சோபியாவின் இரண்டு கதைகள்

 “The Kreutzer Sonata” என்ற டால்ஸ்டாயின் புகழ்பெற்ற கதைக்கு எதிராக டால்ஸ்டாயின் மனைவி சோபியா ஒரு கதையை எழுதியிருக்கிறார். Whose Fault எனப்படும் அக்கதை போஸ்னிஷேவ்வால் சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்ட மனைவியின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

டால்ஸ்டாயின் கதையில் வரும் பெண் தனது சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறாள் என்று கோபம் கொண்ட சோபியா இந்தக் கதையை எழுதியிருக்கிறார். உண்மையில் அந்தக் கதையில் வருவது போல செர்ஜி தனியேவ்,என்ற இசைக்கலைஞருடன் சோபியாவிற்கு நெருக்கம் இருந்தது

அதை ரகசியக்காதலாக டால்ஸ்டாய் கருதியே இக்கதையை எழுதியிருக்கக் கூடும் என்கிறார்கள். .

செர்ஜி தனியேவ் 1895– 97 யஸ்னயா போலியானாவில் இசை கற்பிக்க நியமிக்கப்பட்டிருந்தார். அந்த நாட்களில் இசை ஆர்வம் மிகுந்த சோபியாவுடன் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார்.

.சோபியா தனது நாட்குறிப்பில் இந்தக் கதை குறித்து எழுதியிருக்கிறார்.

வாசகர்கள் எல்லோரும் இந்தக் கதையை எங்களின் சொந்த வாழ்க்கையோடு இணைத்துப் படிக்கிறார்கள். இது தவறான எண்ணத்தை உருவாக்கக் கூடும். உலகத்தின் பார்வையில் என்னை அவமானப்படுத்துவது போலவே இக்கதை எழுதப்பட்டிருக்கிறது

சோபியா “Song Without Words” “Whose Fault?” என இரண்டு கதைகளை எழுதியிருக்கிறார். இரண்டும் தற்போது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வாசிக்கக் கிடைக்கிறது.

டால்ஸ்டாயோடு ஒப்பிட இந்தக் கதை வலுவற்றதாக உள்ளது. தனது தரப்பு நியாயத்தை முதன்மைப்படுத்தவே அவர் கதையை எழுதியிருக்கிறார். அந்தக் கோபத்தை எழுத்தில் காணமுடிகிறது.

கணவரின் கதைக்கு எதிராக மனைவி ஒரு கதையை எழுதியிருப்பது தான் இதன் சுவாரஸ்யம். டால்ஸ்டாய் தனது மனைவி கதை எழுதியிருப்பது பற்றியோ, தனக்கு எதிராக எழுதப்பட்டது குறித்தோ வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த மோதல் அவர்கள் உறவில் இடைவெளியை உருவாக்கியது உண்மை

டால்ஸ்டாயின் மகன் லெவ்வும் The Kreutzer Sonata கதைக்கு எதிராக “Chopin’s Prelude,” என்றொரு கதையை எழுதியிருக்கிறான். தனது மகனின் கதையை வாசித்த சோபியா அவனுக்குத் திறமை போதவில்லை என்றே குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார்.

அலெக்ஸாண்டரா போபோஃப் சோபியாவின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதியிருக்கிறார். இதில் சோபியாவிற்கும் டால்ஸ்டாயிற்குமான உறவின் விரிசலும் கசப்பான அனுபவங்களும் வெளிப்படையாக விவரிக்கப்பட்டிருக்கிறது,

இதில் வேடிக்கை என்னவென்றால் The Kreutzer Sonata கதையைத் தனது தொகுப்பு எதிலும் டால்ஸ்டாய் சேர்த்து வெளியிடக்கூடாது என்று ஜார் அரசாங்கம் தடுத்த போது அதற்கு எதிராக மன்னரை நேரில் சந்தித்து விண்ணப்பம் கொடுத்து டால்ஸ்டாய் தொகுப்பில் அந்தக் கதையை இணைக்கச் செய்தவர் சோபியா. இந்த முரண் தான் விசேசமானது.

