சோழநாட்டில் பௌத்தம் பரவியிருந்த வரலாறு மற்றும் புத்தர் சிலைகள் குறித்து நீண்டகாலமாக ஆய்வு செய்து வருபவர் முனைவர் ஜம்புலிங்கம்.

இவரது களப்பணியின் காரணமாக அய்யம்பேட்டை, உள்ளிக்கோட்டை, காஜாமலை, குடவாசல், குழுமூர், சுந்தரபாண்டியன் பட்டினம், திருநாட்டியத்தான்குடி, பட்டீஸ்வரம், புதூர், மங்கலம், வளையமாபுரம் போன்ற ஊர்களில் அரிய புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன.
ஜம்புலிங்கம் தனது முப்பது ஆண்டுகாலப் பௌத்த ஆய்வின் தொகுப்பாகச் சோழநாட்டில் பௌத்தம் என்ற நூலை எழுதியுள்ளார். அழகிய புகைப்படங்களுடன் கெட்டி அட்டையில் நேர்த்தியாக இந்நூலை புது எழுத்துப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது

தமிழ்நாட்டில் சமணம் மற்றும் பௌத்தம் தொடர்பான ஆய்வுகள் மிகக் குறைவாகவே நடந்துள்ளன. தமிழ்நாட்டில் செயல்பட்ட பௌத்த பல்கலைகழங்கள் மற்றும் விகாரைகள் குறித்த விரிவான ஆய்வுகள் இன்றும் மேற்கொள்ளப்படவில்லை.
புத்த படிமங்களின் உருவாக்கம் மற்றும் பௌத்த கலைக்கோட்பாடுகள், மடாலயங்கள் செயல்பட்டவிதம், அதன் வீழ்ச்சிக்கான காரணங்கள். பிக்குணிகளின் வாழ்க்கை, மருத்துவத்துறைக்குப் பௌத்தம் அளித்த பங்களிப்பு என நாம் ஆய்வு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.

இந்நூல் இரண்டு விதங்களில் முக்கியமானது. ஒன்று இதில் இடம்பெற்றுள்ள அரிய புத்தர் சிலைகளின் புகைப்படங்கள், இரண்டாவது சிலைகள் குறித்த துல்லியமான தரவுகள்.
இச்சிலைகள் நிகரற்ற அழகுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாகப் புத்தரின் தியான கோலம் நம்மைக் கவர்ந்து இழுக்கிறது. பரவாய் புத்தர் சிலையைப் பாருங்கள். எவ்வளவு கம்பீரம். முகத்தில் எத்தனை சாந்தம். எல்லாப் புத்தர் சிலைகளிலும் கண்களும் சாந்த முகமும், தோளின் நேர்த்தியும், கால்களை மடக்கி அமர்ந்துள்ள விதமும் அபூர்வமான அழகுடன் நம்மை மயக்குகின்றன. பெரும்பான்மை புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்திலே காணப்படுகின்றன. எந்த நூற்றாண்டு சிலை என்ற விபரம் மட்டும் இதில் காணப்படவில்லை. அதையும் குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக இருக்கும்.

ஆயிரவேல் அயிலூர் புத்தர் சிலையைக் காணும் போது அஜந்தா புத்தர் நினைவிற்கு வருகிறார். உள்ளிக்கோட்டை புத்தர் பெண்மை கலந்த முகத்துடன் நீண்டகாதுகளுடன் அபாரமான கலைநேர்த்தியுடன் காணப்படுகிறார்.. திருநாட்டியத்தான்குடி புத்தர் சிலை வயலின் நடுவே காணப்படுகிறது. புஷ்பவனம் புத்தர் முகத்தில் வெளிப்படும் புன்னகை நிகரில்லாதது. பேரழகு மிக்க இந்தச் சிலைகளை அதன் பெருமை அறியாமல் சிதைத்திருக்கிறார்களே என்று வருத்தமும் கோபமும் ஏற்படவும் செய்கிறது

பெரும்பான்மை சிலைகள் கிராமத்தில் கிடைத்திருக்கின்றன. இது தமிழகத்தில் பௌத்தம் எந்த அளவிற்கு வேர் ஊன்றி வளர்ந்திருக்கிறது என்பதன் சாட்சியமாக உள்ளது
புத்தரைக் கடவுளாக ஏற்றுக் கொண்டு பாதபீடிகையை வணங்க வழிகாட்டியது மகாயான பௌத்தம். இதன் சாட்சியமாகவே திருக்குறளில் கடவுளின் வடிவமாகத் திருவடி குறிப்பிடப்படுகிறது என்கிறார் ஜம்புலிங்கம். அது போலவே புத்தர் பிறந்தவுடன் அவரது பாதங்கள் நிலத்தில் படவில்லை. தாமரை மலர்கள் தோன்றி பாதங்களைத் தாங்கிக் கொண்டன. அதன் அடையாளமாகவே மலர் மிசை ஏகினான் என்கிறார் வள்ளுவர் என்றும் சொல்கிறர் ஜம்புலிங்கம். களப்பணியில் மட்டுமின்றி இலக்கியத்திலும் பௌத்தம் தொடர்பான விஷயங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்துவது பாராட்டிற்குரியது.
சோழநாட்டில் மட்டுமின்றித் தமிழகம் முழுவதும் இது போன்று பௌத்த ஆய்வுகள் விரிவாக நடைபெறவும் ஆவணப்படுத்தப்படவும் வேண்டும். அதற்கான முன்னோடி முயற்சியாகவே இந்நூலைக் கருதுகிறேன்.
புத்தர் சிலைகளைத் தேடி அலைந்த அவரது பயணத்தையும். சிலைகளின் காலம் மற்றும் தனித்துவங்கள் குறித்து ஆராய்ச்சி செய்த முறை பற்றியும் ஜம்புலிங்கம் விரிவாக எழுத வேண்டும். அது இளம் ஆய்வாளருக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பது எனது எண்ணம்.
பௌத்த ஆய்வில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ள முனைவர் பா. ஜம்புலிங்கத்திற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்
சோழ நாட்டில் பௌத்தம், பக். 222; ரூ. 1000
படிமம் வெளியீடு, காவேரிப்பட்டினம் (கிருஷ்ணகிரி)
தொலைபேசி 98426 47101.