சிறுமியின் கனவு.

தி ரிக்கார்டர் எக்ஸாம் என்ற கொரியப்படத்தைப் பார்த்தேன். 27 நிமிஷங்கள் ஓடும் அழகான திரைப்படம்.

1988 ஆம் ஆண்டில் சியோலில் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயதான யூன்-ஹீ என்ற  மாணவியின் ஆசையைப் பேசுகிறது.

பள்ளியில் படிக்கும்  யூன்-ஹீ ஒரு நாள் ரிக்கார்டர் என்ற குழலிசைக் கருவியை வீட்டில் வைத்துவிட்டுப் போய்விடுகிறாள். தன் அம்மாவிற்குப் போன் செய்து அதைப் பள்ளியில் கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்வதில் படம் துவங்குகிறது.

பள்ளியில் குழலிசைத் தேர்வு நடைபெறவுள்ளது. அதில் சிறப்பாக வாசிக்கும் மாணவிகளுக்குப் பரிசு தரப்போகிறார்கள். அந்த நிகழ்விற்கு மாணவிகள் தனது பெற்றோர்களை அழைத்துக் கொண்டு வரலாம் என ஆசிரியர் சொல்கிறார்

யூன்-ஹீயிடம் நல்ல குழலிசைக் கருவியில்லை. அதைவிடவும் ரிக்கார்ட்ரை வாசித்துப் பயிற்சி எடுக்க வீட்டில் இடமேயில்லை.

யூன்-ஹீயின் தந்தை மாவுமில் ஒன்றில் வேலை செய்கிறார். நடுத்தரக்குடும்பம். அவளது அண்ணன் தன் படிப்பிற்கு இடையூறாக இருக்கிறாள் என்று யூன்-ஹீயை திட்டுகிறான். அவள் கோவித்துக் கொள்ளவே அடித்துவிடுகிறான். அலமாரிக்குள் ஏறி அமர்ந்து கொள்ளும் யூன்-ஹீ சப்தமாக அழுகிறாள். அவளைத் தந்தை கூடச் சமாதானப்படுத்துவதில்லை.

யூன்-ஹீயின் அக்கா யாரோ ஒரு பையனை ரகசியமாக வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருகிறாள். அதனால் அப்பாவிடம் திட்டுவாங்குகிறாள்.

படத்தின் மிக அழகான காட்சியில் ஒன்று அதிகாலையில் யூன்-ஹீ தந்தையோடு ஜாகிங் ஓடுவது. அதுவும் அவளது ஷுலேஸை தந்தை கட்டிவிடும் போது அவரது தலையைத் தயங்கித் தயங்கி யூன்-ஹீ தொட்டுப் பார்க்கிறாள்.

அவளுக்கு ஒரேயொரு தோழி. அவளது வீட்டிற்குச் செல்லும் யூன்-ஹீ அங்கே தோழியின் அம்மா கதவைத் தட்டி அவர்கள் அறைக்குள் வந்து பழங்களைத் தருவதை ஆச்சரியமாகப் பார்க்கிறாள். இப்படிக் கதவைத் தட்டி தான் உன் அறைக்குள் வருவார்களா என்று வியப்போடு கேட்கிறாள். இதற்கு நேர் எதிராகச் சூழலில் யூன்-ஹீ வசிக்கிறாள். வீட்டில் எல்லோரும் உறங்கிய பிறகு அவள் சமையல் அறையில் போய் ரிக்கார்டர் வாசித்துப் பார்க்கிறாள். உறக்கம் கெட்ட தந்தை அதைப்பிடுங்கிப் போட்டுத் திட்டுகிறார்.

தனக்கு ஒரு புதுக் குழலிசைக் கருவி வேண்டும் என்று கேட்கிறாள். அதையும் தந்தை வாங்கித் தருவதில்லை. தோழி ஒருத்தி தான் அவளைப் புரிந்து கொண்டிருக்கிறாள்.. எப்படியாவது இசைப்பயிற்சி எடுத்துத் தேர்வில் சிறப்பான இடம் பெற வேண்டும் என உற்சாகப்படுத்துகிறாள்

யூன்-ஹீ வீட்டின் வெளியே சென்று யாருமற்ற படிக்கட்டில் அமர்ந்து தனியே இசைப்பயிற்சி எடுக்கிறாள். மிக அழகான காட்சியது.

இன்னொரு காட்சியில் அம்மாவிடம் தான் அழகாக இருக்கிறேனே என யூன்-ஹீ கேட்கிறாள். அம்மா அழகாக இருக்கிறாய் என்கிறாள். என் மூக்கு அழகாக இருக்கிறதா. காது அழகாக இருக்கிறதா என ஒவ்வொன்றாகக் கேட்கிறாள். உடனே அவளை அருகில் அழைத்துக் கட்டிக் கொள்கிறாள் அவளது தாய்..

