சிறிய மனிதனும் பெரிய உலகமும்.

வில்லியம் சரோயன் (William Saroyan) எழுதிய தி ஹ்யூமன் காமெடி 1943ல் வெளியான சிறந்த நாவல். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் கலிபோர்னியாவின் இதாக்காவில் கதை நிகழுகிறது. பதினான்கு வயதான ஹோமரைப் பற்றியதே நாவல்.

அவன் பகுதி நேரமாகத் தந்தி அலுவலகத்தில் வேலை செய்கிறான். அவனது அம்மா, சகோதரி பெஸ் மற்றும் தம்பி யுலிஸஸ் என அவனது உலகம் மிகச்சிறியது.

தந்தி அலுவலகத்தில் இரவு நேரம் தந்தி வந்தால் அதைக் கொண்டு கொடுப்பதற்கு ஆள் தேவை என்பதால் அவனைத் தற்காலிக பணியில் சேர்த்துக் கொள்கிறார்கள். வயதும் தகுதியும் இல்லாத போதும் அவனது கம்பீரமான தோற்றம் பணிவு காரணமாக வேலை கிடைத்துவிடுகிறது.

பிறந்த நாளுக்கு வாழ்த்து வரும் தந்தியைப் பாடலாகப் பாடிக் கொடுக்க வேண்டும் என்பது விதி. இதற்காக ஹோமர் பாடிக் காட்டுகிறான். அதை அலுவலகமே ரசிக்கிறது

ஹோமரின் தந்தை இறந்தபிறகு அம்மா குடும்பச் சுமையை ஏற்று நடத்துகிறாள். ஹோமரின் தம்பி நான்கு வயதான யுலிஸஸ், அப்பாவியான சிறுவன். ஆனால் சாகசங்களில் விருப்பம் கொண்டவன். பயமற்று துணிச்சலாக எதையும் செய்ய முற்படுகிறவன். நாவலின் துவக்கத்தில் அவன் கடந்து செல்லும் ரயிலுக்குக் கைகாட்டுகிறான். அந்த ரயிலில் எவரும் பதிலுக்குக் கைகாட்டவில்லை. இதனால் யுலிஸஸ் ஏமாற்றமடைகிறான்.

ரயிலில் ஊருக்குத் திரும்பிச் செல்லும் கறுப்பின இளைஞன் எதிர்பாராதவிதமாகத் தன் கைகளை அசைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்துவதுடன் தான் வீடு திரும்பிக் கொண்டிருப்பதாகச் சப்தமாகச் சொல்கிறான். இந்தச் செய்கை யுலிஸஸை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.

யார் இந்த இளைஞன். இத்தனை நாள் எங்கேயிருந்தான். இப்போது எந்த ஊருக்குச் செல்கிறான் என்று யூலிசிஸ் யோசிக்கிறான். அதைப் பற்றி அம்மாவிடம் சொல்கிறான். அவள் வீடு திரும்புகிறவர்கள் சந்தோஷமானவர்கள் என்கிறாள். யுலிஸஸிற்கு அது புரியவில்லை.

ஹோமரின் அண்ணன் மார்கஸ் ராணுவத்தில் பணியாற்றுகிறான். அவனது படைப்பிரிவு யுத்தமுனையில் செயல்படுகிறது. யுத்தகளத்தில் நிறைய வீரர்கள் இறந்து போகிறார்கள். அந்தத் துயரச் செய்தியைத் தந்தியாகக் கொண்டு போய்க் கொடுக்கும் ஹோமர் அதைத் தனது சொந்த துயரமாக நினைக்கிறான். அதுவும் மொழிதெரியாத பெண்ணிடம் துயரச்செய்தியை ஹோமர் பகிர்ந்து கொள்ள முற்படுவது உணர்ச்சிப்பூர்வமானது.

வேலை செய்து சம்பாதித்த பணத்துடன் வீடு திரும்பும் ஹோமர் பெரிய மனிதன் போலவே நடந்து கொள்கிறான். அம்மாவும் அவனைப் பெரியவன் போலவே நடத்துகிறான். படிக்க வேண்டிய வயதில் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி கொண்டவர்கள் துயரமானவர்கள். அந்த வயதிற்குரிய விளையாட்டுத்தனம் மறைந்து போய் அவர்களின் இயல்பு சட்டென மாறிவிடுகிறது. வறுமை ஒருவனை வயது மீறி நடந்து கொள்ளவைக்கிறது.

ஹோமர் அப்படித் தான் நடந்து கொள்கிறான். வீட்டின் பொருளாதாரத் தேவையைப் பகிர்ந்து கொள்வதில் அவனுக்குச் சந்தோஷம்.

