சுழலும் பார்வைகள்-1

மராத்தி எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலேவிற்கு 2020ற்கான சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது டாடா நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டது. பதினைந்து லட்ச ரூபாய் விருதுத் தொகை தருகிறார்கள். லிம்பாலே மராத்தியின் முக்கிய தலித் எழுத்தாளர். அவரது நான்கு நூல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்

தமிழ் இலக்கிய உலகிலிருந்து இந்த விருதினை இந்திரா பார்த்தசாரதி மற்றும் பேராசிரியர் மணவாளன் இருவரும் பெற்றுள்ளார்கள்.

••

எழுத்தாளர் உம்பர்த்தோ ஈகோவின் நூலகம் என்றொரு வீடியோவைப் பார்த்தேன். அரிய நூல்களைத் தேடித்தேடிச் சேகரித்தவர் உம்பர்த்தோ ஈகோ என்ற அறிவேன். ஆனால் அவரது சொந்த நூலகம் இத்தனை பெரியது என்பது வியப்பளிக்கிறது. ஒரு நூலகத்தினுள் தான் அவர் வசிக்கிறாரோ எனும்படியாக மனிதர் நடந்து போய்க் கொண்டேயிருக்கிறார். வீடு முழுவதும் புத்தகங்கள். இத்தனை அறைகள் முழுவதும் புத்தகங்கள் கொண்ட ஒரு வீட்டினை நாம் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. தான் விரும்பிய ஒரு புத்தகத்தை அவர் தேடி எடுத்து வரும் இந்த வீடியோவில் ஈகோவின் பரந்து பட்ட வாசிப்பும் மேதமையும் எங்கிருந்து உருவானது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

••

The Tale of the Horse:Yashaswini Chandra என்ற யஜஸ்வினி சந்திரா புத்தகம் இந்திய வரலாற்றில் குதிரையின் பங்கினை விரிவாக ஆவணப்படுத்தியுள்ளது. குதிரையைப் பற்றிய சிற்பங்கள். ஓவியங்கள் கதைகள். போர் களத்தில் குதிரைகளின் பங்கு, குதிரைகளைப் பற்றிய கதைப்பாடல் வரை பல்வேறு தளங்களில் குதிரைகளின் வரலாற்றைப் பேசுகிறது. இந்த நூலில் குதிரையின் வழியே இந்திய சரித்திரம் மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது

••

பதினைந்தாம் நூற்றாண்டில் மால்வாவின் ஆட்சியாளராக இருந்த ஹர்சுனிட் கியாத் ஷா ஒரு கலாரசிகன். அவரது ஆட்சியின் போது இசை, நடனம் மற்றும் ஓவியம் செழித்து வளர்ந்தது, கியாத் ஷா ஒரு சாப்பாட்டுப் பிரியர். விதவிதமான உணவு வகைகளை ருசிப்பதில் தீவிர அக்கறை காட்டியவர் அவர் தனக்குப் பிடித்தமான உணவுவகைகள் பற்றி ஒரு சமையல் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். சிறந்த ஓவியங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சமையல் புத்தகத்தின் பெயர் நிமட்னாமா(Nimatnama)

நிமட்னாமா உருது மற்றும் ஃபார்ஸியில் எழுதப்பட்டுள்ளது. இதில் 50 அற்புதமான நுண்ணோவியங்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு உணவு வகைகளின் சிறப்புகளை விளக்குவதுடன் அதன் செய்முறை விளக்கமும் இடம்பெற்றுள்ளது.

