சோமனதுடி என்ற கன்னடத் திரைப்படத்தை தூர்தர்ஷனில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக பார்த்திருக்கிறேன். அப்போது ஞானபீடம் பரிசு பெற்றுள்ள கன்னட எழுத்தாளரான சிவராம காரந்த் நாவல்கள் எதையும் வாசித்ததில்லை. சோமனதுடி திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
சிவராம காரந்தின் அழிந்த பிறகு, மண்ணும் மனிதர்களும் படித்த பிறகு தான் அவர் மிகப்பெரிய இலக்கிய ஆளுமை என்பதை உணர்ந்தேன். சிவராம காரந்த் நாற்பது நாவல்கள் எழுதியிருக்கிறார். நாடகம், நாட்டுப்புற ஆய்வு, யட்சகானம், குழந்தை இலக்கியம், கலைவரலாறு சுற்றுச்சூழல் ஆய்வு என்று பல்வேறு தளங்களில் தீவிரமாக இயங்கியிருக்கிறார்.

சோமனின் உடுக்கை என்ற இந்த நாவலை 1931ல் சிவராம காரந்த் எழுதியிருக்கிறார். இந்நாவல் தலித் இலக்கியங்களின் முன்னோடி படைப்பாகக் கருதப்படுகிறது. 71ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவல் 2002ல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தி.சு. சதாசிவம் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். (இந்நாவலின் இரண்டாம் பதிப்பு இன்று வரை வெளியாகவில்லை)
சோமனதுடி படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தைச் சிவராம காரந்த் எழுதியிருக்கிறார். ஆனால் படத்தை விடவும் நாவல் நெருக்கமாக உள்ளது. குறிப்பாக நாவல் சோமனின் உடுக்கையொலியில் தான் துவங்குகிறது. சோமனுக்கு உடுக்கை என்பது இசைக்கருவியில்லை. அவனது இயலாமையின் வெளிப்பாடு. பசியின் குரல். நிராதரவான தனது இருப்பின் வலியினை அவன் உடுக்கின் வழியே வெளிப்படுத்துகிறான்.

இருட்டென்றால் இருட்டு அப்படியான இருட்டு என்ற முதல்வரி சோமனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் குறியீடு போலவே எழுதப்பட்டிருக்கிறது. அடர்ந்த காட்டினுள் உள்ள போகனஹள்ளி என்ற கிராமத்தில் வசிக்கும் சோமன் ஒரு பண்ணை அடிமை. அவனுக்குச் சொந்தமாக இரண்டு எருமைகள் இருக்கின்றன. வாழ்நாளில் தனக்கெனச் சொந்தமாக ஒரு துண்டு நிலத்தைப் பெற்று விவசாயம் செய்ய வேண்டும் என்று கனவு காணுகிறான் சோமன். ஆனால் அது எளிதாக நிறைவேறுகிற விஷயமில்லை என்பதை நாவல் விவரிக்கிறது
போகனஹள்ளியில் ஐம்பது அறுபது வீடுகளே இருக்கின்றன. நூறு இருநூறு பேர் தான் அங்கே வசிப்பவர்கள். சோமன் சிறிய குடிசை வீட்டில் வசிக்கிறான். அவனுக்கு ஐந்து பிள்ளைகள். அவன் மனைவி இறந்துவிட்டாள். பெள்ளி என்ற மகள் தான் வீட்டினை நிர்வாகம் செய்து வருகிறாள். சனிய, குருவ, காள, நீல என்று நான்கு பையன்கள். சோமனுக்குத் தனது வயது எவ்வளவு என்று கூடத் தெரியாது, நான் இன்னும் நூறு வருஷம் பொழச்சிருக்க மாட்டனா என்று கேட்கிறான். அவனுக்கு நூறு என்றால் எவ்வளவு என்றே தெரிந்திருக்காது என்கிறார் காரந்த்.
