சிறிய கண்டுபிடிப்பாளன்

புதிய சிறுகதை

அசோக் ராஜன் இன்றைக்கும் பத்திரிக்கையாளர்களை வரவழைத்திருந்தார்.

மாதம் ஒருமுறை ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்லி பத்திரிக்கையாளர்களின் கேலிக்கு ஆளாவது அவரது வழக்கம். ஆனால் அதனால் அவர் மனச்சோர்வடைவதில்லை. உற்சாகமாகப் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்ந்துவிடுவதுண்டு.

அன்றைய சந்திப்பிற்கு ஆறு பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். அசோக் ராஜன் தானே தயாரித்த தேநீரை அவர்களுக்கு வழங்கினார். தேநீரை அருந்தியபடியே ஒரு பத்திரிக்கையாளர் “ஏன் இப்படி முட்டாள்தனமான வேலையைத் தொடர்ந்து செய்கிறீர்கள்“ என்று கேட்டார்

அதற்கு ராஜன் புன்சிரிப்போடு“ ஏற்றுக் கொள்ளப்படும்வரை எல்லாக் கண்டுபிடிப்புகளும் முட்டாள்தனமானவை தான். மின்சாரத்தில் சோறு சமைக்க முடியும் என்று என் பாட்டியிடம் சொல்லியிருந்தால் போடா முட்டாள் உளறாதே என்று தான் சொல்லியிருப்பாள். ஆனால் இன்று எலக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதே“ என்றார்.

“இந்தப் பைத்தியக்காரத்தனம் உங்களுக்கு எப்போது துவங்கியது“ என்று ஆங்கிலத் தினசரியின் செய்தியாளர் மிருதுளா கேட்டாள்.

“பேனாவிற்கு மை ஊற்றத் தெரியாமல் சிந்திய நாளிலிருந்து. அதற்கு நானே ஒரு கருவியைக் கண்டுபிடித்தேன். அது பேனாவில் சரியான அளவிற்கு மை ஊற்றும். என் பள்ளி வாழ்க்கை முடியும் வரை அதை ரகசியமாக வைத்திருந்தேன் உலகிற்கு அந்தக் கண்டுபிடிப்பை அறிமுகம் செய்வதற்குள் மை ஊற்றும் பேனாக்களின் காலம் முடிந்துவிட்டது“. என்று சிரித்தபடியே சொன்னார் அசோக் ராஜன்

“இன்றைக்கு என்ன புதிய கண்டுபிடிப்பை உலகிற்கு அறிமுகம் செய்ய இருக்கிறீர்கள்“ என்று நக்கலாக கேட்டார் ஒரு பத்திரிக்கையாளர்

“கைதட்டும் கண்ணாடி“ என்று சொன்னார்

அதைப் பார்க்கப் பத்திரிக்கையாளர்கள் ஆர்வமாகக் காத்திருந்தார்கள். அவர்களைத் தனது அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த நிலைக்கண்ணாடி ஒன்றின் முன்பாக அழைத்துச் சென்றார்

“இந்தக் கண்ணாடி முன்னால் நின்றால் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்று மதிப்பீடு செய்யும். உங்களை அழகு படுத்திக் கொள்ள உதவிக்குறிப்புகள் வழங்கும். உங்கள் முகம் மிகவும் அழகாக இருந்தால் கைதட்டுகள் கிடைக்கும். இது கைதட்டும் கண்ணாடி.. எப்படி எனது கண்டுபிடிப்பு“.

“அபாரம்“ என்றபடி பாஸ்கரன் என்ற மூத்தபத்திரிக்கையாளர் கண்ணாடி முன்பு நின்றார். அதில் அவரது தோற்றத்தின் அருகே 18.2 சதவீதம் அழகானவர் என்ற கிராப் தோன்றியது. அவர் எவ்வளவு அழகு படுத்திக் கொண்டாலும் 28 விழுக்காட்டைத் தாண்ட முடியாது என்ற குறிப்பைக் கண்ணாடி சொன்னது. ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு அவர் “வயசாகிருச்சில்லே“ என்று சமாதானம் சொல்லியபடி இருக்கையில் அமர்ந்தார்

மிருதுளா அந்தக் கண்ணாடி முன் போய் நின்றாள். அவளுக்குக் கண்ணாடி 32.4 சதவீதம் அழகு என்று காட்டியது. அதை அவளால் ஏற்க முடியவில்லை. கண்ணாடி பொய் சொல்கிறது என்று குற்றம் சாட்டினாள். பத்திரிக்கையாளர்கள் ஒருவருக்கும் கைதட்டு கிடைக்கவில்லை.

