சீன நிலக்காட்சி ஒவியங்கள்.

சீன நிலக்காட்சி ஒவியங்களைக் காணும் போது ஒவியன் தனக்கு வெளியேயுள்ள உலகை வரைந்தது போலவே தோன்றவில்லை. மாறாகக் காற்று, மலை, அருவிகள் யாவும் தனது வெளிப்பாட்டின் வடிவமே என்பது போலவே வரைந்திருக்கிறார்கள்.

குறிப்பாகப் பறவைகளை, விலங்குகளை ஐரோப்பிய ஒவியங்களைப் போலப் பெரியதாக வரையவில்லை. மாறாக அதன் இயல்பில், அதன் வடிவ அளவிலே வரைகிறார்கள். குரூர மிருகங்களை வரையும் போது அதன் குரூரரத்தை துல்லியமாகவே சித்தரித்திருக்கிறார்கள்.

பாறைகளைச் சீன ஒவியர்கள் அளவிற்கு உலகில் வேறு எவரும் வரைந்திருப்பார்களா எனத் தெரியவில்லை.

இவான் துர்கனேவின் படைப்பு ஒன்றில் இயற்கை பிரம்மாண்டமான பெண்வுருக் கொண்டு பூமியின் அடியில் தோன்றுகிறது. அந்த இயற்கையிடம் ஒருவன் எது குறித்து இயற்கை கவலைப்படுகிறது எனக்கேட்கிறான்.

தாக்குதலுக்கும் தற்காப்பிற்கும் இடையில் சமநிலையற்றுப் போய்விட்டது. அதில் சமநிலையைக் கொண்டுவரவே முயற்சிக்கிறேன். ஈயின் கால்தசைகளுக்கு அதிகப் பலத்தை எப்படிக் கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறாள் இயற்கை அன்னை.

ஆம். நண்பர்களே, இயற்கை பலவீனமாவற்றை உறுதி செய்யவே துணை நிற்கிறது. வலிமையுள்ள ஈயின் கால்களை உருவாக்கவே இயற்கை முனைகிறது.

ஏன் ஈக்களுக்கு வலிமையான கால்கள் தேவைப்படுகின்றன. இல்லாவிட்டால் அது எளிதாக அழித்தொழிக்கபட்டுவிடும்.,

இந்த எண்ணம் சீன ஒவியர்களிடம் அழுத்தமாகக் காணப்படுகிறது. அவர்கள் இயற்கை எல்லா உயிர்களையும் சம அளவில் மதிக்கிறது. மரியாதை அளிக்கிறது. அதையே தங்கள் கலையும் பிரதிபலிப்பக்க வேண்டும் என்று கருதினார்கள்.

வூ தாவுச்சூ என்ற சீனாவின் புகழ்பெற்ற ஒவியர் நிலக்காட்சிகளை வரைவதில் தேர்ந்தவர். இவரது கைகளைப் பிடித்துக் கொண்டு கடவுளே படம் வரைகிறார் என்று சீனமக்கள் நம்பினார்கள்.

ஒருமுறை இவர் அரண்மனையின் சித்திரம் ஒன்றை வரைந்து முடித்துவிட்டு கைதட்டினார். ஒவியத்திலுள்ள அரண்மனைக் கதவுகள் தானே திறந்து கொண்டன. பின்பு அவர் மறுமுறை கைதட்டியதும் அக்கதவுகள் மூடிக் கொண்டுவிட்டன. அந்த அளவிற்கு ஒவியங்களுக்கு உயிர்தன்மை அளித்தவர் வூ தாவுச்சூ என்கிறார்கள்.

சீன ஒவியர்களைப் பற்றி இப்படி நிறையக் கற்பனைக் கதைகள் இருக்கின்றன. இவை அவர்களின் கலைத்தன்மை குறித்த வியப்பிலிருந்து உருவானவை..

உலகில் இருப்பதை வரைவதைப் போலவே இல்லாதவற்றையும் வரைந்து பழக வேண்டும். இதனால் கண்எதிரேயுள்ளவற்றை மட்டுமே வரைய வேண்டும் என்ற பிரதிபலிப்பு எண்ணம் மறைந்து போய்விடும்.

