ராமநாதபுரம் ஜில்லாவில் 1942ல் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியை அன்றைய ஆங்கிலேய அரசு எப்படி ஒடுக்கியது என்பதைப் பற்றிய சிறுநூல் ஒன்றை வாசித்தேன்.
ஏ.வி.திருப்பதிரெட்டியார் என்ற தியாகி இதை எழுதி வெளியிட்டிருக்கிறார். இப் புத்தகத்தைப் பிரிட்டீஷ் அரசு தடைசெய்திருக்கிறது
அதிலிருந்து சில பகுதிகள்
தேசதலைவர்களைக் கைது செய்த செய்தி 1942 ஆகஸ்ட் 9ம் தேதி ரேடியோ மூலம் அறிவிக்கபட்டது. இதைத் தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை அடைத்தார்கள். தொழிலாளர்களுக்கும் வேலைக்குப் போகவில்லை. பள்ளி மாணவர்கள் கூடப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். எங்கும் ஜனசக்தி பொங்கி எழுந்தது.
அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்ங்கள் மறியல்கள் நடைபெற்றன. போலீஸ் ஸ்டேஷன் தாக்கபட்டது, தந்திக்கம்பங்கள் முறிக்கபட்டன. தபால்பைகளைப் பறித்து வீசினார்கள். தாலுகா அலுவலகம் சூறையாடப்பட்டது. ரயில்வே ஸ்டேஷன் தீக்கிரையானது. கள்ளுகடைகளும் தீவைக்கபட்டன. ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் வீட்டில் புகுந்து கும்பல் சூறையாடியது.
இதனால் மக்களை ஒடுக்குவதற்காகப் போலீஸ்காரர்கள் வேனில் வந்து இறங்கினார்கள். அசுரத்தனமான தடிஅடி துவங்கியது. காவலர்கள் ஜனங்களின் மண்டையை உடைத்தார்கள். பிடிபட்ட ஆண்களை நிர்வாணமாக நிற்கச்செய்து வாயில் செருப்பைத் திணித்தார்கள். தொப்புளில் பிள்ளைபூச்சிகளைப் பிடித்துக் கட்டினார்கள். சிலரது நகக்கண்களில் ஊசி சொருகப்பட்டது.
ஒடிய ஆண் பெண்களை வளைத்துப் பிடித்து நிறுத்தி நிர்வாணமாக்கினார்கள். ஆண் பெண் குறிகளில் மிளகுப்பொடிகள் தூவப்பட்டன. மூர்ச்சையாகி விழும் வரை சவுக்கடி தரப்பட்டது. கிராமங்களில் வீடுகளுக்குத் தீவைத்தார்கள்,. உணவுதானியங்களையும் கொளுத்தினார்கள்.
கதர் உடைகள் குல்லாக்கள் கொடிகளைத் தீ வைத்து கொளுத்தினார்கள். தொண்டர்களுக்கு உணவு அளித்தவர்களுக்கும் பலத்த அடி கிடைத்தது. கைது செய்து ரிமாண்டில் வைக்கபட்ட காளியம்மாள் என்பவளின் 14 வயது மகள் பார்வதியை நிர்வாணமாக்கி அவள் பெண் குறியில் கம்பால் குத்தினார்கள். அதைச் செய்த சார்ஜெண்ட் பெயர் லவெட். அவள் தாகத்தில் தண்ணீர் கேட்டபோது மூத்திரத்தை குடிக்கத் தரும்படியாகச் சொன்னார் லவெட். இராமசாமி என்பவனின் மனைவி கமலாம்பாள் முகத்தில் வெற்றிபாக்கு போட்டு துப்பியதுடன் ஒரு ஆணை நிர்வாணமாக்கி அவள் முதுகில் ஏறச்செய்தார்கள்.
தப்பியோடியவர்களின் குடும்பத்தைப் பிடித்து வந்து வீதியில் உட்காரவைத்து அடித்தார்கள். கணவன் முன்னால் மனைவியை வேறு ஒரு போலீஸ்காரனை விட்டுப் புணரச்செய்தார்கள். தொட்டிலில் அழும்பிள்ளையைத் தூக்கவிடாமல் வீட்டோடு தீவைத்து எரித்தார்கள். பிடிபட்டவர்கள் கழுத்தில் விளக்கு மாறு பழைய செருப்பு மாலை போட்டு சாணச்சட்டியை தூக்க வைத்தார்கள். ரேடியோவில் போராட்டச் செய்திகள் ஒலிபரப்பாகிற காரணத்தால் யாரும் ரேடியோ கேட்க கூடாது எனத் தடைஉத்தரவு போட்டார்கள்.
தேசியவாதிகளை கைது செய்து சந்தைக்கடை பஜாரில் நிறுத்தி அவர்கள் வாயில் பூட்ஸை கவ்வி கொள்ளச்செய்து போலீஸார் அங்குமிங்கும் அவர்களை உதைத்துப் பந்தாடினார்கள். பெண்களின் தலைமயிரை பற்றி இழுத்து வந்து அடித்தார்கள்.
போலீஸ் பட்டாளம் கிராமத்தில் புகுந்து மக்களை மிரட்டி 30 கோழிகளை வாங்கிக் கொண்டு போனார்கள்.
ஒரு கிராமத்தில் தப்பி ஒடியவர்களின் வீடுகளுக்குத் தீவைக்க வேண்டி தண்டோரா போட்டார்கள். வீட்டுக்கு ஒரு ஆள் வந்து அந்த வீட்டை தீவைத்து எரிக்க வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது.
துப்பாக்கி சூட்டில் இறந்து போன உடல்களைச் சாலை நடுவே கொண்டுவந்து போட்டு வேடிக்கை செய்தார்கள். இதனால் காங்கிரஸ் என்ற சொல்லை சொல்வதற்கே மக்களிடம் பயம் உருவானது.