செகாவின் சகோதரி

விடிகாலையின் போது எல்லா ஊர்களும் தனது பெயர்களை இழந்து விடுகின்றன. இயக்கம் தான் ஊர்களின் பெயர்களை, அடையாளத்தை உருவாக்குகிறது. பனிமூட்டம் கலையாத விடிகாலையில் யால்டா வசீகரமான கனவுவெளியைப் போலிருக்கிறது என்று ஆன்டன் செகாவ் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார்.

ஊரும் அதன் நினைவுகளும் அதற்குக் காரணமாக மனிதர்களுமே அவரது எழுத்தின் ஆதாரங்கள். ஆன்டன் செகாவ் தன்னை ஒரு போதும் மாநகரத்தின் மனிதராகக் கருதவில்லை. மாஸ்கோவின் தொலைவிலுள்ள சின்னஞ்சிறிய கிராமத்திலே தான் வாழ்ந்திருக்கிறார். தனது வீட்டிலே இலவச மருத்துவமனையும் சிறிய பள்ளிக்கூடம் ஒன்றையும் நடத்தியிருக்கிறார். அவரது உதவியால் அருகிலுள்ள ஊர்களில் இரண்டு பள்ளிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

காலரா காலத்தில் கிராமம் கிராமமாகப் பயணம் செய்து இலவச மருத்துவச் சிகிச்சை அளித்திருக்கிறார். சைபீரியாவில் தண்டனை பெற்று வரும் கைதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஆயிரக்கணக்கான மைல் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

செகாவின் அறையில் ஒரு எழுதும் மேஜையும் சுவரில் டால்ஸ்டாயின் படமும் காணப்படுகிறது. மாப்பசானை விரும்பி படித்திருக்கிறார்.

செகாவின் கதையுலகில் மறக்கமுடியாத பெண் கதாபாத்திரங்கள் நிறையவே இருக்கிறார்கள். இரண்டு பக்கக் கதைக்குள் அவரால் பெண்ணின் மனதைத் துல்லியமாகச் சித்தரித்துவிட முடிந்திருக்கிறது.

செகாவின் நிழலாக இருந்தவர் என அவரது சகோதரி மரியாவைக் குறிப்பிடுகிறார்கள். காசநோயாளியாகச் செகாவ் அவதிப்பட்ட நாட்களில் தாயை போல அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். பல நேரங்களில் செகாவின் கதைகளை அவர் சொல்லச் சொல்ல எழுதியிருக்கிறார். தனது கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்துத் தங்கையிடம் நிறைய விவாதித்துள்ளதாகச் செகாவே குறிப்பிடுகிறார்

ஆன்டன் செகாவின் மறைவிற்குப் பிறகு அவரது எழுத்துக்களைப் பாதுகாத்து அவருக்கான அருங்காட்சியகத்தை உருவாக்கியவர் மரியா. அவரது அயராத முயற்சியின் காரணமாகவே யால்டாவில் செகாவ் அருங்காட்சியகம் சிறப்பாக உருவானது.

Chekhov’s Sister என்றொரு நாவலை W.D.வெதெரெல் எழுதியிருக்கிறார். இந்த நாவல் செகாவின் வாழ்க்கையினையும் செகாவ் நினைவகத்தைக் காப்பாற்றுவதற்கு மரியா எடுத்த முயற்சிகளையும் விரிவாகப் பதிவு செய்துள்ளது

செகாவ் தனது தங்கையின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அதை அவரது குறிப்புகளிலும், கடிதங்களிலும் காணமுடிகிறது. செகாவின் புகைப்படங்கள், கடிதங்கள், கையெழுத்துப்பிரதிகளைத் தேடிச் சேகரித்து முறையாக ஆவணப்படுத்தியிருக்கிறார் மரியா.