சீன நிலக்காட்சி ஒவியர்கள் எல்லையற்ற ஒன்றை வரையவே எப்போதும் முயன்றார்கள். அதன் வழியே தூரத்தையும் ஆழத்தையும் புரிந்து கொள்ள முயன்றார்கள். அகங்காரத்தை ஒழிக்கவே முடிவற்ற நிலப்பரப்பை முன்வைத்தார்கள். அமைதி தான் நிலக்காட்சி ஒவியங்களின் மையம்.

சீனாவில் பௌத்த துறவி ஒருவன் கையில் மணி ஒன்றை ஒலித்தபடியே பயணம் போய்க் கொண்டிருந்தார். ஒரு அதிகாலையில் பயணம் கிளம்பியதும் சட்டெனத் தன் கையில் உள்ள மணியை நிறுத்திவிட்டார். காரணம் மரம் ஒன்றில் மலர்கள் பூத்துக் கொண்டிருந்தன. மணிச்சப்தம் கேட்டால் ஒரு இதழ் மலர்வதற்கு இடையூறு ஆகிவிடக்கூடும் என்பதால் மணியை ஒலிக்கவில்லை.

இப்படிப் பட்டது தான் சீன நிலக்காட்சி ஒவியனின் மனதும்

பனிக்காலத்தில் இலைகள் இல்லாத பிளம் மரத்தில் பூ மலருவதைத் தாவோ நிலையாகவே ஒவியர்கள் கருதினார்கள். அது உயிர்ப்பின் அடையாளம். ஆகவே அதை ஆசையோடு வரைந்திருக்கிறார்கள்.

மலர்கள் தங்களை முழுமையாக வெளிப்படுத்திவிட்டு மறைந்து போகின்றன. அவ்வகையில் ஒவ்வொரு மலரும் ஒரு போர்வீரனே. தன்னை முழுமையாக வெளிப்படுத்தி மரணம் அடைபவனின் வாழ்க்கையைத் தியாகம் என்கிறோம். அது மலர்கள் எப்போதும் செய்யும் வேலையாகும்..

நிலக்காட்சி ஒவியத்தில் காணப்படும் வெட்டவெளி என்பது மனம் சுற்றியலையும் வெளியாகும். அது வெறும் நிலக்காட்சியில்லை.   வெட்டவெளியை அர்த்தப்படுத்திக் கொள்வது பார்ப்பவனின் வேலை.

தண்ணீர் தான் எல்லாக் கற்பனைக்கு மூலம். காரணம் தண்ணீர் மிருதுவானதும் பலமில்லாததுமாகும். ஆனால் தண்ணீர் தான் எந்தக் கடினமானதையும் வெல்கிறது. கண்ணுக்குத் தெரியாமல் எதிலும் நுழைகிறது. எதோடு சேரும் போதும் அதற்கு நன்மையே செய்கிறது. நீரின் வேகத்தை, நிதானத்தை, மௌனத்தை, ரகசியத்தையே கலைஞர்கள் பின்தொடருகிறார்கள்.

நீர் வீழ்ச்சியை வரையும் ஒவியன் ஒவ்வொரு நிமிசமும் அது புதிதாக இருப்பதை உணருகிறான். நீர்வீழ்ச்சிகளுக்கு வயதே கிடையாது. அதில் ஒடும் தண்ணீர் அந்தக் கணத்தின் தண்ணீர் என்று அடையாளப்படுத்துகிறான்.

ஐரோப்பியர்கள் மழையை அதிகம் வரைந்ததில்லை. காரணம் மழை கொண்டாடப்பட வேண்டிய விஷயமில்லை. ஆனால் சீன, ஜப்பானிய ஒவியர்கள் மழையைக் கொண்டாடுகிறார்கள். மழை பெய்வதை ஆன்மீக அனுபவமாகக் கருதுகிறார்கள். முடிவற்ற அழகின் அடையாளமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சீனாவில் ஒவ்வொரு மாதத்தையும் விளக்குவதற்கு ஒரு ஒவியம் வரைந்திருக்கிறார்கள். அதில் பருவநிலை மாற்றம் துல்லியமாக அடையாளப்படுத்தபட்டிருக்கிறது. வாள்வீச்சின் உச்சநிலையைப் போலவே ஒவியன் தூரிகையைக் கையாள வேண்டும் என்று சீன ஒவியர்கள் நினைத்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒவியத்தில் ஒரு ஒவியத்தின்  மையம் முக்கியமானது. ஏதேனும் ஒரு உருவம் மையத்தில் அழுத்தமாக இடம்பெற்றிருக்கும். அதைச்சுற்றியே பின்புலம் வரையப்படும்.

