ஆவணப்படங்களுக்கு (DOCUMENTARY) எழுத்தாளராகயிருப்பது என்பது ஒரு புதிரான வேலை. பெரும்பாலும் அது ஆய்வுப்பணியாகவே இருக்கும். ஆனால் ஆய்வுவிபரங்களில் சிறு பகுதி கூட முறையாக படத்தில் பயன்படுத்தபட மாட்டாது. பெரும்பான்மையான ஆவணப்பட இயக்குனர்கள் நேர்காணல் எடுப்பதையே தங்களது படத்தின் பிரதானப் பகுதியாகக் கொண்டுவிடுகிறார்கள். இதற்கு உறுதுணை செய்வது போல கொஞ்சம் ஆய்வுக் குறிப்புகள். சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தால் போதுமானது என்றே நினைக்கிறார்கள்.
தமிழில் விவரணப்படங்கள் என்றாலே புலனாய்வு பத்திரிக்கையாளர்களின் வேலையைப் போல ஏதோ அதிர்ச்சி தரக்கூடிய, அறியப்படாத தகவல்கள் நிரம்பியிருக்க கூடும் என்ற பொதுக் கருத்தியலிருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை, ஆவணப்படம் எதைப்பற்றியும் இருக்கலாம். இன்று ஆவணப்படம் எடுக்க முயலும் பலர் அதன் அடிப்படைத் தகவல்களை கூட அறியாமலே எடுக்கிறார்கள், ஆகவே அதன் நம்பத்தன்மை கேள்விக்குரியதாக இருக்கிறது.
நானும் கோணங்கியும் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக முதல் முதலாக கேரளாவில் உள்ள ஒடேசா அமைப்பு நடத்திய சினிமாப் பயிலரங்கில் கலந்து கொள்வதற்காக கொச்சின் சென்றிருந்தோம்.
அநதப் பயிலரங்கிற்கு தமிழகத்திலிருந்து நாலைந்து நண்பர்களே வந்திருந்தார்கள். அங்கே குட்டி ஜப்பானில் குழந்தைகள் என்ற குழந்தை உழைப்பாளர்கள் பற்றிய ஒரு விவரணப்படம் திரையிடப்பட்டது. அதன் இயக்குனரான சலாம் பனுரேக்கர் வந்திருந்தார். திரையிடலின் முடிவில் விவாதம் நடைபெற்றது.
இப்படத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு செல்லும் குழந்தைகள் ஆபீஸிற்கு போகிறோம் என்று தான் சொல்வார்கள். ஆபீஸ் என்பது தொழிற்சாலை என்ற அர்த்ததில் சொல்லப்படுகிறது, ஆனால் அதை ஏதோ பெரிய ஐடி கம்பெனி அலுவலகப் பஸ்ஸில் போவது போல படமாக்கியிருந்தார், அத்தோடு படப்பிடிப்புக்காக செயற்கையாக மேற்கொள்ளப்பட்ட காட்சிகள் நிறைய துருத்திக் கொண்டு இருந்தன, சிவகாசிப் பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் வேன் படப்பிடிப்பிற்கு நேர்த்தியாக இருக்காது என்று நினைத்தாரோ என்னவோ ஆவணப்படத்தில் சொகுசுப்பேருந்தில் குழந்தைகள் வேலைக்கு போய்க் கொண்டிருந்தார்கள்.
தீப்பெட்டி தொழில் பற்றி தமிழில் பல முக்கிய சிறுகதைகள் வந்திருக்கின்றன, சிவகாசி வட்டாரத்திற்கு நேரிடையாகச் சென்றால் எத்தனையோ காட்சிகளை அன்றாடம் காண முடியும்.
தீப்பெட்டியில் உரசும் மருந்து கலக்கப்படும் இடத்திற்கு நான்கு கதவில்லாத வாசல்கள் இருக்கும், வெடிவிபத்து ஏற்பட்டவுடனே தப்பி ஒடவேண்டுமல்லவா அதற்காக தான் இந்த திறந்த வாசல் என்று சொல்வார்கள்,
சிறிய தொழிற்சாலைகளில் எரிபொருள் கலவைக் கூடத்தில் எந்த அடிப்படை வசதியுமின்றி ரசாயானப் பொருட்களை கையால் கலக்கபடுவதைக் கண்கூடாக எவரும் காண முடியும். இவை எதையும் தெரிந்து கொள்ளாத ஒருவர் சங்கரன் கோவிலில் ஒரு விடுதியில் தங்கிக் கொண்டு இந்தப் படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார் என்று அப்போது நானும் இலக்கிய வெளிவட்டம் நடராசனும் கோணங்கியும் கடுமையான விவாதம் செய்தோம்.
