சிரிப்பை மறந்த இருவர்

.

இத்தாலிய இயக்குநரான விட்டோரியா டி சிகா இயக்கிய two women 1960 ம் ஆண்டு வெளியான திரைப்படம். டி சிகாவின் மாஸ்டர் பீஸ் என்றே இதைச் சொல்ல வேண்டும். அவரது புகழ்பெற்ற பை சைக்கிள் தீவ்ஸ் படத்தினை விடவும் இப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. இதில் நடித்த சோபியா லாரன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதினைப் பெற்றிருக்கிறார். நியோ ரியலிசப் படங்களில் முக்கியமான இப்படம் உலகச் சினிமாவின் காவியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

நியோ ரியலிச திரைப்படங்கள் இத்தாலியின் வாழ்வியலை மிக இயல்பாக வெளிப்படுத்தின. வறுமை, போரின் அவலங்கள். அகதி நிலை. பொருளாதாரச் சீரழிவு. வீடற்ற வாழ்க்கை, வேலையின்மை என அதன் கருப்பொருட்கள் அன்றைய காலத்தின் நிஜமான விஷயங்களாக இருந்தன. ஆடம்பரமான அரங்க அமைப்புகள். மிகை ஒப்பனைகள். பரபரப்புக் காட்சிகள் எதுவுமின்றி வாழ்க்கைக்கு நெருக்கமாக இந்தத் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் விட்டோரியா டி சிகா நியோ ரியலிச சினிமாவின் புதிய அலையை உருவாக்கிக் காட்டினார்

இரண்டு பெண்கள் திரைப்படம் ஒரு தாயையும் மகளையும் பற்றியது. இரண்டாம் உலகப் போரின்போது கதை நடைபெறுகிறது. ரோமில் ஒரு சிறிய மளிகை கடையை நடத்தி வரும் இளம் விதவை சிசிரா தனது மகள் ரொசெட்டாவுடன் வாழ்ந்து வருகிறாள். உலகப்போரின் காரணமாக ரோம் நகரின் மீது குண்டு வீசப்படுகிறது. இதனால் மகளுடன் நகரை விட்டு பாதுகாப்பாக வெளியேற நினைக்கும் சிசிரா பக்கத்தில் வசிக்கும் ஜியோவானியிடம் தனது கடையை ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறாள்.

மத்திய இத்தாலியின் மலைப்பிரதேசமான சியோசீரியாவுக்குத் தப்பிச் செல்கிறார்கள். அவர்கள் செல்லும் ரயில் நடுவழியில் நின்றுவிடுகிறது. ஆகவே ரயிலில் இருந்து இறங்கி தலைச்சுமைகளுடன் தனது ஊரை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள்.

இரண்டு பெண்களும் தங்கள் உடைமைகளைத் தலைச்சுமையாகத் தூக்கிக் கொண்டு நடப்பதை மொத்த ரயிலும் வேடிக்கை பார்க்கிறது. மகள் தலையிலிருந்து பெட்டி நழுவி விடுமோ என்று அனைவரும் பதற்றம் அடைகிறார்கள்.

ரயிலில் மகளுக்கு உட்கார இடம் தேடுவதில் துவங்கி வெக்கையைச் சமாளிக்கமுடியாமல் சட்டை பொத்தானைத் திறந்துவிடும் நேரம் ஒரு ஆணின் கண்கள் தன் மார்பை நோக்குவதைக் கண்டு அவனை முறைத்தபடியே சட்டையைச் சரிசெய்து கொள்வது வரையான காட்சிகளில் சோபியா லாரன் பளிச்சிடச் துவங்குகிறார்

தனது தாயின் ஊருக்குச் செல்லும் சிசிரா அங்கே உறவினர்களுடன் ஒன்று சேருகிறாள். அப்போதும் மகளைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வது தான் அவளது ஒரே குறிக்கோள். அப்பாவியான அந்த மகளின் முகத்தில் வெளிப்படும் வெகுளித்தனமும் இயல்பான சிரிப்பும் அபாரம்.

