ந. பிரியா சபாபதி
(எஸ். ராமகிருஷ்ணனின் “சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்” வாசிப்பு அனுபவம்)

அறிவின் திறவுகோல் புத்தகம். புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும் தங்கச் சுரங்கம் நூலகம். அந்நூலகம்தான் “சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்” என்ற இந்தப் புத்தகத்தின் மையம். அந்த மையத்தைச் சுற்றி நிகழ்பவையே இக்கதை.
நந்து எனும் சிறுவன் வழியாக இக்கதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. இக்காலக் குழந்தைகளின் மனநிலையின் பிம்பந்தான் இந்த நந்து.
‘குழந்தைகளின் பிடிவாதம் பெரியோர்களின் வீராப்பைப் போன்றது அல்ல’ என்பதை நூலகம் செல்வதன் மூலம் நந்து உணர்த்துகிறான். புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றித் தாய்க்கும் மகனுக்கும் நடைபெறும் உரையாடல் வழியாகப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை ஆசிரியர் உணர்த்திச் செல்கிறார்.
நூலகத்தைப் பார்க்கும் பொழுது அதனோடு பிணைப்பு உடையவர்களுக்கு ஏற்படும் வியப்பு நந்துவுக்குள்ளும் ஏற்படுகிறது. இது நமக்குள்ளும் ஏற்படுவதை உணரமுடியும்.
புத்தகங்களை வாசிக்கும் பொழுது கதைக்குள் செல்ல வேண்டுமெனில், “ஒரு கதைக்குள் நாம போகவேண்டுமானால், அதைப் பத்தி நாமளே கற்பனை பண்ணவேண்டும். அது ஒரு விளையாட்டு. அருமையா இருக்கும்” என்ற வரிகள் வாசிப்பதின் நுட்பத்தையும் ஆழத்தையும் உணர்த்துபவையாகும்.
நாம் காணும் அனைத்துப் புத்தகங்களும் அறிவை வளர்ப்பவையாக இருக்காது. சில புத்தகங்கள் நம் மனத்தினைத் தவறு செய்யத் தூண்டுபவையாக, அதற்கு உறுதுணையாக இருக்கும். எனவே, புத்தகங்களைக் கவனமாகக் கையாள வேண்டும் என்பதையும் எழுத்தாளர் அறிவுறுத்துகிறார்.
வாசகர்கள், ‘தன் வாசிப்பின் வேர் எது?’ என்பதை உணர வேண்டும் என்பதையும் ‘உனக்காகப் படி’ என்ற வார்த்தையின் வழியாக வழிகாட்டுகிறார்.
மனிதர்கள் தமது சினத்தின் உச்சத்தில் பெருவார்த்தைகளை வீசுவது போல் கையில் கிடைக்கும் பொருள்களையும் வீசுவார்கள். அதில் முதல் இடத்தைப் பெறுவது புத்தகம்தான். இதை மருத்துவருக்கும் நந்துவிற்கும் இடையே நடைபெறும் உரையாடலை வாசிக்கும் பொழுது இந்த நிதர்சனமான உண்மை புலப்படுகிறது. இது போன்ற தவறினை இனி நாம் செய்யவே கூடாது என்று எழுத்தாளர் வலியுறுத்துகிறார்.
சாக்ரடீஸைப் பற்றிக் கதைமாந்தர்கள் பேசும் பொழுது, “ஆழ்கடலின் அதிசயம் போன்று வாசிப்பின் அதிசயத்தையும்” நாம் அறிய இயலும்.
இந்தப் புத்தகம் புத்தக வாசிப்பைப் பற்றி இளந்தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் அறிவுரைப் புத்தகம். தொடக்க நிலை வாசகர்கள் அனைவரும் இந்தப் புத்தகத்திலிருந்து புதிய பல புத்தகங்களைப் படிக்கத் தொடங்குவது சிறப்பு.