சிறுநுரை.


பால்ய வயதின் நினைவுகள் அவ்வப்போது உதிரியாகத் தோன்றுவதும் அதைச் சிறிய குறிப்பாக எழுதி வைத்துக் கொள்வதும் சில வருடங்களாகவே நடந்து வருகின்றது. இது போன்ற பால்யத்தின் சிறுகுறிப்புகளை மட்டும் தனித்து ஒரு நூலாக வெளியிடலாம் என்ற எண்ணம் உள்ளது. இவை கதைகள் போலவும் இருக்கின்றன. கதைகளை விட நெருக்கமாகவும் இருக்கின்றன. அதிலிருந்து சில மாதிரிகள்.



வட்டக்கண்ணாடி.


அப்போது நாங்கள் சூலக்கரை என்ற சிறிய கிராமத்திலிருந்தோம்.


பத்து வயதிருக்கும் போது கையில் வைத்து பார்ப்பது போன்ற வட்டகண்ணாடி ஒன்றை அப்பா வாங்கி வந்திருந்தார். அந்த கண்ணாடி வரும்வரை வீட்டில் இருந்த ஆள் உயர கண்ணாடியில் தான் முகம் பார்த்து கொள்வோம். அது சுவரில் அடிக்கபட்டு இருந்தது. அதன் எதிரில் போன்று நின்று எக்கினால் தான் முகம் தெரியும். இதற்காகவே சிறிய உட்காரும்பலகையைத்  தேடி எடுத்து வந்து போட்டு ஏறி நின்று முகம் பார்ப்பேன்.


 கிராமங்களில் பெரும்பான்மை வீடுகளில் முகம் காட்டும் கண்ணாடிகள் கிடையாது. ஒருவேளை இருந்தாலும் ரசம் போயிருக்கும். வட்டக்கண்ணாடி வாங்கி வந்த நாளில் இருந்து அதைக் கையில் வைத்தபடியே வீட்டில் இருந்த டம்ளர் தட்டு துவங்கி ஒவ்வொரு பொருளாக அதில் எப்படி தெரிகிறது என்று பார்த்துக் கொண்டிருப்பேன்.


வீட்டின் முன்பாக ஒரு பெரிய வேப்பமரமிருந்தது. அந்த வேம்பின் அருகில் போய் நின்றபடியே அதற்கு கண்ணாடி காட்டினேன். அநேகமாக அன்று தான் வேம்பு முதன்முறையாக தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கவேண்டும். நான் ரகசியமாக கண்ணாடியில் தெரியும் வேம்பை எட்டிப் பார்த்தேன். காய்கள் நிரம்பிய கிளைகளுடன் ஆடும் இலைகளை அசைத்தபடியே வேம்பு ஒய்யாரமாகயிருந்தது.


அதன்பிறகு கோழிகள் ஆட்டுகுட்டிகள் வேலியில் அலைந்து கொண்டிருக்கும் ஒணான் என்று என் கண்ணில் பட்ட பொருட்கள் அத்தனையின் முன்னாலும் கண்ணாடியை காட்டிக் கொண்டேயிருந்தேன். ஒணானை கண்ணாடி பார்க்க வைப்பது எளிதானதில்லை. அது தாவியோடிவிடும். இதற்காகவே வேலிபுதரினுள் கண்ணாடியை போட்டுவிட்டு ஒதுங்கி நின்று கொண்டேன். ஒணான் கிளையை விட்டு கிழே இறங்கிவந்து கண்ணாடியின் மீதே நின்றது. ஏய் ஒணான்..கண்ணாடி பார்த்துக்கோ.. ஒணான் கண்ணாடியை பாரு. என்று ரகசியமாக முணங்கினேன். ஆனால் அது திரும்பவேயில்லை. பிறகு தலையை சிலுப்பியபடியே தன்னை ரகசியமாக பார்த்துக் கொண்டது. இப்படி எறும்பு, பூனை,அணில், கோழிக்குஞ்சு, வான்கோழி, என என்னை சுற்றிய உலகம் யாவும் கண்ணாடியின் வழியாக தன்னைப் பார்த்து கொண்டது.


சிறுவயது முழுவதும் இரவில் மொட்டைமாடியில் தான் படுத்துறங்குவேன். அப்போதும் என் அருகில் அந்த கண்ணாடியிருக்கும். இருட்டில் அதில் நட்சத்திரங்கள் தெரிவது மங்கலான இருக்கும். கண் அருகே வைத்து ஆகாசத்தை பார்த்தபடியே இருப்பேன். வானை பார்த்தபடியே வைத்த என் கண்ணாடியில் நிலா ஊர்ந்துபோயிருக்கிறது.