மகள் மீதான தனது அன்பை சிசிரா வெகு அழகாக வெளிப்படுத்துகிறாள். ஒரு காட்சியில் மகளின் அருகில் படுத்துக் கொண்டு அவளது இடுப்பு சதையைக் கிள்ளிப் பார்த்துவிட்டு போதுமான சதை போடவில்லை என்று கவலைப்படுகிறாள். இன்னொரு காட்சியில் மகளுக்கு ஆசையாக ரொட்டியைப் பிய்த்துச் சாப்பிடத் தருகிறாள். வேறு ஒரு காட்சியில் மகளுக்குத் தலைவாறிவிடும் போது மகள் உன்னைப் போலவே எனக்குச் சிகை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்கிறாள். அதற்கு இன்னும் கொஞ்சம் நீ வளர வேண்டும் என மகளைக் கொஞ்சுகிறாள். தாயும் மகளும் கண்களாலே பேசிக் கொள்கிறார்கள்.

ரோமை விட்டுச் செல்வதற்கு முந்திய நாள் சிசிரா தனது கணவரின் நண்பரும் நிலக்கரி வணிகனுமான ஜியோவானியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். அது அவனது நீண்டநாள் ஆசை. அதை நிறைவேற்றிவிட்டே அவள் நகரை நீங்குகிறாள். அவள் இல்லாத நாட்களில் கடையைப் பாதுகாத்து வருவதற்குத் தரப்பட்ட சலுகை அது என்றே புரிகிறது.

சியோசீரியாவுக்கு வந்த பிறகு அங்கே ஜெர்மனியின் ராணுவ வீரர்களுக்கு மக்கள் பயந்து போயிருப்பதை உணருகிறாள். ஒரு நாள் அந்த ஊரில் இரண்டு ஆங்கில வீரர்கள் தஞ்சம் அடைகிறார்கள். அவர்களை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. ஆனால் சிசிரா தன் வீட்டிற்கு அழைத்துப் போய் ரொட்டியும் ஒயினும் தருகிறாள். அந்தக் காட்சியில் அவள் ஒயின் குடிக்கும் அழகு நம்மைக் கிறக்குகிறது.

அறிவுஜீவியாக அறியப்படும் மைக்கேல் அவளது அழகில் மயங்கி சிசிராவைக் காதலிப்பதாகச் சொல்கிறான். ஆனால் அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மகள் கூட மைக்கேலின் காதலைப் பற்றிச் சொல்ல கேலி செய்கிறாள். தன்னை விட வயதில் குறைந்த ஒருவனை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்கிறாள் சிசிரா

ஆனால் ரோசெட்டா மைக்கேலை தனது தந்தையின் மறுவடிவம் போலவே கருதுகிறாள். அவனும் அவளுடன் மிகுந்த பாசமாகப் பழகுகிறான். அவனுக்குப் பெரிய ரொட்டி ஒன்றை அவளுக்காக மறைத்து எடுத்து வந்து தருகிறான்.

ஒரு நாள் சிசிராவும் மைக்கேலும் உணவுப்பொருட்கள் வாங்கப் பக்கத்து ஊருக்குப் போகிறார்கள். அங்கே தன் பிள்ளைகளைப் போரில் இழந்த ஒரு பெண் தன் மார்பில் ஊறும் பாலை யார் வேண்டுமானாலும் குடித்துக் கொள்ளுங்கள் என்று மார்பினை திறந்துகாட்டி வேதனையில் புலம்புகிறாள். மறக்கமுடியாத காட்சியது. போரின் கொடூரத்தை இதைவிடச்சிறப்பாக யாரும் காட்டிவிட முடியாது.

அந்த ஊரின் பாதிரி வீட்டிற்குப் போகிறார்கள். அங்கே வரும் ஒரு ஜெர்மானிய அதிகாரி பாதிரியின் குடும்பத்தை மிரட்டுகிறான். அதைச் சகிக்க முடியாமல் சிசிரா அவனுடன் சண்டையிடுகிறாள். அந்த வீட்டிலிருந்து வெண்ணைய். ரொட்டி. மாவு போன்றவற்றைப் பை நிறைய எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள். அப்போது ராணுவம் துரத்தவே ஒடி ஒளிகிறார்கள். அந்த நெருக்கடியில் அவளை முத்தமிடுகிறான் மைக்கேல். அவளோ அவனை விலக்கி எழுகிறாள். நெருக்கடியிலும் அவனது காதல் தீ அணைவதேயில்லை.

