சொல்லின் வலிமை.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பல்வேறு தருணங்களில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது I’m Not Here to Give a Speech.

தலைப்பு அவரது சிறுகதையான I Only Came to Use the Phoneயை நினைவுபடுத்துகிறது.

அவர் ஸ்பானிஷில் நிகழ்த்திய உரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். பெரும்பான்மையான உரைகள் சிறியவை.. இதன் எழுத்துவடிவத்தை மார்க்வெஸ் உருவாக்கியிருக்கிறார். எழுதி வைத்த உரைகளைச் சில தருணங்களில் அப்படியே வாசித்திருக்கிறார்.

மேடைப்பேச்சு குறித்த தனது பயத்தையும் தயக்கத்தையும் ஒரு உரையில் பகிர்ந்து கொள்கிறார். உரையாற்றுவதற்காக விசேச உடைகளை அணிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தனித்துவமான தலைப்பைத் தேர்வு செய்வதுடன், மேற்கோள்களை மனப்பாடம் செய்து கொள்ளத் தேவைப்படுகிறது. மேடையில் நின்று பேசுவது மிகவும் அசௌகரியமானது என்கிறார்.

இதில் 21 உரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் சில விருதுகளுக்கான ஏற்புரைகள். அதில் ஒன்று நோபல் பரிசு பெற்ற போது ஆற்றிய உரை. அது தான் அவரது உரைகளில் அளவில் பெரியது. அந்த உரையில் தனது ஆசான் வில்லியம் பாக்னர் தனது நோபல் பரிசு உரையில் பேசியதை நினைவு கொள்கிறார்.

மார்க்வெஸின் எழுத்தைப் போல முற்றுப்புள்ளியில்லாத நீண்ட ஒற்றை வாக்கியம் போலவே பேசியிருக்கிறார். முதல் உரை பல்கலைக்கழகத்தில் ஆற்றியது. நட்பினைப் பற்றியது. பெரிதாக ஒன்றுமேயில்லை.

அடுத்த உரை தான் எவ்வாறு எழுதத் துவங்கினேன் என்பதைப் பற்றியது. அதில் தன்னுடைய கல்லூரி நாட்களை நினைவுகூறுகிறார். எல் ஸ்பெக்டடார் இதழின் இலக்கிய ஆசிரியர் எட்வர்தோ சலேமியா போர்தோ இன்றுள்ள இளைஞர்களுக்கு எழுத்தில் ஆர்வமே கிடையாது. இளம் படைப்பாளிகளைக் காணுவது அரிதாகிவிட்டது. ஆகவே தான் இதழில் தொடர்ந்து புகழ்பெற்ற எழுத்தாளர்களை வெளியிடுகிறோம் என்று பகிரங்க சவால் விடுத்திருந்தார். அவரது வாயை மூடும்படியாகவே தான் முதற்கதையை எழுதியதாக மார்க்வெஸ் சொல்கிறார்.

அடுத்த இதழிலே அவரது சிறுகதை வெளியானதுடன் தான் நினைத்தது தவறு என்று எட்வர்தோ சலேமியா ஒரு குறிப்பும் எழுதியிருந்தார். அப்படித்தான் மார்க்வெஸின் இலக்கியப் பிரவேசம் நடந்தேறியிருக்கிறது.

தன்னுடைய எழுத்து ஒருவேளை அங்கீகரிக்கப்படாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் எனக் கேள்வி எழுப்பும் மார்க்வெஸ், எழுத்து பிரசுரமாவதைப் பற்றி எழுத்தாளன் கவலைப்படத் தேவையில்லை. தொடர்ந்து அவன் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். தீவிரமான எழுத்து தானே அதற்கான அங்கீகாரத்தை உருவாக்கிக் கொள்ளும் என்கிறார்.

எழுதுவதற்கான விஷயம் கிடைத்தவுடன் அவசரமாக அதை எழுதிவிடுவது கிடையாது. கதைக்கருவை மனதிற்குள் வளர்த்துக் கொண்டேயிருந்து சரியான நேரத்தில் எழுதுவதே தனது வழக்கம் எனும் மார்க்வெஸ். தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலை எழுதுவதற்கான விதை மனதில் விழுந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகே அதை நாவலாக எழுதினேன் என்கிறார்.

