செசானும் எமிலி ஜோலாவும்


வாழ்வில் வெற்றியடைவது எல்லோருக்கும் எளிதாக நடந்துவிடுகிற விஷயமில்லை. அதுவும் இரண்டு நண்பர்களில் ஒருவன் பெயரும் புகழும் அடைந்த பிறகு மற்றவன் வெறும் ஆளாக, எந்த அங்கீகாரமும் வருமானமின்றி இருக்க நேரிடும் எனில் அவர்களுக்குள் உள்ள உறவில் கசப்பே மிஞ்சும்.

சிலரது மேதமை அவர்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தை அடையும் போது தான் அறியப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. வான்கோ வாழ்ந்த போது அவரது ஒரு ஒவியம் கூட விற்பனையாகவில்லை. பணமில்லாமல் அவதிப்பட்டார். இன்று ஒரு ஒவியத்தின் விலை ஐநூறு கோடிக்கும் மேல். அப்படித் தான் பால் செசானுக்கும் நடந்தது. அவர் தன் வாழ்நாளில் பாதியை அங்கீகாரமில்லாமல் புறக்கணிக்கப்பட்ட கலைஞனாகவே வாழ்ந்தார்.

ஒவியர் பால் செசானும் எழுத்தாளர் எமிலி ஜோலாவும் இணைபிரியா நண்பர்கள். ஒன்றாகப் படித்தவர்கள். செசான் ஜோலாவை விட வயதில் மூத்தவர். பள்ளி நாட்களில் துவங்கிய இவர்களின் நட்பு வாழ்வின் இறுதி வரை நீண்டது. இந்த இணையற்ற  நட்பையும் , இருவர் வாழ்விலும் அடைந்த வெற்றி தோல்விகளையுமே படம் பேசுகிறது

Cézanne and I என்ற 2016 ல் வெளியான பிரெஞ்சுப் படத்தை இயக்கியவர் Danièle Thompson என்ற பெண் இயக்குனர், Paul Cézanne ஆக நடித்திருப்பவர் Guillaume Gallienne , Emile Zolaவாக நடித்திருப்பவர் Guillaume Canet. இருவருமே மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதுவும் செசானாக நடித்துள்ள Gallienne பிரமாதப்படுத்திவிட்டார்.

புறக்கணிக்கப்பட்ட கலைஞனின் மனநிலை இப்படித்தான் இருக்கும் என்பதற்கு இவரது நடிப்பு ஒரு சான்று. Cinematographer Jean-Marie Dreujou பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சு சமூகத்தை மிக அழகாகத் திரையில் கொண்டுவந்திருக்கிறார். குறிப்பாகத் தெற்கு பிரான்சின் நிலக்காட்சிகளும் ஒவியம் வரைவதற்காகச் செசான் செல்லும் இடங்களும், ஜோலாவின் வீடும். அவர்கள் ஒன்றாகப் பயணிக்கும் இடங்களும்  கவித்துவமாகப் படமாக்கபட்டிருக்கின்றன. படம் முழுவதும் வண்ணங்களும் ஒளியும் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது.

The Life of Emile Zola என்ற பால்முனி நடித்த ஹாலிவுட் படத்தை முன்னதாகப் பார்த்திருக்கிறேன். அது எழுத்தாளர் ஆவதற்கு எமிலி ஜோலா எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை மட்டுமே முதன்மைப்படுத்தியது. இந்தப் படத்தோடு ஒப்பிட்டளவில் அது எளிய அறிமுகம் மட்டுமே.

பிரெஞ்சு இலக்கியத்தில் எமிலி ஜோலா ஒரு எரிநட்சத்திரம் போல அறியப்பட்டார். அடிநிலை மக்கள் பற்றியும் வேசைகளைப் பற்றியும் சுரங்கத் தொழிலாளர்கள் பற்றியும் அவர் எழுதிய நாவல்கள் பரபரப்பாகப் பேசப்பட்டன. ஆபாசமாக எழுதுகிறார் என்று ஒரு பக்கம் குற்றசாட்டு எழுந்தது. இன்னொரு பக்கம் எளியோர்களின் உலகை மிகவும் யதார்த்தமாகச் சித்தரிக்கிறார் இவரே புரட்சிகர எழுத்தாளர் என்று கொண்டாடப்படுவதும் நடந்தது.