பின்னொரு நாள் ஜெர்மானிய வீரர்களுக்கு மலைப்பாதையை வழிகாட்டுவதற்காக மைக்கேலை துப்பாக்கி முனையில் அழைத்துப் போகிறார்கள். அந்தக் காட்சியில் சிசிராவின் மகள் கலங்கிப்போகிறாள். மைக்கேலின் தந்தையும் தாயும் பரிதவிக்கிறார்கள். மிகவும் உணர்ச்சிப்பூர்வமான காட்சியது. மைக்கேல் உறுதியான குரலில் அவர்களிடமிருந்து விடைபெறுகிறான். அவனது இறப்பு ஒரு தகவலாக மட்டுமே பின்பு தெரிவிக்கப்படுகிறது.

நேச நாடுகள் ரோமைக் கைப்பற்றிய பிறகு, சிசிராவும் ரோசெட்டாவும் ரோம் திரும்ப முடிவு செய்கிறார்கள். கடந்து செல்லும் ராணுவ வண்டிகளைக் கண்டு கையசைக்கிறார்கள். உற்சாகமாக வாழ்த்து சொல்கிறார்கள். அவர்களின் பயண வழியில் ஒரு பாலத்தில் அமர்ந்தபடியே தாயும் மகளும் சாப்பிடும் காட்சி தனித்துவமானது.

படத்தின் மிகவும் அதிர்ச்சியான காட்சி தேவாலயத்தில் நடைபெறுவது. அப்போது குரூரமாக வீழ்த்தப்பட்ட சிசிரா வேதனையுடன் தன் மகளைக் காணுவதும், பிரேதம் போல கிடக்கும் மகளை கைதாங்கலாக அழைத்துக் கொண்டு போவதும் மகள் அவளை விட்டுவிலகி தன்னைத் தூய்மையாக்கிக் கொள்ள நீரோடையைத் தேடிப்போவதும் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள். சோபியா லாரனின் நிகரற்ற நடிப்பு. மகளின் நடையில், கண்பார்வையில் வெளிப்படும் வேதனை. என அந்தக் காட்சி நிகரற்றது.

கடைசியில் தாயும் மகளும் ஒரு வாகனத்தில் ஏறி பக்கத்துக் கிராமத்தில் போய்த் தங்குகிறார்கள். அங்கே காலையில் எழுந்து மகளைக் காணாமல் சிசிரா பதற்றத்துடன் தேடுகிறாள். தவிக்கிறாள். ஆனால் மகள் ஒரு ஆளுடன் நடனமாடப்போய்விட்டுப் பட்டுக் காலுறையைப் பரிசாக வாங்கிவந்துள்ளதைக் கண்டு ஆத்திரமாகி அவளைக் கண்டபடி அடிக்கிறாள். அதற்கு ரொசெட்டா பதிலளிக்கவில்லை.

தாயிற்கும் மகளுக்கும் இடையில் இடைவெளி உருவாகிவிட்டது. மகள் சுயமாக முடிவு எடுக்க ஆரம்பித்துவிட்டாள். நடந்த அதிர்ச்சி அவளை ஒரே நாளில் உருமாற்றிவிட்டது. தாயிடம் மகள் பாதுகாப்பாகத் தங்கள் வீட்டிற்குப் போய் வாழுவதால் நடந்த விஷயங்கள் மாறிவிடுமா. நம் வாழ்க்கைக்கு இனி என்ன அர்த்தம் என்று கேட்கிறாள். தாயிடம் இதற்குப் பதில் இல்லை.

