சிறிய கடிதம்.

லியோ டால்ஸ்டாய் தன் வாழ்நாளில் நிறையக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்.  அவர் எழுதிய கடிதங்கள் தனி நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

டால்ஸ்டாய் எழுதிய மிகச்சிறிய கடிதம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அது Fedorov என்ற மாணவனுக்கு எழுதப்பட்ட கடிதம். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலின் முக்கியக் கதாபாத்திரமான Natasha Rostovaவின் பெயரிலுள்ள Rostovaவை எப்படி உச்சரிக்க வேண்டும் எனக்கேட்டு அந்த மாணவன் கடிதம் எழுதியிருக்கிறான்.

அதில்“O”. என்ற எழுத்தை அழுத்தமாக உச்சரிக்க வேண்டும் என்ற தொனியில் “RostOva. L. T.” என டால்ஸ்டாய் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

இது தான் அவரது மிகச்சிறிய கடிதம்.

இந்தக் கடிதத்தைக் காணும் போது இரண்டு விஷயங்களைத் தெளிவாக உணர முடிகிறது. ஒன்று புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்த போதும் தன்னிடம் விளக்கம் கேட்கும் மாணவனின் கடிதத்திற்குக் கூட டால்ஸ்டாய் பொறுமையாகப் பதில் எழுதியிருக்கிறார்.

இரண்டாவது ஒரு நாவலை வாசிக்கும் மாணவன் அதிலுள்ள கதாபாத்திரத்தின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது வரை ஆழ்ந்து படித்திருக்கிறான்.

டால்ஸ்டாய் தனக்கு எழுதப்பட்ட பெரும்பான்மை கடிதங்களுக்குப் பதில் எழுதியிருக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் அவருக்கு வாசகர்கள் கடிதங்கள் எழுதியிருக்கிறார். மகாத்மா காந்தி கூட டால்ஸ்டாயிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் கடிதம் எழுதுவதற்கென்றே தனி நேரத்தை ஒதுக்கியிருந்தார் டால்ஸ்டாய். அவரது சில கடிதங்கள் நாற்பது ஐம்பது பக்கங்களாக விரிவாக எழுதப்பட்டுள்ளன. கடிதங்களில் அவரது கோபம். இயலாமை. எதிர்ப்புணர்வு என மனதின் கொந்தளிப்புகள் மிகத் துல்லியமாக வெளிப்பட்டுள்ளன.

1908ல் தாரக் நாத் தாஸிற்கு டால்ஸ்டாய் எழுதிய கடிதம் A Letter to a Hindu எனத் தனிநூலாக வெளிவந்துள்ளது. அது இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கான ஆதரவு கேட்டு தாரக் நாத் எழுதிய இரண்டு கடிதங்களுக்குப் பதிலாக எழுதப்பட்டதாகும்.

0Shares
0