ஆனால் ஆச்சரியமாக அசோக் ராஜன் கண்ணாடி முன்பு நின்ற போது கைதட்டுகள் கிடைத்தன.

“சார் இது போங்காட்டம். உங்க முகம் மட்டும் அழகா. கண்ணாடி கைதட்டுதே “என்று கேட்டாள் மிருதுளா.

“அதான் எனக்கும் புரியலை. “ என்றபடியே அவர் மறுபடியும் கண்ணாடியின் முன்பு நின்றார். அது பலத்த சப்தமாகக் கைதட்டியது. அவரால் நம்ப முடியவில்லை. தான் உண்மையில் அழகன் தானா.ஆனால் பத்திரிக்கையாளர்களை ஏமாற்றம் அடையச் செய்த அந்தக் கண்டுபிடிப்பு மறுநாள் கேலி செய்தியாக வெளியாகியிருந்தது.

அந்த ஏமாற்றத்தை மறந்து அடுத்த கண்டுபிடிப்பை நோக்கி நகர்ந்திருந்தார். இந்த உலகில் பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கு அறிவாளிகள். விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். ஆனால் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் எளிய கண்டுபிடிப்புகளுக்குத் தான் ஆட்கள் குறைவு. யாரும் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை என்பதை அசோக் ராஜன் உணர்ந்திருந்தார்

தனது கண்டுபிடிப்புகள் பெரிதும் பெண்களுக்கானவை. அதுவும் குடும்பத் தலைவிகளுக்கானது என அவர் நம்பினார். உயரத்திலிருக்கும் மின்விசிறியில் படிந்துள்ள தூசியைத் துடைப்பதற்காக நீளமான செயற்கை கைகளை அவர் உருவாக்கினார். பற்பசையைக் கடைசி வரை பயன்படுத்தும் பிதுக்கும் கருவியைக் கண்டுபிடித்தார். பால்பாக்கெட்டை துளிப்பால் சிந்தாமல் துளையிடும் கருவியை உருவாக்கினார். வீட்டில் யாரும் தனக்குக் குட்மார்னிங் சொல்வதில்லையே எனக் குடும்பத் தலைவி படும் ஏக்கத்தைப் போக்கும் வகையில் குட் மார்னிங் சொல்லும் அடுப்பை உருவாக்கினார். பொட்டலம் கட்டி வரும் நூல்களைச் சேகரித்துப் பெரிய நூற்கண்டாக்கும் கருவியைக் கூடக் கண்டுபிடித்தார். ஆனால் எல்லாமும் தோல்வியில் தான் முடிந்தன. அதனால் என்ன கண்டுபிடிப்புகள் நமது தேவையை அடையாளம் காட்டுகிறதே எனச் சந்தோஷப்பட்டுக் கொண்டார்

தொடர் தோல்விகளுக்குப் பிறகு அசோக் ராஜன் ஆறு மாதங்களுக்கும் மேலாகப் பத்திரிக்கையாளர்களைத் தனது வீட்டிற்கு அழைக்கவேயில்லை.

திடீரென ஒரு நாள் காலை அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். அவரது முட்டாள்தனமான கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளக் கொஞ்சம் வாசகர்கள் இருந்தார்கள் என்பதால் பத்திரிக்கையாளர்களும் அவரைத் தேடி வந்திருந்தார்கள்.