டால்ஸ்டாயின் சர்ச்சைக்குரிய இக்கதை ஒரு ஒப்புதல் வாக்குமூலம் போலவே எழுதப்பட்டிருக்கிறது. போஸ்னிஷேவ் என்ற பிரபு தன் இளம்மனைவியின் ரகசியக்காதலைப் பற்றி அறிந்து அவளைக் கொலை செய்துவிடுவதே கதையின் மையம். இசைக்கலைஞரான இளைஞனுடன் தன் மனைவிக்கு ஏற்பட்ட தொடர்பை அவரால் ஏற்கமுடியவில்லை, அந்தக் கோபமே கொலைக்குக் காரணமாக அமைகிறது.

இந்த நிகழ்வை சோபியா தன்னைப் பற்றிய விமர்சனமாக எடுத்துக் கொண்டார். திருமணத்திற்கு முன்பு டால்ஸ்டாயிற்கு இருந்த காதலிகள் பற்றிச் சோபியா அறிவார். திருமணத்திற்குப் பிறகும் அவரது ரகசிய காதல் தொடரவே செய்தது. அதைக் குறித்து டால்ஸ்டாய் குற்றவுணர்வு கொள்ளவில்லை.

ஆனால் சோபியாவிற்கும் தனியேவிற்கும் இடையில் ஏற்பட்ட நட்பை அவர் வெறுத்திருக்கிறார். அதன் பிரதிபலிப்பை இந்தக் கதையில் காணமுடிகிறது

ரஷ்யத் தணிக்கை துறையினரால் இந்தக் கதை தடைசெய்யப்பட்டதோடு ஆங்கிலத்தில் வெளியான போது தபால் துறை இதை ஆபாசமான கதை என்று குற்றம்சாட்டி விநியோகம் செய்ய மறுத்தது

இந்தக் காரணங்களால் கதை சிறுவெளியீடாகக் கள்ளச்சந்தையில் மிகப் பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டது. புத்தகக் கடைகளில் இதை விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டது.

டால்ஸ்டாயின் கதை ஒரு குப்பை என்று எமிலி ஜோலா கடுமையான விமர்சனம் செய்தார். அத்தோடு டால்ஸ்டாய் ஒரு பழைய காலத்துறவி போல ஒழுக்கவாதம் பேசுகிறார் என்று நேரடியாகக் கண்டனம் செய்தார்.

சோபியா எழுதிய கதை அவரது வாழ்நாளில் வெளியாகவில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகே அது வெளியிடப்பட்டது.

1994ல் இந்தக் கதை முதன்முறையாக ரஷ்யாவில் வெளியானது. அப்போது பெரிய கவனத்தைப் பெறவில்லை. 2010ல் மீண்டும் அது வெளியிடப்பட்டபோது அதற்குச் சிறப்புக் கவனம் கிடைத்தது.

சோபியாவின் கதை எனக்கு மைத்ரேயி தேவி எழுதியகொல்லப்படுவதில்லை. என்ற வங்க நாவலை நினைவுபடுத்தியது. தன்னைப் பற்றிப் பொய்யாகப் பிரெஞ்சில் எழுதப்பட்ட காதல்கதைக்கு மறுகதையாக இந்த நாவலை மைத்ரேயி தேவி எழுதியிருக்கிறார்.

தான் படித்த செய்தி ஒன்றை நினைவில் கொண்டு தான் இந்தக் கதையை எழுதினேன் என்று டால்ஸ்டாய் தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். ஆனால் சோபியாவிற்கு அது தனது வாழ்க்கையின் மறுவடிவமாகத் தோன்றியிருக்கிறது.

தன்னைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்கிய அந்தக் கதைக்குச் சோபியா தான் பிழைதிருத்தம் செய்தார் என்பது விசித்திரமான விஷயம்.

அன்றைய டயரிக்குறிப்பில் கதையைப் பிழை திருத்தம் செய்யும் போது மனதில் ஆழமான வேதனை உருவானது என்று சோபியா எழுதியிருக்கிறார்.

அந்த வலியை டால்ஸ்டாய் கண்டுகொள்ளவேயில்லை.

“:

0Shares
0