சிரிப்பு விருந்து

பீட்டர் செல்லர்ஸின் The Party என்ற படத்தினை நீண்டநாட்களுக்குப் பிறகு மறுபடியும் நேற்றிரவு பார்த்தேன்,

பீட்டர் செல்லர்ஸ் எனக்கு விருப்பமான நகைச்சுவை நடிகர், அவரை வூடி ஆலனோடு ஒப்பிடலாம், ஆனால் வூடி ஆலனிடம் உள்ள அறிவார்ந்த நகைச்சுவை இவரிடம் கிடையாது, சாப்ளினோடு ஒப்பிட்டால் சாப்ளினின் உடல்மொழி இவருக்கு வராது, இது ஒரு தனிவகை, மலையாள சினிமாவில் இடம் பெறும் நகைச்சுவைக் காட்சிகளை ரசித்தவர்களுக்கு அந்த வகை காமெடியின் ஆதர்ச நாயகன் பீட்டர் செல்லர்ஸ் என்று புரியும், ஒரு சிறிய தடுமாற்றம் அடுத்தடுத்து எவ்வளவு குழப்பங்களை, சிக்கல்களை உருவாக்குகிறது என்பதே இந்த வகை காமெடியின் ஆதாரப்புள்ளி,

இன்று முழுமையான நகைக்சுவைப்படங்களைக் காண்பது அரிதாகவே இருக்கிறது, நகைச்சுவை என்ற பெயரில் பாலியல் கேலிகளும், அடுத்தவரின் பலவீனங்களை நகையாடுவதும், அடிஉதைவாங்கிச் சிரிக்க வைப்பதுமே தொடர்ந்து முன்னிறுத்தப்படும் சூழலில் சாப்ளின் மற்றும பஸ்டர் கீட்டனின் நகைச்சுவை படங்களை முக்கியமானதாக முன்னிறுத்தபட வேண்டியுள்ளது

ஹாலிவுட் சினிமாவில் ரொமான்டிக் காமெடி என்றொரு தனிப்பிரிவே இருக்கிறது, இதில் பெரும்பான்மை காதலை மையமாக கொண்டு நடைபெறும் குழப்பங்கள் சிக்கல்களை பேசுவது, அவற்றில் நகைச்சுவையை விட காம்மே தூக்கலாக இருக்கும்,

கிளாசிக்கல் காமெடி என்று இன்னொரு வகையிருக்கிறது, அதில் நகைச்சுவை சிரிப்பை உண்டாக்குவதன் வழியே கலாச்சாரத்தின் போலித்தனத்தை, மனிதர்களின் அபத்தமான நடவடிக்கைகளை, விசித்திரமான ஆசைகளை, பணமும் அதிகாரமும் மனிதனை எப்படி சிறுமைப்படுத்துகிறது என்பதை பகடியாகச் சொல்லக்கூடியது, காட்சிகளின் ஊடே எழும் சிரிப்பொலிக்குப் பின்னே மறுக்கமுடியாத உண்மைகள் இருப்பதே அதன் பலம்,

நகைச்சுவை நடிகன் ஒரு பாதி குழந்தையாகவும் ஒரு பாதி ஞானியாகவுமிருக்கிறான், எதை எப்போது எப்படி வெளிப்படுத்துவான் என்பதில் தான் அவனது தனித்துவமிருக்கிறது, முட்டாள்தனத்தை தனது அடையாளமாக்க் கொள்வதே பெரும்பான்மை நகைச்சுவை நடிகர்களின் பாணி, அந்த முட்டாள்தனத்தின் பின்னே பகிர்ந்து கொள்ளப்படாத அன்பிருக்கிறது, வாழ்வியல் தந்திரங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுக்கமுடியாதவனின் அவலம் ஒளிந்திருக்கிறது,

பீட்டர் செல்லர்ஸின் பார்ட்டி படம் முழுக்க நம்மை சிரிக்க வைத்து சந்தோஷத்தில் திளைக்க செய்கிறது, நீண்ட நாட்களுக்குப் பிறகு காட்சிக்குக் காட்சி கைதட்டி சிரித்து மகிழ்ந்தேன், என்னோடு படம் பார்த்துக் கொண்டிருந்த எனது மகனின் இடைவிடாத சிரிப்பும் சந்தோஷமும் 1968ல் வெளியான படம் இன்றைக்கும் புதிதாகவே இருக்கிறது என்பதையே உறுதிப்படுத்தியது

இந்த படத்தில் பீட்டர் செல்லர்ஸ் ஹீருண்டி வி.பக்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சாபு தஸ்தகீர் என்ற இந்திய நடிகன் ஹாலிவுட்டில் மிகுந்த புகழ்பெற்றிருந்ததைப் பற்றி நானே முதல் இந்திய நடிகன் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன், அந்த சாபுவை கிண்டலடிப்பது போன்ற கதாபாத்திரம் தானிது,