 ஒரு நாள் கண்ணாடியை வயலின் நடுவேயிருந்த கிணற்றுக்கு கொண்டு சென்றேன். கண்ணாடியின் வழியாக கிணறு எப்படி தெரிகிறது என்று பார்ப்பதற்காக முயற்சித்தேன். அதன் முன்பாக நான் பார்த்தறியாத பொருள் போல இருந்தது. கையில் வைத்து முன்பின்னாக ஆட்டி பார்த்து கொண்டிருந்த போது கண்ணாடி நழுவி கிணற்றினுள் விழுந்தது. மறு நிமிசம் யோசிக்கவேயில்லை. கிணற்றின் உயரத்திலிருந்து தாவி குதித்து கண்ணாடியை மீட்க முயற்சித்தேன். கிணற்றின் அடியில் பாசியும் புதைசேறுக்கும் நடுவில் கண்ணாடி விழுந்து கிடந்தது.கைகளால் தடவி கண்ணாடி உடைந்துவிட்டதா என்று பார்த்தேன். கண்ணாடி உடையவில்லை. ஆனால் சேறு படிந்துபோயிருந்தது. தண்ணீருக்குள்ளாகவே உலுக்கினேன். கண்ணாடியில் எதுவும் தெரியவில்லை.


கிணற்றின் படிக்கட்டிற்கு நீந்திவந்து உட்கார்ந்து கொண்டு கண்ணாடியை சுத்தமாக கழுவினேன். கண்ணாடியில் தண்ணீர்வழிவது கிளர்ச்சிதருவதாகயிருந்தது.  திடீரென ஏனோ கண்ணாடியை தண்ணீருக்குள் விட வேண்டும் என்று தோன்றியது. முழ்கியிருந்த படிக்கட்டில் விட்டேன். இப்போது தண்ணீர் தன்னை கண்ணாடியில் பார்த்து கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. கைளால் அலை போல அடித்ததும் கண்ணாடியில் சலனம் ஏற்பட்டது. இதனால் தாங்க முடியாத கிளர்ச்சியும் சிரிப்பும் வந்தது. கண்ணாடியை கையில் எடுத்து கொண்டு கத்தினேன். கிணற்றின் சுவரில் பட்டு என் குரல் துள்ளி மறைந்தது.


பிறகு வயல் வரப்பின் வழியே தனியே நடந்து வந்த போது பின்தொடரும் பருந்தென  சூரியன் வந்து கொண்டிருந்தது. சூரியனை என் கண்ணாடியில் ஒளிர செய்து வெளிச்சத்தை நீண்டு சிதற விட்டேன். தலைக்கு மேலாக கண்ணாடியை பிடித்தபடியே தெருவில் ஒடினேன். யார் என் மீது மோதினார்கள் என்று தெரியாது. ஆனால் கையிலிருந்த கண்ணாடி எகிறி போய் உடைந்து சிதறியது. இருபது முப்பது சில்லுகளாக தெறித்து ஒவ்வொன்றிலும் வெளிச்சம் துள்ளிக் கொண்டிருந்தது. தெருவில் உட்கார்ந்தபடியே ஆங்காரத்துடன் கத்தினேன். உடைந்த கண்ணாடியை திரும்ப எடுத்து ஒட்ட வைக்க முயன்றேன். கண்ணாடி ஒன்று சேரவேயில்லை. விவரிக்கமுடியாத வலி உண்டானது. நிறைய நேரம் அழுதேன். ஆனால் இதை யாரிடமும் சொல்லவேயில்லை.


கண்ணாடியை  பற்றி எப்போது நினைக்கும் போது கிணற்று நீரில் அசையும் கண்ணாடி மனதில் தோன்றிமறைகிறது. இதை என்னால் ஏன் நினைவில் வைத்திருக்கிறேன் என்று இன்று வரை தெரியவேயில்லை.


***


களிமண்ணால் செய்த மீன்


களிமண்ணால் பொம்மைகள் செய்வது அந்த நாட்களில் பெரிய கலை. களிமண்ணில் பொம்மை செய்வதை அறிந்தவர்கள் என் வகுப்பில் இரண்டே பேர்கள் இருந்தார்கள். ஒன்று சங்கரேஸ்வரி. மற்றது கணேசன். ஆனால் இருவருமே வீம்பு பிடித்தவர்கள். யார் கேட்டாலும் செய்து தரமாட்டார்கள். இதற்காகவே கணேசனை நண்பனாக்கி கொண்டேன். இதற்கு விலை நாலு வில்ஸ் சிகரெட் அட்டைகள். அன்றைய செலவாணியில் பணத்தை விட மிக முக்கியமான இருந்தவை சிகரெட் அட்டைகள்.