சலாம் பனுரேக்கர் கோபத்துடன் இது உங்களுக்காக எடுக்கப்பட்ட படமில்லை திரைப்பட விழாவில் படம் பார்த்தவர்கள் இதை மிகவும் பாராட்டினார்கள், பல முக்கிய விருதுகள் கிடைத்திருக்கின்றன என்றார், உங்கள் படத்தால் அந்த்த் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களுக்கு என்ன பலன் என்று கேட்டோம், அது என்னுடைய வேலையில்லை, அதை அரசாங்கம் பார்த்து கொள்ளும் என்றார், இது ஒரு சுரண்டல் இல்லையா என்ற சர்ச்சை உருவானது.
இது ஒரு மலினமான அரசியல் தாக்குதல் என்று அவர் குற்றம் சாட்டினார், இந்தச் சர்ச்சை அன்று துவங்கிய போதும் இன்று வரை பல விவரணப்படங்களுக்கும் பொருந்துவதாகவே உள்ளது.
விவரணப்படங்கள் எந்தப் பிரச்சனையை பற்றி பேசுகின்றதோ அந்த மக்கள் அந்த விவரணப்படத்தைக் காண்பதோ, அதற்கு எதிர்வினை ஆற்றுவதோ பெரும்பாலும் நடப்பதேயில்லை. நான் இணைந்து பணியாற்றிய ரமணி இயக்கிய நீ எங்கே என்ற தோல்பாவைக் கூத்து பற்றிய விவரணப்படத்தினை சம்பந்தட்ட தோல்பாவைக் கூத்துகலைஞர்களுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று போட்டுக் காட்டியபோது அதை வியப்போடும் கண்ணீரோடும் பார்த்து ரசித்த்து முறையான எதிர்வினையாக இருந்தது.
ஒருவகையில் அந்த ஆணவப்படம் அவர்களது பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்த்து வைத்தது, அந்த வகையில் ஆர்.வி.ரமணியின் படம் முக்கியமானது, ரமணியின் ஒவ்வொரு ஆவணப்படமும் மிக நீண்ட ஆய்வும் அர்ப்பணிப்பும் கொண்டதாகவே இருக்கின்றது
நான் கடந்த பதினைந்து ஆண்டுகளில் பத்திற்கும் மேற்பட்ட விவரணப்படங்களுக்கு ஆய்வு மற்றும் எழுத்து சார்ந்து பணியாற்றியிருக்கிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவை வெளியாகியிருக்கின்றன
பிரபல இயக்குனர் கே. பாலச்சந்தரின் மகனான பாலகைலாசம் வாஸ்துமரபு என்று தமிழகத்தின் சிற்பக்கலை மற்றும் கோவில் சிலைகளின் உருவாக்கம், பற்றிய ஒரு விவரணப்படத்தினைத் தயாரித்தார், அப்படத்திற்கு பிரபல கட்டிடக்கலை நிபுணர் சசிகலா ஆனந்த் எழுத்துவடிவத்தை உருவாக்கினார், அப்போது எனக்கு சசிகலா ஆனந்த் பழக்கமானவர் என்பதால் நானும் ஆவணப்படத்தில் ஈடுபடுவது பற்றி ஆர்வம் கொள்ளத் துவங்கினேன், அதன் காரணமாக பாலகைலாசம் எனக்குப் பழக்கமாகினார்.
அந்த விவரணப்படத்திற்காக ஒரு வருடகாலம் தொடர்ந்து விபரங்கள் சேகரிக்கபடுவதும், வல்லுனர்களோடு விவாதிக்கபடுவதும் நடந்தேறியது. அதை விலகியிருந்து அவதானித்துக் கொண்டேயிருந்தேன், தமிழில் வெளியான மிகச்சிறந்த ஆவணப்படம் வாஸ்துமரபு, இப்படம் தேசிய விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறது , அந்த அனுபவம் தான் என்னை விவரணப்படங்களை நோக்கிய ஆர்வத்தைத் தூண்டியது.