சீன ஐப்பானிய சுருள் ஒவியங்களில் மையமில்லை. நீரோட்டம் போல அது முடிவற்ற காட்சியின் தொடர்ச்சியைச் சித்தரிக்கிறது. எளிய மக்கள் அதிகம் இந்த வகை ஒவியங்களில் அதிகம் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களின் தினசரி வாழ்க்கை துல்லியமாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒவியங்களில் இவ்வளவு நுட்பமாகச் சாமானியர்களின் தினசரி வாழ்க்கை இடம்பெறுவதில்லை.

இயற்கையை வரைய முற்படும் ஒவியன் குன்றுகள் நதிகளுடன், காற்று மழையுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். நாரையை வரைய முயன்ற ஒரு ஒவியர் நாரை போலவே ஒற்றைக் காலில் நடந்து பார்த்தார் என்கிறது ஒவிய வரலாறு..

மலரை வரைய முற்படும் ஒவியன் அதன் தோற்றத்தை அல்ல ஆன்மாவை உணர்ந்து கொள்ள வேண்டும். எதை வரைந்தாலும் மிக நுட்பமாக வரைய வேண்டும் என்ற ஒழுங்குமுறை சீனாவில் இருந்தது.

தூரத்தில் வரையப்பட்ட மனிதர்களுக்குக் கண்கள் வரையக்கூடாது. அதுபோலவே தூரத்து மரங்கள் கிளைகள் கிடையாது. தூரத்து நீர்நிலைகளுக்கு அலைகள் தேவையில்லை ஆனால் மேகத்தைத் தொடுமளவு உயர்ந்திருக்க வேண்டும் என்பது போல வரையறைகள் தெளிவாக உருவாக்கபட்டிருந்தன.

வண்ணங்கள் தியானத்தின் போது ஒருவன் அடையும் பல்வேறு நிலையங்களின் அடையாளமாகக் கருதப்பட்டன. ஆகவே சீன நிலக்காட்சி ஒவியர்கள் வண்ணங்களை ஆன்ம வெளிப்பாடாகவே அடையாளப்படுத்தினார்கள்

சிவப்பும் பச்சையும் ஐப்பானியர்களுக்கு விருப்பமான வண்ணங்கள். அதையே அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். மரபான நிலக்காட்சி ஒவியர்கள தங்கள் ஒவியங்களை விற்கவில்லை. அவற்றைத் தங்களின் அகவெளிப்பாட்டின் அடையாளமாக நினைத்தார்கள் ஆகவே பெரிதும் அதைப் பரிசளிக்கவே செய்திருக்கிறார்கள்.

நித்யத்துவம் குறித்த தேடலே நிலக்காட்சி ஒவியங்களின் பின்புலத்தில் இயங்குகிறது. அதன் காரணமாகவே மன்னர்கள் நிலக்காட்சி ஒவியங்களைத் தங்கள் படுக்கை அறையில் மாட்டிக் கொண்டார்கள். தங்கள் வாழ்வின் நிலையாமையைப்  புரிந்து கொண்டார்கள்  என்கிறது  சீன ஒவிய வரலாறு

ஐரோப்பிய ஒவியங்களின் பாதிப்பு பிற்காலத்தில் சீன நிலக்காட்சி ஒவியர்களிடமும் உருவானது. ஆனால் மரபான நிலக்காட்சி ஒவியங்களை காணும் போது இன்றும் நாம் முடிவற்ற நிலவெளியின் அழகை வியந்து ரசிக்கவும் அதை வரைந்த ஒவியனின் கலைத்திறமையை கொண்டாடவுமே செய்கிறோம்.

••

உதவி

The Myth of Wu Tao-Tzu / Sven Lindqvist

0Shares
0