இந்த முறை அசோக் ராஜன் மிகுந்த உற்சாகத்துடனிருந்தார்

“என்ன சார் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க. “

“நான் டைம் மெஷினை உருவாக்கியிருக்கேன்“ என்றார்

“H G வெல்ஸ் காலத்தில இருந்து சொல்லிகிட்டே இருக்காங்க. எதையும் நம்பமுடியலையே“ என்றார் சுதர்சன்

“நான் கண்டுபிடிச்சிருக்கிறது. பெரிய இயந்திரம்  ஒரு சாதாரண சைக்கிள்“

“காலசைக்கிளா“ என்று கேட்டார் பாஸ்கரன்

“கரெக்ட். என்னோட சைக்கிளை வச்சி ஒரு நாள் பின்னாடி போயிட்டு வர முடியும்“

“நேற்றைக்கும் இன்றைக்கும் என்ன பெரிய மாற்றம் வந்துருச்சி. திரும்பப் போய்ப் பாக்குறதுக்கு“

“இங்க தான் தப்பு பண்ணுறீங்க. நேத்து வாங்கின மாத்திரையை எங்கே வச்சேனு ஞாபகமில்லே. சிலர் இப்படி வீட்டுசாவியை, பர்ஸை தொலைச்சிடுறாங்க. ஏன் தயிருக்கு உறை ஊற்ற மறந்துட்டவங்களுக்கு ஒரு நாள் முன்னாடி போய் அதைச் சரி செய்ய முடிஞ்சா நல்லா இருக்கும்லே. “

“அதுவும் சரிதான்“. என்றார்  ஸ்டீபன்

அசோக் ராஜன் தனது சைக்கிளை அவர்களிடம் காட்டினார். இளஞ்சிவப்பு வண்ண சிறார் சைக்கிள் போலிருந்தது. அதில் ஐபேட் போல ஒரு கருவியைப் பொருத்தியிருந்தார். சற்றும் பொருத்தமில்லாத நீலநிறத்தில் அமரும் இருக்கை உருவாக்கப்பட்டிருந்தது.

“இன்னைக்குக் காலையில இந்தக் காலசைக்கிள்ல பின்னாடி போய் டிரையல் பார்த்தேன். நம்ப முடியாத அனுபவமா இருந்தது. என்றபடியே அவர் தனது சைக்கிளை ஒட்டி வைத்திருந்த பிளாஸ்டிக் கூடையை அவர்கள் முன் நகர்த்தினார். அதில் சில பொருட்கள், துணிகள் கிடந்தன. ஒரு டிபன் பாக்ஸினை திறந்து காட்டி சொன்னார்

“பாஸ்கரன் சார் இது உங்க வீட்டில நேற்று செய்த பூரி. சென்னா மசாலா. நான் சொல்றது சரிதானானு டேஸ்ட் பண்ணி சொல்லுங்க“

அசோக் ராஜன் சொல்வது உண்மை. பாஸ்கரன் வீட்டில் நேற்றிரவு பூரி தான் செய்தார்கள். அவர் டிபன் பாக்ஸில் இருந்த பூரி சென்னா மசாலாவை சாப்பிட்டுவிட்டு“ எங்க வீட்டு பூரியே தான்“ என்றார்

இது போல மிருதுளா வீட்டில் அவள் நேற்று புதிதாக வாங்கிய ஹேண்ட்பேக் அவரது கூடையில் இருந்தது. இது போல நேற்று அணிந்திருந்த சட்டை, கோவிலில் வாங்கிய குங்கும பொட்டலம், நேற்று பார்த்த சினிமா டிக்கெட் என ஒவ்வொன்றாக அவர்களிடம் எடுத்துக் காட்டினார்

“சார். இது எல்லாம் உங்க கிட்ட எப்படி வந்துச்சி. எங்களாலே நம்பவே முடியலை“

“அது தான் டைம் டிராவல்“

“இது மாதிரி சினிமாவில தான் பாத்துருக்கோம். காலத்தின் பின்னாடி போறது நிஜம் தானா“

“நிஜமே தான். இனிமே இந்தச் சைக்கிளை வீட்டுக்கு ஒண்ணு வாங்கி வச்சிகிட வேண்டியது தான். “

“உங்க சைக்கிள்ல நாங்க போய்ப் பாக்கலாமா“

“அதுக்குத் தானே வரவச்சிருகேன். அந்த அதிர்ஷ்டசாலி யாருனு நீங்களே முடிவு பண்ணுங்க“

“உங்களை நம்பவே நம்பாதவர் சிதம்பரம் தான். அவரே போயிட்டு வரட்டும்“

“என்ன சிதம்பரம். டைம் டிராவல் பண்ண ரெடியா“

“அதெல்லாம் வேணாம் சார். நேத்தைக்கும் இன்னைக்கும் லைப்ல ஒரு வித்தியாசமில்லை. அதே கடன்காரன். வீட்ல அதே இம்சை. “

“எங்களுக்காக ஒரு ட்ரிப் போயிட்டு வாங்க சார்“ என அனைவரும் ஒன்றாகக் குரல் கொடுத்தார்கள்.