தொடர்ந்து பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்ற ராம் நாராயண் இயக்கிய ஜல்லிகட்டு பற்றிய விவரணப்படத்தில் ஜல்லிக்கட்டு குறித்த களஆய்வுப் பணியை மேற்கொண்டேன். இப்படத்திற்காக மதுரையை சுற்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் எங்கெங்கெல்லாம் ஜல்லிகட்டு நடக்கிறது அதன் சமூக கலாச்சார கூறுகள் என்ன என்பதைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து ஒன்று சேர்த்து எழுதினேன். அப்போது ஒரு நல்ல தொழில்நுட்பக்குழு எங்களுடன் இருந்தது, இலக்கியம், மாற்றுசினிமா, அரசியல் என்று காரசாரமான விவாதங்களுடன் இணைந்து நாங்கள் ஆய்வுப்பணியை மேற்கொண்டோம், அந்தப்படம் சிறப்பாக உருவாக்கபட்டு விருது பெற்றது,
அதன் தொடர்ச்சியாக திருவாருர் கோவிலில் உள்ள இசைபராம்பரியம் பற்றியும், நாட்டுக்கோட்டை செட்டியார் வீடுகளின் கட்டிடக்கலை மரபு பற்றியும். தமிழக நீர்நிலைகள் பற்றியும் உருவான விவரணப்படங்களில் எனது பங்களிப்பு இருந்தது.
தமிழக நீர்நிலைகள் பற்றிய எழுத்தாளர் உஷா சுப்ரமணியம் தொலைக்காட்சிக்காக இயக்கிய விவரணப்படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நேரிடையாக தமிழகத்தின் ஏழு முக்கிய நதிகளையும் முக்கிய அணைக்கட்டுகளையும் காண முடிந்தது,
நீர்பங்கீடு குறித்து ஆயிரக்கணக்கான பக்கங்கள் வாசித்தும் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துமே ஆதார எழுத்துப்பிரதியை உருவாக்க முடிந்தது. இதற்காக பல மாதங்களைச் செலவிட வேண்டியதாக இருந்தது,
ஆனால் இந்த விவரணப்படத்தை உருவாக்குவதற்கு அனுமதி தந்திருந்த தொலைக்காட்சி நிலையம் விதித்திருந்த வரம்பில் இந்த விவரங்கள் யாவையும் ஒன்று சேர்த்துத் தருவது இயலாது என்பதாலும் அரசு கட்டுப்பாடுகளாலும் கண்டறிந்த பல உண்மைகளை வெளிப்படுத்த இயலாமல் போனது .
ஆனால் உஷா சுப்ரமணியம் அவர்களோடு சேர்ந்து பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவம், அவர் ஒரு தேர்ந்த வாசகர், அத்தோடு மிக இனிமையாக பழகக்கூடியவர், என் எழுத்துகளின் மீது அவர் காட்டிய ஈடுபாடும் ஊக்க்கமும் என்றும் மறக்கமுடியாதது
அதன்பிறகு தென்னிந்தியாவில் வாழும் தோல்பாவைக் கலைஞர்களை பற்றி பூனா திரைப்படக்கல்லூரியில் பயின்ற சிறந்த ஒளிப்பதிவாளரான ஆர்வி ரமணி இயக்கிய நீ எங்கே ஆவணப்படத்தில் ரமணியோடு ஆய்வுப்பணியில் ஈடுபட்டேன்
அதற்காக பலஇடங்களுக்கு பயணம் மேற்கொண்டதுடன் தோல்பாவைக் கூத்து கலைஞர்களை நேராகச் சந்தித்து அவர்களைப் பற்றிய சகலவிபரங்களையும் வாய்மொழியாக அறிந்து கொள்ள முடிந்தது, அந்த விவரணப்படத்தயாரிப்பில் ரமணியின் தீவிரமான ஈடுபாடும் ஆய்வின் மீதான இடைவிடாத தேடுதலையும் புரிந்து கொள்ள முடிந்தது.