இதுவரை சிறுமியாக இருந்தவள் இப்போது மாறிவிட்டாள். அந்தத் தாயிற்கு அந்தச் சிறுமியின் முதிர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் மகளைக் கட்டிக் கொண்டு அழுகிறாள்

ஆல்பர்டோ மொராவியோவின் நாவலை டிசிகா படமாக்கியிருக்கிறார். Cesare Zavattini இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார்

போருக்கு எதிரான படங்களில் யுத்தகளக் காட்சியின்றி. படுகொலைகள் இன்றி மனதைத் துவளச்செய்யும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் மூலமே போரின் பாதிப்பை அழுத்தமான புரிய வைத்திருப்பதே டிசிகாவின் சாதனை என்பேன்

படத்தின் துவக்கக் காட்சியில் தாயும் மகளும் சாலையில் நடந்து வரும் போது அவர்களைக் கடந்து செல்லும் சைக்கிள் காரன் மீது திடீரென்று வானிலிருந்து விமானத்தாக்குதல் நடைபெறுகிறது. அவன் அந்த இடத்திலே செத்துவிழுகிறான். தாயும் மகளும் சாலையில் விழுந்து உயிர் தப்புகிறார்கள். இந்தச் சைக்கிள்காரன் போல எந்தக் காரணமும் இன்றி அப்பாவிகள் கொல்லப்பட்டது தான் உலக யுத்தத்தின் குரூரம் என்பதைச் சிறப்பாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

போரின் குரூர நிழல் தன் மகள் மீது விழுந்துவிடக்கூடாது என்பதிலே ஆரம்பம் முதலே சிசிரா கவனமாக இருக்கிறாள். ஆனால் முடிவில் அவளும் மகளும் போரின் குரூரத்திற்குப் பலியாகிறார்கள். இடிந்த அந்தத் தேவாலயத்திலிருந்து வெளியேறிப் போன கடவுள் தான் அவர்களின் அவலத்திற்கான சாட்சி.

ஒரு படத்தில் எத்தனை ஊடு இழைகள். ஆரம்பக் காட்சியில் ரயிலில் வரும் ராணுவ வீரர்கள் கிறிஸ்துமஸிற்குள் ஊருக்குப் போய்விடுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் ஒரு உலகில் வாழுகிறார்கள். தஞ்சம் புகும் தாயும் மகளும் சொந்த ஊர் திரும்புகிறார்கள். அங்கே அவர்களுக்கு வசிப்பிடமில்லை. உறவினர்கள் அவளிடமிருக்கும் பணத்திற்காகவே அவளை ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த வாழ்க்கை ஒரு தனி இழை.

அந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முசோலினியின் அரசியல் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் முசோலினையை ஆதரிக்கிறார்கள். உணவுப்பொருட்கள் கிடைக்காமல் கள்ளச் சந்தை உருவாகிறது. வெண்ணெய் வாங்குவதற்காக இடையனோடு அவள் பேசும் பேசும் காட்சி ஒரு உதாரணம். இது போலவே பாதிரியின் வீட்டில் நடக்கும் சம்பவம். இவை இன்னொரு இழை.

ஜெர்மானிய ராணுவ வீரர்களுக்கு ரொட்டி கொண்டு வரும் ரொசெட்டா அதைத் தரையில் வைத்தவுடன் அவர்களுக்குக் கோபம் கொப்பளிக்கிறது. துப்பாக்கியை உயர்த்துகிறான் ஒருவன். அது ஒரு தனியுலகம். இப்படிச் சிறியதும் பெரியதுமான ஊடு இழைகளைப் பின்னி படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சோபியா லாரனின் திரை வாழ்க்கையில் மிகச்சிறந்த படம் இதுவே.

யுத்தம் பெண்களின் உடலிலும் மனதிலும் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதை அவர்களால் ஒரு போதும் மறக்கமுடியாது. பாதுகாப்பான இடம் தேடி அலையும் இரண்டு பெண்களும் எங்கேயும் பாதுகாப்பில்லை என்பதை முடிவில் உணர்ந்து கொள்கிறார்கள். அவள் யாசிப்பது சிறிய வெளியை. சிறிய வாழ்க்கையை. ஆனால் அதைக்கூட உலகம் வழங்கத் தயாராகவில்லை. இந்த அவலம் மாறாது இன்றும் தொடருவது தான் வேதனை.

திரைக்கும் நமக்குமான இடைவெளியை அழித்து ஒரு வாழ்க்கையின் சாட்சியமாக நம்மை உணரவைப்பதே டிசிகாவின் வெற்றி.

••

0Shares
0