சென்னையின் சிறிய புத்தகக் கடை

சென்னை அண்ணாசாலையில் ஸ்பென்சர் பிளாசா அருகிலுள்ள Taj Connemara விடுதியினுள் Giggles Bookshop என்றொரு சிறிய புத்தகக் கடை இருந்தது. மிகச்சிறிய புத்தகக் கடை ஆனால் அரிய நூல்கள் அங்கே கிடைக்கும். அக் கடையை நடத்தியவர் நளினி செட்டூர். அவர் ஒரு தீவிர இலக்கிய வாசகர். புத்தகக் கடையில் எந்தப் புத்தகம் எங்கேயிருக்கிறது என அவருக்கு மட்டும் தான் தெரியும். 1998ல் அந்தக் கடைக்கு முதன்முறையாகச் சென்றேன். அதன்பிறகு பலமுறை சென்றிருக்கிறேன். தற்போது அக்கடை நடைபெறவில்லை. நிர்வாகத்தினர் காலி செய்ய வைத்துவிட்டார்கள்.

மற்ற புத்தகக் கடைகளைப் போலப் பணியாளர்கள் கிடையாது. ஒன்றின் மீது ஒன்றாகப் புத்தகங்கள் குவிந்து தான் கிடக்கும். நாமாக நுழைந்து தேடி எடுக்க வேண்டும். சில நேரம் அவரே புத்தகங்களை எடுத்துத் தருவார். கம்ப்யூட்டர் பில்லிங் கிடையாது. நூறடி அளவுள்ள இடமே அந்தப் புத்தகக் கடை. ஆனால் தங்க சுரங்கம் போல வைத்திருந்தார்.

யார் என்ன புத்தகங்களை வாங்குவார்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். சில நேரம் அவரே நல்ல புத்தகங்களைச் சிபாரிசு செய்வார்.

லேண்ட்மார்க் தான் அன்று சென்னையின் மிகப்பெரிய புத்தகக் கடை. அங்கே புத்தகங்களின் விலை அதிகமாகயிருக்கும். ஆனால் அதே புத்தகத்தை நளினி செட்டூர் நூறு ரூபாய் வரை குறைவாகவே தருவார். சில நேரங்களில் பாதி விலையில் கூடத் தருவதுண்டு.

ஏதாவது புத்தகத்தைத் தேடிக்கொண்டிருப்பதாகத் தெரிந்தால் அதைத் துண்டுப்பேப்பரில் எழுதி வாங்கிக் கொண்டு எப்படியாவது வாங்கித் தந்துவிடுவார். Christopher Unborn என்ற Carlos Fuentes நாவலைத் தேடி சலித்த போது அவர் தான் வாங்கிக் கொடுத்தார்.

சென்னையின் மிகச்சிறிய புத்தகக் கடை இதுவே. ஆர்.கே.நாராயண், வி.எஸ். நைபால், ஜான் மோரிஸ், வில்லியம் கோல்டிங். அமித் சௌத்ரி, அமிதாவ் கோஷ்,  பங்கஜ் மிஸ்ரா, ராமச்சந்திர குஹா போன்ற ஆங்கில எழுத்தாளர்கள் பலரும் அவரது வாடிக்கையாளர்களே.  ஆயிரம் ரூபாய் முதலீட்டில் 1974ல் ஆரம்பிக்கப்பட்ட சிறிய புத்தகக் கடையது.

இன்று கன்னிமாராவைக் கடக்கும் போது அக்கடையில்லாத வெறுமை மனதில் படர்கிறது.  நளினி செட்டூரை போன்ற ஒருவரைக் காண்பது அரிது.

சிறிய புத்தகக் கடைகளுக்கெனத் தனியழகு இருக்கிறது. அந்தக் கடைக்குள் பிரவேசிப்பது விருப்பமான ஒருவருடன் கைகோர்த்துக் கொள்வது போன்ற நெருக்கம் தரக் கூடியது.

••

0Shares
0