போகனஹள்ளியின் பக்கத்துக் கிராமத்தில் திருவிழா நடக்கிறது. ஊரே திரண்டு அந்தத் திருவிழா காணச் சென்றிருக்கிறார்கள். திருவிழாவில் சாப்பாடு கிடைக்கும் என்பது தான் முக்கியக் காரணம்
திருவிழா நாளில் சாப்பிடும் நாக்கிற்குச் சுவையறியும் சக்தியே கிடையாது என்று காரந்த் எழுதியிருக்கிறார். உண்மை அது. திருவிழாவின் போது காலை உணவும் மதிய உணவும் கிடைத்துவிடும் ஆனால் இரவு உணவு கிடைக்காது. சோமனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் அப்படியான நிலை தான் ஏற்படுகிறது
திருவிழா முடிந்து தீப்பந்தங்களை ஏந்தியபடியே ஆட்கள் ஊரை நோக்கி வருகிறார்கள். அது திரைப்படத்தில் துவக்க காட்சியாக வருகிறது. ஆனால் நாவலில் இந்த காட்சி திரைப்படத்தை விட விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.
சோமன் கள் குடிப்பவன். அதுவும் கடன் சொல்லிக் குடிப்பவன். போதையில் தன்னை மறந்து உடுக்கை வாசிக்கக் கூடியவன். வீட்டில் உறங்கும் பிள்ளைகளை எழுப்பிவிடாதே என்று மகள் கண்டிக்கிறாள். சோமன் அதைக் கேட்டுக் கொள்வதில்லை. அவன் உடுக்கை வாசிக்கும் போது மனதிலுள்ள வேதனைகள் தீர்ந்து போவதாக உணருகிறான்.
சோமனின் குடும்பத்தில் நீலனும் காளனும் எப்போதும் நோயாளியாக இருக்கிறார்கள். அடிக்கடி குளிர்காய்ச்சல் வந்துவிடுகிறது. சவலைப்பிள்ளைகள். பெள்ளி காட்டிற்குள் சென்று புல்வெட்டுகிறாள். சுள்ளி பொறுக்கி வந்து சமையல் செய்கிறாள். கல்யாண வயது வந்த மகன்களை இன்னமும் சிறார்களை போலவே சோமன் நினைக்கிறான்.
என்றோ வாங்கிய ஐந்து ரூபாய்க் கடன் வளர்ந்து இருபது ரூபாய்க் கடனாகிவிட்டதாகச் சொல்லி காபி எஸ்டேட் கங்காணி மன்வேல் அவன் வீடு தேடி வந்து மிரட்டுகிறான். வாங்கிய கடனுக்கு வேலை செய்யச் சனிக்கிழமை காபி எஸ்டேட்டுக்குப் புறப்படும் படி கட்டளை இடுகிறான். பிள்ளைகளைத் தனியே விட்டுப் போகச் சோமனுக்கு விருப்பமில்லை. தனது மாடுகளை விற்று அந்தப் பணத்தில் கடனை அடைக்கவும் அவன் விருப்பமில்லை. ஆகவே என்ன செய்வது எனத் தெரியாத குழப்பத்தில் தடுமாறுகிறான்
இந்த சூழலில் ஒரு நாள் மழையில் நனைந்து வீடு திரும்புகிறான் சோமன், காலையில மகள் எழுப்பும் போது காய்ச்சல் கண்டு படுத்துக் கிடக்கிறான். கங்காணி வீடு தேடி வந்து மிரட்டவே தனது இரண்டு மகன்களையும் காபி தோட்டத்து வேலைக்கு அழைத்துக் கொண்டு போகும்படியாகச் சொல்கிறான்
சனியனும், குருவனும் கங்காணியோடு காபி எஸ்டேட் வேலைக்குப் போகிறார்கள். தோட்டத்தொழிலாளிகள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை மிகத் துல்லியமாக காரந்த் எழுதியிருக்கிறார். அவர்கள் மீதான ஒடுக்குமுறை, கிறிஸ்துவ மதமாற்றம், சுரண்டல், நோய், நெருக்கடியான வாழ்க்கைச் சூழல் இவற்றை விரிவாகச் சித்தரித்துள்ளார்.
எஸ்டேட் வேலைக்குப் போன மகன்களின் வாழ்க்கை திசைமாறிப் போய்விடுகிறது. இன்னொரு பக்கம் கஷ்டத்திலிருக்கும் சோமனைக் கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்ய முயற்சி நடக்கிறது. அவன் ஏற்க மறுக்கிறான். அவனது இளைய மகன் கிறிஸ்துவப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள மதம் மாறிவிடுகிறான். மகள் பெள்ளி குடும்பத்தின் கடனுக்காகத் தன்னை அழித்துக் கொள்கிறாள்
காட்டின் மழைக்காலம் அவர்களின் அன்றாட வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதை ஒரு அத்தியாயத்தில் சிறப்பாக விவரித்திருக்கிறார்.
