செகாவின் துப்பாக்கி

புதிய குறுங்கதை

4.4.23

ஆன்டன் செகாவின் கதையிலிருந்த துப்பாக்கி திருடு போயிருந்தது. யார் அதைத் திருடியது எனத் தெரியவில்லை. ஆனால் அந்தத் துப்பாக்கி ஒரு வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. திருடு போன துப்பாக்கியைப் பற்றிச் செகாவிடம் எப்படித் தெரிவிப்பது என்று கதாபாத்திரங்களுக்குத் தெரியவில்லை. ஒருவேளை திருடியதும் வேறு ஒரு கதாபாத்திரமாக இருக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது. செகாவ் தனது கதையிலிருந்த துப்பாக்கி திருடப்பட்டதை அறிந்து கொள்ளாமல் வேறு கதைகள் எழுதுவதில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். சில கதாபாத்திரங்கள் அவரது பல கதைகளிலும் வந்து போவதால் அவர்கள் வழியாக இந்தத் திருட்டைப் பற்றிச் செகாவிடம் சொல்வது என முயன்றார்கள். ஒவ்வொரு முறையும் செகாவிடம் இதைப்பற்றிக் கதாபாத்திரங்கள் பேச முற்படும் போது அவர் உண்மை சம்பவம் எதையாவது சொல்லி அதன் பேச்சைக் கேட்க மறந்து போவார். இதனால் கதாபாத்திரங்கள் கவலையடைந்தார்கள். திருடப்பட்ட துப்பாக்கி எந்தக் கதாபாத்திரத்தை நோக்கி நீளும் என்று தெரியாத பயமும் அவர்களுக்கு இருந்தது. செகாவின் வேறு கதையில் துப்பாக்கி இடம் பெற்றபோது அது களவு போன துப்பாக்கி தானா எனக் கதாபாத்திரங்கள் ஆராய்ந்தன.. ஆனால் அது வேறுதுப்பாக்கி என்பதைக் கண்டு கொண்டதோடு ஒரே துப்பாக்கி இரண்டு கதையில் இடம்பெறுவதில்லை என்பதைக் கண்டு கொண்டன. ஒரு முறை செகாவ் காதல் கதை ஒன்றை எழுதிக் கொண்டிருக்கும் போது அதில் அவர் எழுதாத ஒரு வரி தானே உருவானது. அந்த வரியில் துப்பாக்கி தொலைந்து போனதைப்பற்றிய தகவல் இருந்தது. தான் எழுதாத வரி எப்படிக் கதையில் வந்தது என்று செகாவிற்குப் புரியவில்லை. காதல் கதையில் துப்பாக்கிக்கு என்ன வேலை என்று யோசித்தார். பின்பு அவரே வேடிக்கையான குரலில் காதல்கதைகளின் முடிவைத் துப்பாக்கி தானே தீர்மானிக்கிறது என்று சொல்லிக் கொண்டார். பாவம் கதாபாத்திரங்கள். அதன் உலகில் நடக்கும் மாற்றங்களை உலகம் அறிவதேயில்லை. கதையிலிருந்து திருடு போன துப்பாக்கியை பற்றி எழுத்தாளர் ஒரு போதும் கவலைப்படப் போவதில்லை. காரணம் அந்த துப்பாக்கி ஒரு போதும் வாசகனை  சுடாது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

0Shares
0