இந்த ஆண்டில் நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை
கவிதை
நிழல், அம்மா
ஷங்கர் ராமசுப்ரமணியனின் புதிய கவிதைத் தொகுப்பு. தனது முந்தைய கவிதைகளிலிருந்து விலகி சொல்முறையிலும் வெளிப்பாட்டிலும் புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறார்.
••
நீரின் திறவுகோல்: பிறமொழிக் கவிதைகள்
க.மோகனரங்கன்
மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு கவிதைகளின் தொகுப்பு
இதனைப் பற்றி இணையதளத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்
தமிழினி பதிப்பகம்

••
அசகவதாளம்
பெரு விஷ்ணுகுமார்

பெரு. விஷ்ணுகுமாரின் இரண்டாவது கவிதை தொகுப்பு. இவரது கவிதைகளில் வெளிப்படும் புதிய படிமங்கள் வியப்பூட்டுகின்றன. காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது
••
பாடிகூடாரம்
கண்டராதித்தன்
1990-களிலிருந்து கவிதைகள் எழுதி வருபவர். மிக முக்கியக் கவிஞர் இந்த தொகுப்பில் மரபும் இன்றைய வாழ்வும் இணையும் தருணங்கள் மிக அழகாக வெளிப்பட்டுள்ளன. சால்ட் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது

நாவல்
கருங்குன்றம்
மமாங் தய் , கண்ணையன் தட்சணாமூர்த்தி (தமிழில்)
கிறிஸ்துவப் பிரச்சாரம் செய்வதற்காக திபெத் சென்ற பிரெஞ்சுப் பாதிரியின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல்
வட கிழக்கின் மறைக்கப்பட்ட வரலாற்றையும் இருண்ட வாழ்க்கையையும் சிறப்பாக பதிவு செய்துள்ளது
2017ஆம் ஆண்டின் சிறந்த ஆங்கில மொழி படைப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவலிது
சாகித்திய அகாதெமி வெளியீடு

கதாநாயகி
ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
கோதிக் திரைப்படம் போல விரிவு கொள்ளும் இந்நாவல் இருதளங்களில் இருகாலங்களில் இயங்குகிறது,. புத்தகம் தான் இதன் இணைப்பு புள்ளி. வசீகரமான புனைவு மொழியின் வழியே ஜெயமோகன் கதையைப் பின்னிச் செல்லும் நேர்த்தி மிகவும் பாராட்டிற்குரியது.

அல் கொஸாமா
கனகராஜ் பாலசுப்பிரமணியம்
ஜீரோ டிகிரி நாவல் போட்டியில் முதல்பரிசு பெற்ற நாவல். கனகராஜ் பாலசுப்பிரமணியம், தமிழ்-கன்னடம் ஆகிய இருமொழி எழுத்தாளர், அரபு பதுவா இன மக்களின் வாழ்க்கையை பேசும் சிறந்த நாவல்.

தவ்வை
அகிலா
டிஸ்கவரி புக் பேலஸ்

தெய்வம் பெண் என்ற இருநிலைகளுக்குள் ஊடாடுகிறது நாவல். திருநெல்வேலி வட்டார வழக்கில் எழுதப்பட்டுள்ளது, பெண்ணின் அகத்துயரை மிக உண்மையாகப் பதிவு செய்துள்ளார் அகிலா
ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி
சுரேஷ் குமார் இந்திரஜித்
காலச்சுவடு
சுரேஷ் குமார் இந்திரஜித் நாவலின் மையமாக இருப்பது கர்நாடக சங்கீதம். அதன் வழி நெருக்கம் கொள்ளும் இருவரது வாழ்க்கையினையும் பேசுகிறது நாவல்
இதில் வரும் மாய மனிதன் ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு கதாபாத்திரமாக உருமாறி உலவுகிறான். மாயமாகிவிடுகிறான் நானாசாகிப், அஸ்வத்தாமன், பட்டினத்தார், வள்ளலார் என காலத்தின் முன்பின்னாக ஊடாடும் புனைவு விசித்திரமானது.

கட்டுரைகள்
அருவம் உருவம்: நகுலன் 100
நகுலன் நூற்றாண்டுவிழாவைக் கொண்டாடும் விதமாக உருவாக்கபட்ட சிறந்த தொகுப்பு. நகுலனின் படைப்புகள் மற்றும் ஆளுமை குறித்த கட்டுரைகள். வெளியாகாத படைப்புகள். மொழிபெயர்ப்புகளை உள்ளடக்கியது. கவிஞர் ஷங்கர ராம சுப்ரமணியன் இதனைத் தொகுத்துள்ளார். நூல் வனம் பதிப்பகம் கெட்டி அட்டையில் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

நூல்கள் நூலகங்கள் நூலகர்கள்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
லண்டனில் வசிக்கும் சச்சிதானந்தன் சுகிர்தராஜா புத்தகங்க்ளைத் தேடித்தேடிப் படிப்பவர். சுவாரஸ்யமாக எழுதுபவர்
இவரது வாசிப்பின் ஆழம் வியப்பளிக்கிறது. சிறந்த நூல்கள்., நூலகங்கள் நூலகர்கள் பற்றிய இந்த கட்டுரைகள் மிகச்சிறப்பானவை. இவை ஆங்கிலத்தில் வெளியாகி இருந்தால் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டிருக்கும்.

சிறுகதைகள் / மொழிபெயர்ப்பு
விலாஸம்
பா. திருச்செந்தாழை சிறுகதைத் தொகுப்பு. அற்புதமான கதைகளை தொடர்ந்து எழுதிவருகிறார் திருச்செந்தாழை. இந்த தொகுப்பில் உள்ள கதைகள் கவித்துவமான மொழியில் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கின்றன
தமிழ் சிறுகதையின் அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்துச் செல்கிறார் திருச்செந்தாழை.
எதிர் வெளியீடு

கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?
பெருந்தேவி
காலச்சுவடு
பெருந்தேவியின் குறுங்கதைகள் புனைவின் விசித்திரங்களால் உருவானவை. இக்கதைகள்.சமகால வாழ்வையும் மனிதர்களையும் நுண்மையாக அணுகி புதிய கதைமொழியில் எழுதப்பட்டிருக்கின்றன

புத்த மணியோசை
கன்னடச் சிறுகதைகள் கே. நல்லதம்பி மொழியாக்கம்
எதிர் வெளியீடு
சிறந்த கன்னடச்சிறுகதைகளின் மொழியாக்கம். இதனைப் பற்றி இணையதளத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்
நல்லதம்பி இந்த ஆண்டு மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்

மரபு இலக்கியம்
ஓர் ஏர் உழவன்
ஆர்.பாலகிருஷ்ணன்
பாரதி புத்தகாலயம்
சங்க இலக்கியம் குறித்த சிறந்த கட்டுரைகள். இணையத்தில் தொடர் சொற்பொழிவாக ஆர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் நிகழ்த்தி பெரும்பாராட்டினைப் பெற்ற உரையின் மேம்படுத்தபட்ட கட்டுரை வடிவம்

••••