உழைத்துக் களைத்துப் போயுள்ள அந்தத் தாயிற்கு மகளின் ஏக்கத்தை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

வீட்டில் யாரும் அவள் இசைக்கற்க உதவி செய்யவில்லை. தேர்வுக்கான நாள் வருகிறது. யூன்-ஹீ என்ன செய்தாள் என்பதுடன் படம் நிறைவு பெறுகிறது

நடுத்தரக்குடும்பத்தில் வாழும் சிறுமியின் உலகை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக யூன்-ஹீயின் சகோதரன் பென்சில் சீவி வேண்டும் என்றால் கூட அவளைத் தான் அழைக்கிறான். உத்தரவு போடுகிறான். கோபத்தில் அடிக்கிறான். அது போலவே தான் அவள் அக்காவும் நடந்து கொள்கிறாள். அம்மாவும் கூட அவளைத் தான் திட்டுகிறாள். அந்தச் சிறுமிக்கு தனக்கென யாருமில்லை என்ற ஏக்கம் தீராத வேதனையாக மாறிவிடுகிறது.

ஒரு காட்சியில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொள்ளும்படி அவளது அப்பா பணம் தருகிறார். அப்போது அவள் அப்பாவிற்கு நன்றி தெரிவிக்கிறாள். யூன்-ஹீ சந்தோஷமாக உணரும் காட்சி அது ஒன்று மட்டுமே.

நடுத்தர வர்க்க குடும்பங்களில் இப்படித் தானே வாழ்க்கையிருக்கிறது. பிள்ளைகளின் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற வைப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பொருளாதாரமும் ஒத்துழைப்பதில்லை. சின்னஞ்சிறிய விஷயங்களுக்குக் கூடப் போராட வேண்டிய நிலையே இருக்கிறது. யார் மீதும் இதற்குத் குற்றம் சொல்லிவிட முடியாது. அவர்கள் வாழ்க்கைச் சூழல் அவ்வளவு தான் அனுமதிக்கிறது.

அவள் வயதிலுள்ள இன்னொரு சிறுமி தனி அறை. புத்தம் புதிய குழலிசைக் கருவி. விதவிதமான பழங்களைச் சாப்பிட்டு வளருவது அவளது வசதியான குடும்பச் சூழ்நிலையால் தான்.

யூன்-ஹீ வீட்டின் வறுமையைப் புரிந்து கொள்கிறாள். தனது தாய் தந்தையின் வேலையைப் பற்றிக் கூட அவள் யாரிடமும் சொல்வதில்லை. சொன்னால் கேலி செய்கிறார்கள் என்கிறார். அது போலவே அவர்கள் கூடி ஒன்றாகச் சாப்பிடும் காட்சியில் மிக எளிய உணவைத் தான் சாப்பிடுகிறார்கள். யூன்-ஹீ வழியாக அந்தக் குடும்பத்தின் நிலை சிறப்பாகச் சித்தரிக்கப்படுகிறது.

இத்தனை நெருக்கடியான வாழ்க்கைச் சூழலுக்குள்ளும் யூன்-ஹீ திறமையானவள். இசை ஆர்வம் மிக்கவள். இசை தான் அவளைச் சந்தோஷப்படுத்துகிறது.

தன்னைப் பற்றி யூன்-ஹீ அந்த வயதிலே யோசிக்கத் துவங்கிவிடுகிறாள். தான் ஒரு அழகியாக வேண்டும் என அவள் விதவிதமான போஸ்டர்களைச் சுவரில் ஒட்டி வைக்கிறாள். அழகான வீடு குறித்துக் கனவு காணுகிறாள்.

எல்லோரும் தன்னை ஏன் வேலை சொல்கிறார்கள். கண்டிக்கிறார்கள் என்று யூன்-ஹீக்கு புரியவேயில்லை. அது தான் உண்மையான பிரச்சனை. சிறுவர்களின் நிஜமான பிரச்சனையது. அவளுக்கு அப்பாவை ரொம்பவும் பிடிக்கும். ஆனால் அந்த நேசத்தை வெளிக்காட்ட முடியவில்லை. அப்பா வேலைக்குக் கிளம்பும் போது அவள் ஆசையாக கையாட்டுகிறாள். அப்பாவோ வீட்டில் வெட்டியாக இருக்காமல் ஒழுங்காகப் படியுங்கள் என்று திட்டிவிட்டுப் போகிறார்.

புறக்கணிப்பைக் குழந்தைகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்தப் படம் மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.

Bora Kim என்ற பெண் இயக்குநரின் படமிது. இவர் இயக்கிய House of Hummingbird திரைப்படம் இதே யூன்-ஹீயின் கதையை இன்னொரு தளத்தில் பேசுகிறது. அமெரிக்காவில் திரைக்கல்வி பயின்றி போரா இன்று முக்கிய திரைப்பட இயக்குநராக அறியப்படுகிறார்.

••

0Shares
0