சீனாவில் தாகூர்

சீனாவின் கடைசிப் பேரரசர் பு யி வுடன் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் நிற்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன்.

இந்தப் பேரரசர் பற்றித் தான் The Last Emperor திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடி அணிந்த மன்னர் என்ற பிம்பம் என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.

1924 இல் தாகூர் சீனாவிற்கு வருகை தந்தார். அப்போது எடுக்கபட்ட புகைப்படமிது. Forbidden city எனப்படும் பீஜிங் அரண்மனை வளாகத்தில் இப்புகைப்படம் எடுக்கபட்டிருக்கிறது.

1924 மற்றும் 1928 எனத் தாகூர் இரண்டு முறை சீனா சென்றிருக்கிறார். சீனாவில் தாகூர் அளவிற்குப் புகழ்பெற்ற இந்தியா எழுத்தாளர் எவருமில்லை.

நாம் இன்று ஆசையாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களை, கவிஞர்களை மொழிபெயர்த்துப் படித்துக் கொண்டிருக்கிறோம். அங்கோ அவர்கள் தாகூரை கொண்டாடுகிறார்கள். தாகூர் கவிதைகளின் பெருந்தொகுப்பு ஸ்பானிய மொழியில் வெளியாகியுள்ளது.

ரவீந்திரநாத் தாகூருக்கும் அர்ஜென்டினா எழுத்தாளர் விக்டோரியா ஒகாம்போவுக்கும் இடையே ஆழ்ந்த நட்பிருந்தது. ஒகாம்போவின் விருந்தினராகச் சென்று அர்ஜென்டினாவில் தாகூர் தங்கியிருக்கிறார். அவள் கிழக்கிலிருந்து வந்த ஞானக் குருவாகத் தாகூரைப் பார்த்தாள். தாகூரின் ஓவியத் திறமைகளை வெளிக்கொணர்ந்த பெருமை ஒகாம்போவுக்கு உண்டு. அவள் கொடுத்த உத்வேகமே அவரைத் தொடர்ந்து ஓவியம் வரையச் செய்தது. அவளே பாரீஸில் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்தாள்.

சீனாவில் தாகூருக்கு அளிக்கபட்ட வரவேற்பும் அவரது உரையை ஒட்டி எழுந்த விவாதங்களும் இன்றும் பேசப்படுகின்றன.

தாகூர் 1913 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார். ஆங்கில இலக்கிய உலகில் அவரது புகழ் உயர்ந்திருந்த்து. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது கவிதைகளை அமெரிக்கா மற்றும் ஜப்பானில் பயிலும் கல்லூரி மாணவர்கள் ஆசையாகப் படித்தார்கள். புத்தகம் கிடைக்காத காரணத்தால் கவிதைகளை நகலெடுத்து விநியோகம் செய்தார்கள்.

தாகூருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட செய்தி சீனாவை எட்டியவுடன் அவரைச் சீனாவின் முக்கிய இலக்கியவாதிகள் பலரும் புகழ்ந்து பாராட்டினார்கள். 1915 ஆம் ஆண்டிலேயே கீதாஞ்சலி சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தப் புகழின் காரணமாக அவரைச் சீனாவிற்கு வந்து உரையாற்றும்படியாகப் பீஜிங் விரிவுரை சங்கம் கேட்டுக் கொண்டது. இந்த அமைப்பின் சார்பில் வெளிநாட்டு அறிஞர்கள் சீனாவிற்கு வருகை தந்து உரையாற்றுவது வழக்கம்.

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் இப்படிச் சீனா சென்று உரையாற்றியிருக்கிறார். அது சீன அறிவுஜீவிகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகவே அவர்கள் 1923 இல் தாகூரை சீனாவில் ஒரு தொடர் உரையாற்ற அழைப்பு விடுத்தார்கள்.

இந்த அழைப்பை ஏற்றுச் சீனா புறப்பட்டார் தாகூர். கல்கத்தாவிலிருந்து கப்பலில் பயணம் மேற்கொண்டு ஷாங்காய் சென்றார். அங்கே அவருக்குப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்பு அங்கிருந்து சீனா சென்றார். அவருடன் ஓவியர் நந்தலால் போஸ். சமஸ்கிருத அறிஞர் மோகன் சென், உதவியாளர் எல்ம்ஹிர்ஸ்ட் உள்ளிட்ட ஐந்து பேர் உடன் சென்றார்கள்.