மைசூரில் யானைப்பாகனாக இருந்த சாபுவை ஹாலிவுட் படத்தில் நடிக்க அழைத்துப்போனார் கிரிபித், அதன்பிறகு அலெக்சாண்டர் கோர்டாவின் படத்தில் சாபு நடித்து புகழ்பெற்றார், உண்மையில் சாபு இதுபோல ஒரு சினிமா தயாரிப்பாளரின் விருந்திற்குப் போய் நடனமாடத்தெரியாமல் அவமானப்பட்டு அதிகமாக குடித்துச் சண்டையிட்ட சம்பவம் நிஜமாக நடந்தேறியிருக்கிறது,

பீட்டர் செல்லர்ஸ் இந்தியர்களை கிண்டல் செய்யவில்லை மாறாக ஒரு இந்திய நடிகனை அமெரிக்க சினிமாவுலகம் எப்படி நடத்துகிறது என்பதையே அதிகம் கிண்டல் செய்கிறார், ஒரு படத்தில் நடிப்பதற்கு இந்திய நடிகன் படும் பாடு இருக்கிறதே அது உயர்வான நகைச்சுவை

படத்தின் துவக்க காட்சியில் பக்சி ஒரு வரலாற்றுசினிமாவில் துணைநடிகராக நடிக்கிறார், எக்காளம் ஊதும் ஒரு சிறிய கதாபாத்திரம், மலையின் மீது நின்றபடியே எக்காளம் ஊத காத்துக் கொண்டிருக்கிறார், அவரை எதிரிகள் சுற்றிவளைத்து சுடுகிறார்கள், துப்பாக்கி குண்டு ஏந்தியபடியே எக்காளம் ஊதுகிறார், ஒரு கூட்டமே அவரை சுற்றிவளைத்து சுடுகிறார்கள், குண்ட்டிபட்டு தரையில் உருண்டு விழுந்தும் எக்காளம் ஊதுவதை நிறுத்தவேயில்லை, முடிவாக மிஷின் கன்னால் மாறிமாறி சுடுகிறார்கள், அப்படியும் அவர் முழுபலத்தையும் கொண்டு எக்காளம் ஊதுகிறார், இயக்குனர் போதும் நிறுத்துங்கள் என்று கட் சொல்லியும் இடைவிடாமல் ஊதிக் கொண்டேயிருக்கிறார்,

படப்பிடிப்புக் குழுவே கேலி செய்கிறது, ஆனால் பக்சி தன் நடிப்பை நிறுத்தவேயில்லை, உயிரைக் கொடுத்து நடிப்பது என்று சொல்கிறோமே அதை நிஜமாக்கிக் காட்டுகிறார் பக்சி,

அந்த துவக்ககாட்சி ஒன்று போதும் படம் எப்படிபட்டது என்பதற்கு, பக்சியின் அடுத்தடுத்த செயல்கள் சிரிப்பை அள்ளிக் கொண்டு செல்கின்றன

இப்படி குழப்பம் விளைக்கும் பக்சி இனிமேல் இந்த ஹாலிவுட் படத்திலும் நடிக்க கூடாது என்று ஆத்திரப்பட்ட இயக்குனர் தனது தயாரிப்பாளருக்கு போன் செய்து அனைத்து சினிமா கம்பெனிகளுக்கும் அவரை தடை செய்யும்படி அவர் பெயரை பிளாக் லிஸ்ட் செய்ய பரிந்துரைக்கிறார், ஆனால் அது தவறாக தயாரிப்பாளர் வீட்டில் நடைபெற உள்ள விருந்தினர் பட்டியலில் போய் சேர்ந்துவிடுகிறது

பிரபலமான ஹாலிவுட் தயாரிப்பாளர் வீட்டில் நடைபெறும் விருந்திற்கு போய் பீட்டர் செல்லர்ஸ் என்னவிதமான அழிம்புகளைச் செய்கிறார் என்பதே படம், இந்தப்படத்தில் பல காட்சிகள் அப்படியே தமிழ் மற்றும் ஹிந்தி. மலையாளப்படங்களில் உருவி எடுக்கப்பட்டருக்கின்றன,

விருந்தில் கோழிக்கறி சாப்பிடுவது, அழுக்கான கைகளைக் கழுவ முற்படுவது, சிறுநீர்கழிக்க இடம் தேடி அலைவது, தனது வெள்ளை காலணிகளை கறுப்பாக்கிவிட்டு அதைச் சுத்தப்படுத்த மேற்கொள்ளும் எத்தனிப்பு, ஒலிபரப்பி வழியாக பேசும் காட்சி, மன்னிப்பு கேட்க போய் அவதிப்படும் காட்சி என்று ஒன்றுக்கு மேல் ஒன்றாக நம்மை சிரிக்க வைத்துக் கொண்டேயிருக்கின்றன

மன அழுத்தம், வேலை நெருக்கடி என்று அவதியுறும் பலருக்கும் இந்த படம் ஒரு மருந்து என்றே சொல்வேன், இவ்வளவு கேலி, கிண்டல்கள் இருந்தாலும் அதன் அடிநாதமாக ஒரு இந்தியன் ஹாலிவுட் சினிமாவில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு அவமதிப்புகள், இனதுவேசங்கள், அவமானங்களைத் தாண்டி வரவேண்டியிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்