அதன்பிறகு பாம்பு பிடிக்கின்ற தொழிலில் ஈடுபட்டுள்ள மூப்பர்களை பற்றிய பிபிசியின் ஆவணப்படத்திலும், தமிழக நுண்கலைமரபுகள் பற்றி ஜெர்மன் தொலைக்காட்சி தயாரித்த ஆவணப்படத்திலும், வர்மக்கலை மற்றும் மரபு வைத்தியம் பற்றி டெல்லி தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட ஆவணப்படத்திலும், ,இருளர். பளியர்கள் போன்ற ஆதிவாசிகள் பற்றிய டெல்லி தொலைக்காட்சிப் படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன், அத்துடன் சன்செய்திகளுக்காக நானே பத்து நிமிசங்கள் வரையான கலை மற்றும் நுண்கலைகள் சார்ந்து நிறைய செய்திப்படங்களை உருவாக்கி தந்திருக்கிறேன்
பார்வையற்றவர்கள் விளையாடும் சதுரங்க போட்டிகள் குறித்து லோகேஷ் என்ற திரைப்படக்கல்லூரி மாணவர் இயக்கிய ஆவணப்படத்திற்கும். முரளி மனோகர் இயக்கிய அக்காலம் என்ற ஜெமினி ஸ்டுடியோ பற்றிய ஆவணப்படத்திற்கும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்
எனது நண்பரும் எழுத்தாளருமான கௌரிசங்கர் நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசலம் பற்றிய ஒரு ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார், இதற்கான ஆய்வு உதவியோடு எடுக்கப்பட்ட படத்தினை செம்மைபடுத்தவும் ஆலோசனைகள் தந்திருக்கிறேன், அப்படம் பல ஆண்டுகாலமாக யாரும் முன்கை எடுக்காத காரணத்தால் எங்கும் ஒளிபரப்ப படாமல் அப்படியே இருக்கிறது
மைசூரில் உள்ள தேசிய மொழியியல் நிறுவனத்திற்காக தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பது என்று பலரும் என்னை அணுகியிருக்கிறார்கள், ஒன்றிரண்டு எழுத்தாளர்களைப் பற்றிய படங்களுக்கு தகவல்கள் மற்றும் ஆய்வுக்கான உதவிகள் செய்திருக்கிறேன்,
இந்தப் படங்களில் பெரும்பான்மை எழுத்தாளரின் நேர்காணல் மற்றும் அவரோடு பழகிய இரண்டு பேரின் சிறிய நேர்காணல்கள் அத்துடன் எழுத்தாளரின் வாழ்க்கைக் குறிப்பு மற்றும் அவரது புத்தக அட்டைகளின் காட்சிபடுத்துதல் என்ற அளவில் படம் முடிந்து போய்விட்டிருக்கிறது, இது எழுத்தாளர்களுக்கு செய்யப்படும் ஒரு அஞ்சலி போலவே அமைந்துவிடுவது துரதிருஷ்டமே,
விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவரின் பெயரிலும் யாரோ ஒருவர் ஆவணப்படம் எடுக்க மைசூரில் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். ஆயிரம் ஆவணப்படங்களுக்கு மேலே எடுத்து முடித்தாகி விட்டது என்றும் சொல்கிறார்கள், இவ்வளவு பரபரப்பிற்குக் காரணம் இதற்குக் கிடைக்கும் மூன்று லட்சம் உதவித் தொகை மட்டும் தான்.
அடையாளம் தெரியாத ஒரு எழுத்தாளரைத் தேடிச்செல்லும் ஸ்டோன் ரீடர் போன்ற விவரணப்படம் ஒன்றை இன்றுவரை தமிழில் நான் காண முடியவேயில்லை
பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் விஸ்காம் மாணவர்கள் சிலர் ஆவணப்படம் எடுக்க என்னைத் தேடி வந்திருக்கிறார்கள், அவர்கள் என்னுடைய எழுத்தில் ஒரு வரி கூட படிக்காமல் என்னிடம் வந்து என்னென்ன புத்தகம் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அதன் பிரதியிருந்தால் காட்டுங்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டு அதைப் படம் பிடித்ததோடு அவற்றை எழுதியவன் என்ற ஒரே காரணத்தால் என்னையும் படம் பிடித்துப் போயிருக்கிறார்கள். அந்த அவலநிலை தான் பல தமிழ் எழுத்தாளர்களும் நடந்தேறியிருக்கிறது
எனது நண்பரும் அமெரிக்கப் பல்கலைகழகத்தில் சினிமாப் பேராசிரியராகவும் உள்ள சொர்ணவேல் ஆவணப்படங்களை இயக்குவதில் முக்கியமானவர், அவரது நட்பால் ஆவணப்படங்களை பற்றி நிறைய அறிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் முடிந்திருக்கிறது, அவர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் பற்றி மிகச் சிறந்த ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார், அவரும் பூனா திரைப்படக்கல்லூரியில் பயின்றவரே.