500 ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்த அன்றாட உணவுவகைகளைப் பற்றிச் சொல்கிறது நிமட்னாமா. இதில் வடை, சமோசா, அல்வா வகைகள் மற்றும் சிற்றுண்டிகள் அந்த நாட்களில் எவ்வளவு புகழ்பெற்றிருந்த என்பதையும் இன்று ராஜஸ்தானில் விரும்பி குடிக்கப்படும் லஸ்ஸியின் பல்வேறு வகைகள் பற்றியும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிமட்னாமாவின் வழியாக இந்த உணவு வகைகள் கால மாற்றத்தில் எப்படி மாறியிருக்கிறது என்ற வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. சமோசா எப்படி அறிமுகமானது என்பதோடு பல்வேறுவகையான சமோசா வகைகளைப் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது இன்று பிரபலமாக உள்ள நான் பூரி, சப்பாத்தி, ரொட்டி யாவும் நிமட்னாமாவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால் இதில் பரோட்டா கிடையாது. அது பிற்காலத்தில் உருவாகியிருக்கக்கூடும். அது போலவே உருளைக்கிழங்கு பற்றியும் ஒரு குறிப்பும் கிடையாது. பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகே இந்தியாவில் உருளைக்கிழங்கு அறிமுகமாகிப் புகழ்பெறத்துவங்கியது. தக்காளி. முந்திரிப்பருப்பு. மிளகாய். கொய்யாப்பழம், பப்பாளிப்பழம், அன்னாசிப்பழம் போன்றவை இதன் பிறகே இந்தியாவில் அறிமுகமாகின.

அன்று கிச்சடி புகழ்பெற்ற உணவாக இருந்திருக்கிறது. விதவிதமான கிச்சடி பற்றிக் குறிப்புகள் உள்ளன. ஆனால் இதில் புலாவ் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பாரசீக உணவு வகைகளிலிருந்து சூப். கபாப், பிரியாணி போன்றவை எப்படி உருவாக்கப்பட்டன என்பதையும் இதில் அறிந்து கொள்ள முடிகிறது.

மன்னர் எளிமையான உணவு சாப்பிட ஆசைப்படுகிறார் என்றால் அவருக்காக உருவாக்கப்பட்ட அரிசிக் கஞ்சி ,சோளக்கஞ்சி பற்றியும் குறிப்பிடும் இந்நூல் பயணத்திலும் வேட்டையின் போதும் என்ன உணவு வகைகள் தயாரிக்கப்பட வேண்டும் எதை விலக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதில் மான்கறியைக் கொண்டு சமோசா எப்படித் தயாரிப்பது என்ற குறிப்புக் காணப்படுகிறது.

இந்தப் புத்தகம் கரப்பான் பூச்சிகளின் அரசனுக்குத் தான் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது கரப்பான்பூச்சிகளின் அரசனுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட ஏட்டினை கரப்பான்பூச்சிகள் அரிக்காது என்றொரு நம்பிக்கை அந்தக் காலத்தில் இருந்தது. அதுவே இந்தச் சமர்ப்பணத்திற்கான காரணம்.

இன்று இந்த நூலின் பிரதி லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது

**

பிரபல கவிஞர் டிலான் தாமஸ் பற்றிய திரைப்படம் Set Fire to the Stars. இது அவரது கவிதை ஒன்றின் வரியே. இந்தப் படத்தில் போதையின் உச்சத்திலிருக்கும் டிலான் தாமஸைக் கவிதை வாசிக்கத் தயார்ப்படுத்துகிறார்கள். அவரால் எழுந்து நிற்கமுடியவில்லை. தடுமாறுகிறார். மேடைக்குப் போக முடியவில்லை. எப்படியோ சமாளித்து மைக் முன்னால் போய் நிற்கிறார். கூட்டம் ஆரவாரம் செய்கிறது. அவர் தனது கவிதையை வாசிக்க ஆரம்பிக்கிறார். மறுநிமிடம் சபை நிசப்தமாகிறது. டிலான் தாமஸ் தன்னை மறந்து கவிதை பாடுகிறார். போதையின் சுவடேயில்லை. நீருற்று போலக் கவிதை பொங்கி எழுகிறது.

டிலான் தாமஸின் அமெரிக்கச் சுற்றுப்பயணத்தினைப் படம் விவரிக்கிறது. படம் முழுவதும் டிலான் தாமஸ் குடித்துக் கொண்டேயிருக்கிறார். அவரை வைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறவர் பாவம். தாமஸைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிப்போகிறார். “you’re scared of your talent என்ற ஒரு காட்சியில் பிரின்னின் தாமஸிடம் சொல்கிறார். அது உண்மைதானோ எனும்படியாக படம் முழுவதும் தாமஸ் நடந்து கொள்கிறார்

••

0Shares
0