வில்ஸ் சிகரெட் அட்டைகள் உசத்தியானவை. பாசிங்ஷோ, சிசர்ஸ் யானை போன்றவை உப்புக்கு சப்பாணிகள். சிகரெட் அட்டைகள் பொறுக்குவதற்காகவே சைக்கிள் எடுத்துக் கொண்டு அருகாமையில் உள்ள  சாலையோர பெட்டிகடைகளுக்கு செல்வோம். சில நேரம் மதுரைக்குபோகும் போது தெருவெங்கும் சிகரெட் அட்டை பொறுக்குவது தான் என்வேலை. இப்படி சிகரெட் அட்டை கொடுத்து கணேசனை நண்பனாக்கி கொண்டதால் அவன் களிமண்ணில் எப்படி பொம்மைகள் செய்வது என்பதை கற்று தருவதாக சொன்னான்.


இதற்காக நிறைய களிமண் தேவை என்பதால் நடந்தே அருகாமையில் உள்ள கண்மாய்க்கு சென்று களிமண் சேகரித்துவந்தோம். கணேசன் கை நிறைய மண்ணை எடுத்து ஒரு குதிரை சிலை போன்று ஒன்று செய்து காட்டினேன். அது போன்று நானும் செய்ய முயற்சித்தால் அது குதிரையின் ஜாடையில் வராமல்போனதோடு பன்றிக்கும் கழுதைக்கும் பிறந்த பிள்ளை போன்ற தோற்றத்தில் இருந்தது. ஆத்திரத்தில் நானே அதை சிதைத்தும் விட்டேன்.


ஆனால் களிமண்ணின் மிருதுவும் விரல்களை அது பற்றிக் கொள்ளும் ஈரமும் பிடித்துப்போகவே களிமண்ணில் வேலை செய்வது விருப்பமானதாகி போனது. எப்போதும் எங்கிருந்தாவது களிமண்ணை கொண்டுவருவது. அதை வைத்து கற்பனையாக எதையாவது செய்து பார்ப்பது என்றிருப்பேன். இதன் உடனடிப் பயன் சட்டையில் டவுசரில் களிமண் ஒட்டி காய்ந்து போவது. மற்றொன்று எப்போதும் கையில் களிமண் கறையிருப்பது. இதை அறிந்த அம்மா களிமண்ணை நான் தொடவே கூடாது என்று திட்டினார்.


இதனால் ரகசியமாக பள்ளிக்கூடத்தின் பின்னால் வைத்து களிமண்ணால் எதையாவது செய்வேன். செய்த உருவத்தை வீட்டிற்கு கொண்டு வர முடியாது என்பதால் அருகில் உள்ள கோவில் கிணற்றில் போட்டு கரைய செய்துவிடுவேன். அப்படியொரு நாள் களிமண்ணில் சிறிய மீன் செய்தேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அது நிஜமான மீன் போன்ற வடிவத்தில் இருந்தது. அதற்கு சிறிய கண்கள் செதில் எல்லாமும் குச்சியை கொண்டு கீறி உருவாக்கினேன். பிறகு கையில் எடுத்துக் கொண்டு போய் கிணற்றில் போட்டேன். ஒரு நிமிசம் அந்த மீன் நீந்திக் கொண்டு போனது போலிருந்தது. களிமண்ணால் செய்த மீன் நீந்துமா என்ற சந்தேகம் எல்லாம் எனக்கு வரவில்லை. மனது மிக சந்தோஷமாக உணர்ந்தது.


நான் செய்த களிமண் மீனும் இந்த கிணற்றில் இருக்கிறது என்று. இதை பற்றி கணேசனிடம் சொன்ன போது அவன் மிகவும் பரிகாசம் செய்ததோடு களிமண்ல செஞ்ச மீனு நீந்துச்சாம் என்று வகுப்பு முழுவதும் சொல்லிவிட்டான். எல்லோரும் ஏளனம் செய்தார்கள். ஆனால் இன்றைக்கும் எனக்கு அந்த களிமண் மீன் நீந்தியது என்று தான் தோன்றுகிறது. நிஜமா பொய்யா என்பது அவரவர் கற்பனையை பொறுத்தது தான் இல்லையா?


***


வீசி எறிந்த காசு.