ஒரு கதையை உட்கார்ந்து எழுதுவது சிரமமான வேலை. அலுப்பாகிவிடும். ஆனால் கதையை மனதிற்குள் வளர்த்துக் கொண்டேயிருப்பது சுவாரஸ்யமானது. கதையைப் பின்னி வளர்ப்பது சுகமானது. எழுத்தாளனாக அதையே அதிகம் நேசிக்கிறேன் என்றும் குறிப்பிடுகிறார்

புதிய லத்தீன் அமெரிக்கன் சினிமாவின் அடித்தளத்தை உருவாக்குவது பற்றிய காஸ்ட்ரோவின் விருப்பத்தை ஏற்றுக் கியூபாவில் நடைபெற்ற ஒரு விழாவில் மார்க்வெஸ் லத்தீன் அமெரிக்கச் சினிமாவிற்கான நிறுவனம் உருவாவதை பெருமையாக குறிப்பிடுகிறார்

ஐந்து அவரது கதைகளை ஐந்து லத்தீன் அமெரிக்க இயக்குநர்கள் தொலைக்காட்சிக்கான திரைப்படமாக உருவாக்க இருப்பதைப் பற்றியும் விவரித்திருக்கிறார்

செயின்ட்-ஜான் பெர்ஸ் தனது நோபல் பரிசு ஏற்புரையில் குறிப்பிடுவதை இரண்டு உரைகளில் மார்க்வெஸ் நினைவுபடுத்துகிறார். இரண்டும் ஒரு சமூகத்தில் கவிதை மற்றும் கவிஞனின் இடம்பற்றியது.

poetry is first and foremost a mode of life - and of integral life. The poet existed in the caveman, he will exist in the man of the atomic ages because he is an irreducible part of man. From the poetic requirement, the spiritual requirement, religions themselves were born, and through poetic grace, the spark of the divine lives forever in the human flint. When mythologies collapse, it is in poetry that the divine finds refuge; maybe even his relay. And even in the social and immediate human order, when the Bread Carriers of the ancient procession give way to the Torchbearers, it is to the poetic imagination that the lofty passion of the peoples still lights up. quest for clarity.“

தனது நண்பரான கொலம்பிய கவிஞர் அல்வாரோ முட்டிஸ் ஜராமில்லோ பற்றிய அவரது சிறிய உரை அழகானது. கேலியும் கிண்டலும் கொண்டது. அதில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் முன்பு சந்திக்க வேண்டியது அவசியம் தானா எனக் கேட்டுக் கொள்வோம். மிக அவசியமானது என்றால் மட்டுமே சந்திப்போம். அந்த இடைவெளியும் புரிதலும் முக்கியமானது. ஒரேயொரு முறை இந்தக் கட்டுப்பாட்டினை நான் மீறியிருக்கிறேன் என்றும் வேடிக்கையாகச் சொல்கிறார் மார்க்வெஸ்

இன்னொரு உரையில் எழுத்தாளர்கள் ஹூலியோ கோர்த்தசார், கார்லோஸ் ஃபியூண்டஸ் உடன் தான் பாரீஸிலிருந்து மேற்கொண்ட ரயில் பயணத்தை நினைவுகூறும் மார்க்வெஸ், மூவரும் விமானத்தில் பயணம் செய்யப் பயந்தவர்கள் என்கிறார். அன்றிரவு கோர்த்தசார் ப்யானோ எப்படி ஜாஸ் இசையில் இடம்பெற்றது என்பது பற்றிய ஆற்றிய உணர்ச்சிபூர்வ உரையை ஆச்சரியத்துடன் குறிப்பிடுவதுடன், கோர்த்தசாரின் ஆயுதம் அவரது குரல். தன்னுடைய குரலில் அவர் தனது கதையை வாசிக்கக் கேட்டிருக்கிறேன் என்கிறார்

தன் பனிரெண்டாவது வயதில் ஒரு நாள் சாலையில் நடந்து செல்கையில் எதிர்பாராமல் ஒரு சைக்கிள்  மோத வந்தது. திடீரென ஒரு பாதிரியார் கவனிக்கவும் என உரத்துச் சப்தம் எழுப்பினார். அந்தக் குரல் கேட்டு நான் விலகிக் கொண்டேன். சைக்கிள்காரன் தரையில் விழுந்து உருண்டான். அன்று அந்தப் பாதிரியார் ‘இப்போது நீ வார்த்தையின் சக்தியை உணருகிறாயா என்று என்னை நோக்கிக் கேட்டார் அன்று தான் வார்த்தைகளின் வலிமையை நான் கண்டுபிடித்தேன் என்று ஒரு உரையை மார்க்வெஸ் துவக்குகிறார். ஒரு சிறுகதையைப் போல உரையை ஆரம்பித்திருப்பது தனித்துவமானது

தனது தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் பத்து லட்சம் பிரதிகள் விற்பனையானதை ஒட்டிய நிகழ்வில் ஆற்றிய உரையில், எங்கோ ஒரு அறையில் தனித்திருந்து எழுதிய ஒரு நாவலைப் பத்து லட்சம் பேர் தேடிப் படித்திருக்கிறார்கள் என்றால் அது வியப்பானது. இதைக் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்கிறார்.

