எங்க வீட்டுப் பெண் படத்தில் இடம்பெற்ற சிரிப்பு பாதி அழுகை பாதிச் சேர்ந்ததல்லவோ மனித ஜாதி பாடல் திடீரெனக் காலையில் நினைவிற்கு வந்தது. பழைய பாடல்களில் எந்தப் பாடல் எப்போது நினைவில் கிளர்ந்து எழும் என்று சொல்ல முடியாது.
அந்த நாள் முழுவதும் அந்தப் பாடல் மனதில் ஒடிக் கொண்டேயிருக்கும். கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல்.. : P.B.ஸ்ரீநிவாஸ் அற்புதமாகப் பாடியிருப்பார்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
![](https://www.sramakrishnan.com/wp-content/uploads/2021/02/siru.jpg)
இந்தப் பாடலில் நாகையா மெய்யுருகப் பாடுகிறார். சாது போன்ற அவரது தோற்றமும் இசைக்கும் பாவமும் அமர்ந்து கேட்கும் மக்களின் ஆழ்ந்த முகமும் மனதைக் கவ்வுகிறது. காலத்தின் குரல் தான் இந்தப் பாடலைப் பாடுகிறதோ எனும்படியாகப் பிபிஎஸ் பாடியிருக்கிறார். பசித்த வயிற்றில் உணவு தெய்வம் , கொட்டு மழையில் கூரை தெய்வம். கோடை வெயிலில் நிழலே தெய்வம் என்று எத்தனை எளிமையாக வாழ்வினைப் புரிய வைக்கிறது பாடல்.
எங்கிருந்தோ இப்படி ஒரு சாது ஊருக்கு வருவதும் அவர் மடத்தில் அமர்ந்து பாடுவதையும் என் சிறுவயதில் கண்டிருக்கிறேன். ஆனால் அந்த உலகம் இன்றில்லை. இன்று கிராமப்புறங்களில் கூட வீட்டுக்கு வெளியே உலகமில்லை.
ஊர் ஊராக நடந்து திரியும் மனிதர்களை எங்கேயும் காணமுடியவில்லை.
எனக்கு பத்து வயதிருக்கும் போது ஒரு வடநாட்டுக் குடும்பம் இப்படி என் ஊருக்கு வந்திருந்தது.
ஒரு வயதானவர் அவரது மகன், மகனின் மனைவி அவர்களின் மூன்று பிள்ளைகள் கொண்ட குடும்பமது. செருப்பு அணியாத கால்கள். புழுதிபடிந்த அழுக்கான உடை. சோர்ந்து போன முகங்கள். கிழவர் கையில் துந்தனா இசைத்தபடியே ஹிந்தியில் பாடிக் கொண்டு வந்தார். அந்தப் பெண் கையில் ஒரு நார்கூடையை ஏந்தியபடியே வீடுவீடாக வந்தாள். அவர்கள் வீதிகளில் பாடியபடி யாசகம் கேட்டார்கள். அவர்கள் பேசிய மொழி புரியாத போதும் ஊர்மக்கள் அவர்களுக்கு உணவளித்து உடைகளும் தானியங்களும் தந்து நாலைந்து நாட்கள் கிராமத்திலே தங்க வைத்தார்கள்.
அவர்கள் எதற்காக இப்படிக் கரிசலின் சிறிய கிராமத்திற்கு வந்தார்கள் என்று நினைவில்லை. ஆனால் அந்தப் பெண் கையில் தேளினை பச்சை குத்தியிருந்தது மனதில் பசுமையாக இருக்கிறது.
உலகமே வீடு என வாழ்ந்த மனிதர்கள் மறைந்து போய்விட்டார்கள்.
பாரதக்கதை பாடியபடியே ஊருக்கு வரும் தாசரிகளைக் காணமுடியவில்லை. பூம்பூம்மாட்டுக்காரன் இப்போதெல்லாம் கனவில் கூட வருவதில்லை.
ஊர் ஊராக நடந்து வந்து பல்வேறு விதமான கத்தியை வாயினுள் சொருகிக் காட்டி வித்தைக்காட்டுபவன் எங்கே மறைந்து போனான். இரவுபகலாக சைக்கிள் சுற்றுகிறவன், நரைமயிர்களை கருமையாக்கும் தைலம் விற்பவன். புனுகு விற்க வருபவன். தோளில் தையல் இயந்திரத்தை சுமந்தபடி கிராமத்திற்கு வரும் டெய்லர், கிணற்றில் தூர் எடுக்கும் கிழவர், காலில் சலங்கை கட்டியபடி வீடுவீடாக அக்னி சட்டி எடுத்து வந்து காணிக்கை கேட்கும் சாமியாடி என எல்லோரும் காலத்தின் திரைக்குப் பின்னே மறைந்துவிட்டார்கள்.
இந்த பாடல் அவர்களை ஏன் நினைவுபடுத்துகிறது.
தண்ணீரின் மீது எறிந்த கல்லைப் போன்றது தானா பாடலும்.
சிரிப்பையும் அழுகையினையும் பற்றி எத்தனையோ பாடல்கள் தமிழ் சினிமாவில் இடம்பெற்றிருக்கின்றன . வேறு மொழிகளில் இப்படி சிரிப்பு மற்றும் அழுகை பற்றி இவ்வளவு சினிமா பாடல்கள் இருக்கிறதா எனத்தெரியவில்லை.
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே என்ற சீர்காழியின் பாடலை எப்படி மறக்கமுடியும்.
பிறக்கும்போதும் அழுகின்றான் இறக்கும்போதும் அழுகின்றான் என்று ஜே. பி சந்திரபாபு ஞானகுருவைப் போல அல்லவா பாடுகிறார்.
வாழ்வின் அர்த்தத்தை இந்தப் பாடல்களைப் போல நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது.
எவ்வளவு முறை எத்தனை பேர் சொல்லிக் கேட்டாலும் உபதேச மொழிகள் மனதைத் தொடவே செய்கின்றன.
சிரிப்பு பாதி அழுகை பாதிச் சேர்ந்ததல்லவோ மனிதஜாதி என்ற வரியில் அல்லவோ என்ற சொல்லை போட்டது தான் கண்ணதாசனின் தனிச்சிறப்பு. மனிதஜாதி என்பதை பிபிஎஸ் எவ்வளவு அழகாகப் பாடுகிறார். சோகம் இழையோடும் இந்தப் பாடல் மனதைக் கரைந்து போகவே செய்கிறது
•••