சென்னையில் விமானம்

மதராஸில் விமானம் அறிமுகமான நாட்களில் எழுதப்பட்ட பதிவுகள்

••

சென்னையில் ஆகாய யாத்திரை

இந்தியாவெங்கும் பிரஸித்தி பெற்ற ஸ்பென்ஸர் நமது சென்னைபுரிக்கு வந்து, மும்முறை ஆகாய யாத்திரை செய்தார். இவர் ஆகாயத்தில் ஏறும்போது புகைக் கூட்டின் துணையினாலே வரும் போது அதை விட்டு அதனோடு சேர்ந்தாற்போல் மாட்டியிருந்த பாராசூட் என்னும் பெருங்குடையைப் பிடித்து அதன் கீழே தொங்கிக் கொண்டு தமக்குச் சிறிதாயினும் அபாயமில்லாதபடி ஷேமமாக வந்திறங்கினார். சற்றேறக்குறைய 3200 அடி உயர மட்டுந்தான் ஏறினார். இவர் இறங்கி வருகையில் இந்திரலோகத்தினின்று தேவ விமானத்தின் வழியாக யாரோ தேவதை பூமியில் வந்திறங்குவது போலிருந்ததைக் கண்டு அங்கு வந்திருந்த பல்லாயிரம் பிரஜைகளும் அவருக்குப் பல்லாண்டு பாடி ஆனந்தமடைந்தார்கள்.

– ‘ஜநாநந்தினி சென்னை 1891 மார்ச்

(ஆசிரியர் அன்பில் எஸ்.வெங்கடாசாரியார் புஸ்த.1.இல.3. பக்கம். 53)

**

ஆகாய விமானமும் சென்னையும்

இப்பொழுதெல்லாம் உலகமெங்கும் ஆகாய மார்க்கமாய் யாத்திரை செய்ய ஆவல் கொண்டிருக்கிறார்கள். நிலத்திலும், நீரிலும் அதிவேகமாய்ச் செல்ல வழியேற்பட்டிருப்பது போதவில்லை. புகைவண்டியும், புகைக்கப்பலும் என்ன வேகமாய்ச் சென்றாலும் அவைகளுக்குண்டான ஸ்தலங்களில்தான் செல்லும். மலை, பள்ளத்தாக்கு, கடல் இவைகளைக் கவனியாமல் எங்கும் விரிந்த ஆகாய மார்க்கமாய்ச் செல்வதென்றால் எல்லோர்க்கும் வெகு விநோதகமாகத்தான் இருக்கும். நித்தியம் வயிற்றுப்பாடே பெரியதாய் இல்லாத சுதந்திர நாடுகளில் கணக்கில்லாத ஜனங்கள் ஆகாய சலனத்தில் வெகு ஊக்கமெடுத்துக் கொள்கிறார்கள்.

ஐரோப்பாவில், ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு விதமான விமானம் கட்டாதவர்களில்லை. அநேக உயிர்ச்சேதம் நடந்தாலும் பெருத்த முயற்சியோடு மேலும் மேலும் விமானங்கள் பத்திரமாகக் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வளவு ஆவலோடு ஜன சமூகம் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால் அது கைக் கொட்டாமல் போகவே போகாது. ஆனால், ஜனங்களுக்குள் இம்மாதிரியான ஆவல் உண்டாவதற்குச் சில வெளி விஷயங்களும் ஒத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் சோறு சோறு என்று கூக்குரலிடும்படி ஒரு ஜன சமூகத்தை வைத்திருந்தால் அவர்களுக்கு விமானங்களைக் குறித்து யோசிக்க மனம் வருமா? சென்ற ஐம்பது வருஷ காலமாகக் கஷ்டமாம் கஷ்டம் என்னும் கவலை பரவி வரும் ராஜ்ஜியத்தில் ஆகாய சலனத்தைக் குறித்துச் செலவு செய்ய யார் முன் வருவார்கள்? ஆகையால்தான் நமது தேசத்தாரால் இதைக் குறித்து ஒரு முயற்சியும் செய்ய முடியவில்லை. கொஞ்சம் வயிற்றுப் பாட்டுக்குக் கஷ்டம் இல்லாத நம் சிற்றரசர்களுக்குக்கூட இதில் மனம் செல்லவில்லை. அவர்களும் இந்தியர்கள்தானே? நம் ஜாதிக்கு நேர்ந்த விபத்து இவர்களையும் விடவில்லை.