தனது சகோதரனின் மகத்தான ஆளுமைக்குப் பின்னால் நிழல் போலத் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறார் மரியா. இந்த நாவல் மரியாவின் மீது தனித்த வெளிச்சத்தைப் பரவவிடுகிறது.

செகாவை விட மூன்று வயது இளையவர் மரியா, ஆறு குழந்தைகள் கொண்ட செகாவ் குடும்பத்தின் ஒரே பெண். பத்து வயதில் மரியா தாகன்ரோக் மரின்ஸ்கி மகளிர் பள்ளியில் கல்வி கற்றார். தந்தையின் கடன் காரணமாகக் குடும்பம் மோசமான சூழலை சந்தித்தது .ஆகவே இரண்டு ஆண்டுகளில் அவரது படிப்பு நின்று போனது

பின்பு மாஸ்கோவிற்கு இடம் மாறியபின்பு அங்கே தனியார் பள்ளி ஒன்றில் பயின்றார். 1882 இல் பட்டம் பெற்றார். பின்னர்ப் பெண்களுக்கான தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். இசையிலும் ஒவியத்திலும் தனித்திறமை இருந்தது. மாஷா வரைந்த ஓவியங்கள் இன்றும் செகாவ் மியூசியத்தில் காணக்கிடைக்கின்றன.

ரஷ்ய கிராமங்களில் கல்வி எவ்வளவு மோசமானது என்று தெரியுமா. இப்போதைய உடனடி தேவை படித்த திறமையான, நல்ல உள்ளம் கொண்ட ஆசிரியர்களே என்று கார்க்கிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் செகாவ் குறிப்பிடுகிறார். இந்த எண்ணம் தான் மாஷாவைப் பள்ளி ஆசிரியராக்கியது

மெலிகோவோவில் செகாவ் பண்ணைத்தோட்டம் வாங்கிய பிறகு மாஷா வீட்டைச் சுற்றி பெரிய பூந்தோட்டம் அமைத்தார். செகாவைக் காண வரும் நோயாளிகளுக்கு உதவி செய்வது, செகாவின் எழுத்துப்பணிக்கு உதவி செய்வது. குடும்ப நிர்வாகம். பதிப்பாளர்களுடன் கடித உறவு என அனைத்திலும் ஆர்வமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மாஷாவை தவிர வேறு எவராலும் செகாவிற்கு அறிவுரை சொல்ல இயலாது. ஆகவே செகாவின் காதல் விவகாரங்களில் அவரைக் கடிந்து கொண்டதோடு ஓல்காவை திருமணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுரை சொன்னவர் மரியா.

ஹிட்லரின் துருப்புக்கள் யால்டா நகரத்தைக் கைப்பற்றிய போது, அங்குள்ள செகாவ் அருங்காட்சியகத்தை நாஜி முகாமாக மாற்ற முயன்றார்கள். மாஷா அதைத் தடுத்து நிறுத்தியதோடு அதை அழிவிலிருந்து பாதுகாத்திருக்கிறார்.

தனது வாழ்நாள் முழுவதையும் செகாவின் எழுத்துகளையும் நினைவுகளையும் முன்னெடுப்பதிலே மாஷா கழித்திருக்கிறார். திருமணமே செய்து கொள்ளாத அவர் தனது 94 வயதில் இறந்து போனார்

மாஷா இல்லையென்றால் இன்று செகாவ் மறக்கப்பட்டிருப்பார். செகாவின் நாடகங்களை அனுமதியின்றி மேடை ஏற்றுவதைத் தடுத்த மாஷா அதில் எந்தத் திருத்தமும் செய்யக்கூடாது என்பதற்கு நீதிமன்ற தடையும் வாங்கியிருக்கிறார். அது போலவே செகாவின் படைப்புகளை முறையாகத் தொகுத்து செம்பதிப்பாக 30 தொகுதிகளைக் கொண்டு வந்தவர் மாஷா. அத்தோடு செகாவின் வெளியிடப்படாத படைப்புகள், கடிதங்களையும் தொகுத்து ஆவணப்படுத்தியிருக்கிறார். மாஷாவின் முயற்சிகளுக்கு உடனிருந்து உதவியவர் வர்கா என்ற போலந்து பணிப்பெண்