இந்தப் படம் ஜோலாவின் எழுத்து வாழ்க்கையை விடவும் செசானின் உலகையே அதிகம் கவனப்படுத்தியுள்ளது. குறிப்பாக அவர்களுக்குள் உள்ள நட்பை, அதன் சிக்கலான இயல்பை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

••

எமிலிஜோலா சிறுவயதிலே தந்தையைப் பறி கொடுத்தவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் பால் செசான் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு பேங்கர். படத்தின் ஆரம்பக் காட்சி ஒன்றில் முதன்முறையாகச் செசானின் வீட்டிற்குப் போகிறார் ஜோலா. அப்போது அவரது நடையில் தயக்கமிருக்கிறது. எங்கே தன்னை வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார்களோ என்ற தயக்கத்திலே அவர் உள்ளே நடந்து போகிறார். ஆனால் செசானின் குடும்பம் இனிமையாக வரவேற்கிறது. படம் முழுவதும் செசானின் குடும்பத்துடன் ஜோலாவிற்கு உள்ள நட்பும், எமிலி ஜோலாவின் தாயோடு செசானுக்கு உள்ள நேசமும் மிக உண்மையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது

ஒரு காட்சியில் எமிலி வீட்டில் விருந்து நடக்கிறது. அங்கே செசானின் ஒவியங்களை விருந்தினர்கள் பலரும் கேலி செய்கிறார்கள். செசான் ஆத்திரமடைந்து சண்டையிடுகிறார். கோவித்துக் கொண்டு வீட்டினை விட்டு வெளியேறுகிறார். வீட்டினைச் சுற்றிய தோட்டத்தில் உலவுகிறார். திரும்பி வரும் போது ஜோலாவின் அம்மா அந்த விருந்து தன்னை மூச்சுமுட்டச் செய்கிறது என்று படியில் அமர்ந்திருக்கிறார். இறுக்கமான முடிச்சிடப்பட்ட அவரது உடையைத் தளர்த்துவதற்குச் செசான் உதவுகிறார்.

நீயும் என்னைப் போல மூச்சுமுட்டிப் போய்த் தானே இருக்கிறாய் என்று அவர் கேட்கிறார். அது விருந்து குறித்த பேச்சு மட்டுமில்லை. செசானின் அப்போதைய வாழ்க்கை நிலையைப் பற்றியது. செசான் தனது தாயிடம் அன்பு செலுத்துவது போல நடந்து கொள்கிறார். அவர்களுக்குள் அந்த நிமிசம் ஏற்படும் பாசமும் நெருக்கமும் அபாரமாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.  தன் தாயின் மரணத்தை பற்றி செசானிடம் ஜோலா பேசும் இன்னொரு காட்சியும் மறக்கமுடியாதது.

வேறு ஒரு காட்சியில் செசானின் வீட்டினைத் தேடிப் போகிறார் ஜோலா. அவர் இப்போது புகழ்பெற்ற எழுத்தாளர். செசானின் தந்தை அவரை வரவேற்கிறார். செசான் நிச்சயம் பெரிய ஒவியராக வருவார் என்று ஜோலா நம்பிக்கையோடு பேசுகிறார். அதைச் செசானின் தந்தை நம்பவில்லை. ஜோலா வந்திருப்பதை அறிந்த செசானின் தாய் அவரை மடக்கி தோட்டத்தைப் பார்க்கலாம் வா எனக் கணவன் அறியாமல் தனியே அழைத்துக் கொண்டு போகிறாள். அங்கே தன் மகனை பற்றி ஆசையாக விசாரிக்கிறார். அவன் நிச்சயம் வெற்றிப் பெறுவான் என்று நம்புகிறார். அந்தக் காட்சியில் ஜோலா, செசானின் சகோதரனைப் போலவே நடந்து கொள்கிறார்.

இது போலச் சில அபூர்வமான தருணங்கள் படத்தில் காட்சிப்படுத்தபட்டுள்ளன. இன்னொரு காட்சியில் செசானும் ஜோலாவும் இருட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்கள் மனம்விட்டுப் பேசிக் கொள்ளும் அந்தக் காட்சி தான் எத்தனை ரம்மியமாக உள்ளது. பாதி இருளும் வெளிச்சமும் கொண்ட அக் காட்சி ஒவியம் போலவே உள்ளது.

ஒவியங்களின் விலை அதிகம். புத்தகங்களின் விலை குறைவு. அதனால் தான் மக்கள் புத்தகங்களை வாங்குகிறார்கள் என்று ஜோலா சொல்கிறார். அதைக் கேட்ட செசான் புத்தகங்களின் விலைக்கு என் ஒவியங்களை விற்பேன் என்கிறார். அவர்கள் இருவரும் தங்களின் கனவுகளை, கடந்தகாலத்தை, நிகழ்காலத்தின் வலிகளை மிகவும் நிஜமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சியது.

