச்சியின் அடிப்படை கோட்பாடு. அதுவே தண்டனைக் கூடமாகவும் சிறைச்சாலையாகவும் மாறிவருவது அபாயம். மேலும் கல்வி பயிலும் மாணவர்கள் அடிமைத்தனத்திலேயே உழல நேரிடும்.

குழந்தைகளின் கல்வி குறித்து மிகச் சிறப்பான புத்தகத்தை எழுதியது எழுத்தாளரின் இன்றியமையாத பணி. அந்த வகையில் சிறப்பான வாசிப்பனுவத்தைத் தந்த எழுத்தாளர் எஸ். ரா அவர்களுக்கு மனமார்ந்த அன்பும் நன்றியும்

0Shares
0