1900 கோடையில் செகாவ் The Three Sisters நாடகத்தை எழுதத் தீர்மானித்தபோது ரஷ்ய நாடக உலகில் நட்சத்திரமாக விளங்கும் ஒல்கா நிப்பரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் அதைத் தனது வீட்டார் அறியாமல் ரகசியமாக வைத்திருந்தார். இந்தத் திருமணத்தில் ஓல்காவின் தாயிற்கு இஷ்டமில்லை.

மாஷாவிற்கு அண்ணனின் திருமணம் பற்றித் தாமதமாகவே தெரிய வந்தது. அவரால் அதை ஏற்க முடியவில்லை. செகாவை மாஸ்கோ செல்லவிடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தினார். இந்த நாட்களில் அண்ணன் தங்கைக்கு நடுவே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளை மையமாகக் கொண்டு Chekhov and Maria என்றொரு திரைப்படம் 2007ல் வெளியாகியுள்ளது.

மருத்துவரான செகாவின் வருவாயில் தான் அவரது குடும்பம் நடந்து வந்தது. செகாவின் இரண்டு சகோதரர்களுக்கும் பெரிய வருவாய்க் கிடையாது. ஆகவே அவர்களும் மனைவி குழந்தைகளுடன் செகாவோடு ஒன்றாகவே வாழ்ந்து வந்தார்கள். இவ்வளவு பெரிய குடும்பத்தை மாஷா நிர்வாகம் செய்து வந்தார். ஆகவே ஓல்காவை திருமணம் செய்து கொண்டதும் குடும்ப வருவாய் நின்றுவிடுமோ என்ற பயம் அவருக்குள்ளிருந்தது. ஆனால் செகாவ் தனது வருவாய் தனது குடும்பத்திற்கானது மட்டுமே என்று உறுதியளித்தார்

செகோவின் மைத்துனர் கான்ஸ்டான்டின் நிப்பர் ரயில்வே துறையின் என்ஜினியராகப் பணியாற்றினார். அந்த நாட்களில் ரயில் பாதை விரிவாக்கம் முழு வேகத்தில் நடைபெற்றுவந்தது. ஆகவே அவருக்கு நிறைய வருவாய்க் கிடைத்தது. முக்கியப் பிரமுகராக வலம் வந்தார். அத்துடன் ஓல்கா புகழ்பெற்ற நடிகையாக இருந்தார் என்பதால் அவர்கள் குடும்பம் மிகவும் வசதியாக விளங்கியது.

அவரது கதைகளில் வருவது போலவே செகாவின் திருமண வாழ்க்கையும் ஏமாற்றத்திலே முடிந்தது. ஓல்காவின் மேல்தட்டு வாழ்க்கை செகாவிற்குப் பொருந்தவில்லை. ஓல்கா மாஸ்கோவில் வசித்தார். மாதத்தில் சில நாட்கள் தான் இருவரும் ஒன்றாக இருந்தார்கள். புகழ் இருவரையும் ஒன்று சேர்ந்த்து. ஆனால் மனம் பிரித்து வைத்தது. காசநோயால் அவதிப்பட்ட ஆன்டன் செகாவின் உடல்நிலை மோசமானதற்கு ஓல்கா முக்கியக் காரணம் என மாஷா நினைத்தார். அந்தக் கோபத்தை அண்ணனிடம் காட்டினார். ஆனால் செகாவ் ஒரு போதும் ஓல்காவை குற்றம் சொல்லவில்லை.

