எழுத்தாளர் சி.சு. செல்லப்பா ஜல்லிக்கட்டு குறித்து அற்புதமான புகைப்படங்களை எடுத்திருக்கிறார், புகைப்படக்கலையின் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்த செல்லப்பா கறுப்பு வெள்ளையில் நிறையப் புகைப்படங்களை எடுத்திருக்கிறார்
மதுரையில் உள்ள மகனது வீட்டில் அவர் வசித்தபோது நான் அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு, தனது புகைப்படங்களில் சிலவற்றைச் செல்லப்பா காட்டியிருக்கிறார், அந்தப் புகைப்படங்கள் என்னவாகின என்று தெரியவில்லை
இன்று வரை அவர் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி எதுவும் நடத்தப்படவேயில்லை. செல்லப்பா முக்கியமான புகைப்படக்கலைஞர் என்பதற்கு இந்த ஒரு புகைப்படம் சாட்சி
எவ்வளவு அற்புதமாக இருக்கிறது பாருங்கள், சரியான கோணம், , ஒத்திசைவு, உணர்ச்சிவெளிப்பாடு, நிகரற்ற அழகு கொண்ட புகைப்படமது,
காளையைப் பொருந்தும் அரிய தருணம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, வாலை இழுத்து பிடித்துள்ள மனிதனின் கை ஒரு புறம், தூக்கி எறியப்பட்டு வீழ்ந்துகிடக்கும் மனிதன் மறுபுறம், ஆவேசத்துடன் பாயும் காளையின் சீற்றம், வேகமெடுத்த அதன் உடற்திமிறல், ஒடுங்கிய நிழல். எழுந்து பரவிய புழுதி, பதறியோடும் கால்கள் என இந்தப் புகைப்படம் தரும் மனவெழுச்சி நிகரற்றது.
அவரது வாடிவாசல் நாவல் தரும் அனுபவத்தின் சாரத்தை இந்த ஒரு புகைப்படம் தந்துவிடுகிறது.
***