தமிழகத்தில் விவரணப்படங்களில் ஆர்வம் காட்டுபவர்கள் சொற்பமாகவேயிருக்கிறார்கள். இங்கே விவரணப்படம் எடுப்பதற்கு போதுமான நிதியோ, ஊக்கமோ வழங்கப்படுவதில்லை, எடுத்த படத்தை திரையிட்டுக் காட்டக் கூட முடியாத நிலையே உள்ளது, பல மாநிலங்களில் தொலைக்காட்சிகள் இது போன்ற மாற்று ஊடக முயற்சிகளுக்கு உதவி செய்கிறார்கள், உதாரணம் என்.டி.டிவி, பிபிசி, சேனல் 4. ஆனால் தமிழில் அது போல எதுவும் சாத்தியமேயில்லை
இவை யாவையும் விடவும் விவரணப்படங்களுக்கான ஆய்வுகள் சில நாட்களில் முடிந்துவிடக்கூடியதில்லை என்ற உண்மை பெரும்பான்மையான இளைஞர்களுக்குச் சலிப்பை உருவாக்கிவிடுகிறது, அதனால் குறும்படம் அளவிற்கு விவரணப்படம் எடுக்க பலரும் முன்வருவதில்லை.
சொர்ணவேலின் ஐஎன்ஏ. காஞசனை சீனிவாசனின் நதியின் மரணம். செந்தமிழனின் பேசாமொழி ஆவணப்படம் , யாழ் நூலகம் எரிந்து போனதை பற்றி சோமிதரனின் எரியும் நினைவுகள் , பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய வெண்மணி பற்றிய ராமைய்யாவின் குடிசை மற்றும் கும்பகோணம் தீவிபத்து பற்றிய என்று தணியும் ஆவணப்படங்களும், ரவி சுப்ரமணியம் இயக்கிய ஜெயகாந்தன், அம்ஷன்குமார் இயக்கிய பாரதி, பாலகைலாசம் இயக்கிய வாஸ்துமரபு மற்றும் நீருண்டு நிலமுண்டு, ரமணியின் தோல்பாவை கூத்து பற்றிய நீ எங்கே, லீனா மணிமேகலையின் தேவதைகள், ஜேடி–ஜெர்ரி இயக்கிய ‘நாதஸ்வரம்‘ முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பிரகதீஸ்வரன் இயக்கிய ஜனவரி 29 என்ற ஆவணப்படம், மாதவராஜ் இயக்கிய இது வேறு இதிகாசம். ப்ரேமா ரேவதியின் நிழல்தேடி போன்றவை நான் பார்த்த தரமான ஆவணப்படங்கள்.
பத்திரிக்கையாளரின் பணியிலிருந்தும், எழுத்தாளனின் பணியிலிருந்தும் வேறுப்பட்டது ஆவணப்படங்களை உருவாக்குவதற்கான எழுத்து மற்றும் ஆய்வுப்பணி என்பதை இந்த அனுபவங்களில் இருந்து நான் தெரிந்து கொண்டேன்.
விவரணப்படத்தில் காட்சிகளின் முக்கியத்துவத்தை விடவும் அது வெளிப்படுத்தும் கருத்து பிரதானப்படுத்த பட வேண்டும், அதற்காக நிறைய கற்கவும் விவாதிக்கவும் வேண்டும், ஆவணப்படம் என்பது ஒரு அரசியல் வெளிப்பாடு தான், ஆகவே எந்த அரசியலை முன்வைக்கிறோம் என்பது முக்கியமானது,
சிறந்த விவரணப்படங்களால் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கி தூக்கி எறிய முடியும், இன்னொரு பக்கம் ஆவணப்படங்களே உண்மையான கலைச்சேமிப்புகள், அவை நமது கலை மற்றும் பண்பாட்டுக் கூறுகள் அழிந்து போய் கொண்டிருப்பதை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தருகின்றன, ஆகவே அது ஒரு முக்கியமான கலாச்சாரப்பணி,
நான் பணியாற்றிய எந்த ஆவணப்படத்தின் பிரதியும் என்னிடமில்லை, படம் வெளியான பிறகு டிவிடி தருவோம் என்பார்கள், அது காற்றில் கரைந்து போன சொல்லாகவே மறைந்து போய்விடுகிறது,
விவரணப்படங்களின் தேவை முன் எப்போதையும் விட இன்று அதிகமிருக்கிறது, ஆனால் அது குறித்த விழிப்புணர்வு, மாற்று ஊடகத்தளங்கள் நம்மிடையே இல்லை, அதற்கான சில முன்முயற்சிகளைத் தமிழ் ஸ்டுடியோ, நிழல் போன்ற அமைப்புகள் இப்போது சாத்தியப்படுத்தி வருகின்றன, இணையமும் அதற்கு கைகொடுக்கிறது, ஆனாலும் நாம் முன்னெடுத்துப் போக வேண்டியது நிறையவே இருக்கிறது.
( 2010 டிசம்பர் ஒளியம் என்ற சிற்றிதழில் வெளியான கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம்)
••