ஆன்டன் செகாவ் மூன்று சகோதரிகள் என்றொரு நாடகம் எழுதியிருக்கிறார். அந்த நாடகத்தில் வரும் ஓல்கா கதாபாத்திரம் மரியாவின் சாயலைக் கொண்டிருக்கிறது. அவள் ஒரு பள்ளி ஆசிரியை. திருமணம் செய்து கொள்ளாதவள். நாடகத்தில் வரும் மற்ற இரண்டு சகோதரிகளிடம் காணப்படும் குணங்களும் கூட மரியாவையே நினைவுபடுத்துகின்றன. இந்த நாடகத்தில் அன்றைய ரஷ்ய குடும்பத்தின் நிலையை, உறவிற்குள் நடைபெறும் அபத்தமான நிகழ்வுகளை, குடும்பச் சொத்திற்கான சண்டையைச் செகாவ் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

குறிப்பாக நாடகத்தின் ஒரு காட்சியில் இன்றுள்ள வாழ்க்கையை முறை எவ்வளவு முட்டாள்தனமானது.போலியானது. அருவருப்பானது என்பதை நூறு இருநூறு வருஷங்களுக்குப் பின்பு தான் உணர்வார்கள். அன்று இவற்றை நினைத்துப் பார்க்கும் போது எவ்வளவு இழிவான வாழ்க்கையை மேற்கொண்டிருந்தோம் என்று தோன்றும் என்கிறார்.

இந்த நாடகத்தில் வரும் மூன்று பெண்களும் திருமணம் என்ற ஒற்றைப் புள்ளியால் இணைக்கபடுகிறார்கள். மூத்தவள் திருமணத்திற்காக ஏங்குகிறாள். ஆனால் திருமணம் நடைபெறவில்லை. நடுவில் உள்ளவள் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். ஆனால் அது சந்தோஷமாக இல்லை. மூன்றாவது சகோதரி மாஸ்கோ சென்று நல்ல மணமகனை தேடி மணக்க கனவு காணுகிறாள். செகாவின் குடும்பத்திற்குள் நடைபெற்ற சண்டைகள். பிரச்சனைகள் நாடகத்தில் வேறு வடிவில் வெளிப்படுகின்றன. அன்னை மனைவி சகோதரி என மூன்று பெண்கள் அவர் வாழ்விலும் எழுத்திலும் தொடர்ந்து இடம்பெறுகிறார்கள்.

எமிலி பிராண்டே சகோதரிகளின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்த நாடகத்தை எழுதியிருக்கக் கூடும் என்றும் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

செகாவின் நண்பரும் ஓவியருமான ஐசக் லெவிடன் மரியாவை காதலித்தார். 1886ம் ஆண்டின் கோடைகாலத்தில் ஒரு நாள் மரியா எஸ்டேட்டிலிருந்து காட்டினை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓவியர் லெவிடனைச் சந்தித்தார். இருவரும் உரையாடியே நடந்தனர்.

லெவிடன் திடீரென்று ஒரு இடத்தில் அவளது முன்னால் மண்டியிட்டு தனது காதலைத் தெரிவித்தார். இதனால் வெட்கமடைந்த மரியா, எதுவும் பேசாமல், முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு, வீட்டிற்குத் திரும்பி ஓடினாள். அன்று நாள் முழுவதும் தன் அறையில் அழுது கொண்டே இருந்தாள்.

வழக்கம் போல் லெவிடன் இரவு உணவிற்கு அவர்களின் வீட்டிற்கு வந்தார். ஆனால் மரியா தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. மரியா ஏன் சாப்பிட வரவில்லை என்று செகாவ் கேட்டபோது, அவரது சகோதரர் மைக்கேல் அவள் நாள் முழுவதும் அறையை மூடிக்கொண்டு அழுது கொண்டிருப்பதாகச் சொன்னார்.