“ டைம் மெஷின்ல போயிட்டு வர எவ்வளவு நேரமாகும்“

“முப்பது நிமிஷம்“ என்றார் அசோக் ராஜன்

சைக்கிளை வீட்டின் முன்னால் கொண்டு போய் நிறுத்தினார் அசோக் ராஜன். சிதம்பரம் வேண்டாவெறுப்புடன் சைக்கிளில் ஏறி அமர்ந்தார். ராஜன் சைக்கிளின் இயந்திரத்தை இயக்கியபடி சொன்னார்

“சார் இதை ஆபரேட் பண்ணுறது ரொம்பச் சிம்பிள். ரெட் பட்டனை தொட்டா பின்னாடி போகும். இந்த யெல்லோ பட்டனை தொட்டா இன்னைக்கு திரும்ப வந்துடலாம்

சைக்கிள் நகரவேயில்லை. அசோக் ராஜன் ஏமாற்றத்துடன் தனது கருவியைச் சரி செய்தார். சைக்கிள் லேசாகச் சுழலத் துவங்கியது. கடற்கரையில் சைக்கிள் விடும் முதியவரைப் போல மிக மெதுவாகச் சைக்கிள் ஒட்டிக் கொண்டு போனார் சிதம்பரம். நூறடி போவதற்குள் சைக்கிள் காற்றில் மறைந்து போனது. அவர்களால் நம்ப முடியவில்லை. பலமாகக் கைதட்டி பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள்

சிதம்பரம் திரும்பி வருவதற்காகக் காத்திருந்த நேரத்தில் அசோக் ராஜன் காலம் பற்றிய தனது விசித்திர எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அரைமணி நேரத்தில் திரும்ப வேண்டிய சிதம்பரம் இரண்டு மணி நேரமாகியும் திரும்பவில்லை

“நேற்று டிராபிக் ரொம்ப இருந்துச்சில்லே அதான்“ என்றார் பாஸ்கரன்

ஆனால் சிதம்பரம் அன்றிரவாகியும் திரும்பிவரவில்லை. காலசைக்கிளில் மறைந்து போன பத்திரிக்கையாளர் என மறுநாள் செய்தித்தாளில் வெளியாகியிருந்தது. அசோக் ராஜன் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காலச் சைக்கிள் வேலை செய்யவில்லையா.

சிதம்பரத்திற்கு என்ன நடந்தது.

அசோக் ராஜனால் எதையும் கண்டறிய முடியவில்லை. உண்மையில் கால இயந்திரத்தைப் பயன்படுத்திச் சிதம்பரம் தனது கடன்காரர்களிடமிருந்து தப்பி மறைந்து வாழுகிறார் என்றொரு வதந்தியும் பரவியிருந்தது. எது உண்மை எனத் தெரியவில்லை

அசோக் ராஜன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கே படிப்பறில்லாதவர்கள் புத்தகம் படிப்பதற்கான மூக்குக்கண்ணாடி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் என்றும் அந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டால் புத்தகத்திலுள்ளதை வாசித்துச் சொல்கிறது என்றும் பேசிக் கொண்டார்கள்.

இது உண்மை என்பதற்குச் சாட்சியமாக சிறை நூலகத்தில் பலரும் மூக்குகண்ணாடி அணிந்து கொண்டு படிக்கும் புகைப்படம் நாளிதழில் வெளியாகியிருந்தது.

உங்களால் இதை நம்ப முடியவில்லை என்றால், படிக்கும் போதே அந்தக் காட்சியைப் பார்க்கவும் கூடிய புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடிக்க அசோக் ராஜனிடம் தான் சொல்ல வேண்டும்

•••

0Shares
0