தனது உரையில் தட்டச்சு செய்த பெண்ணைப் பற்றி மார்க்வெஸ் குறிப்பிடுவது முக்கியமானது.

எஸ்பெரான்சா அராய்சா என்ற பெண்ணை மறக்கமுடியாது, அவள் தான் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கையெழுத்துப்பிரதியைத் தட்டச்சு செய்தவர்.  கார்லோஸ் ஃபியூண்டஸ் நாவலை அவர் தான் தட்டச்சுச் செய்தார். யுவான் ருல்போ நாவலை தட்டச்சுச் செய்திருக்கிறார். அவர் தான் எனது நாவலின் கையெழுத்துப் பிரதியினையும் தட்டச்சு செய்து கொடுத்தார்

தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் முதல் வடிவம் கறுப்பு மை பேனாவில் எழுதப்பட்டது. இரண்டாவது வடிவத்தைச் சிவப்பு மையில் எழுதினேன். மூன்றாவது முறை அது தட்டச்சுச் செய்யப்பட்டது. உடனிருந்து நானே வாசித்துத் திருத்தங்களைச் செய்தேன். ஒரு நாள் எஸ்பெரான்சா தட்டச்சு செய்த நாவலின் இறுதி வடிவத்துடன் பயணம் செய்த போது அவற்றைத் தவறவிட்டுவிட்டார். நாவலின் பக்கங்கள் காற்றில் பறந்தன. வீதியில் பறந்த அவற்றை ஒடியோடி சேகரித்திருக்கிறார். பல பக்கங்கள் ஈரமாகிவிட்டன. அவற்றை உலரச் செய்வதற்காகத் தானே ஒவ்வொரு பக்கமாக அயர்ன் பாக்ஸை வைத்துத் தேய்த்திருக்கிறார். அதை அன்று அவர் என்னிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் நீண்ட காலத்தின் பிற்கு நடந்ததை ஒப்புக் கொண்டார்

கையில் காசில்லாத நிலையில் தபாலில் இந்த நாவலை அனுப்பி வைக்கவே போதுமான பணமின்றிக் கஷ்டப்பட்டேன். என் மனைவி தான் வீட்டுச் செலவிற்காக வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து உதவினார். தபாலில் நாவல் அனுப்பி வைக்கப்பட்டது. பின்பு நடந்தது வரலாறு என்று நெகிழ்ச்சியுடன் நினைவு கொள்கிறார் மார்க்வெஸ்

மார்க்வெஸின் புனைவில் காணப்படும் கவித்துவம் மற்றும் மாயங்கள் எதையும் இந்த உரைகளில் காணமுடியவில்லை. பத்திரிக்கையாளரான மார்க்வெஸின் நிலைப்பாடே பெரிதும் வெளிப்படுகிறது. மார்க்வெஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் பட்டியலைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. அவர் எப்போதும் புகழின் உச்சத்திலே இருந்திருக்கிறார். புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் பேச்சு எவ்வளவு எளிமையாக இருந்தாலும் உடனே அங்கீகாரம் பெற்றுவிடும். அதிக வெளிச்சத்தில் சொற்கள் அர்த்தம் இழந்துவிடுகின்றன.

புனைவில் வெளிப்பட்ட மார்க்வெஸின் சாயலை மட்டுமே அவரது உரைகளில் காணமுடிகிறது. இந்த உரைகளை வாசித்து முடித்தவுடன் இணையத்திலுள்ள அவரது காணொளிகளைப் பார்த்தேன். மெல்லிய குரலில் தான் பேசுகிறார். ஸ்பானிய மொழி புரியாத போதும் அவரது கண்களை, முகபாவனைகளை, பேசும் விதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தன்னுடைய புகழை அவர் நன்கு அறிந்து கொண்டவராகத் தோன்றுகிறார். அதை ரகசியமாக ரசித்தபடியே தான் பேசுகிறார்

••

0Shares
0