ஒருநாள் மதியம் நடுத்தெரு எனப்படும் நெசவாளர்கள் வீதி வழியாக நடந்து வரும் போது எட்டணா ஒன்றைக் கண்டு எடுத்தேன். ஆச்சரியமாக இருந்தது. யார் அதை கிழே போட்டிருப்பார்கள். வெற்றிலைஎச்சில் பட்டது போன்று சிவப்பான கறையோடு இருந்தது. யாரும் பார்க்கிறார்களா என்று அவசரமாக பார்த்துவிட்டு அதை குனிந்து எடுத்து டவுசரில் துடைத்து கொண்டு வேகமாக ஐஸ்விற்கின்றவனிடம் ஒடினேன்.


 அவன் மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். ஐம்பது பைசாவிற்கு இரண்டு பால் ஐஸ்கள் கிடைக்கும். இரண்டு ஐஸ்களை வாங்கி ஒரே நேரத்தில் தின்று கொண்டிருந்தேன். என்னோடு படித்த செல்வராஜ் சேமியா ஐஸ்வாங்கி தின்றபடியே தனக்கொரு பால் ஐஸ் தரும்படியாக கேட்டான். நான் வேண்டும் என்றே அவனை பார்க்க வைத்து கொண்டு இரண்டையும் தின்றேன்.


 உடனே ஆத்திரத்தில் காசை வீட்டில் இருந்து திருடிட்டு வந்துட்டயா என்று கேட்டான். அநேகமாக அன்று பெரும்பான்மை சிறுவர்கள் காசை திருடுவதில் எத்தர்களாக தான் இருந்தார்கள். நான் இல்லை கிழே கிடந்தது என்றேன். எங்கே என்று கேட்டான். நெசவாளர்கள் வீதியில்  என்றதும் அய்யய்யோ அது கழிப்பு கழிச்ச காசு அதையா எடுத்தே என்று கேட்டான். அப்படி என்றால் என்னவென்று கேட்டேன். திருஷ்டிக்காக கழிப்பு கழித்து சுற்றி போடுவார்கள். அதை தொடவே கூடாது. மீறி எடுத்து செலவழித்துவிட்டால் ரத்தம் கக்கி உடனே செத்துவிடுவார்கள் என்று சொன்னான்.


அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே லேசாக மயக்கம் வருவது போலிருந்தது. வேண்டும் என்றே அவன் இப்பவே உன் வீட்ல போய் சொல்லிடுறேன் என்று வேகமாக ஒடினான். எனக்கு ஒரு பக்கம் பயம். மறுபக்கம் வீட்டில் வாங்க போகின்ற அடி இரண்டுமாக மனது தவிக்க துவங்கியது. சில நிமிசத்தில் அவனே வந்து உன்னை இழுத்துக் கொண்டு வரும்படியாக  உன் வீட்டில் சொன்னார்கள். உடனே வா என்று என் கையை பிடித்து இழுத்தான். ஒரு பக்கம் வீட்டுக்கு போக வேண்டும் என்று தோன்றுகிறது. மறுபக்கம் வீட்டிற்கு போக கூடாதுஎன்று  தோன்றுகிறது. பயத்தில் வீட்டிற்கு போய்சேர்ந்தேன். ஆளுக்கு ஆள் திட்டு. வசவு.


அதன்பிறகு இதற்கு பரிகாரமாக என்ன சடங்குகள் செய்வது என்பதை பற்றிய ஆலோசனைகள் வந்தன. அதன்படியே அன்றிரவு என்னை உட்கார வைத்து மிளகாய் சுற்றி போட்டு கோவிலில் சூடம் கொளுத்தி தலையை சுற்றி ஐம்பது பைசாவை விட்டெறிந்தார்கள்.


அன்று இரவு முழுவதும் எனக்கு ஒரு யோசனை வந்து கொண்டேயிருந்தது. என்னிடம் ஐம்பது பைசாவை வாங்கிய ஐஸ்காரன் என்னஆவான். அவனிடம் இந்த விஷயத்தை சொல்வதா வேண்டாமா. ஒரு வேளை அவனும் ரத்தம் கக்கி சாவானா என்று தோன்றிக் கொண்டேயிருந்தது.


மறுநாள் செல்வராஜ் ஐஸ்காரனிடமும் உண்மையை சொல்லிவிட்டான். அவன் பயத்தில் என்வீடு தேடி வந்து முறையிட மறுநாளும் இந்த பிரச்சனையை கிளப்பியது. அதன்பிறகு ஐஸ்காரன் எங்கள் ஊர் பக்கம் வரவேயில்லை. நாங்கள் திருஷ்டிக்கு வீசி எறிந்த காசை நிச்சயம் இன்னொரு சிறுவன் கண்டு எடுத்து செலவழித்திருப்பான் என்று மட்டும் இன்றும் எனக்குத் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. அந்த சிறுவன் யாராக இருப்பான் என்று தான் தெரியவில்லை.


**



 

0Shares
0