சிவகாசி வெடிவிபத்து

சிவகாசி வெடிவிபத்து பற்றி அறிய நேர்ந்த நிமிஷத்தில் இருந்து பல்வேறு அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்கள் என்னை அழைத்து விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் என்ற முறையில் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கத் துவங்கினார்கள், இது விபத்தில்லை, அறிந்தே தொடரும் கொலைகள் என்று சொன்னேன்,

இந்த ஆண்டு நடக்கும் ஒன்பதாவது விபத்து இதுவெனச் சொல்கிறார்கள், கொள்ளை லாபத்திற்கு மனிதஉயிர்கள் பலியாகின்ற கொடுமை இது.

எனக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து ஆண்டு தோறும் பட்டாசு ஆலை விபத்துகள் நடந்து கொண்டேதானிருக்கிறது,  ஒவ்வொரு முறையும் ஊடகங்கள் குரல் எழுப்புகின்றன, உடனே சில கண்துடைப்பு வேலைகள் நடைபெறுகின்றன, மறுபடி அதே முறைகேடுகள், கொள்ளை லாபம் அடிக்கும் குறுக்குவழிகள், அதனால் உருவாகும் கோர விபத்து என துயரம் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது,

இந்த  ஐம்பது ஆண்டுகளில் பட்டாசுத் தொழில் சார்ந்த கறாரான விதிமுறைகள், பாதுகாப்புச் செயல்திட்டங்கள்  எதுவும் செயல்படுத்தபடவேயில்லை, பாதுகாப்பு குறித்த கவலைகள் யாவும் காகிதத்தில் உள்ளதேயன்றி நடைமுறையில் பின்பற்றபட்டதில்லை.

நான் பட்டாசு ஆலைகளை நேரில் கண்டிருக்கிறேன், அதை நான்கு பக்கமும் திறந்து கிடக்கும் மரணவாசல் என்று தான் குறிப்பிடுவார்கள்,  காரணம் விபத்தில் தப்பியோடுவதற்கு என்று கதவில்லாத வாசல்கள் கொண்டிருப்பவை அவை,

என்னோடு பள்ளியில் படித்த நண்பர்களில் பலர் படிப்பைக் கைவிட்டு பட்டாசு மற்றும் அச்சுத் தொழிற்சாலைகளில் கூலியாக வேலைக்குப் போய்விட்டார்கள், அவர்களில் இருவர் இது போன்று முன்பு நடைபெற்ற ஒரு விபத்தில் இறந்து போனார்கள், இந்தியாவின் பட்டாசுத் தயாரிப்பில் 90 சதவீதம் சிவகாசியில் தயாரிக்கபட்ட போதும் அது  குடிசைத்தொழில் போல தான் நடத்தப்பட்டு வருகிறது,

பெரும்பான்மையான பட்டாசு ஆலைகள் அதன் உரிமையாளர் ஒருவராக இருப்பார், ஆனால் அதைக் குத்தகைக்கு எடுத்து நடத்துகின்றவர் இன்னொருவராக இருப்பார், அடிப்படையான வசதிகள் எதுவுமிருக்காது, வெடிமருந்து கலக்கும் அறையும், அந்த மருந்தைக் கையாளும் நபர்களும் எவ்விதமான பயிற்சியும் அற்றவர்கள், முதலுதவிப் பெட்டியோ, தீயணைக்கும் கருவிகளோ எதுவும் இருக்காது, வேதியல் பொருட்களை கையாளத் தெரியாதவர்களை பணியில் அமர்த்தகூடாது என்பதை யாரும் கண்டுகொண்டதேயில்லை.

லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் போது இது போன்ற வசதிகள் அத்தனையும் இருப்பதாக காகிதத்தில் காட்டுவார்களேயன்றி நேரில் சென்று பார்த்தால் எதுவும் இருக்காது,

பட்டாசு தொழிற்சாலைகளைப் பார்வையிடுவது, தொழிலாளர் நலன் குறித்து ஆய்வு செய்வது போன்ற துறைகள் லஞ்சத்தில் ஊறிப்போனவை, சிவகாசிக்கு வணிகவரித்துறை அதிகாரியாக வருபவர்கள் அடிக்கும் லஞ்ச பணம் ஆண்டிற்கு பல கோடி ரூபாய் என்கிறார்கள், இது போன்று  பல்வேறு துறைகளின் லஞ்ச முறைகேடுகள் தான்  இந்த விபத்திற்கான முக்கியகாரணம்,

இதுவரை நடந்த பட்டாசு ஆலை விபத்துகளில் இருந்து என்ன பாதுகாப்பு முயற்சிகள் கைக்கொள்ளபட்டன, என்று பார்த்தால் எதுவும் நடைமுறைப்படுத்தபடவில்லை என்று தான் சொல்வேன்

விருதுநகர் எம்எல்ஏவாக உள்ள மாபா பாண்டியராஜன் நவீனச் சிந்தனைகள் கொண்டவர், அவர் மாவட்டத்தின் ஆதாரத் தகவல்கள் அனைத்தையும் கணிணி மயமாக்கியதோடு, தொகுதியின் நலம் குறித்து தீவிரமாகச் செயல்படுகின்றவர்,  அவரது அலுவலகம் முழுமையாக கணிணி மையமானது, அங்கே சாமான்ய மக்கள் எளிதாகப் புகார் தர இயலும்,  மக்கள் குறைகளைக் களைவதில் அவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார், அவ்வகையில் அவர் பாராட்டிற்குரிய ஒரு அரசியல்வாதி,