இந்தியப் புத்திரர்களாகிய அரசர்களும், ஜமீன்தார்களும், மிராசுதார்களும், இதர ஜனங்களும் மன ஏக்கம் பிடித்து நாள் கழித்து வரும் இக்காலத்தில் இந்தியாவில் மற்றொரு வகுப்பார் வெகு குசாலாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கும் நமது பொதுஜனத்தின் தாழ்ந்த நிலைமைக்கும் சம்பந்தமே இல்லை போல் தோன்றுகிறது. தாம் செய்யும் வேலைகளுக்கு நல்ல சம்பளமும், அதிகாரமும் கிடைத்து யதேச்சையாக இருக்கும் தன்மை உடையவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் தான் புதுப்புது விஷயங்களைக் கவனித்து அவைகளை விருத்தி செய்வதற்கு வேண்டிய முயற்சியெடுத்துக் கொள்ளப் போதுமான சக்தி உடையவர்களாயிருக்கிறார்கள். இப்போது உலகமெல்லாம் மனதைச் செலுத்தும் ஆகாய விமானத்தைக் குறித்து வேண்டிய ஏற்பாடுகள் செய்ய இவர்களால்தான் முடியும். அதன் நிமித்தம்தான் இந்தியாவில் விமானங்களைச் செய்ய நடந்த சிறு முயற்சிகள் கூட ஆங்கிலேயர்களால் செய்யப்பட்டது. சில நாளைக்கு முன் கல்கத்தாவில் ஒரு விமானம் செய்யப்பட்டு ஆகாயத்தில் பறந்ததாகத் தெரிவித் திருந்தோம். இப்பொழுது மற்றொன்று சென்னையில் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் ஆங்கில வண்டிப்பட்டறையாகிய ஸிம்ப்ஸன் கம்பெனியால் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மவுண்ட் ரோடில் பெயர்போன ஓட்டல்வைத்திருக்கும் டாஞ்சலிஸ் (டி ஆஞ்சலிஸ் என்றும் சொல்வதும் உண்டு) என்னும் பிரெஞ்சுக்காரரால் கண்டு பிடிக்கப்பட்டு, தமிழ் வேலைக்காரர்களால் செய்யப்படுகிறது. ஸிம்ப்ஸன் கம்பெனி மானேஜர் மேற்பார்வையின் கீழ் வேலை நடந்து வருகிறது. இப்போது 12 குதிரை சக்தியுள்ள எஞ்சினால் நடத்திப் பார்த்தார்கள். சென்னைக்கு அருகில் நடத்தின் பொழுது திருப்திகரமாகவே இருந்ததாம். மறுபடியும் 25 குதிரை சக்தியுள்ள ஒரு எஞ்சினைச் சேர்த்து விடும் பொழுது எல்லா ஜனங்களுக்கும் காட்டப்படும். இந்த விமானத்தின் மொத்த பளு, எஞ்சின், ஆளோடு சேர்த்து எழுநூறு ராத்தல் தான். இந்தச் சமயத்திற்கு 20 குதிரை சக்தியுள்ள ஒரு எஞ்சினை இந்த விமானத்திற்கு முடுக்கிவிட்டுப் பறக்க வைக்க யத்தனித்து வருகிறார்கள். இம்மாதிரியான விஷயங்களில் கூடிய சீக்கிரத்தில் நம் இந்தியர்களும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

– சி. சுப்பிரமணிய பாரதியார், ஆசிரியர் ‘இந்தியா’

சென்னை  – 12.9.1910

0Shares
0