சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் மாலைக்காட்சி முடிந்து இரவுக்காட்சி துவங்குவதற்கு முன்பு தியேட்டர் துப்பரவு பணியாயளர்கள் அரங்கினைச் சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் தற்செயலாகக் காண நேர்ந்தது.
ஆறு பேர் மிகப்பெரிய கறுப்பு நிற பாலீதின் பைகளில் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தார்கள். பாப்கார்ன், தண்ணீர்பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், கேக், பப்ஸ் என்று ஐந்து பைக்கும் அதிகமாக அள்ளியும் குப்பை தியேட்டர் முழுவதும் இறைந்தே கிடந்தது.
ஒரு நிமிசம் அந்த குப்பைச் சாக்கை கண்டதும் திடுக்கிட்டு போனேன். உணவகங்களில் கூட அவ்வளவு சாப்பிட்ட மீதம் சிதறிக்கிடக்குமா என்று தெரியாது. அநேகமாக படம் துவங்கியதும் முதல் படம் முடிவது வரை சாப்பிட்டுக் கொண்டே படம் பார்க்கிறார்கள் போலும். அதிலும் பாப்கார்ன் பாக்கெட்களின் அளவு அதிகமாகிக் கொண்டே போய் சில நேரங்களில் அதன் உயரம் சீட் அளவு வந்துவிடுகிறது. மடியில் ஒரு குழந்தையைத் தூக்கி உட்கார வைத்துக் கொண்டு சினிமா பார்ப்பது போல பாப்கார்ன் பாக்கெட்டுகளை வைத்து அரைத்தபடியே படம் பார்க்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு மல்டிபிளக்ஸ் அரங்கில் இப்படியொரு காட்சியை பார்த்திருக்கிறேன். ஆளுக்கு ஒரு லிட்டர் குளிர்பான பாட்டில் அரைக்கிலோ பாப்கார்ன். நாலைந்து சாக்லெட் பார்கள் சகிதமாக படம் பார்க்க வருகிறார்கள். அதில் உணவங்களுடன் இணைந்த அரங்குகளில் படம் நடந்து கொண்டிருக்கும் போது உணவுகளும் வந்தபடியே இருந்தன. பெரிய உணவகம் ஒன்றினுள் அமர்ந்து படம் பார்த்தது போலவே இருந்தது.
சினிமா பார்ப்பதும் சிற்றுண்டி சாப்பிடுவதும் எப்படி ஒன்றாக மாறிப்போனது.
முன்பெல்லாம் சினிமாவிற்கு செல்லும் முன்பு எங்காவது சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு பிறகு திரையரங்கிற்கு போவது மிடில் கிளாஸ் சம்பிரதாயம். அது வாரத்தின் ஒரு நாள் சந்தோஷம். இப்போது மாலை சிற்றுண்டியை வீட்டிலோ வெளியிலோ முடித்துவிட்டு அரங்கிற்கு வந்த போதும் தீனி விருப்பம் குறையவேயில்லை
சில ஆண்டுகளுக்குள் அதுவும் பெருநகரங்களில் தான் இந்த அரவைக் கலாச்சாரம் ஆரம்பமானது. படம் துவங்குதற்கு முன்பாக வாய் மெல்லத் துவங்கியிருக்க வேண்டும் என்பது இயல்பாகி விட்டது.
எனது பால்யத்தில் சினிமா தியேட்டர்களில் முறுக்கு கடலை மிட்டாய் விற்பார்கள். ஐஸ் விற்பார்கள். அதை வாங்கி சாப்பிடுவதற்கு கூட வீட்டில் உள்ளவர்கள் திட்டுவார்கள். அபூர்வமாக தியேட்டரில் சோடாவோ கலரோ வாங்கி குடித்ததை ஒரு வாரம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதிலும் முறுக்கு விற்கும் சிறுவனின் குரல் அலாதியாக இருக்கும்.
அது வளர்ந்து தியேட்டரின் உள்ளேயே காபி டீ குளிர்பானம் விற்கும் கடைகள் வந்தன. ஆனால் அவை இடைவேளையின் போது மட்டுமே திறந்திருக்கும். இன்றும் சிறுநகரங்களில் அப்படிதானிருக்கின்றன.
ஆனால் சென்னை மும்பை, பெங்களுர் டெல்லி போன்ற பெருநகரங்களில் அப்படியே இந்த காட்சி உருமாறி துரித உணவகங்கள் தியேட்டருக்குள்ளாகவே வந்துவிட்டன. மக்கள் திரையை கவனிப்பதை விடவும் பாப்கார்ன் காலியாகிறதா என்பதில் கூடுதல் கவனம் கொள்கிறார்கள். குளிர்பான உறிஞ்சிகளின் சப்தம் விசில் போல விட்டுவிட்டு கேட்படியே இருக்கிறது
சினிமா டிக்கெட்டை விடவும் இதற்கு ஆகும் செலவு தான் அதிகம்.