இதாக்காவின் தந்தி நிலையத்தின் ஆபரேட்டராக உள்ள க்ரோகன் நீண்டகாலமாகப் பணியாற்றுகிறவர். திறமைசாலி. மிகுந்த அனுபவம் கொண்டவர். ஆனால் பெருங்குடிகாரர். போதையில் மயங்கியிருந்தால் தன் தலையில் தண்ணீர் ஊற்றி எழுப்ப வேண்டும். அத்தோடு ஓடிப்போய் சூடான காபி வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தால் இயல்பு நிலைக்கு வந்துவிடுவேன் என்கிறார் க்ரோகன். தன்னை வெளியே எங்காவது சந்திக்க நேர்ந்தால் கண்டு கொள்ளக்கூடாது என்றும் உத்தரவு போடுகிறார். அவர் உத்தரவுப்படியே நடக்கிறான் ஹோமர்

அவரோடு ஹோமருக்கு உள்ள உறவு தந்தை மகன் போலிருக்கிறது. எவ்வளவு போதையிலும் அவர் தந்தியைத் தவறாக எழுதுவதில்லை.அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுகிறது. ஆனாலும் மருத்துவர்கள் சொன்ன எச்சரிக்கையை அவர் கண்டுகொள்வதில்லை.

ஹோமரின் திறமையைப் புரிந்து கொண்டு அவனைப் பாராட்டுகிறார். அன்பு காட்டுகிறார். தந்தி நிலையத்தின் மேலாளராக இருப்பவர் ஸ்பாங்க்லர். அவருக்கும் ஹோமரை மிகவும் பிடித்துப் போகிறது. அவர் ஒரு தடை தாண்டி ஓடும் விளையாட்டு வீரர். ஆகவே அவரைப் போலப் பந்தயத்தில் ஒடி ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறான் ஹோமர்.

வீட்டில் ஹோமர் உடற்பயிற்சிகள் செய்வதில் ஆர்வம் காட்டுகிறான். அத்துடன் பள்ளியில் நடக்கும் ஒட்டப்பந்தயப் போட்டியில் அவன் கலந்து கொள்கிறான். அவனைப் பிடிக்காத ஆசிரியர் அதைத் தடுக்க முயல்கிறார். ஆனால் ஹோமர் முறையான காலணிகள் கூட இல்லாமல் போட்டியில் கலந்து கொண்டு தடை தாண்டி ஓடுகிறான். முறையான பயிற்சி இல்லாத போதும் அவனால் முதலிடத்திற்குப் போட்டிப் போட்டு ஓட முடிகிறது.

தந்தி அலுவலகத்தில் இரவில் நடக்கும் நிகழ்வுகளைச் சரோயன் அழகாக விவரித்திருக்கிறார். ஹோமருக்கும் அவன் தம்பிக்குமான உறவும் நேர்த்தியாக வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக ஊர்சுற்றியலையும் யுலிஸஸ் வழியாகச் சிறார்களின் உலகம் நுட்பமாக எழுதப்பட்டிருக்கிறது

தன் வயதுக்கு மீறிய விஷயங்களைப் புரிந்து கொள்ளும் ஹோமர் தன்னைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளின் வழியே சுகதுக்கங்களைப் புரிந்து கொள்கிறான். அமைதியாக எதிர்கொள்கிறான். முடிவில் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் துயரத்தின் போது பெரிய மனித சுபாவம் அவனிடம் முழுமையாக வெளிப்படுகிறது. ஹோமர் இனி சிறுவனில்லை என்பதுடன் நாவல் நிறைவுபெறுகிறது.

வீட்டில், பணியிடத்தில் என ஹோமர் தன்னால் முடிந்தவரை அனைவருக்கும் உதவிகள் செய்கிறான். மற்றவர்களின் சந்தோஷத்திற்காகப் பாடுபடுகிறான். அவனது கனவுகள், ஆசைகளை விடவும் மற்றவர்களின் விருப்பமே அவனுக்குப் பெரிதாகத் தோன்றுகிறது.

ஹோமரின் தந்தையைப் பற்றி நினைவுகளின் வழியே குடும்பத்தில் தந்தை இல்லாத வெற்றிடத்தை ஹோமர் பூர்த்தி செய்ய முயல்வதை உணர முடிகிறது.

ஒரு நாள் சாலையில் மூன்று ராணுவ வீரர்களைச் சந்திக்கும் ஹோமரின் சகோதரி பெஸ் மற்றும் தோழி அவர்களுடன் ஒன்றாகத் தந்தி அலுவலகம் போகிறார்கள். தம்பிக்கு வீட்டிலிருந்து கொண்டு போன உணவை தருகிறாள் அக்கா. பிறகு அந்த வீர்ர்களுடன் ஒன்றாகச் சினிமாவிற்குப் போகிறார்கள். பிரியும் போது ராணுவ வீர்ர்களுக்கு முத்தம் தருகிறார்கள். வீட்டைப் பிரிந்துள்ள அவளது அண்ணனும் இப்படித் தான் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருப்பான் என நினைக்கிறாள் பெஸ்.