இந்த விபத்தை பற்றிய ஒரு நேர்காணலில் பாண்டியராஜன் சொல்கிறார், இது போன்ற விபத்துகளுக்கு  அதிகாரிகளின் முறைகேடுகளும், கொள்ளை லாபம் அடிக்கும் முதலாளிகளும் முக்கியக் காரணம் என்று,

வெடிவிபத்து நடந்த பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது, ஆனால் அந்தத் தொழிற்சாலை முறைகேடாக நடைபெற்றிருக்கிறது, காரணம் இது போல கள்ளத்தனமாக பேக்டரி செயல்படுவது சிவகாசியில் இயல்பான ஒன்று தான், காசு கொடுத்தால் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதே  நடைமுறை

இந்த விபத்தில் இறந்து போனவர்கள் எண்ணிக்கை நூறுக்கும் மேலே இருக்கும் என்கிறார்கள், உயிரிழப்பு   பற்றி  இன்னமும் முழுமையாகத்  தெரிவிக்கபடவில்லை, வங்காளத்தில் இருந்து வந்து தங்கி வேலை பார்த்த பலர் இதில் இறந்து போய்விட்டார்கள், அவர்களை பற்றிய தகவல்களை தெரிவிக்க மறுக்கிறார்கள் என்கிறார்கள்

இன்று நேரில் சென்று அந்த இடத்தைக் காணும் போது அது ஒரு மயான பூமி போல இருக்கிறது,

சாவின் வாடை வீசும் அந்த இடத்தை சுற்றி பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களிடம் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆனால்  இது போன்ற முறையற்ற பட்டாசு தொழிற்சாலைகள் இன்னமும் சிவகாசியைச் சுற்றி பல ஊர்களில் நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஒன்றிரண்டு நாட்கள் அதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

கல்குவாரிகளைத் தேடித்தேடி விசாரித்து உண்மைகளைக் கண்டறிந்தது போல இரும்புக்கரம் கொண்டு பட்டாசு ஆலைகள் விசாரிக்கபட்டு தண்டிக்கபட வேண்டும்

வீட்டில் நடைபெறும் பீடி சுற்றும் வேலை போல சக்தி வாய்ந்த பட்டாசுகளை சிலர் வீடுகளில் வெறும்கையால் செய்து வருகிறார்கள், அந்த பணியில் ஈடுபவ்ர்களில் பலர் பெண்கள், சிவகாசியின் சுற்றுப்புற கிராமங்களில் இது கண்கூடாகவே நடைபெற்றுவருகிறது,

ஒரு காலத்தில் சிவகாசியில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்தார்கள், தொடர்ந்த எதிர்ப்பு குரலால் இன்று இது கணிசமாக குறைந்து போயிருக்கிறது,

பீகார், வங்காளம், அஸ்ஸாம் என்று பல்வேறு மாநிலங்களில் இருந்து சிவகாசிக்கு  வேலைக்காக வந்து தங்கியிருப்பவர்கள் அதிகமிருக்கிறார்கள், அவர்களை நவீன கொத்தடிமைகளை போலவே இந்த தொழில் நிறுவனங்கள் நடத்துகின்றன,

சிவகாசியில் இருந்து ஆண்டுதோறும் அரசியல்வாதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு என்று கிப்ட் பேக்காக அனுப்படும் பட்டாசுகளின் மதிப்பே பலகோடி இருக்கும் என்கிறார்கள்,  இந்த கிப்ட் பேக்கின் நோக்கம் விபத்துகளை கண்டு கொள்ள வேண்டாம் என்பதே ,

லைசென்ஸ் வாங்குவது, வெடிபொருள்நிர்வாகம், தொழிற்சாலைகளை ஆய்வு செய்வது, வரி செலுத்துதல், பாதுகாப்பு முறைகளை ஆய்வு செய்வது என பல துறைகளிலும் அதிகாரிகளின் மிதமிஞ்சிய லஞ்சம் உடனடியாக களைந்து எடுக்கபடவேண்டும், ஒருவர் பெயரில் மற்றவர் தொழில்நடத்துவது, அதற்கு அரசியல்வாதிகள், அரசு இயந்திரம், அதிகாரிகள் துணை போவது, போன்றவை முழுமையாக நிறுத்தபடும் போது மட்டுமே விபத்துகளை தடுக்க முடியும்

விவசாயம் பொய்த்து போன நிலையில் இது போன்ற தொழில்களை மட்டுமே நம்பி வாழும் விருதுநகர் மாவட்டவாசிகளுக்கு தொடரும் பட்டாசு விபத்துகள் வெளியே சொல்லமுடியாத உயிரச்சத்தை ஏற்படுத்தியுள்ளன, வேலைக்குப் போனவர் எப்போது வீடு திரும்பி வருவார் எனக் குடும்பம் காத்திருந்த நிலை மாறிப்போய், உயிரோடு திரும்பி வருவாரா எனக் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியிருப்பது வேதனையின் உச்சநிலை.

***

0Shares
0