சுதிர் மிஸ்ரா

இந்தி திரைப்பட இயக்குநர் சுதிர் மிஸ்ரா பற்றிய ஆவணப்படத்தில் அவர் தான் படித்த சாகர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அங்கே உள்ள மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் உரையாடுகிறார். அப்போது இந்திய இலக்கியத்தில் என்ன படித்திருக்கிறீர்கள் என்று மாணவர்களிடம் கேட்கிறார். ஒருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. ஒரு மாணவன் மட்டும் பிரேம்சந்த் என்கிறான்..

சமகால எழுத்தாளர்கள் ஒருவரையும் படிக்கவில்லையா என்று மறுபடியும் கேட்கிறார்.

ஒரு மாணவன் மட்டும் சேதன் பகத் என்கிறான். இப்படித்தானிருக்கிறது நமது கல்விமுறை. யாரும் எந்த முக்கிய இலக்கியங்களையும் படிப்பதில்லை. செல்போன். தான் உலகம் என்று கோபம் கொள்கிறார். தான் ஒரு திரைப்பட இயக்குநராக உருவாகத் தான் படித்த புத்தகங்களே காரணம் என்கிறார். இந்த ஆவணப்படத்தின் சில காட்சிகளில் அவர் அறையிலிருக்கும் புத்தகங்கள் காட்டப்படுகின்றன. தேடித்தேடிப் படித்திருக்கிறார்.

இது போலவே டெல்லியிலுள்ள ஸ்கூல் ஆப் டிராமாவிற்குச் செல்லும் சுதிர் மிஸ்ரா இவ்வளவு சிறந்த நாடகப்பள்ளியில் படித்துவிட்டு ஏன் சினிமாவை நோக்கி ஒடிவிடுகிறார்கள். பணம் சம்பாதிப்பது மட்டும் தான் நோக்கம் என்று ஏன் ஒரு தலைமுறையே இருக்கிறது. தங்கள் காலத்தில் பணத்தைப் பெரிதாக எண்ணாமல் கலைக்காகவே வாழ்ந்தவர்கள் நிறைய இருந்தார்கள். பணம் தேவை தான் ஆனால் அதற்காகக் கலை சார்ந்த முயற்சிகளை ஏன் முற்றிலும் கைகழுவிவிட வேண்டும் என்று கோபமாகக் கேட்கிறார்

இது போலவே இந்த ஆவணப்படத்தின் இன்னொரு காட்சியில் தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவன உதவியோடு எடுக்கப்பட்ட பல்வேறு திரைப்படங்கள் திரையரங்கிற்கு வராமல் ஒன்றிரண்டு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதோடு முடிந்துபோய்விட்டதை வருத்தமாகத் தெரிவிக்கிறார் நஸ்ருதீன் ஷா இந்தப் படங்களைக் குறைந்த கட்டணத்தில் காட்டலாம் தானே. இதற்கெனப் பார்வையாளர்கள் இருக்கிறார்களே என்று ஆதங்கப்படுகிறார்.

சுதிர் மிஸ்ரா எடுத்த முதல் மூன்று படங்களும் திரைக்கு வரவில்லை. அவை தேசிய விருது பெற்றபோதும் யாரும் அதைத் திரையிடவேயில்லை. சுதிர் மிஸ்ரா எம்.ஏ. சைகாலஜி படித்தவர். அவரது தந்தை ஒரு கணித பேராசிரியர். தாத்தா முன்னாள் முதல்வர். ஆனால் இந்தக் குடும்பப் பின்புலங்கள் யாவையும் துறந்து அவர் நாடோடி போல வாழ்ந்து சினிமா எடுத்து வருவதை அழகாக விவரித்திருக்கிறார்.

குறிப்பாக மும்பையின் உண்மையான வாழ்க்கையை எவ்வாறு அவரது திரைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன என்பதைத் தெரிவிக்கிறார்.

Is Raat Ki Subah Nahin என்ற சுதிர் மிஸ்ராவின் படத்தைத் தான் நான் முதலில் பார்த்தேன். மும்பையின் நிழல் உலகைப் பற்றிய முக்கியமான படம். ஒரு இரவிலே படம் நடக்கிறது. மிகச்சிறந்த படம். இந்தப்படம் மும்பையில் ஒன்றிரண்டு நாட்கள் தான் ஓடியது. ஆனால் டெல்லியில் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

Hazaaron Khwaishein Aisi என்ற அரசியல் படம் ஒன்றை சுதிர் மிஸ்ரா இயக்கியிருக்கிறார் மிசா காலத்தில் நடந்த கதை. மூன்று இளைஞர்களின் வாழ்க்கை எப்படி அரசியலால் மாறிப்போகிறது என்பதை அழகாகச் சித்தரித்திருப்பார்

இது போலவே Chameli படமும் ஒரு மழைநாளில் காத்திருக்கும் பாலியல் தொழிலாளி ஒருத்திக்கும் தற்செயலாக மழைக்கு ஒதுங்கிய ஒரு இளைஞனுக்குமான நட்பைப் பேசுகிறது.

சுதிர் மிஸ்ரா மும்பை சினிமா உலகின் உண்மையான முகத்தை வெளிப்படையாகப் பேசுகிறார். வணிகக் காரணங்களுக்காக அவர்கள் தன்னை எவ்வளவு மோசமாக நடத்துகிறார்கள் என்பதைச் சொல்கிறார்.

சுதிர்மிஸ்ரா பற்றிய ஆவணப்படம் என்றாலும் இந்தி சினிமா உலகின் தனித்துவமான ஆளுமைகளைப் பற்றிய படமாகவும் இதை உருவாக்கியது பாராட்டிற்குரியது.

••

0Shares
0