பீட்டர் செல்லர்ஸின் முகபாவம் நிமிசத்துக்கு நிமிசம் மாறிக் கொண்டேயிருக்கிறது, அவரது கண்கள் தான் அவரது பலமே, அதை எப்படியெல்லாம் மனிதன் பயன்படுத்துகிறார், படத்தில் பாதி காட்சிகளில் வசனமேயில்லை, உண்மையில் வசனம் தேவையற்ற காட்சிகள் அவை, பீட்டர் செல்லர்ஸ் காட்சிகளை படப்பிடிப்பு அரங்கில் நடித்துப் பார்த்து பார்த்து மேம்படுத்தி உருவாக்குபவர், இப்படமும் அந்த வகையில் தான் உருவாக்கபட்டிருக்கிறது

படத்தில் ஒரு மதுபரிசாரகன் வருகிறான், அவன் ஒவ்வொரு முறை பீட்ட்ர் செல்லர்ஸிடம் குடிப்பதற்கு விஸ்கி அல்லது வோட்கா வேண்டுமா என்று தட்டை முன்நீட்டுவதும் அவர் வேண்டாம் என்றதும் அவனே அந்த மதுவைக் குடித்துவிட்டு செய்யும் கலாட்டாக்களும் நகைச்சுவையின் உச்சபட்சம்

அன்றைய ஹாலிவுட் சினிமா உலகம் எப்படியிருந்தது என்பதற்கு இந்த படம் ஒரு சாட்சி, புதிதாக சினிமாவிற்கு வர விரும்பிய நடிகை ஒருத்தி பார்ட்டிற்கு வருகிறாள், பிரபலமான நடிகர் ஒருவர் தனது காதலியோடு விருந்திற்கு வருகிறார், சினிமாவை வெறும் வணிகமாக கருதும் நபர் விக் அணிந்து போலித்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார், இப்படி சகலரையும் பகடி செய்கிறது இப்படம்

ஹீருண்டி வி.பக்சி என்ற பெயரைத் தன்னால் உச்சரிக்கவே முடியவில்லை ஒரு பெண் கேலி செய்கிறாள், உடனே அவளது பிரெஞ்சு பெயர் அதைவிட கஷ்டமாக இருப்பதை பீட்டர் செல்லர்ஸ் நினைவுபடுத்துகிறார், பார்ட்டியில் வெஸ்டர்ன் படங்களில் நடிக்கும் பலசாலியான ஒரு நடிகரை பக்சி கண்டுகொண்டு ஆட்டோகிராப் வாங்குவதும் அவர் பக்சியின் கையைப் பிடித்து குலுக்கி கையை முறித்துவிடுவதும் கேலியின் உச்சம்,

முடிவில் பக்சி தான் சினிமாவில் தடைசெய்யப்பட வேண்டிய நடிகர் என்ற உண்மை தெரிய வருவதும் அதைச் சுற்றி நடக்கும் களேபரங்களும் வெடித்து சிரிக்க வைப்பவை,

சாபுவின் நிஜவாழ்வில் நடந்தது போலவே  ஹீருண்டி வி.பக்சியும் கடைசியில் மோனட் என்ற நடிகையை காதலிக்க துவங்குகிறார், அந்தக் காதலை அவளும் ஏற்றுக் கொள்கிறாள்,

இந்த படத்தை ஆகச்சிறந்த கிளாசிக்கல் காமெடி படம் என்று டைம் இதழ் வகைப்படுத்துகிறது ,பிரபல பிரெஞ்சு நகைச்சுவை நடிகரான Jacques Tatiயின் படங்களைப் போலவே இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது, தாதியின் கதாபாத்திரம் போலவே பீட்டர் செல்லர்ஸ் நடந்து கொள்கிறார்,  In India, we don’t think who we are. We know who we are.  என்பது போல பீட்டர் செல்லர்ஸ்  கேலி செய்யும் வசனங்கள் அத்தனையும் குத்தல் நிரம்பியவை.

படத்தின் பின்னணி இசை குறிப்பிடத்தக்க ஒன்று, பார்ட்டி துவங்கியது முதல் முடிவது வரை ஒரே உடையில் வருகிறார் பீட்டர் செல்லர்ஸ், ஒரே வீடு தான் மொத்த படமும், ஆனால் அதற்குள்ளாக எவ்வளவு மாறுபட்ட காட்சிக்கோணங்கள், நிகழ்ச்சிகள், லூசியன் பெல்லார்டின் ஒளிப்பதிவு சிறிய அரங்கிற்குள் அதிகபட்சமான சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது, படத்தை பிளாக்  எட்வர்ட்ஸ் இயக்கியிருக்கிறார்.

நினைத்து நினைத்து சிரிக்க வைப்பதே நகைச்சுவையின் உச்சநிலை, அதை தான் பீட்டர் செல்லர்ஸ் இப்படத்தில் செய்திருக்கிறார்

••

0Shares
0