ஏன் என்று புரியாத செகாவ் அவளது அறைக்கதவைத் தட்டினார். கண்ணீரை மறைத்துக் கொண்டு கதவைத் திறந்த மரியாவிடம் என்ன நடந்தது என்று கேட்டார். தன்னை லெவிடன் காதலிப்பதை பற்றிச் சொல்லிய மரியா தனக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை என்று வெளிப்படையாகப் பேசினார்

லெவிடனின் காதல் லீலைகளை அறிந்த செகாவ் அந்தக் காதலை ஏற்க மனமின்றி, உனக்கு லெவிடனைப் பற்றித் தெரியாது. அவனால் எந்தப் பெண்ணுடனும் கொஞ்ச காலத்திற்கு மேல் நெருக்கமாக இருக்க முடியாது. உதறிச் சென்றுவிடுவான். அத்தோடு அவனுக்கு வேசைகளுடன் பழக்கம் அதிகம் என உண்மையைச் சொல்லியிருக்கிறார்.

மரியா அதைப் புரிந்து கொண்டு லெவிடனை விட்டு விலகியிருக்கிறாள். செகாவ் போலவே லெவிடனும் இளவயதிலே நோயுற்றவர். இதயசிகிட்சைக்காக ஐரோப்பாவிற்குச் சென்று திரும்பிய லெவிடன் தனது இறுதி நாட்களில் மரியாவிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார்

ஒருவேளை நான் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்திருந்தால் உன்னைத் தான் மணந்து கொண்டிருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

ஆன்டன் செக்கோவின் புகழ்பெற்ற உருவப்படம் ஒசிப் பிரேஸால் வரையப்பட்டதே. அந்த ஓவியம் வரைவதற்குச் செகாவை சம்மதித்து அமரச் செய்தவர் லெவிடனே. இருவரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தார்கள்.

செகாவ் வாழ்ந்த நாட்களில் ரஷ்ய சமூகம் மாறிக் கொண்டிருந்தது. குறிப்பாகப் பிரெஞ்சு பண்பாட்டின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. உயர்குடி மக்களின் விருந்து, நடனம், ரசனை என யாவும் மாறியிருந்தன. இன்னொரு பக்கம் மிகவும் மோசமான ஏழ்மை, வறுமை. வரிச்சுமை எனத் தேசம் தடுமாறிக் கொண்டிருந்தது.

அரசாங்க ஊழியர்களின் அதிகார துஷ்பிரயோகம். ஊழல் மற்றும் போலித்தனங்களைக் கண்டு மக்கள் கோபம் அடைந்தார்கள். அதைத் தான் செகாவ் தனது கதைகளில் வெளிப்படுத்தினார். குறிப்பாகத் தோல்வியுற்ற திருமணங்களே செகாவ் கதையின் முக்கியக் கருப்பொருள்.

செகாவின் The man in the case கதையில் வரும் பைலிகோவ் மாற்றங்களை விரும்பாத மனிதர். அவர் பள்ளியில் கிரேக்க ஆசிரியராகப் பணியாற்றுகிறார், அவர் விதிகள் மீறப்படுவதை ஏற்காதவர். தன்னைச் சுற்றி நடைபெறும் அனைத்து மாற்றங்களிலும் ஆழ்ந்த சந்தேகம் கொண்டவர், கடந்த காலத்தைப் பொற்காலம் என்று கொண்டாடக் கூடியவர். எந்த மாற்றமும் தன்னைப் பற்றிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர். இதற்காகத் தன்னைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போல உருவாக்கிக் கொண்டு அதற்குள் வாழ்ந்து வருகிறார். ஊரில் உள்ள அனைவரும் அவரை வெறுக்கிறார்கள். அந்தப் பள்ளியில் வேலை செய்யும் இளம்பெண் வரிங்கா மீதான ஈர்ப்பு அவரைக் குழப்பத்திற்குள்ளாக்குகிறது. அவர் காதலிப்பதாக வதந்தி பரவுகிறது. மற்றவர்கள் கேலி செய்கிறார்கள். அதில் நிலைகுலைந்து போகிறார். பள்ளிச்சுற்றுலாவின் போது அவரும் வரிங்காவும் சைக்கிளில் செல்கிறார்கள். அந்தப் பயணம் உள்நோக்கமுடையது என்று வதந்தி பரவுகிறது. இதனால் வேதனை அடைகிறார் பைலிகோவ். இலை உதிர்வது போல அவரது மரணம் எளிதாக நடந்தேறுகிறது.