Zola – The Masterpiece என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். அந்த நாவல் செசானின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை மையமாக் கொண்டது. அந்த நாவலை இலக்கிய உலகம் கொண்டாடியது. ஆனால் எமிலியைத் தேடி வரும் செசான் நீ ஒரு திருடன். என் அந்தரங்கங்களை ஒளிந்து பார்த்து எழுதியிருக்கிறாய் என்று கோவித்துக் கொள்கிறார். இவரும் இது குறித்து வாக்குவாதம் செய்து கொள்கிறார்கள். அப்போது எமிலியின் மனைவி அலெக்சாண்டிரின் வந்து சேருகிறாள். சட்டென அவர்கள் சண்டை முடிந்து நண்பர்களைப் போல அமைதியாகப் பேசிக் கொள்கிறார்கள்

உன்மத்தம் கொண்ட கலைஞனாகச் செசான் தன் ஒவியங்கள் மீது தானே அதிருப்தி கொள்கிறார். ஒவியம் சரியாகயில்லை என்று கிழித்து எறிகிறார். தன்னால் ஒரு சிறந்த ஒவியத்தை வரையமுடியவில்லை என்று கோபம் கொள்கிறார். நகரவாழ்விலிருந்து தப்பித் தெற்கு பிரான்சின் அழகிய நிலவெளியை தேடிப் போகிறார். எங்கும் அவரால் நிம்மதியாக வரைய முடியவில்லை. அவரது அகம் எரிந்து கொண்டேயிருக்கிறது. பெண்ணுறவால் கூட அதைத் தணிக்கமுடியவில்லை.

தனது மாடலாக இருந்த HORTENSE என்ற இளம்பெண்ணுடன் நெருங்கிப் பழகி அவள் வழியே ஒரு பையனைப் பெற்றுக் கொள்கிறார். அந்தப் பையனை தானே வளர்க்க முடியாமல் தன் பெற்றோர்களிடம் விட்டு வைக்கிறார். காலம் தன்னைப் பகடையாடுகிறது என்று வருத்தப்படுகிறார். அவரது ஒவியங்கள் நிகரற்றதன்மை கொண்டிருந்த போதும் செசானின் நடத்தையும் வெளிப்படையான பேச்சும் அவரது ஒவியங்களை நிராகரிக்கச் செய்தன. ஒரு காட்சியில் பாரீஸில் ஒவியக்கண்காட்சியைக் காண அவரும் எமிலியும் செல்லும் ஒரு காட்சியிருக்கிறது. அதில் தான் எத்தனை வேகம், துடிப்பு. தனது ஒவியம் மட்டுமில்லை. பல முக்கிய ஒவியர்களின் ஒவியங்களும் காட்சிக்கு வைக்கப்படாமல் நிராகரிக்கபட்டுள்ள என்பதைச் செசான் சொல்வதும், இதைக் கொண்டாட அவர்கள் கூடிக் குடிப்பதும் கலைஞர்களுக்கு மட்டுமேயான சந்தோஷம்.

படத்தின் துவக்கத்தில் நீண்ட காலத்தின் பிறகு எமிலியும் செசானும் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒருவரையொருவர் ஏறிட்டுப் பார்க்கிறார்கள். உருவம் மாறியிருக்கிறது. தலை வழுக்கை விழுந்துள்ளது. ஆனால் அதே நட்பு. அதே ப்ரியம். ஒருவரையொருவர் ஆசையாகக் கட்டிக் கொள்கிறார்கள். செசானின் வருகையை எமிலியின் மனைவி அலெக்சாண்டிரின் விரும்பவில்லை. அவள் ஒரு காலத்தில் செசானை விரும்பியவள். அவரைக் காதலிக்கவும் செய்தாள். ஆனால் அதைச் செசான் பொருட்படுத்தவில்லை. இப்போது அவள் செசானை தேவையற்ற தொந்தரவாகவே கருதுகிறாள். செசான் அவளை மாடலாக நிற்க வைத்து ஒவியம் ஒன்றை வரைகிறார். அப்போது அவர்களுக்குள் ஏற்படும் உரையாடல் அலாதியானது.