லியோனலும் யுலிஸஸும் பொது நூலகம் ஒன்றுக்குள் செல்லும் காட்சி மிக அழகானது. அவர்கள் முதன்முறையாக நூலகத்திற்குள் செல்கிறார்கள் அவர்களுக்குப் படிக்கத் தெரியாத போது புத்தகங்களில் உள்ள படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள். நூலகர் அவர்களை உள்ளே அனுமதிக்கிறார். வியப்போடு புத்தக அடுக்கினை பார்வையிடுகிறார்கள். அது புதிய அனுபவமாகயிருக்கிறது.

வில்லியம் சரோயன் ஒரு ஆர்மீனியர், புகலிடம் தேடி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர். 1940 ஆம் ஆண்டில் நாடகத்திற்கான புலிட்சர் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது, மேலும் 1943 ஆம் ஆண்டில் அவரது ஹ்யூமன் காமெடி நாவல் திரைப்படமாக்கப்பட்டபோது சிறந்த கதைக்கான அகாடமி விருதைப் பெற்றார். அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சரோயனின் வாழ்க்கையே இந்த நாவலில் வெளிப்படுகிறது.

ஏன் இந்த நாவலில் கிரேக்கப் பெயர்கள், இடங்கள் இடம்பெறுகின்றன என்று வாசிப்பில் சந்தேகம் வரவே செய்கிறது. சரோயன் ஒருவேளை இந்தக் கதையைக் கிரேக்கத் தொன்மத்தின் நவீன உருவாக்கம் போலப் புனைந்திருக்கிறாரோ என்று யோசிக்கச் செய்கிறது. ஆனால் அப்படியான எந்த அறிகுறியும் இல்லை. ஒருவேளை இந்தக் கிரேக்கப் பெயர்கள் நினைவில் பதிந்து போனவை என்பதால் தன் நாவல் நினைவின் ஊசலாட்டத்தைச் சொல்வதால் இப்படிப் பயன்படுத்தியிருப்பாரோ என்னவோ.

இரண்டாம் உலகப் போரில் ஒரு சிப்பாய் வாழ்க்கை என்னவாகிறது என்று ஒரு தளத்திலும் சிறுநகர வாழ்க்கை எப்படியிருக்கிறது. அந்த நகரைப் போர் எப்படிப் பாதிக்கிறது என்பதை இன்னொரு தளத்திலும் இருஇழைகளாகப் பின்னி கதையைக் கொண்டு செல்கிறார் சரோயன்

இறந்தவரின் நினைவுகள் நம் நெஞ்சில் இருக்கும்வரை, பகிர்ந்து கொள்ளவும் மக்கள் எஞ்சியிருக்கும் வரை யாரும் உண்மையில் இறக்க மாட்டார்கள் என்கிறார் சரோயன்.

சிறிய நகர வாழ்க்கையின் சந்தோஷங்களை, அபூர்வமான மனிதர்களைச் சரோயனின் திறம்படச் சித்தரித்திருக்கிறார். அவரும் இது போன்ற ஒரு சிறிய நகரத்தில் வளர்க்கப்பட்டவர். ஆகவே அதை எழுத்தில் துல்லியமாகக் கொண்டுவர முடிந்திருக்கிறது.

அன்பு தான் குடும்பத்தை ஒன்றிணைக்கிறது. அன்பை உருவாக்கவும் முன்னெடுக்கவுமே ஹோமர் முயல்கிறான். அவனுக்கு முடிவில் எஞ்சியிருப்பது குடும்பத்தின் சந்தோஷம் மட்டும் தான். துயரத்திலும் கூடக் குடும்பங்கள் தனக்கான இயல்பான பிணைப்பைக் கொண்டுள்ளன, இந்தப் பிணைப்பை இன்னும் வலிமையாக்க மற்ற குடும்ப உறுப்பினர்களின் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டு நேசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்கிறார் சரோயன்.

குடும்ப உறவில் கசப்புணர்வுகள் தலைதூக்கி விட்டால் குடும்பம் சிதைவதைத் தவிர்க்க முடியாது. ஆகவே அன்பின் செயல்களால் குடும்பம் வளர்ச்சி அடையவேண்டும். நேசமே மனித உறவுகளை வலிமையாக்குகிறது என்பதை ஹோமரின் வழியே அடையாளப்படுத்துகிறார்.

கதையை ஒரு காவிய பயணமாக வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். இது அன்றாட வாழ்வின் ஊடாகச் செல்லும் பயணமாகும். நாவலின் தலைப்பு தாந்தேயின் டிவைன் காமெடியை நினைவுபடுத்துகிறது. விளையாட்டுத்தனத்திலிருந்து விடுபட்டு முழுமனிதனாக ஒருவன் அடையும் வளர்ச்சிப் பயணமாகவும் இதைக் கருதலாம்.

••

0Shares
0