தன்னைச் சுற்றிய உலகம் பைலிகோவ் போன்ற மனிதர்களால் நிரம்பியிருக்கிறது என்பதைச் செகாவ் நன்றாக உணர்ந்திருந்தார். இவர்கள் செகாவையும் போலித்தனமான வாழ்க்கையினுள் இழுத்தார்கள். இந்த நெருக்கடிகளால் அவர் மனச்சோர்வடையும் போது தனது இசை மற்றும் உரையாடல்களால் அவரை மீட்டவர் மரியா.

செகாவின் மறைவிற்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை யாரை வைத்து எழுதுவது என்ற கேள்வி எழுந்தது. அப்போது மரியா அது இவான் புனினால் மட்டுமே முடியும். அவர் ஒருவரே ஆன்டன் செகாவை நன்கு அறிந்தவர் என்று பதில் அளித்தார். அத்தோடு இவான் புனினிற்கே ஒரு கடிதமும் எழுதினார். இவான் புனின் அதை ஏற்றுக் கொண்டு About Chekhov: The Unfinished Symphony என்ற நூலை எழுதியிருக்கிறார். அதை முழுமையாக முடிப்பதற்குள் புனின் இறந்துவிட்டார். என்றாலும் செகாவின் ஆளுமையைச் சிறப்பாக வெளிப்படுத்தும் விதமாக இதனைப் புனின் எழுதியிருக்கிறார்.

ஆன்டன் செகாவின் கதைகளைத் தேடி சேகரித்து ஆவணப்படுத்துவது எளிதான பணியில்லை. தனது கதைகளின் கையெழுத்துபிரதிகளை அவர் பாதுகாத்து வைக்கவில்லை. அவற்றைப் பதிப்பாளர்களிடம் கேட்டு வாங்கி வெளியான கதைகளுக்கும் அதற்குமான வேறுபாடுகளை ஆராய்ந்து தொகுத்திருக்கிறார் மரியா. அது போலவே செகாவ் தனது காதலிகளுக்கு எழுதிய கடிதங்களையும் கூடச் சேகரித்திருக்கிறார். ஆனாலும் நிறையக் கடிதங்கள் மற்றும் கையெழுத்துப்பிரதிகள் தொலைந்து போயிருக்கின்றன ஓல்கா நிப்பரிடமிருந்து செகாவிற்கு எழுதப்பட்ட காதல்கடிதங்கள் தந்திகளை அவர் மரியாவிடம் கொடுக்கவிரும்பவில்லை. தணிக்கை செய்து அதைத் தானே வெளியிட்டிருக்கிறார்.

ஆன்டன் செகாவின் புகழை விற்பனை பொருளாக மாற்ற முயன்ற சில பதிப்பாளர்கள் அவரது மறைவிற்குப் பின்பு செகாவ் பெயரில் வெளிவராத புதிய கதைகளை வெளியிட்டார்கள். அவர் எழுதாத கடிதங்களைத் தாங்களே உருவாக்கி பதிப்பித்தார்கள். சைபீரிய சிறை அதிகாரியிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக ஒரு குறுநாவல் ஆங்கிலத்தில் வெளியானது. இவை யாவும் போலி என்பதை மரியா நிரூபித்தார்.

இது போலவே செகாவ் தனது காதலிகளுக்கு எழுதிய கடிதங்களில் பல போலியானவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார் செகாவின் சொந்தக் கடிதங்களில் 4,500 மட்டுமே எஞ்சியிருக்கிறது 10,000 க்கும் மேற்பட்டோர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடிதம் எழுதியிருக்கலாம் என்கிறார்கள்.