இப்படம் ஒவியர் பால் செசானை மட்டுமில்லை அவரது சமகால ஒவியர்களான மோனே, பிசாரோ, எனப் பலரையும் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஒரு காட்சியில் பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பசான் எமிலி ஜோலா கதை படிப்பதைக் கேட்க வருகிறார். இப்படிப் பிரெஞ்சு இலக்கியம் மற்றும் ஒவிய உலகின் ஆளுமைகளைப் படம் ஊடு இழையாகச் சித்தரிக்கிறது

இத்தனை கொந்தளிப்பும் ஆவேசமும் கொண்ட செசான் எப்படி Still Life ஒவியங்களை வரைந்தார் என்று வியப்பாக இருக்கிறது. அதுவும் செசான் வரைந்த ஆப்பிள்கள் நிகரற்றவை. அந்த ஆப்பிள்களின் நிறமும் வடிவமும் வியப்பளிக்கின்றன. காலத்தின் கையில் இருந்து பறிக்கபட்ட ஆப்பிள் போலவே அதைச் செசான் வரைந்திருக்கிறார்.

படத்தின் ஒரு காட்சியில் ஒவிய விற்பனையகம் ஒன்றில் செசானின் ஒவியத்தில் இருந்த ஆப்பிள்களை மட்டும் தான் கிழித்து விற்றுவிட்டதாக விற்பனையாளர் சொல்கிறார். அதைச் செசான் ஆட்சேபம் செய்வதில்லை. செசானுக்குத் தான் வரைந்த ஒவியம் எதன் மீதும் திருப்தியில்லை. அவர் இயற்கையை ஆழ்ந்து அவதானிக்கிறார். நிமிசத்துக்கு நிமிசம் ஒளி மாறிக் கொண்டேயிருக்கிறது. இதன் காரணமாக நிறம் மாறிக் கொண்டேயிருக்கிறது. அது செசானைத் தொந்தரவு செய்கிறது

ஒரு காட்சியில் நிர்வாணமாண தனது காதலியை வரைய முற்படும் போது அவளது தோலின் நிறம் மாறிக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் செசான், மார்பின் நிழலை, வளைவை வரைவது எளிதில்லை என்று சொல்கிறார். அந்தப் பெண் மிகுந்த கோபத்துடன் நான் வெறும் பொம்மையில்லை. இது எனது உடல். உன்னால் எனக்கு ஒரு சந்தோஷத்தையும் தர முடியாது. ஒவியத்திலுள்ள பெண்ணோடு படுத்துச் சுகம் தேடிக் கொள் என்று சண்டையிடுகிறாள். அந்தக் காட்சியைக் கதவிற்குப் பின்புறமிருந்து எமிலி ஜோலா கேட்கிறார். ரகசியமாக அவர்கள் அறியாமல் அங்கிருந்து விடைபெற்றுப் போகிறார். ஆனால் நீண்ட காலத்தின் பின்பு அதே காட்சி அவரது நாவலில் இடம் பெறுகிறது. அதை அறிந்த செசான் மிகுந்த கோபம் கொள்கிறார். துரோகி என்று சண்டையிடுகிறார்.

இரண்டு நண்பர்களுக்குள் ஏற்பட்ட சண்டை என்று அதைக் கருதமுடியாது. இரண்டு தீவிரமனநிலை கொண்ட கலைஞர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். படைப்பாற்றல் என்பது வெறும் நகல் எடுப்பதில்லை என உணர்ந்தவர்களின் சண்டையது.

எமிலி ஜோலா சொல்கிறார், ஒவ்வொரு நாவலும் ஒரு அவஸ்தை. என்னால் இனி ஒரு போதும் நானா போலவோ, ஜெர்மினல் போலவே ஒரு நாவலை எழுதிவிட முடியாது.

ஒவியர்களிடமிருந்து ஜோலா நிறைய கற்றுக் கொண்டிருக்கிறார். அதை அவரது எழுத்தை வாசித்தவர்களால் நன்றாக உணரமுடியும்.

படத்தில் எமிலி ஜோலா தனது வீட்டில் துணிகள் துவைக்கும் இளம்பெண் ஜேனை ரகசியமாகக் காதலிக்கிறார். அவள் ஒரு சூரியன். அந்த வெளிச்சமே தன்னை இயங்க வைக்கிறது என்கிறார். அவ்வளவு ஆசை இருந்தால் அவளை அடைந்துவிடு எனச் செசான் ஆலோசனை சொல்கிறார். இல்லை என் மனைவி தான் எனது அஸ்திவாரம். அதை எதன் பொருட்டு அசைக்க முற்பட மாட்டேன் என்கிறார் எமிலி. துணி துவைக்கும் இடத்தில் அந்த அழகான பெண்ணைச் செசான் மற்றும் எமிலி இருவரும் ரகசியமாகப் பார்க்கும் ஒரு காட்சியிருக்கிறது. அதில் எமிலியை பார்த்து செசான் கண்சிமிட்டுவார். நட்பின் தெறிப்பது.

படத்தின் இறுதியில் தனிமையில் ஒவியம் வரைந்தபடி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் செசானைத் தேடி வருகிறார் எமிலி ஜோலா, அவருக்கும் வயதாகியிருக்கிறது.