1924 ஏப்ரலில் சீனா வந்த தாகூர் பல மாதங்கள் அங்கே தங்கியிருந்தார். அவரது சீன மொழிபெயர்ப்பாளராக லின் ஹூயின் பணியாற்றினார்

1924மே 8 அன்று பீஜிங்கில் தனது 64வது பிறந்த நாளைத் தாகூர் கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரது சித்ரா நாடகம் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டது. அவரது வருகைக்கு முன்பாகவே “தி கிரசண்ட் மூன்” மற்றும் “சித்ரா” போன்ற படைப்புகள் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

தாகூரின் சீனவருகையை அங்கிருந்த இடதுசாரி இளைஞர்கள் விரும்பவில்லை. அவரது வருகையை கடுமையாக எதிர்த்தார்கள். அவரது உரைகள் அறிவியலுக்கு எதிரானது என்று விமர்சனம் செய்தார்கள். இதனால் தாகூர் மனவருத்தம் அடைந்தார். அவர் உரை நிகழ்த்திய அரங்கில் இளைஞர்கள் எதிர்ப்புப் பிரசுரங்களை விநியோகம் செய்தார்கள்.

இந்த எதிர்ப்பிற்கு முக்கியக் காரணம் அவரை அழைத்த வந்த அமைப்பும் அதன் நிர்வாகிகளுமே என்கிறார்கள்.

அவர்களுடன் இருந்த கருத்துவேறுபாட்டினை தாகூரிடம் இளைஞர்கள் காட்டினார்கள். இதில் தாகூரை சீனாவில் மொழிபெயர்ப்பு செய்த மொழிபெயர்ப்பாளர் சிலரும் இணைந்து கொண்டது அவருக்கு மனவருத்தம் அளித்தது.

“இரண்டு நாகரிகங்களுக்கிடையில் மீண்டும் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத் தொடர்புகளை ஏற்படுத்துவதே எனது நோக்கம்.  நான் ஞானியில்லை. கவிஞன். நான் கேட்பது அரியணையில்லை.  உங்கள் இதயத்தில் சிறியதொரு இடம் “என்றே தாகூர் உரையை துவக்கியிருக்கிறார்.

தாகூரின் உரைகளில் சில தற்போது அச்சில் வாசிக்கக் கிடைக்கின்றன. அவரது பயணத்தில் உடன் சென்றவர்கள் இது குறித்து விரிவாக எதையும் எழுதவில்லை. ( அவற்றை வெளியிட வேண்டாம் என்று தாகூரை தடை செய்துவிட்டார் என்கிறார்கள் ).  தாகூர் கசப்பான உணர்வுகளுடன் சீனாவை விட்டு வெளியேறினார். அங்கிருந்து கிளம்பி ஜப்பான். கொரியா எனப் பயணம் மேற்கொண்டார்

சீனாவில் இருந்த நாட்களில் அவர் கடைசி மன்னர் பு யி தங்கியிருந்த அரண்மனையைப் பார்க்க விருப்பம் தெரிவித்தார்.

இதை அறிந்த மன்னர் பு யி தாகூரையும் அவருடன் வந்த ஆறு பேரையும் தேநீர் விருந்திற்கு அழைத்தார். அந்தச் சந்திப்பின் போது அறிவியல் மற்றும் கவிதைகள் குறித்து மன்னர் உரையாடினார். சீனாவும் இந்தியாவும் சகோதரர்கள். இரண்டின் பண்பாடு மற்றும் செவ்வியல் கவிதைகள் சிறப்பானவை என்று தாகூர் புகழ்ந்து பேசினார்.

தாகூரின் பல படைப்புகள் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்ற போதும், அவர் சீனாவில் ஆற்றிய உரைகளைக் கொண்ட நூல் இன்றுவரை சீன மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. காரணம் யார் செய்தது சரி என்ற சர்ச்சையை அது மீண்டும் கிளறிவிடும் என்பதே.

0Shares
0