அன்றைக்கு இரவு காட்சிக்கு வந்திருந்த ஒரு குடும்பத்தை பார்த்தேன். இரண்டு சிறுவர்கள். அவர்களின் அப்பா அம்மா துணையாக ஒரு வயதானவர். எல்லோரது கையிலும் மிகப்பெரிய பாப்கார்ன் பாக்கெட். துணைக்கு சிப்ஸ் பாக்கெட். இரண்டு லிட்டர் குளிர்பானம்.
சிறுவன் மட்டும் அது போதாது என்று சிக்லெட், காட்பரிஸ் பார் மற்றும் சாக்லேட் கேக் ஒன்றை வைத்திருந்தான்.
தியேட்டர் வாசலில் காத்திருக்க துவங்கிய நிமிசத்தில் இருந்து அவர்கள் எதையாவது மென்று கொண்டேயிருந்தார்கள். படம் துவங்கிய பிறகு அநேகமாக ஒருவரிசைக்கு ஒன்றிரண்டு பேரை தவிர மற்றவர்கள் வாய் அசைந்தபடியே தானிருந்தது.
சிரிக்க வேண்டிய காட்சிகளில் கூட வாய்நிறைய பாப்கார்ன் இப்பதால் முகத்தை மட்டுமே சுழிக்கிறார்கள். சிரிப்பு சப்தம் கூட வருவதில்லை.
இந்த சிறுதீனி கலாச்சாரம் மாநகரின் எல்லா இடங்களையும் ஊடுருவி நிரம்பியிருக்கிறது. கிரிக்கெட் மேட்ச், கச்சேரி, கோவில் என இல்லாத இடமேயில்லை.
இப்படி சிற்றுண்டி சினிமா பார்க்க செல்லும் எனது நண்பரை கேட்ட போது பழக்கமாகியிருச்சி சார். படம் போரடிச்சாலும் தெரியாது. அத்தோட இந்த பாப்கார்ன் வெளியே கிடைக்காது என்று புகழாராம் சூட்டினார்.
சிறுவர்களாவது ஆசையில் எங்கே நொறுக்கு தீனி கண்டாலும் பரபரப்பு கொள்வதை புரிந்து கொள்ள முடிகிறது. தியேட்டருக்கு வரும் இளம் பெண்கள், குடும்பத்தினரின் தீனிபசியை காணும் போது பயமாக இருக்கிறது.
இந்த வாய் ஒயாமல் மெல்லும் அரவையால் இரண்டு விளைவுகள் ஒன்று வயிற்றுஉபாதைகள் கட்டாயம் வந்து சேரும். மற்றொன்று எந்த படத்தையும் இவர்கள் சொல்லும் அபிப்ராயங்களை வைத்து முடிவு செய்ய முடியாது. காரணம் அவர்கள் பாதி தான் சினிமாவில் கவனம் கொள்கிறார்கள்.
ஒருவேளை சினிமா பார்க்கும் நேரங்களுக்கு மட்டும் என தனியான பசி உருவாகிறதோ என்னவோ ?
, பெரிய சிறிய திரையரங்கில் இடைவேளையில் முட்டி மோதி கையில் கிடைத்ததை வாங்கி தின்று சூடாக எதையாவது குடித்து வைக்க அலைபவர்களின் ஆவேசத்தை காணும் போது பல ஆண்டுகாலமாக பசி பட்டினியில் அடிபட்டவர்களை போலவே இருக்கிறது
ஆனால் இது தான் மாநகர கலாச்சாரம். அதை நாம் தவிர்க்கமுடியாது. ஒருவேளை நாமாக தீனி எதையும் வாங்கி வராவிட்டாலும் நண்பர்கள் வாங்கி கையில் தந்துவிடுவார்கள். அப்படியும் மறுத்தால் அடுத்தகேள்வி உங்களுக்கு ஏதாவது ஹெல்த் பிராப்ளம் இருக்கிறதா ?
தியேட்டருக்கு போய் உபவாசம் உண்ணாநோன்பு இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை ஆனல் அசுரபசியோடு இப்படி அலைவதை காண்பது தான் திகைப்பாக இருக்கிறது.
இந்தக் கொடுமையில் படம் முடியும் வரை சில அரங்கில் தியேட்டர்காரர்கள் இருட்டிற்குள்ளாகவே நடந்து வந்து ஆர்டர் செய்தவர்களுக்கு நொறுக்கு தீனிகளை சப்ளை செய்வதும் போவதுமாகவே இருக்கிறார்கள்.
ஒன்றே ஒன்று தான் இன்னமும் நடக்கவில்லை. அது அரங்கிற்குள்ளாகவே அடுப்பு எரிய விட்டு பரோட்டா, பஜ்ஜி, தந்தூரி, பிட்சா என்று சுடச்சுட போட்டு தரவில்லை. அதுவும் விரைவில் வந்து சேர்ந்துவிடும்.
எனக்கிருக்கும் ஒரே சிறிய சந்தேகம்
இவர்கள் சினிமா பார்ப்பதற்கு தான் வருகிறார்களா என்பது தான்?
**