எமிலி வந்திருப்பதாக ஒரு ஆள் காட்டில் ஒவியம் வரைந்து கொண்டிருந்த செசானிடம் சொல்கிறார்.

அதனால் என்று கேட்டபடியே கோபம் தீராமல் படம் வரைந்து கொண்டிருக்கிறார் செசான். ஆனால் சில நிமிஷங்களில் அந்தக் கோபம் மறைந்து போய் நண்பனைக் காண ஒடத்துவங்குகிறார். கையில் கோலுடன் அவர் வேகவேகமாக நடந்தும் ஒடியும் நண்பனைக் காண வருகிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் வந்திருக்கிறார் என்பதால் ஆட்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஒருவராக நின்றபடியே ரகசியமாகத் தன் நண்பனைக் காணுகிறார் செசான்.

எமிலியிடம் யாரோ செசானைப் பற்றி விசாரிக்கிறார்கள். உயர்வாகவே சொல்லுகிறார். ஆனால் தன் திறமையைத் தானே அழித்துக் கொண்டுவிட்டான் என்று எமிலி ஆதங்கமாகச் சொன்ன மறுநிமிசம் கூட்டத்திலிருந்து விலகி எமிலியை விட்டுப் போகிறார் செசான். நண்பர்களுக்குள் நிஜமான உறவு இப்படிதானே இருக்கும்.

செசானின் தந்தை இறந்த பிறகு அவருக்குப் பெரும்செல்வம் வந்து சேர்ந்தது. அதை வைத்துக் கொண்டு தனது கடன்களை அடைத்த செசான் நிம்மதியாக வாழ ஆரம்பித்தார். அவரது ஒவியங்கள் புகழ்பெறத்துவங்கின. ஒவிய உலகில் அவருக்கான இடம் உருவாகியது. விமர்சகர்கள் அவரது ஒவியங்கள் குறித்து வியந்து பேச ஆரம்பித்தார்கள். செசானின் மீது புகழ் வெளிச்சம் படரத்துவங்கியது

ஒவியம் வரைவதற்காகச் சென்ற ஒரு நாளில் புயல் மழையில் சிக்கிக் கொண்டு நனைந்து மயங்கி விழுந்தார் செசான். அவரை வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு தான் வந்தார்கள். அடைமழையில் சிக்கியதில் அவரது நுரையீரல் முழுவதும் சளி கட்டிக் கொண்டது. நிமோனியா பாதிப்பில் செசான் இறந்து போனார்.

எமிலியோ தான் விரும்பிய ஜேன் என்ற இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவள் வழியே இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார் . இதனால் அவரது மனைவி சண்டையிட்டு விவாகரத்து கோரினார். ஆனால் ஜோலாவிற்கு அலெக்சாண்டிரினை பிரிய மனமில்லை. ஜேனை விட்டு பிரிந்து குழந்தைகளைத் தானே வளர்க்க ஆரம்பித்தார். தனது 62 வயதில் பாரீஸில் இருந்த தனது வீட்டின் படுக்கை அறையில் குளிர்காய்வதற்காக நெருப்பு உருவாக்க பயன்படுத்தி நிலக்கரியில் இருந்து வெளிப்பட்ட கார்பன் மோனோ ஆக்சைடு புகை ஏற்படுத்திய பாதிப்பில் கணவன் மனைவி இருவரும் பாதிக்கபட்டார்கள். மறுநாள் அலெக்சாண்டிரினா மயக்கநிலையில் இருந்தார். ஆனால் எமிலி ஜோலா புகையால் மூச்சு திணறி இறந்து போயிருந்தார். இந்தத் துர்மரணம் இன்று வரை ஒரு புதிராகவே இருந்து வருகிறது.

எமிலி ஜோலாவின் இறுதி ஊர்வலத்தில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான ஆட்கள் கலந்து கொண்டார்கள். எமிலி ஜோலா திட்டமிட்டுக் கொல்லப்பட்டார் என்ற சந்தேகம் நீண்டநாளாக இருந்து வருகிறது.

படத்தில் செசான் மற்றும் ஜோலாவின் மரணம் குறித்த செய்திகள் இறுதிகாட்சியில் வரிகளாகத் திரையில் ஒடுகின்றன. கலைஞர்களான இரண்டு நண்பர்களின் கதையை இத்தனை அழகாக, உணர்ச்சிபூர்வமாக, கவித்துவமாகச் சொல்ல முடிந்திருப்பது இயக்குனர் டேனில் தாம்சனின் சாதனையே.

0Shares
0