செகாவின் மரணத்திற்குப் பிறகு அவரது உயிலின் படி அனைத்து சொத்துகளும் மரியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதை ஓல்கா முழுமனதோடு ஏற்றுக் கொண்டார். செகாவிற்கு உரிமையான எந்தச் சொத்திற்கும் அவர் உரிமை கோரவில்லை.

செகாவின் சகோதரர்கள் மற்றும் ஓல்கா இணைந்து செகாவின் படைப்புகள். வங்கிச்சேமிப்பு, வீடு, நிலம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் மாஷாவிற்குச் சட்டப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார்கள். இதனால் 80,000 ரூபிள் மாஷாவிற்குக் கிடைத்த்து. அந்தப் பணம் அவளைப் பணக்காரப் பெண்ணாக்கியது. மாஷா ஆசிரியர் வேலையைக் கைவிட்டு முழுமையாகச் செகாவ் நினைவகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடத் துவங்கினார்

செகாவ் நினைவகத்தை நிர்வகிப்பது பெரும் சவலாக இருந்தது. புரட்சி, உள்நாட்டுப் போர், ஸ்டாலினின் பயங்கரவாதம் மற்றும் ஜெர்மன் ஆக்கிரமிப்பு என அத்தனையும் சமாளித்து மரியா நினைவகத்தைச் சிறப்பாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்.

இன்று அந்த நினைவகம் ரஷ்யாவின் புகழ்பெற்ற பண்பாட்டு மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. அங்கே செகாவின் கதைகளைக் கூடி வாசிப்பது. நாடகங்கள் நிகழ்த்துவது. இலக்கிய வெளியிடுகள். கருத்தரங்குகள் என ஆண்டுமுழுவதும் தொடர்நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அந்த நினைவகத்தில் மரியா வரைந்த ஒவியங்களும் அவள் இசைத்த ப்யானோவும் காட்சிக்கு வைக்கபட்டிருக்கின்றன.

டால்ஸ்டாய் இறந்தபிறகு அவரது இல்லத்தை நினைவகமாக மாற்றும் முயற்சியில் அலெக்சாண்ட்ரா(சாஷா) என்ற டால்ஸ்டாயின் மகள் ஈடுபட்டார். 1921ல் அவர் செகாவின் தங்கை மரியாவை மாஸ்கோவில் சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். அந்தச் சந்திப்பின் போது எப்படி நினைவகத்தை நிர்வகிப்பது என்பது குறித்து உரையாடியிருக்கிறார்கள். அரசின் தலையீடு அதிகமிருப்பது குறித்து அலெக்சாண்ட்ரா வருத்தம் தெரிவித்த போது மரியா அதைக் கண்டுகொள்ளாமல் நாம் பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.

டால்ஸ்டாயின் மகள் சாஷா. தஸ்தாயெவ்ஸ்கியின் மனைவி அன்னா. செகாவின் தங்கை மரியா ஆகிய மூவரும் மகத்தான படைப்பாளிகளின் புகழையும் நினைவுகளையும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கான நினைவகத்தை உருவாக்கி நடத்தியிருக்கிறார்கள். இன்று ரஷ்ய இலக்கிய மேதைகளை நாம் நினைவு கொள்கிறோம். கொண்டாடுகிறோம். ஆனால் அந்தச் சுடரை ஏற்றிய, தாங்கிப்பிடித்த பெண்களை மறந்துவிட்டோம்.

இந்த மூவரையும் இலக்கியத்தின் மூன்று தேவதைகள் என்று விமர்சகர் எம். துரோவ்ஸ்கயா குறிப்பிடுகிறார். உண்மையான வாசகமது. செகாவின் நினைவுகளுக்குள் ஒரு வானவில் போல மரியா என்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்.

0Shares
0