தனது உழைப்பிற்கு ஏற்ப கூலி கிடைக்கவில்லை. பலரும் தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று சோமன் உணர்ந்தபோதும் அவன் அவர்களை எதிர்க்கவில்லை. அவர்கள் மீது புகார் சொல்வதில்லை. அவன் நல்லது நடந்துவிடும் என நம்புகிறான். பூசாரி பெள்ளியை ஏமாற்றுகிறான். சாமிக்கு நேர்ந்து கொண்டு பலி கொடுக்க வேண்டும் என்கிறான். காச்சல் தீர சாந்திகழிப்பு செய்துவிட்டால் போதும் என்கிறான் இன்னொருவன். இப்படி அறியாமையில் ஊறிக்கிடந்த அன்றைய வாழ்க்கையை நிதர்சனமாகக் காரந்த் எழுதியிருக்கிறார்.
பெள்ளி கங்காணி மன்வேலோடு நெருங்கிப் பழகுவதைச் சோமனால் ஏற்க முடியவில்லை. தன் வீட்டிலே அவர்கள் ஒன்றாக இருப்பதைக் கண்டதும் கோபத்தில் மன்வேலை தாக்குகிறான். ஆத்திரத்தில் மகளை என்ன செய்வது எனத் தெரியவில்லை. அவளது கழுத்தை கையால் இறுக்கிப்பிடித்து வெறிபிடித்தவன் போல அவளை முத்தமிட்டுப் பித்தனைப் போலச் சிரிக்கத் துவங்கினான் என்ற வரி நம்மை உலுக்கிவிடுகிறது.
அந்த முத்தமும் சிரிப்பும் பெள்ளியை உலுக்கிவிடுகிறது. புதுமைப்பித்தனின் கதை ஒன்றிலும் இது போல முதலாளியின் பணத்தை அபகரித்துக் கொண்டு தலைமறையாக ஒடப்போகும் தந்தை வயது வந்த மகளை முத்தமிடுவார். சோமன் அந்த முத்ததின் மூலம் அவள் இன்னமும் சிறுமியே என்று அடையாளம் காட்டுகிறான்.
சோமன் சிரிக்கும் விதமும் அவனது முத்தமும் நாவலின் மகத்தான தருணம் என்பேன்.
கோபம் தீராமல் மகளைக் குடிசையை விட்டு வெளியே தள்ளி கதவை மூடுகிறான் சோமன். தனக்கு இனி உறவென யாரும் வேண்டாம் என்று முடிவு செய்து புலம்புகிறான்.
மறுநாள் ஆத்திரம் தீராமல் பண்ணையார் நிலத்தை உழுகிறான். கலப்பையையும் நுகத்தடியினையும் உடைத்துச் சுக்கு நூறாக்குகிறான். அப்படியும் கோபம் அடங்காமல் அவற்றிற்குத் தீ மூட்டுகிறான். பிறகு தனது உடுக்கையை எடுத்து அடிக்கத் துவங்குகிறான். குடிசையின் கதவை மூடிக்கொண்டு ஆங்காரத்துடன் உடுக்கை அடிக்கிறான்.
நாவலின் துவக்கத்தில் கேட்ட அதே உடுக்கை ஒலி தான் முடிவிலும் ஒலிக்கிறது. ஆனால் இந்த முறை அது சோமனின் ஏமாற்றத்தை, தாங்க முடியாத இருப்பின் வேதனையை ஒலிக்கிறது.
திருவிழா முடிந்து திரும்பி வரும் போது பண்ணையார் இருட்டில் கேட்கும் உடுக்கை ஒலி கேட்டு திடுக்கிட்டுப் போவதைப் போல நாமும் சோமனின் இந்த உடுக்கை ஒலி கேட்டுப் பதற்றம் கொள்கிறோம். சோமனுக்காக வருந்துகிறோம்.
சோமனின் கனவு கடைசிவரை நிறைவேறவேயில்லை. அவன் தன் பிள்ளைகளை இழக்கிறான். சொல்லமுடியாத கஷ்டங்களை அனுபவிக்கிறான். வாழ்க்கை அவனுக்குப் பரிசாக எதையும் அளிக்கவில்லை. இந்தத் துயரங்களிலிருந்து அவனைக் காப்பாற்றுவது உடுக்கை மட்டுமே.
கடைசியில் அது ஒன்று தான் எஞ்சியிருக்கிறது
••